
எங்களையெல்லாம் நீங்கள் கடவுளாகப் பார்க்க வேண்டாம். அறிவுள்ள மனிதர்களாக மதித்தாலே போதும்.’’
ஆங்கிலத்தில் `ஆக்குபேஷனல் ஹஸார்ட்ஸ் (Occupational hazards)’ என்று சொல்வார்கள்: நாம் செய்கிற தொழில் காரணமாக நமக்கு வரக்கூடிய ஆபத்துகள். மருத்துவத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. மருத்துவர்கள் தங்களுடைய வேலையின் தன்மை காரணமாக நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவதையும் சில நேரம் தங்கள் உயிரையே பறிகொடுப்பதையும் கொரோனாவுக்குப் பிறகுதான் கேள்விப் பட்டிருப்பார்கள்.
நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகி மீள்வதும், எப்போது வேண்டுமானாலும் நோய்த்தொற்று உள்ளாகலாம் என்ற நிலையில் மருத்துவம் பார்ப்பதும் மருத்துவர்களுக்குப் புதிதல்ல. உயிர்காக்கும் பொறுப்பில் இருக்கும் சில மருத்துவர்கள், செத்துப்பிழைத்த தங்கள் அனுபவங்களைச் சொல்கிறார்கள்.
``எனக்கு ஹெச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது என் குழந்தையின் வயது...’’
மகப்பேறு மருத்துவர் அமுதா ஹரி
``20 வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. ஹெச்.ஐ.வி நோய் குறித்து சமூகத்தில் மட்டுமல்ல; மருத்துவர்கள் மத்தியில்கூட பயம் இருந்த காலகட்டம். ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு நான் துணிந்து பிரசவம் பார்க்க ஆரம்பித்தேன். 4 பேருக்குப் பிரசவம் பார்த்த பிறகு தொடர்ந்து ஒரு மாதமாக இருமிக்கொண்டே இருந்தேன். சிகிச்சையெடுத்தும் சரியாகவில்லை. பயத்துடன் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது என் பையன் ஒரு வயதுக் குழந்தை. ரிசல்ட் கவரை வாங்கும்போது கை நடுங்கியது இன்னமும் நினைவிருக்கிறது. ரிசல்ட்டைப் பிரித்துப் படிப்பதற்கே பயமாக இருந்தது. ரிசல்ட் நெகட்டிவ்தான் என்றாலும், அந்த நேரத்தில் வந்த மரண பயம், எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் குழந்தையின் நிலைமை என்னவாகும் என்ற பரிதவிப்பு எல்லாம் டாக்டராகிய எனக்கும் வந்தது. ஆனால், அப்போதுதான் ஒரு நோயாளிக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் எப்படிப் பதறுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதன்பிறகு இன்னமும் அர்ப்பணிப்பு உணர்வோடு ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குப் பிரசவம் பார்க்க ஆரம்பித்தேன். இன்னமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
மக்களுக்கு இருக்கிற அதே மரண பயம், எங்களுக்குப் பிறகு எங்கள் குடும்பம், குழந்தைகளின் நிலைமையென்ன என்ற மன உளைச்சல், மருத்துவர்களாகிய எங்களுக்கும் இருக்கும். நாட்டைக் காப்பாற்ற மக்களுக்கு முன் நிற்கிற போர்வீரர்கள்போல நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். உங்கள் உடம்புக்கு ஏதோவொரு பிரச்னை வந்தால், ‘டாக்டர்ஸ் பார்த்துக்குவாங்க’ என்று நம்புகிறீர்கள்... உங்களுக்கு சிகிச்சையளித்ததன் விளைவாக எங்களுக்குத் தொற்று வந்தால்... எங்கள் உடல்களுக்குச் சுடுகாட்டில்கூட இடம் கிடையாது என்பதுதானே நம் நாட்டின் நிலை?

ஹெச்.ஐ.வி நம் நாட்டுக்கு வந்த புதிதில் மருத்துவர்களே சிகிச்சையளிக்க பயந்தார்கள். அது எப்படிப் பரவும், எப்படி வராமல் தடுக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு வந்தபிறகு இப்போது எல்லா மருத்துவர்களுமே மருத்துவம் பார்க்கிறார்கள். இதே நிலைமை கொரோனா விஷயத்திலும் வர வேண்டும். கூடவே, கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்குத் தனி இடம் தர வேண்டும்.’’
``எங்க பிள்ளைகளுக்கு ஸ்கூல் அட்மிஷன்கூட மறுக்கப்பட்டிருக்கு’’ மனோரமா
ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்காகச் செயல்படும் செஸ் அமைப்பின் நிறுவனர்
ஹெச்.ஐ.வி பாசிட்டிவ், ரத்தம் வழியாக மட்டுமே பரவக்கூடிய ஒரு தொற்று. ஆனால், இது பரவத் தொடங்கிய ஆரம்பக்காலத்தில் விழிப்புணர்வு கொஞ்சமும் கிடையாது. நோயாளி குளித்த நீர் வீட்டுப்பக்கமாக ஓடினால்கூட தொற்று ஏற்பட்டுவிடும் என பயந்தார்கள். இப்போதும் சிலர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். ஹெச்.ஐ.வி மருத்துவம் பார்க்கிறோம் என்ற காரணத்துக்காகப் பல பள்ளிக் கூடங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் தர மறுத்திருக்கின்றன. எங்கள் வீட்டுக்குழந்தைகளுடன் மற்ற வீட்டுக் குழந்தைகள் விளையாட வர மாட்டார்கள். என்னுடன் வேலை செய்த ஒரு நர்ஸுக்கு நிச்சயித்திருந்த திருமணம் நின்றுவிட்டது. காரணம் கேட்டதற்கு, `நீங்க ஹெச்,ஐ.வி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறவங்கன்னு தெரியாம நிச்சயம் பண்ணிட்டோம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி எத்தனையோ புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் சந்தித்தும், இதே வேலையில் நாங்கள் இருப்பதற்குக் காரணம், எங்கள் மனப்பான்மையும் நோய் பற்றிய சரியான விழிப்புணர்வும்தான்.

