Published:Updated:

“ஒமைக்ரானை எளிதாக வெல்லலாம்!”

ஒமைக்ரான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒமைக்ரான்

எல்லாவற்றுக்கும் மேலாக முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலே ஒமைக்ரான் நெருங்காமல் தற்காத்துக்கொள்ளலாம்.

வைரஸ்களின் பரிணாம சுழற்சியில் அவற்றுள் பல்வேறு மரபணுக்கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல உருமாற்றங்களை அவை சந்திக்கின்றன. கொரோனா வைரஸும் அது தோன்றிய நாளிலிருந்து பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா என உருமாற்றங்கள் நடந்துவந்த சூழலில், தற்போது `ஒமைக்ரான்’ என்ற பெயருடன் உருமாற்றம் அடைந்துள்ளது கொரோனா வைரஸ். ஒமைக்ரான் உருமாற்றம் விரைவில் தொற்றும் தன்மையுடன் இருப்பதால், வெகு விரைவாக அலையின் உச்சத்துக்குச் செல்லலாம்; இதுவரை நேர்ந்த உருமாற்றங்களில் இந்த ஒமைக்ரான்தான் மிகவும் வேகமாகத் தொற்றக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது நமக்கான எச்சரிக்கையே தவிர, பீதியடையத் தேவையில்லை.

டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்
டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்

ஒமைக்ரான் உருமாற்றத்தில் வைரஸை மனிதனின் சுவாசப்பாதையில் ஒட்டச்செய்யும் ஸ்பைக் புரதத்தில் 30 இடங்களில் அங்கமாற்றம் நடைபெற்றுள்ளது. இதனால், ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படவும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மறுதொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்கின்றன ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகள். அதேசமயம், ஒமைக்ரான் மூன்றாம் அலை உருவானால், முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் தொற்று ஏற்பட்டு மீண்டவர்களுக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் தீவிர நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் மட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி. தற்போது ஒமைக்ரான் அலை வீசிவரும் தென் ஆப்பிரிக்காவிலும், பிரிட்டனிலும் இதே நம்பிக்கையூட்டும் செய்திகளைப் பார்க்க முடிகிறது.

ஏற்கெனவே தொற்றிலிருந்து மீண்டு, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஒமைக்ரானுக்கு எதிராகக் கூட்டு எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நிச்சயமாக மூன்றாம் அலையில் நம்மைக் காக்கும் கேடயமாக இருக்கும்.

2021 மத்தியில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கள ஆய்வில், நமது மக்கள்தொகையில் 60 - 70 சதவிகிதம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, அதன் மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 90 சதவிகிதமும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 60 சதவிகிதமும் இருப்பதால் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான கூட்டு எதிர்ப்பு சக்தி சிறப்பான அளவில் இருக்கிறது.

தற்போதைய சூழலில் ஜனவரி முதல் முன்களப் பணியாளர்களுக்கும், முதியோர்கள் மற்றும் இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும். மூன்றாம் அலை ஏற்படும் சூழலில் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும், தீவிரநிலையை அடைவதற்கான வாய்ப்பு வெகுவாக மட்டுப்படும். ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி பெற்ற பலருக்கும் சாதாரண தொற்றாகவே கடந்து செல்லும் வாய்ப்பு மிக அதிகம்.

இந்த உருமாற்றத்தை மரபணுப் பகுப்பாய்வுப் பரிசோதனையில் ‘எஸ்’ ஜீன் இல்லாமல் இருப்பதை வைத்து அடையாளம் (S gene dropout) காணலாம். பாசிடிவ் சாம்பிள்களில் குறிப்பிட்ட மாதிரிகளை மரபணுப் பகுப்பாய்வு செய்து, இந்த உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய முடியும். இதற்கான பிரத்யேக மரபணுப் பகுப்பாய்வு மையம் 2021, செப்டம்பர் மாதம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டு, செயல்பட்டுவருகிறது. எனவே, நமது மாதிரிகளை இங்கேயே மரபணுப் பகுப்பாய்வு செய்ய முடிவது நமக்கு பலமாகும்.

“ஒமைக்ரானை எளிதாக வெல்லலாம்!”

தென் ஆப்பிரிக்காவில் 2021 நவம்பர் இறுதியில் ஆரம்பித்த ஒமைக்ரான் தொற்று பன்மடங்கு கூடியிருக்கிறதுதான். ஆனாலும், அது பலருக்கும் சாதாரண காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலியுடன் சரியாகிவிடுகிறது. அங்கு ஒமைக்ரான் அலை தொடங்கிய இந்த நான்கு வாரங்களின் முடிவில் தொற்றுக்குள்ளானோரில் 1.7 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் அளவு தீவிர நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர். இதுவே இதற்கு முன்பு அங்கு மூன்றாம் அலையைத் தோற்றுவித்த டெல்டா தொற்றின்போது 19 சதவிகிதமாக இருந்தது. அதாவது, டெல்டா தொற்றின்போது நூற்றில் 20 பேர் அட்மிட் ஆனார்கள் என்றால், ஒமைக்ரான் தொற்றில் நூற்றில் இருவருக்கும் குறைவாகவே அட்மிட் ஆகிறார்கள். கிட்டத்தட்ட 10 மடங்கு தாக்கம் குறைவு.

முந்தைய ஆல்பா, பீட்டா, டெல்டா அலைகளைவிடவும் ஒமைக்ரானின் பாதிப்பு குறைவாகவே இருப்பதைக் காண முடிகிறது. இதுவரை கொரோனா வைரஸுக்கு எதிராக அளித்துவரும் சிகிச்சைகளே ஒமைக்ரானுக்கும் பொருந்தும். அறிகுறிகளற்ற மற்றும் சாதாரண அறிகுறிகளுடன் வெளிப்படும் கொரோனா நோய்க்கு எந்தச் சிகிச்சையும் இன்றி காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தாலே போதும். மிதமான மற்றும் தீவிர நோய் நிலையில் இருப்பவர்களுக்கு ஆக்சிஜன், ஸ்டீராய்டு போன்ற மருந்துகளைக்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலே ஒமைக்ரான் நெருங்காமல் தற்காத்துக்கொள்ளலாம். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளைச் சுத்தமாகப் பேணுதல், இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுதல், முன்களப் பணியாளர்கள், முதியோர்கள், இணை நோய்கள் இருப்பவர்கள் மூன்றாம் டோஸ் பூஸ்டரை செலுத்திக்கொள்ளுதல்... இவையெல்லாம் மிகவும் அவசியம். தொற்றை உணர்ந்தால், உடனடியாகப் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வருவோர் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் மிக மிகக் கட்டாயம். இவற்றையெல்லாம் பின்பற்றினால், வெகு நிச்சயமாக ஒமைக்ரானை வெல்லலாம்!