கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கொரோனாவுக்குத் தீர்வு எதில்? - மாற்று மருத்துவமா, நவீன மருத்துவமா?

மருத்துவங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவங்கள்

கொரோனாத் தொற்று வராமல் தடுப்பது எப்படி...

டெங்கு காய்ச்சல் வந்தபோது ஆங்கில மருந்துகள் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற, கூடவே நிலவேம்புக் குடிநீருடன் கைகொடுத்தது மாற்று மருத்துவம்.

இதோ, மருந்தும் தடுப்பூசியும் இல்லாமல் உலகையே கொரோனா வைரஸ் மிரட்டிக் கொண்டிருக்கையில், `வருமுன் காக்க கபசுரக் குடிநீர் அருந்துங்கள்’, ‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிட்டாய்போல இருக்கிற இந்த மருந்தைச் சாப்பிடுங்கள்’ என உதவிக்கு வந்து நிற்பதும் மாற்று மருத்துவங்கள்தான். கொரோனாத் தொற்று விஷயத்தில் மாற்று மருத்துவத்தின் பங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருத்துவம் எங்கெல்லாம் ஒருங்கிணைந்து சிகிச்சைகள் வழங்கலாம் என்று, சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் தொற்று நோய் சிகிச்சை மருத்துவர் சித்ராவிடம் பேசினோம்.

``முதலில் மனங்கள் ஒருங்கிணைய வேண்டும்’’

- மருத்துவர் கு. சிவராமன்

கொரோனாவைப் பொறுத்தவரை குணப்படுத்துவதற்கும், வராமல் தடுப்பதற்கும் தற்போது எந்த மருத்துவத்திலும் எந்த மருந்தும் இல்லாத சூழ்நிலையில்தான் இருக்கிறோம். பிற நோய்களுக்குத் தருகின்ற நவீன மருந்துகளைத்தான் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தந்து கொண்டிருக்கிறார்கள்.

தொற்று நோய்
தொற்று நோய்

85 முதல் 90 சதவிகிதம்வரை இந்தத் தொற்று பெரிய அளவில் தொந்தரவு கொடுக்காமல் சென்றுவிடுவதால், பெரிய அளவில் இந்தியாவில் நோயாளிகள் இல்லை. 10 சதவிகிதம் பேருக்கு ஓரளவுக்கு சிக்கலை ஏற்படுத்துகிற கொரோனா ஒரு சதவிகிதம் மக்களைத் தீவிரமாக பாதிக்கிறது. அந்த ஒரு சதவிகிதம் பேருக்கு, முன்பு மலேரியாவுக்கும் ஹெச்ஐவி-க்கும் கொடுக்கப்பட்ட மருந்துகளைக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கொரோனாத் தொற்று வருவதைத் தடுப்பதற்கும் நோயின் ஆரம்பக்கட்டத்திலிருந்து மீட்பதற்காகவும் மாற்று மருத்துவங்களில் என்னென்ன மருந்துகள் இருக்கின்றன என்பதை, வுஹான் மாகாணத்தில் தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்தே அதற்கான தேடலும் உலகமெங்கும் இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சீனாவில்... அவர்கள் ஏற்கெனவே ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளில் முன்னணியில் இருப்பவர்கள். எல்லா நோய்களுக்குமே அவர்கள் நவீன மருந்துகளோடு சீனாவின் பாரம்பர்ய மருந்துகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைத் தேடிக்கொண்டே இருப்பதால், கொரோனா சிகிச்சையிலும் சீன மரபு மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால்தான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதில் தங்கள் நாட்டுப் பாரம்பர்ய மருத்துவத்துக்கும் ஒரு முக்கியமான பங்கிருக்கிறது என்று, இந்த அறிவியல் உலகில் ஆவணங்களுடன் அறிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம், யோகா, ஹோமியோபதி எனப் பல மரபு மருத்துவங்கள் இருக்கின்றன. கொரோனாத் தொற்று நம் நாட்டுக்குள் வந்தவுடன், இந்திய அரசாங்கமும் நம் பாரம்பர்ய மருத்துவ வல்லுநர்களை அணுகி ‘இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் அல்லது குணப்படுத்துவதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன, உங்களுடைய அறிவியல் புரிந்துணர்வு என்ன, உங்களுடைய ஆலோசனைகளைக் கொடுங்கள்’ என்று கேட்டது. உடனே இந்தியாவில் இருக்கிற எல்லா மாற்றுமுறை மருத்துவர்களும் ‘மாற்றுமுறை மருத்துவர்கள் ரிசர்ச் கவுன்சிலுடன் பேசி, கொரோனாத் தொற்று வராமல் தடுப்பது எப்படி; வந்தால் எப்படி அணுகுவது; மரபு மருத்துவங்கள் மூலம் மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுப்பது எப்படி என்கிற ஒரு முழுமையான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டது. இந்த வழிகாட்டுதலில், இப்போது கொரோனா வருவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இல்லை என்றாலும் ‘இவற்றை சாப்பிட்டால் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்தும் என்ற உத்திகளை சித்த மருத்துவத் திலிருந்து எப்படியெல்லாம் தரலாம்’ என்ற வழிகாட்டுதலை அரசாங்கத்திற்கு நாங்கள் கொடுத்திருக்கிறோம்.

