Published:Updated:

``இனி பெரியவர்களுக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரைகள்!" - மாநிலப் பொது சுகாதாரத் துறை

ரத்தச் சோகை சரிசெய்யப்படாதபோது, நாளடைவில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.

மாத்திரைகள்
மாத்திரைகள் ( For Representation Only )

மக்களுக்கு அதிகளவில் ஏற்படும் அனீமியா பாதிப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு சுகாதாரத் துறை ஒரு பெரிய முயற்சியில் இறங்கவுள்ளது. 2020 பிப்ரவரி முதல், குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் குடற்புழுக்களை நீக்கும் மாத்திரைகளை, ஆண்டுக்கு இரண்டு முறை எனக் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கவுள்ளது.

அனீமியா
அனீமியா

தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் இளம் பெண்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் அளவு தேவைக்கும் கீழ் குறையும்போது இந்த ரத்தச் சோகை ஏற்படுகிறது. இதனால் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் குறைவதால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படவும் ரத்தச்சோகை காரணமாகிறது.

பொதுவாக ரத்தச்சோகை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நம் வயிற்றில் குடல் பகுதியில் காணப்படும் குடற்புழுக்கள், குறிப்பாக. கொக்கிப் புழுக்கள் முக்கியக் காரணமாக உள்ளன.

மாத்திரைகள்
மாத்திரைகள்
``சுயகட்டுப்பாட்டை இழக்கவைக்கும் போர்னோகிராபி" - அடிக்‌ஷனிலிருந்து மீண்டுவர உதவும் வழிகள்!

குடற்புழுக்கள் மனிதக் குடலில் வாழ்கின்றன. அங்கு அவை தினமும் ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகின்றன. `நெகேட்டர் அமெரிக்கானஸ் (Necator americanus)' என்பது தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் ஒரு குடற்புழு வகை. இவை ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 0.2 மில்லி ரத்தம் வரை உறிஞ்சும். அவை உடலுக்குள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும்போது, அந்தப் பாதிப்பு உள்ளவர்கள் நிறைய ரத்தத்தை இழக்கிறார்கள். இதனால் `அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகை ஏற்பட்டு பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, பசி குறைதல், எடை குறைதல் என சங்கிலித் தொடராக ஏற்படும் பாதிப்புகளால் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, நமைச்சல், படை, சொறி உள்ளிட்ட சரும நோய்களும் ஏற்படும்.

ரத்தச்சோகை சரிசெய்யப்படாதபோது, நாளடைவில் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும். லார்வா, நுரையீரலுக்குள் சென்று வருவதன் மூலம் சுவாசப் பிரச்னைகள், இருமல், காய்ச்சல் என நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி மனிதர்களுக்குப் பல ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தும் இந்தக் குடற்புழுக்கள், ஒருவரின் உடலில் இருக்கின்றனவா என்பதை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மூலமே கண்டுபிடிக்க முடியும்.

குடற்புழுக்கள்
குடற்புழுக்கள்

பொதுவாக, குடற்புழுக்கள் நீக்கம் செய்வதற்காக `ஆல்பெண்டசூஸோல் (Albendazole)' என்ற மாத்திரையை பள்ளிக் குழந்தைகளுக்கு அரசின் சார்பில் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுக்கப் பெரியவர்களுக்கும் இந்த மாத்திரையை வழங்க மாநில பொதுச் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

பொது மருத்துவர் சிவராம கண்ணனிடம் இதுபற்றிப் பேசினோம்.

"ரத்தச்சோகை ஏற்படுவதற்குக் குடலில் காணப்படும் புழுக்களும் ஒரு முக்கியக் காரணம். இவை நம் திசுக்களிலிருந்து ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டே இருக்கும். எனவே, இந்தக் குடற்புழுக்களை அழிப்பதற்கான மாத்திரைகளைச் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எடுத்துக்கொள்வது முக்கியம். குழந்தைகளுக்கு அவர்களின் எடைக்குத் தகுந்தாற்போல இந்த மாத்திரை கொடுக்கப்படும்.

பொது மருத்துவர் சிவராம கண்ணன்
பொது மருத்துவர் சிவராம கண்ணன்

45 கிலோவுக்கு மேல் உள்ளவர்களுக்கும் பெரியவர்களுக்கும் 400 மில்லி கிராம் கொடுக்கலாம். பெரியவர்களும் சிறியவர்களும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக, பெண்களுக்குக் கர்ப்பகாலத்தில் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதால் கர்ப்பிணிகள் இதைத் தவிர்க்கவும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும். சுய மருத்துவம் வேண்டாம்.

வீடு, வெளியிடம், அலுவலகம் என எங்கும் சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லை. எனவே, குடற்புழுக்களின் பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள குடற்புழு நீக்கம் செய்யும் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம். மாநிலப் பொதுச் சுகாதாரத் துறையின் இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது" என்றார்.

மாத்திரைகள்
மாத்திரைகள்
`காபி டே' சித்தார்த்தா தற்கொலை முதல் தீபிகாவின் அழுகை வரை! - 2019-ன் உளவியல் சிக்கல்கள்

இந்தத் திட்டத்துக்குப் போதுமான அளவு மாத்திரைகள் வாங்க, பொதுச் சுகாதார இயக்குநரகம் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடம் உதவி கோரியுள்ளது.