Published:Updated:

மீண்டும் தாக்கும் டிப்தீரியா!

டாக்டர் கு.கணேசன் பொதுநல மருத்துவர்

பிரீமியம் ஸ்டோரி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரள மக்களைக் கதிகலங்கவைத்த டிப்தீரியா, தற்போது தமிழகத்தில் பரவிவருகிறது. கோவை மாவட்டம், கடம்பூர் மலைப்பிரதேசத்தில் ஓரத்தி, மல்லியம்மன்துர்கம் உள்ளிட்ட சில ஊர்களில் இந்த நோயால் இதுவரை இரண்டு சிறுவர்கள் இறந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர், இந்த நோயின் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

டிப்தீரியாவால் முதல் பலி ஏற்பட்டதுமே, தமிழ்நாடு மலைவாழ் நலச் சங்கத்தினர் இந்த நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இப்போது இரண்டாவது உயிர் பறிபோயிருக்கும் நிலையிலும், இந்த விபரீதத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. 2008-ம் ஆண்டு வரை கேரளத்தில் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட டிப்தீரியா, இப்போது மீண்டும் அங்கு தாக்கத் தொடங்கியுள்ளது. காரணம், அங்கு பல மாவட்டங்களில் குழந்தைகளுக்கு முறையாகத் தடுப்பூசி போடப்படவில்லை. அப்படியே முதன்மைத் தடுப்பூசியைப் போட்டிருந்தாலும் மீண்டும் போடப்பட வேண்டிய ஊக்குவிப்பு ஊசி பலருக்கும் போடப்படவில்லை. இந்த நோய், காற்றின்மூலம் பரவக்கூடிய தீவிரமான தொற்றுநோய். இதனால், முன்பு கேரளத்திலிருந்து பறவைக் காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும் தமிழ்நாட்டுக்குப் பரவியதுபோல், இப்போது டிப்தீரியாவும் பரவியுள்ளது.

எது டிப்தீரியா?

‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே’ (Corynebacterium diphtheriae) என்னும் பாக்டீரியாக் களால் டிப்தீரியா நோய் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகளில் மைட்டிஸ், கிரேவிஸ், இன்டர்மீடியஸ் என்று மூன்று வகை உண்டு. கிரேவிஸ் வகைக் கிருமிகளால்தான் ஆபத்து அதிகம். இந்தக் கிருமிகள் தொண்டையைப் பாதித்து, உணவு விழுங்குவதையும் மூச்சுவிடுவதையும் தடுப்பதால், இதைத் ‘தொண்டை அடைப்பான்’ என்றும் அழைக்கிறார்கள். டிப்தீரியா, பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் 10 வயதில் உள்ள சிறுவர்-சிறுமிகளையும்தான் பெரிதும் பாதிக்கும். சமயங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களையும் பாதிப்பதுண்டு. இந்த நோய் பாதித்துள்ளவரின் மூக்கு, தொண்டை, குரல்வளைப் பகுதிகளில் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளி இருமும்போதும், காறித் துப்பும்போதும், மூக்கைச் சிந்தும்போதும் காற்றில் கலந்து, அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. நோயாளி பயன்படுத்திய பொருள்களின் மூலமும் இவை பரவக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறிகுறிகள் என்ன?

காய்ச்சல் வரும். தொண்டை வலிக்கும். இருமல், சளித்தொல்லை தரும். சளியில் ரத்தம் வெளியேறும். கழுத்தில் இரண்டு பக்கங்களிலும் நெறிகட்டும். அடுத்த சில நாள்களில் தொண்டையில் கறுவெள்ளை நிறத்தில் சவ்வு உருவாகும். இதுதான் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதைத் தொட்டாலே ரத்தம் கொப்புளிக்கும். ஆகவே, இதை அகற்ற முடியாது. மருந்துச் சிகிச்சையில்தான் குணமாகும். இந்தச் சவ்வு வளர வளர, தொண்டையை அடைக்கும். நோயாளி, உணவை விழுங்கச் சிரமப்படுவார். மூச்சுவிட முடியாது. இதில் உள்ள கிருமிகள் ஒருவித நச்சுப்பொருளை உற்பத்திசெய்து ரத்தத்தில் கலக்கும். இந்த நஞ்சு, இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகளைச் சிதைக்கும். உயிருக்கு ஆபத்து நேரும்.