கொரோனாவுக்குத் தீர்வு எதில்? - மாற்று மருத்துவமா, நவீன மருத்துவமா?

இதைத் தவிர, கொரோனாவின் ஆரம்பக்கட்டப் பிரச்னைகளான சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்றவற்றுக்கு நவீன மருந்து களுடன் கூட்டாக என்னென்ன மாற்று மருந்துகளைக் கொடுத்தால் சரி செய்ய முடியும் என்ற ஆய்வுகளையும் அரசாங்கத்திடம் கொடுத்திருக்கிறோம் .

மரபு மருத்துவத்தைப் புரிந்துகொண்டவகையில் நாங்கள் சொல்வது என்னவென்றால், கொரோனா என்பது ஒரு புதிய வைரஸாக இருந்தாலும் `கிளினிக்கலாக இது எப்படி இருக்கிறது’ என்பதை உலக சுகாதார அமைப்பும் மற்ற நாடுகளின் மருத்துவத்துறையின் அனுபவங்களும் தெளிவான வழிகாட்டுதலை நமக்குச் சொல்கின்றன. அதாவது, இந்தத் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் வரும், உடல்வலி வரும், மூச்சிரைப்பு வரும், அதன் பிறகு உடலின் உறுப்புகள் படிப்படியாகச் செயலிழக்கும். இவற்றை வைத்து, இதேபோல முன்பு எப்போதாவது வேறு ஏதாவது நோய்கள் வந்திருக்கின்றனவா என்று பார்த்தபோது, சித்த மருத்துவத்தின் பழைய குறிப்புகளில் சிலேத்தும சுரம் அல்லது கபசுரத்தில் இதே குறிகுணங்கள் குறிக்கப்பட்டிருந்தன. அந்தக் குறிகுணங்களுக்கு என்ன சித்த மருத்துவம் கொடுக்கப்பட்டதோ அதே மருந்துகளை முயற்சிசெய்துபார்க்கலாம் என்றுதான் சித்த மருத்துவர்கள் கபசுரக் குடிநீரை கொரோனாவுக்குத் தடுப்பாகத் தேர்ந்தெடுத்தோம். அதற்காக அந்தக் காலத்தில் கொரோனா இருந்தது என்றோ கபசுரம்தான் இப்போதைய கொரோனா என்றோ எடுத்துக்கொள்ளக்கூடாது.