ஒருமுறை, ஹெச்.ஐ.வி பாதிப்புள்ள ஒரு குழந்தைக்கு நான் ஊசி போட்டுக்கொண்டு இருந்தபோது குழந்தை வேகமாக அசைந்துவிட்டது. ஊசி என் கையில் குத்தி குழந்தையின் ரத்தமும் ஏறிவிட்டது. உடனே, நோய்த்தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டேன். இந்தச் சம்பவம் நடந்து, 20 வருடங்களாகிவிட்டன. இப்போது வரைக்கும் எனக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை. இப்போதும் அவ்வ ப்போது பரிசோதனை செய்துகொண்டு, ஆரோக்கியமாகவே வாழ்ந்துவருகிறேன். நான் மட்டுமல்ல, என்னைப்போல எத்தனையோ மருத்துவர்களும் மக்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். எங்களையெல்லாம் நீங்கள் கடவுளாகப் பார்க்க வேண்டாம். அறிவுள்ள மனிதர்களாக மதித்தாலே போதும்.’’
``பன்றிக் காய்ச்சலிலிருந்து மீண்டு வந்தேன்’’
பாலியல் மருத்துவர் காமராஜ்
“நெருங்கிய உறவினர் பெண் ஒருவர் சில நாள்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அடிக்கடி மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்புவார். அப்போதுதான் பிரசவித்திருந்த அவருக்கு வயது 30. என்ன காய்ச்சல் என்று கண்டறியும் முன்னதாகவே திடீரென்று ஒருநாள் உயிரிழந்துவிட்டார். இந்தச் செய்தி எங்கள் குடும்பத்தினரை மிகவும் பாதித்தது. சிறிய வயதில் காய்ச்சலுக்கு ஓர் உயிரைப் பறிகொடுத்துவிட்டோமே என்று அனைவரும் வருந்திக்கொண்டிருந்தோம். அடுத்த சில நாள்களில் எனக்குக் காய்ச்சல் வந்தது. பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் உறுதியானது.
நான் மகப்பேறு மற்றும் பாலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சையளித்தாலும் என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு என்ன தொற்று இருக்கும் என்பது தெரியாது.
மிகவும் நெருங்கிய நண்பர்கள், விஐபிக்கள் சிலர் காய்ச்சல், சளித்தொந்தரவு போன்றவை ஏற்பட்டாலும் என்னிடம்தான் சிகிச்சைக்காக வருவார்கள். இதில் யாரிடமிருந்து எனக்கு நோய் பரவியது என்பது தெரியவில்லை.

தொற்றுநோய் மருத்துவரிடம் ஆலோசனை பெறச் சென்றபோது மருந்து, மாத்திரைகளுடன் ‘20 நாள்களுக்கு கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்’ என்று சொல்லிவிட்டார். மனைவி மருத்துவர் என்பதாலும் மருத்துவமனைப் பணியாளர்கள் மூலமும் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டேன். வராத நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாம் வீட்டுக்கு வந்தார்கள். உறவினர் பெண் எதிர்பாராதவிதமாக இறந்தது, தொடர்ந்து எனக்கும் பாதிப்பு ஏற்பட்டது என அனைவருமே மிகவும் பயந்துபோய்விட்டனர். வீட்டில் இனம்புரியாத ஒரு நிசப்தம் நிலவிக்கொண்டேயிருக்கும். 20 நாள்களுக்குப் பிறகு நான் முழுவதும் குணமடைந்துவிட்டேன். ஒரு மருத்துவனாக இதுபோன்ற தொற்றுநோய்களுக்கு பயந்து என் கடமையைச் செய்யாமல் இருக்க முடியாது. கடமை தவறுவதால் ஏற்படும் குற்றவுணர்ச்சி தொற்றுநோயைக் காட்டிலும் கொடியதாகத் தாக்கும்.”

“ நுரையீரல் வீங்கி, வலி வந்து”
நுரையீரல் நிபுணர் ஜெயராமன்
“சமீபத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த டாக்டர் சைமன் என் நண்பர்தான். மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவது காலங்காலமாக நடக்கிற விஷயம்தான். இதுவரை நாங்கள் அவற்றை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. கொரோனோ தற்போது அவற்றையெல்லாம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. என்னைப் போன்ற நெஞ்சகநோய் மருத்துவர்களுக்குக் காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி வந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். எனக்கு நோய்த்தொற்றால் சைனஸ் இருக்கிறது. தொண்டைவலி, இன்ஃபெக்ஷனால் நெஞ்சில் சளி அடைத்துக்கொண்டு வலி வருவதெல்லாம் பலமுறை நிகழ்ந்திருக்கின்றன. ஒருமுறை பிராங்கைட்டீஸ் வந்து நுரையீரல் வீங்கி, வலி வந்து, பின்னர் சிகிச்சை எடுத்து மீண்டு வந்தேன். அதன் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.”