மீண்டும் தாக்கும் டிப்தீரியா!

டிப்தீரியாவை டான்சில் பாதிப்பு என்று கருதி, பலரும் அலட்சியமாக இருந்துவிடுவர். இந்த நோயை உறுதிசெய்ய, தொண்டைச் சவ்விலிருந்து துளியளவு திரவத்தைப் பஞ்சுக்குச்சியில் துடைத்து எடுத்துப் பக்குவப்படுத்தி நுண்ணோக்கியில் பார்த்தோமானால், டிப்தீரியா கிருமிகள் இருப்பது நன்றாகவே தெரியும். இதன்மூலம் நோயை உறுதிசெய்துவிடலாம். இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்து, நோயாளியைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவேண்டியது முக்கியம். தகுந்த ஆன்டிபயாடிக் மருந்தையும், ‘ஆன்டி டிப்தெரிடிக் சீரம்’ என்ற மருந்தையும் கொடுத்தால், நோயாளி உயிர் பிழைக்க முடியும். நோய் முற்றிய நிலையில் ஆபத்து அதிகம்; உயிர் பிழைப்பது கடினம்.

தடுக்க முடியுமா?

டிப்தீரியாவைத் தடுக்க, முத்தடுப்பு ஊசி உதவுகிறது. இதில் டி.டி.டபிள்யூ.பி (DTWP), டி.டி.ஏ.பி (DTAP) என்று இரண்டு வகை உண்டு. குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்கள், ஒன்றரை வயது, ஐந்து வயது முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசிகளில் ஒன்றைப் போட வேண்டும். இப்போது முத்தடுப்பு ஊசியானது, ‘ஹிப்’, மஞ்சள் காமாலை - பி, போலியோ தடுப்பூசி ஆகியவற்றுடன் கலந்து ஒரே ஊசியாகவும் கிடைக்கிறது. இதற்கு ‘பென்டாவேலன்ட் தடுப்பூசி’ என்று பெயர். பலமுறை ஊசி குத்தினால் குழந்தைக்கு வலிக்கும் என்று கருதுபவர்கள், இந்த பென்டாவேலன்ட் தடுப்பூசியை ஒவ்வொரு முறையும் ஓர் ஊசி போட்டுக்கொண்டால் போதும். இதுவரை முத்தடுப்பு ஊசி போடாத குழந்தைக்கு

7 வயதுக்குமேல் ஆகிவிட்டது என்றால், டி.டி.ஏ.பி என்னும் தடுப்பூசியைப் போட வேண்டும்.

அரசின் கடமை என்ன?

போதிய நிதி ஒதுக்கி, ஆன்டிபயாடிக் மருந்தையும், ‘ஆன்டி டிப்தெரிடிக் சீரம்’ மருந்தையும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும். டிப்தீரியாவைத் தடுக்கும் முத்தடுப்பு ஊசி உள்பட எல்லாத் தடுப்பூசிகள் குறித்தும் விழிப்பு உணர்வை அதிகரிக்க வேண்டும். தற்போது முத்தடுப்பூசி மட்டும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கிறது. மற்ற இரண்டு தடுப்பூசிகளையும் இலவசமாகப் போடுவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது கோவையைச் சுற்றியுள்ள ஊர்களில் மட்டும் டிப்தீரியா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகமெங்கும் குழந்தைகளுக்குக் கட்டாயம் இது போடப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் டிப்தீரியாவை ஒழிக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு