சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தடுப்பூசி இரண்டாவது டோஸ்... இடைவெளி சரியா?

தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
News
தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை மக்களுக்கு அதிகம் போடப்பட்டிருப்பது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனகா இணைந்து வடிவமைத்திருக்கும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிதான்

ஊரடங்கும், கட்டுப்பாடுகளும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தினாலும் நூற்றாண்டு கண்டிராத இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர நம்மிடம் இருக்கும் ஒற்றைப் பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. ஆனால், தொடர்ந்து இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. சமீபத்தில் வல்லுநர்கள் பலரும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டுக்கொள்ளும் கால இடைவெளி 12-16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டிருப்பது சரிதானா என்ற சந்தேகத்தை எழுப்பிவருகின்றனர். ‘தடுப்பூசித் தட்டுப்பாட்டை மறைப்பதற்கே அரசு இதைச் செய்கிறது’ எனத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ‘ இந்த இடைவெளியை நாங்கள் அரசிடம் பரிந்துரைக்கவே இல்லை’ என The National Technical Advisory Group on Immunisation (NTAGI) நிபுணர் குழுவிலிருந்த 3 விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது பற்றி விரிவாக விவாதிப்பதற்கு முன்பு கோவிஷீல்டு இதுவரை கடந்துவந்த பாதையைப் பார்ப்போம்.

இந்தியாவில் இதுவரை மக்களுக்கு அதிகம் போடப்பட்டிருப்பது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனகா இணைந்து வடிவமைத்திருக்கும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிதான். பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள் நடைபெற, 4-12 வார இடைவெளியில் இரண்டு டோஸ்களைச் செலுத்திக்கொண்டனர் தன்னார்வலர்கள். இதில் ஆறு வாரங்களுக்குள் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களில் தடுப்பூசியின் திறன் (efficacy) 55% ஆக இருந்தது. 12 வார இடைவெளியில் எடுத்துக்கொண்டவர்களில் திறன் 80% ஆக இருந்தது. தனியாக அமெரிக்காவில் நடந்த சோதனையில் நான்கு வார இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசியின் திறன் 76% இருப்பதாக மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

தடுப்பூசி இரண்டாவது டோஸ்... இடைவெளி சரியா?

இதனால் தடுப்பூசி நிபுணர் குழுக்கள் அதிக கால இடைவெளி விட்டு கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களைப் போடுமாறு அரசுகளுக்குப் பரிந்துரை செய்தன. உலக சுகாதார அமைப்பும் இதையே முன்மொழிந்தது.

இந்தியாவில் ஜனவரி 3-ம் தேதி சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. அப்போது கோவிஷீல்டு, கோவாக்ஸின் இரண்டு தடுப்பூசிகளுக்குமே இரண்டு டோஸுக்கிடையேயான கால இடைவெளி 4-6 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மார்ச் மாதம் உலக சுகாதார அமைப்பு 4-12 வார இடைவெளியைப் பரிந்துரைக்க, இந்தியா கோவிஷீல்டின் இரண்டு டோஸுக்கான கால இடைவெளியை 6-8 வாரமாக அதிகரித்தது. பின்பு ஏப்ரலில் 18-44 வயதினரும் தடுப்பூசி போடலாம் என அரசு அறிவித்தது. பெரும்பாலான மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில்தான் மே 13-ம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ்களுக்கான கால இடைவெளியை NTAGI பரிந்துரையின்படி 12-16 வாரமாக அதிகரித்தது இந்திய அரசு.

இப்படியான சூழலில் திடீரென தற்போது இந்த இடைவெளியைச் சுற்றிப் பல விவாதங்கள் நடப்பது ஏன்? இதற்கு முக்கிய காரணம் பிரிட்டன் வெளியிட்ட ஆய்வு முடிவுகள். பிரிட்டனில் ஜனவரி மாதத்தில் உருமாறிய ஆல்ஃபா வேரியன்ட் காரணமாக கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டன. அந்தச் சமயத்தில் பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 70,000-த்தை நெருங்கின. அப்போது ஒரு முக்கிய முடிவை எடுத்தது பிரிட்டன். சிலருக்கு இரண்டு தடுப்பூசி போடுவதைவிட முதலில் அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுவிட வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. ஒரு டோஸ், கொரோனாத் தொடரிலிருந்து முழுமையாகப் பாதுகாக்காது என்றாலும் பலருக்கும் தீவிர நோய் வராமல் தடுக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான கால இடைவெளியை 12 வாரங்களாக்கியது. இது நல்ல பலன்களை அளித்தது. உயிரிழப்புகள் குறைக்கப்பட்டன.

இதை முன்மாதிரியாக வைத்தே இந்தியாவும் இதே போன்றதொரு யுக்தியைக் கையில் எடுத்தது. ஆனால், உருமாறிய டெல்டா வேரியன்ட்டுக்கு இது சரிவருமா என்பதுதான் நிபுணர்கள் முன்வைக்கும் கேள்வி. இயல்பு வாழ்க்கைக்குத் தயாராகிக்கொண்டிருந்த பிரிட்டனை தற்போது மீண்டும் முடக்கியிருக்கிறது டெல்டா வேரியன்ட். 96% புதிய பாதிப்புகளுக்கு டெல்டா வேரியன்ட்டே காரணம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி இரண்டாவது டோஸ்... இடைவெளி சரியா?

இந்த நேரத்தில்தான் ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டால் உருமாறிய டெல்டா வேரியன்ட்டுக்கு எதிரான பாதுகாப்பு 33% மட்டுமே என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்டது பிரிட்டனின் பொதுச் சுகாதாரத்துறை. கொரோனாவிலிருந்து முழுவதுமாகப் பாதுகாக்க இரண்டு டோஸ் போடுவது அவசியம் என்று அந்த முடிவுகள் எடுத்துரைத்தன. இதனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் இடைவெளியை 8 வாரங்களாகக் குறைத்தது பிரிட்டன்.

ஜூன் மாதத் தொடக்கத்தில் நடந்த ஆய்வுகளில் இந்தியாவிலும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருவது டெல்டா வேரியன்ட்தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது புதிதாக டெல்டா பிளஸ் என்கிற வேரியன்ட்டும் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் தற்போதைய தடுப்பூசித் திட்டம் பயனளிக்குமா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இப்படியான சூழலில்தான், “இந்த இடைவெளியை நாங்கள் பரிந்துரைக்கவே இல்லை. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 8-12 வார இடைவெளியைத்தான் நாங்கள் பரிந்துரைத்தோம். 12-16 வாரமாக இதை நிர்ணயித்தது அரசுதான்” என்று தெரிவித்திருக்கின்றனர் NTAGI விஞ்ஞானிகள். “இது சரியான முடிவாகவும் இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால், அதை ஆதரிக்க எங்களிடம் எந்த தரவுகளும் இல்லை” என்றும் கைவிரித்திருக்கின்றனர். இது பலருக்கும் அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “அறிவியல்பூர்வமாகக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மிக வெளிப்படையாக எடுக்கப்பட்ட முடிவு இது. இதில்கூட சிலர் அரசியல் செய்வது சரியானதல்ல” என்றார்.

தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பக் குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, “மக்களுக்குப் பலன் கிடைக்கும் என்றால் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸுக்கான தற்போதைய இடைவெளியை அரசு நிச்சயம் குறைக்கும். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மட்டுமே அரசு எந்த முடிவையும் எடுக்கும்” என்றார். இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘இடைவெளியை அதிகரித்ததற்கு NTAGI எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அரசின் இந்தக் கருத்துடன் பலரும் உடன்படவில்லை. இப்போதும் 12-16 வார இடைவெளி தொடர்வது என்பது தடுப்பூசி தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக மட்டுமே எனக் குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்காவின் முன்னணி மருத்துவர் மற்றும் நோய் எதிர்ப்பு நிபுணரான ஆந்தனி ஃபவுச்சி “இப்படி இடைவெளியை அதிகரிப்பதால் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை உருமாறிய கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்புகள் அதிகம். அதுதான் தற்போது இங்கிலாந்தில் நடந்துகொண்டிருக்கிறது” என்றார். இருந்தும், ‘‘தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தால் இப்படி கால இடைவெளியை அதிகரிப்பதே ஒரே வழி’’ என்றும் அவர் தெரிவித்தார்.

அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்டு, “பிரிட்டனில் பலருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அதனால் இரண்டாம் டோஸ் போட வேண்டிய இடைவெளியை அவர்கள் குறைக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பலரும் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசிகூடப் போட்டுக்கொள்ளவில்லை. அதனால் தற்போது நடைமுறையில் இருக்கும் 12-16 வாரக் கால இடைவெளி சரிதான்” என்கிறார்.

“பிரிட்டனின் ஆய்வை எடுத்துக் கொண்டாலும், ஒரு டோஸ் போட்டுக்கொள்வது 33% மட்டுமே உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு தந்தாலும், அது தீவிர நோய் மற்றும் மருத்துவமனை தேவையைப் பெருமளவில் குறைக்கவே செய்கிறது. மிதமான நோயிலிருந்து பலரும் எளிதாக மீண்டு வந்துவிடுவார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.

இந்தியாவின் முன்னணி வைராலஜி நிபுணரும் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான ஜேக்கப் ஜானிடம் பேசினோம்.

தடுப்பூசி இரண்டாவது டோஸ்... இடைவெளி சரியா?

“டெல்டா வேரியன்ட் பற்றி இன்னும் முழுவதுமாக நமக்குத் தெரிய வரவில்லை. ஆனால், இது உருமாறிய வைரஸ்தானே தவிர புதிய வைரஸ் கிடையாது. அதனால் நிச்சயம் தடுப்பூசிகள் பயன்தரும். உருமாறிய வைரஸுக்கு எதிராக உருவாகும் ஆன்டிபாடிகள் குறைவாக இருக்கலாம். ஆனால் எப்படியும் T-Cell எதிர்ப்புச்சக்தி உருவாகியிருக்கும். அதனால், திறனைக் காரணம் காட்டி தடுப்பூசி போடும் காலத்தைத் தள்ளிவைக்கக்கூடாது. முடிந்த அளவு சீக்கிரம் இரண்டு டோஸ்களையும் போட வேண்டும். என்னைக் கேட்டால் நான்கு வாரங்கள்தான் சரியான கால இடைவெளி. இரண்டு டோஸும் போட்டுவிட்டால் இறப்புகள் நிகழ்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லவே இல்லை. அதுதானே முக்கியம். ஏற்கெனவே முதல் டோஸ் தடுப்பூசி போடுவதிலேயே நாம் தாமதித்துவிட்டோம். இப்போது இரண்டாம் டோஸையும் தாமதிப்பது சரியானது அல்ல. ஆன்டிபாடி அளவு அதிகமாக இருக்க வேண்டுமென்றால் மூன்றாவதாக ஒரு பூஸ்டர் டோஸை சில மாதங்களுக்குப் பிறகு போடுங்கள். தடுப்பூசிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகவே அரசு இதைச் செய்திருக்கிறது. காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பார்கள். அது தடுப்பூசிக்கும் பொருந்தும்” என்கிறார் அவர்.

இந்தியா போன்றதொரு நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பது மிகவும் சவாலான பணிதான். தேவையான தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கப்பெறாத இந்தச் சூழ்நிலையில் 12-16 வாரகால இடைவெளி அர்த்தமுடையதாகவே தெரிந்தாலும் அனைவருக்கும் அதே இடைவெளி சரிவருமா என்பதே கவலையாகவும் இருக்கிறது. எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மட்டுமாவது முதலில் இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. அப்படிச் செய்யாவிட்டால் முதல் டோஸ் கொடுக்கப்பட்டதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். அரசு முடிவெடுக்க வேண்டியதும், அனைவருக்கும் தடுப்பூசியைத் தர வேண்டியதும் காலத்தின் கட்டாயம்!