
ஸ்புட்னிக்-வி
ரஷ்யா தனது கொரோனாத் தடுப்பூசிக்கு இப்படிப் பெயரிட்டிருக்கிறது. மக்களுக்கு முன்பாக தனது மகளுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்தி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி யுள்ளார் ரஷ்ய அதிபர் புடின். ஒருமாத காலத்திற்குள் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்றும், ஆண்டு இறுதிக்குள் உலகத்திற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு உற்பத்தி செய்து வழங்கப்படும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், ரஷ்யாவின் இந்தத் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகரிக்க வில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உட்பட பல நாடுகளும் இதை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.
காட்டுத்தீப்போலப் பரவி, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான, பக்கவிளைவுகளற்ற ஒரு தடுப்பூசியை இந்த உலகமே எதிர்நோக்கி இருக்கும்போது, ரஷ்யாவின் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்வதில் ஏன் உலகநாடுகள் தயக்கம் காட்டுகின்றன..?
இதுவரை உலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், பிறந்த மற்றும் வளரும் குழந்தைகளுக்கானவை. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி வயதான வர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் உதவவேண்டும் என்பது முதன்மையான சிக்கல்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெரும்பாலான கொரோனாத் தடுப்பு மருந்துகள் ஆய்வகங்களில் விலங்குகளுக்குச் செலுத்தப்பட்டு பக்க விளைவுகளைக் கண்காணிக்கும் Preclinical Vaccine Trials மற்றும் மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் Clinical Vaccine Trials என்ற ஆய்வுநிலைகளில்தான் உள்ளன.
இதில் Clinical Trials எனப்படும் மனிதர்களுக்குச் செலுத்தப்படும் பரிசோதனை மூன்று கட்டங்களாக நடக்கும். முதல்கட்டமாக, ஆரோக்கியமான 5 முதல் 10 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசியைச் செலுத்தி 3-6 மாதங்கள் கண்காணிப்பார்கள். பாதிப்பு இல்லை என்று தெரிந்தால், அடுத்த கட்டமாக 50-100 நபர்களுக்குச் செலுத்தி, மூன்று மாதங்கள் கண்காணிப்பார்கள். இதிலும் திருப்தியான பிறகு, இறுதிக்கட்டமாக வெவ்வேறு வயது, சூழல், தட்பவெப்பம், நிலப்பரப்பில் வாழும் ஆயிரம் பேருக்காவது இந்தத் தடுப்பூசி போடப்பட்டு, குறைந்தது ஆறு மாதங்கள் வரை கண்காணித்து, பாதுகாப்பு முழுமையாக நிரூபிக்கப்பட்ட பிறகுதான், அதை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும்.
ஆக, ஒரு தடுப்பு மருந்து, எல்லா சோதனைகளையும் கடந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என்பதே நிதர்சனம். ஆனால், இந்தக் குறுகியகால குதிரைப் பந்தயத்தில் ஏறத்தாழ 165க்கும் மேலான தடுப்பு மருந்துகள் தயாராகிவிட்டன. என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை (135) விலங்குகளின் ஆய்வகப் பரிசோதனை நிலையில் மட்டுமே உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித சோதனையில் 31 தடுப்பு மருந்துகளும், மூன்றாம் கட்டச் சோதனையில் 8 மருந்துகளும் மட்டுமே முன்னேறிய நிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ள ChAdOx1 எனும் தடுப்பு மருந்து, மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளது. ஆய்வுகள் முடிந்து அக்டோபரில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து இரண்டு பில்லியன் அளவிலான தடுப்பூசிகளைத் தயாரிக்கப்போகிறது என்பது ஒரு நல்ல செய்தி.
இதைப்போலவே, அமெரிக்காவின் யு.எஸ். பயோடெக் கம்பெனி, தனது Moderna தடுப்பு மருந்தை மூன்றாம் கட்ட சோதனைக்காக ஜூலை 27-ம் தேதியன்று 30,000 மக்களுக்குச் செலுத்தியுள்ளது.
கொரோனா நோயின் ஆரம்பப்புள்ளியான சீனாவில் கேன்சினோ பயலாஜிக்கல்ஸ் தயாரித்துள்ள Ad5 தடுப்பு மருந்தும், சைனோவேக்கின் நிறுவனத்தின் தடுப்பு மருந்தும் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
நமது நாட்டின் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியுடன் இணைந்து தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பு மருந்து இரண்டாம் கட்டப் பரிசோதனை நிலையில் உள்ளது. பாரத் பயோடெக், 2021 தொடக்கத்தில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரக்கூடும் என அறிவித்துள்ளது.

