ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட, சிலர் தாங்களே அதன் முன்மாதிரியாக களத்தில் இறங்குவது உண்டு. அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், ஓர் அரசு மருத்துவர். சேலத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், அரசு மருத்துவமனை பற்றி பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, தனது பிரசவத்தை, தான் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனையில் மேற்கொண்டுள்ளார். இது மக்களிடம் விழிப்புணர்வையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் ஆத்தூர், கெங்கவல்லி அருகே கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதில் மருத்துவராகப் பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா. இவர், கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த மருத்துவர் புகழ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான ஹர்ஷிதா, தான் பணியாற்றும் மருத்துவமனையிலேயே தொடர்ந்து பரிசோதனை, சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அவருக்கு பிரசவவலி ஏற்பட்டபோது தனியார் மருத்துவமனையை தவிர்த்து, தான் பணியாற்றிய கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த 21-ம் தேதி சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
மருத்துவர் ஹர்ஷிதாவிடம் பேசினோம்... ``மக்களுக்கு அரசு மருத்துவமனை மீது ஒரு நம்பிக்கையின்மை உள்ளது. எங்கேயோ நடக்கும் சிறிய சிறிய தவறுகளால் அவர்கள் அரசு மருத்துவமனை என்றாலே இப்படித்தான் போல என்று தவறான எண்ணத்திற்கு சென்று விடுகின்றனர். ஆனால், இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் என்று பார்த்தால் அது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள்தான். இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் தனியார் மருத்துவமனைகளில் கூட கிடையாது. கர்ப்பிணிகளுக்கு பிரத்யேக, நவீன சிகிச்சை வசதிகள் உள்ளன.

நம்பிக்கையோடு மக்கள் அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுதான், என்னுடைய பிரசவத்தை நான் வேலைபார்க்கும் மருத்துவமனையிலேயே பார்த்துக் கொண்டேன். எளிய மக்கள் பலர் தனியார் மருத்துவமனைகளில் பணத்தை செலவழித்து வருகின்றனர். மருத்துவர்கள் அங்கு நல்ல சிகிச்சை கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அதே மருத்துவம் படித்த மருத்துவர்கள்தான் அரசு மருத்துவமனைகளிலும் வேலைபார்த்து வருகின்றனர். இங்கேயும் அதே சிகிச்சை கிடைக்கும் என்பதை உறுதிபடுத்தவே என்னுடைய இந்த முயற்சி" என்றார்.