Published:Updated:

சர்க்கரை நோய்க்கான `மெட்ஃபார்மின்' மாத்திரையில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனமா? #ExpertOpinion

எந்த மருந்து தயாரிக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தும் காலத்தை அதிகரிக்கும் வகையில், பதப்படுத்துவதற்காகச் சில ரசாயனங்கள் (Preservatives) சேர்க்கப்படும்.

மெட்ஃபார்மின்
மெட்ஃபார்மின் ( Pixabay )

இந்தியாவின் பொதுவான நோய் பிரச்னையாக மாறியிருக்கிறது சர்க்கரைநோய். 2015-ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் 6.92 கோடி பேர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் 9.8 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவந்தாலும், அதற்கான முதன்மை சிகிச்சையாகப் பார்க்கப்படுவது, 'மெட்ஃபார்மின்' (Metformin) என்ற மாத்திரைதான். உலகம் முழுவதும் இந்த மாத்திரை சர்க்கரை நோய்க்காகப் பரிந்துரைக்கப்படுகிறது.

Diabetes
Diabetes
Pixabay

சமீபத்தில், இங்கிலாந்தில் விற்பனைசெய்யப்பட்ட சில நிறுவனங்களின் மெட்ஃபார்மின் மாத்திரையை ஆய்வுசெய்ததில், அதில் புற்றுநோயை உருவாக்கும் carcinogen N-Nitrosodimethylamine என்ற ரசாயனம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் விற்பனைசெய்யப்பட்ட அதே மாத்திரையில், அந்த ரசாயனத்தின் அளவு அதிகமாக இல்லை என்றும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் இந்தப் பிரச்னை ஏற்பட்டதால், அமெரிக்காவிலும் விற்பனை செய்யப்பட்ட மெட்ஃபார்மின் மாத்திரைகளை ஆய்வு செய்துள்ளனர். அதிலும் புற்றுநோயை உருவாக்கும் குறிப்பிட்ட ரசாயனத்தின் அளவு அதிகமாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரைநோய்க்கான முக்கிய மாத்திரையில் இதுபோன்ற பிரச்னை இருப்பது அந்நாட்டு மக்களை குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதனால் ரசாயனத்தின் அளவு சரியாக இருக்கும் மெட்ஃபார்மின் மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று, எப்போதும்போல எடுத்துக்கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. சர்க்கரை நோயாளிகள் வழக்கம்போல் மெட்ஃபார்மின் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரைநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்

இந்தியாவிலும் 'மெட்ஃபார்மின்' மாத்திரைதான் பயன்பாட்டில் உள்ளது என்பதால், சர்க்கரைநோய் மாத்திரையில் எதற்காகப் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது என்று சர்க்கரைநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்.

"ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவே மெட்ஃபார்மின் மாத்திரை கொடுக்கப்படுகிறது. அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இந்த மாத்திரை எடுத்துக்கொண்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும். ஒரு நோயாளிக்கு, ஒருநாளைக்கு 250 மில்லிகிராம் முதல் 2 கிராம்வரை பரிந்துரைக்கப்படும். நோயாளியின் எடையை வைத்து மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். நோயாளி உடல் தாங்கிக்கொள்ளும் வகையில் மாத்திரையின் அளவை மருத்துவர்கள் பிரித்துக்கொடுப்பார்கள்.

Dr.Ashwin karupan
Dr.Ashwin karupan

சர்க்கரை நோயின் முந்தைய நிலையிலும் (Prediabetes) இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. பெண்களின் பொதுவான பிரச்னையான `பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்' (PCOD) பிரச்னைக்கும் முதன்மையான சிகிச்சையாக இந்த மெட்ஃபாமின்தான் பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அனைவருமே சர்க்கரைநோயின் எல்லையில்தான் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் இந்த மாத்திரையைச் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பதால், தற்போது பரிந்துரைக்கப்படுகிறது.

எந்த மருந்து தயாரிக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தும் காலத்தை அதிகரிக்கும் வகையில், பதப்படுத்துவதற்காக சில ரசாயனங்கள் (Preservatives) சேர்க்கப்படும். இங்கிலாந்தில் நடந்துள்ள நிகழ்வைப் பொறுத்தவரை, பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ரசாயனம்தான் மெட்ஃபார்மின் மாத்திரையில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் மெட்ஃபார்மின் மாத்திரையே புற்றுநோயை உருவாக்கும் என்பது தவறான கருத்து. மருந்தில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் ரசாயனங்களின் அளவுதான் அதிகமாக இருந்திருக்கிறது.

Testing
Testing
Pixabay

ரசாயனங்கள் இல்லாமல் எந்த மாத்திரையையும் உருவாக்க முடியாது. அவ்வாறு சேர்க்கப்படும் ரசாயனங்கள், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையிலும் உடலில் இருந்து வெளியேற்றக்கூடிய அளவிலும் இருக்க வேண்டும். அதையே அனுமதிக்கப்பட்ட அளவு என்று குறிப்பிடுவார்கள்" என்றார். 'ரசாயனம் உடலிலிருந்து எவ்வாறு வெளியேறும்?' என்று கேட்டதற்கு, எந்த மாத்திரையை நாம் எடுத்துக்கொண்டாலும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்குள் உடலால் கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் கலந்து வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட்டுவிடும்.

ஒரு மாத்திரை உடலில் நுழைவது முதல் வெளியேறுவது வரையிலான நேரம் கணக்கிடப்படும். அந்த மாத்திரை கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் எவ்வாறு கலக்கிறது, வளர்சிதை மாற்றத்தில் எப்படிக் கலக்கிறது, அதிகபட்சமாக எவ்வளவு கலக்கிறது என்பதெல்லாம் கணக்கிடப்படும். மீதம் இருப்பதை உடல் வெளியேற்றும். அனைத்து மாத்திரைகளும் நமது உடலில் நிரந்தமாகத் தங்காது. அதனால்தான் மருந்துகளைக் காலை, மாலை என்று வேளை பிரித்து எடுக்கச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

medicine
medicine

ஒரு மாத்திரை உடலைவிட்டு வெளியேறும் நேரத்தைக் கணக்கிட்டுதான், அதை ஒருநாளைக்கு எத்தனை முறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அளவு தீர்மானிக்கப்படும். அந்த முறையை Pharmacokinetics என்று அழைப்பார்கள்.

இதை அடிப்படையாக வைத்துதான், எல்லா மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. மெட்ஃபார்மின் மாத்திரையைப் பொறுத்தவரை, உடலால் கிரகிக்கப்பட்ட மீதம், சிறுநீர் வழியாக வெளியேறும். அதில் அந்த ரசாயனங்களும் வெளியேறிவிடும்.

Diabetes
Diabetes
Pixabay

இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசின் கீழ் செயல்படும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை, அனைத்து மருந்துகளும் சரியான தரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்து உறுதிப்படுத்தும். அந்த நடைமுறை நிறைவடைந்த பிறகுதான் மருந்துகள் புழக்கத்துக்கு வரும். அதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. சர்க்கரை நோயாளிகள் வழக்கம்போல் மெட்ஃபார்மின் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்" என்றார் அவர்.

Vikatan