இதே சமயத்தில், தமிழகத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான ஆய்வுகளும் ஆரம்பக்கட்ட நிலையைத் தாண்டி வேகம் பிடித்துள்ளது.
ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும், கொரோனாவிற்கான தடுப்பு மருந்து மிகச் சமீபத்தில் சாத்தியமே இல்லை என நமக்கு உணர்த்தும்போது, ரஷ்யாவின் ’ஸ்புட்னிக்-வி’ மட்டும் எப்படி வந்தது?
முதன்முதலில் தடுப்பு மருந்தைக் கண்டறியும் நாடுதான் அந்த மருந்திற்கான உரிமத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்தச்சூழலைப் பயன்படுத்தி சரிந்துள்ள தனது பொருளாதாரத்தைச் சீர்படுத்தவும், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இணையாகத் தன்னை வெளிக்கொணரவும் ரஷ்யா எடுத்துள்ள அரசியல் செயல்பாடாகவே இது பார்க்கப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், முழுமையான சோதனைகளை மேற்கொள்ளாமல் ரஷ்யா வெளியிட்ட இந்த அறிவிப்பு, அமெரிக்கா இதற்குமுன் வெளியிட்ட பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் நினைவுக்குக் கொண்டு வந்து பயமுறுத்துகிறது. அதனால்தான் உலக சுகாதார அமைப்பும், ரஷ்யாவின் இந்த அறிவிப்பை ஏற்காமல் கண்டனம் தெரிவித்துள்ளது.
யோசித்துப் பார்த்தோமேயானால், ஆரம்பித்த எட்டு மாதங்களில் உலகெங்கும் பெரும்தொற்றாகப் பரவி, லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், குணமடைந்தவர் களிடையேயும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவரும் இந்த நோய்க்கு ஒரேதீர்வு, கூட்டு நோயெதிர்ப்பு ஆற்றல் எனப்படும் herd immunity தான்.
இந்த நோய் அனைவரையும் தாக்கி அதனால் ஏற்படும் கூட்டு நோயெதிர்ப்பு மூலமாகவோ, அல்லது, முறையாகக் கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி மூலமாகவோ கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை, நமக்கிருக்கும் மிக முக்கியமான அருமருந்து social vaccine எனப்படும் கைகளைக் கழுவுதல், தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவைதான்!
கேள்விக்கென்ன பதில்...

“கொரோனாவிற்கான தடுப்பூசி எப்போது தயாராகும்?”
“தற்போதுள்ள சூழலில், 2021 தொடக்கத்தில் கிடைக்கக்கூடும்.”
“கொரோனாத் தடுப்பூசி்யை எல்லோரும் போட்டுக்கொள்ளலாமா..?”
“முறைப்படி தயாரிக்கப்படும் தடுப்பூசியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் போட்டுக்கொள்ளலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற வாழ்க்கைமுறைநோய்களால் பாதிப் படைந்தவர்களும்கூட போட்டுக்கொள்ளலாம். அதீத அலர்ஜி இருப்பவர்கள், பிறவிலேயே நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், கீமோதெரபி சிகிச்சை பெறுபவர்கள், ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குப் போடக்கூடாது. வேறு ஏதேனும் நோய்த்தொற்று உடலில் இருந்தாலோ, அதிகப்படியான காய்ச்சல் இருந்தாலோ தவிர்ப்பது நல்லது. அதேபோல கர்ப்ப காலத்தில் இந்தத் தடுப்பூசியைத் தவிர்க்கவேண்டும்.”
“கொரோனாத் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் என்ன?”
“இதுவரை நடந்த பரிசோதனைகளில் தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம் மற்றும் லேசான காய்ச்சல், உடம்பு வலி ஆகிய லேசான பாதிப்புகள் மட்டுமே தெரியவந்துள்ளன.’’
``ஏற்கெனவே நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டுமா?’’
ஒருமுறை பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இதன் நோயெதிர்ப்புத் திறன் எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கிறது என்பது இன்னும் சரிவரத் தெரிய வில்லை என்றாலும், நோய்வாய்ப்பட்ட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.