மருத்துவங்கள்
மருத்துவங்கள்

மருத்துவங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றால், முதலில் மனங்கள் ஒருங்கிணைய வேண்டும். இதற்கான ஆய்வுகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக நடந்துகொண்டும் இருக்கின்றன. இரண்டுவித மருந்துகளைக் கொடுக்கும்போது உடலில் என்னவிதமான மாற்றங்கள் நடக்கும்; ஒரு மருந்தை இன்னொரு மருந்து முறியடித்துவிடுமா என்பதுபோன்ற நிறைய ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. நம்மூரில் அதற்கான மனம் முதலில் உருவாக வேண்டும். மரபு மருத்துவம் என்றாலே அது அறிவியலுக்கு ஒத்துவராது; நவீன அறிவியலின் அடிப்படையில் வராது என்று நினைக்கிறார்கள். அதனால்தான் மரபு மருத்துவங்களுடன் ஒருங்கிணைய மறுக்கிறார்கள். மரபு மருத்துவர்கள் நாங்கள் எங்கள் மருத்துவத்தை அப்படியே எல்லோருக்கும் கொடுங்கள் என்று கண்மூடித் தனமாகச் சொல்லவில்லை. எந்தெந்த இடங்களில் இதை அறிவியல் ஆய்வுகளுடன் இணைத்துக் கொண்டு செயல்பட முடியுமோ அங்கே ஒருங்கிணையலாம்.’’

``மாற்று மருத்துவங்களை வரவேற்கவே வேண்டும்’’

- தொற்றுநோய் நிபுணர் சித்ரா

``மாற்று மருத்துவத்தைப் பொறுத்தவரை, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற மருத்துவங்களில் இருக்கிற சில மருந்துகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உதாரணத்துக்கு, சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர். ஹோமியோபதியிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிற மருந்துகள் இருக்கின்றன. இவற்றை கொரோனா வருமுன் காப்பதற்கான மருத்துவமாக எடுத்துக்கொள்ளலாம். கைகழுவுதல், சமூக இடைவெளி இவற்றுடன் மாற்று மருத்துவ மருந்துகளை எடுத்துக்கொண்டால் அதிகரிக்கிற நோய் எதிர்ப்பு சக்தியானது, ஒருவேளை கொரோனா வந்தாலும் அதை எதிர்த்துப் போராடுகிற அளவுக்கு நம்மை பலமாக வைத்திருக்கும்.

கொரோனா அறிகுறிகளுக்கான சிகிச்சை என்று வரும்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகரித்த ஆங்கில மருந்துகளைத் தான் பயன்படுத்த வேண்டும்; பிளாஸ்மா தெரபிகூட கொரோனாவி டமிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்தச் சிகிச்சையை நோயாளிகளுக்குச் செய்யலாமா என்பதற்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஒப்புதல் வேண்டும். எல்லா மருந்துகளுக்குமே, `இந்த மருந்தைக் கொடுத்தால் நோயாளிகளுக்கு எந்தப் பக்கவிளைவுகளும் வராது; இது நோயை மட்டும்தான் சரிசெய்யும்’ என்கிற அறிவியல் ஆதாரம் தேவை.

இதேபோல மாற்று மருத்துவர்களும், தங்கள் மருந்துகளுக்கான அறிவியல் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சீனாவில்கூட கொரோனா பாதிப்பின்போது அந்நாட்டு மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்தினார்கள் என்று செய்திகள் சொல்கின்றன. கொரோனா புது வைரஸ் என்பதால், இதற்கான மாற்று மருத்துவ மருந்துகளைச் சிலருக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து நல்ல ரிசல்ட் வந்திருக்கிறது என்கிற ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளலாம்.

கொரோனாவுக்குத் தீர்வு எதில்? - மாற்று மருத்துவமா, நவீன மருத்துவமா?

மாற்று மருத்துவங்களை விபத்து, அறுவை சிகிச்சை போன்ற எமர்ஜென்சி தருணங்களில் பயன்படுத்த முடியாது. ஆனால், ரத்தசோகை போன்ற பிரச்னைகளுக்கு மாற்று மருத்துவங்களுடன் இணைந்து செயல்படலாம். நம் நாட்டின் மாற்று மருத்துவங்கள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் உலகத்துக்கே நாம் முன்மாதிரியாக இருக்கலாம். அந்த வகையில் மாற்று மருத்துவங்களை நாம் வரவேற்கவே வேண்டும்.’’

மனித உயிர்களைக் காப்பாற்ற மருத்துவங்கள் இணைவதொன்றே வழியென்றால், அது இனி வரும் காலங்களிலாவது நிகழட்டும்!