Published:Updated:

கொரோனா நாட்குறிப்பு!

கொரோனா நாட்குறிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா நாட்குறிப்பு!

ஒருமாதிரி இருண்ட நிலைக்குச் செல்கிறது இவர் மனநிலை. உற்ற நண்பன் ஒருவர் சரியாக அந்த நேரத்தில் அழைக்கிறார்.

அறிகுறிகளற்ற கோவிட் 19 தொற்று உள்ளவரின் அனுபவங்கள்:

அவருக்கு 44 வயது. இரண்டு நாள்களாக இருமல். மூன்றாம் நாள் சளியும் சேர்ந்து கொள்கிறது. அருகிலுள்ள சோதனை மையத்தில் பரிசோதனை செய்துகொண்டு வீடு வருகிறார்.

நாள் 1

வீட்டில் அனைவருக்கும் கொஞ்சம் கலவரம். ‘அதெல்லாம் ஒண்ணும் இருக்காது... எதுக்கும் தனி அறைல இருந்துக்கோ’ நண்பர்களின் அழைப்புகள். எப்போதும் அருகில் வரும் மகனைப் பார்த்ததும், தள்ளிச் சென்று பேசுகிறார். மனைவியிடம் ‘நீங்க சாப்ட்டு முடிச்சுட்டு.. எனக்குக் குடுங்க. நான் ரூம்ல சாப்டுக்கறேன்’ என்று சொல்ல, அவர்கள் இவரைப் பரிதாபப் பார்வை பார்க்கிறார்கள். இவர் தன் தயக்கத்தை முகத்தில் வெளிக்காட்டாமல் அறைக்குள் செல்கிறார். அன்று முழுவதும் அறையை விட்டு வெளிவரவில்லை. தான் உபயோகிக்கும் டாய்லெட்டை வேறு யாரும் உபயோகிக்க வேண்டாம் என்றும் சொல்லிவிடுகிறார்.

கொரோனா நாட்குறிப்பு!

நாள் 2

அடுத்த நாள் காலை 10 மணிக்கு, மின்னஞ்சலில் ‘கொரோனா பாசிடிவ்’ என்ற தகவல் வருகிறது. ஒருமாதிரி இருண்ட நிலைக்குச் செல்கிறது இவர் மனநிலை. உற்ற நண்பன் ஒருவர் சரியாக அந்த நேரத்தில் அழைக்கிறார். “ப்ச்.. கொரோனான்னாலே ஏண்டா பீதியாகற?” என்று நண்பர் சொன்ன சில ஆறுதல் வார்த்தை களும், அறிவுரைகளும் மிகுந்த ஆசுவாசத்தை அளிக்கின்றன. மனைவி, மகனையும் அழைத்து விவரத்தைக் கூறி, “பயப்பட ஒண்ணுமில்லை. எதுக்கும் நீங்களும் டெஸ்ட் எடுத்துருங்க” என்று சொல்கிறார். எந்நேரமும் மாநகராட்சி சார்பில் அழைப்பு வரலாம் என்று காத்திருக்கிறார். சோஷியல் மீடியாவில் இதற்கு முன் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தவர்களின் பதிவுகளைத் தேடிப் படிக்கிறார். கமென்ட்ஸ்களிலும், வேறு சில பதிவுகளின் மூலமும் நாட்டில் பாதிப்பேர் டாக்டர் ஆகிவிட்டார்கள் என்பதை உணர்ந்து, சோஷியல் மீடியாவை மூடிவைத்துவிடுகிறார். உற்ற ஒரு சில நண்பர்களுக்கு அழைத்துப் பேசுகிறார். மாலைக்குள் அவரது மனம் “இதை எதிர்கொள்வோம்... மீள்வோம்” என்று ஒருவித சகஜநிலைக்கு வருகிறது. மகனிடமும், மனைவியிடமும் இரவு ஒரு சில மணிநேரம் மனம் விட்டுப் பேசுகிறார்.

நாள் 3

9 மணி: சென்னை மாநகராட்சியில் இருந்து “டிரஸ் மட்டும் எடுத்துக்கோங்க. 11 மணிக்குள்ள ஆம்புலன்ஸ் வரும்” என்று அழைப்பு வருகிறது. வீட்டில் சொல்கிறார். இரண்டு செட் உடைகள், பிரஷ், பேஸ்ட், சோப், துண்டு ஆகியவற்றை எடுத்துத் தருகிறார் மனைவி. “அதெல்லாம் அங்க தருவாங்களாம்’ என்றவரிடம் “இருக்கட்டும்ங்க” என்கிறார் மனைவி. அவரது குரலிலிருந்த கவலையை உணர்கிறார் இவர். மகன் ‘தைரியமா இருங்கப்பா’ என்கிறான். “அத அம்மாட்ட சொல்லு” என்று சூழலை மாற்ற முயல்கிறார்.

11 மணி: ஆம்புலன்ஸ் வருகிறது. வீட்டில் விடைபெற்று ஆம்புலன்ஸில் ஏறுகிறார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

12 மணி: நுரையீரலில் பாதிப்பு இருக்கிறதா என எக்ஸ்ரே மற்றும் சி.டி.ஸ்கேன் பரிசோதனை நடத்தப்படுகிறது. அங்கே நிறைய நோயாளிகள் இருமலோடும், உடல் காய்ச்சலோடும் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் பயம் வருகிறது. அங்கேயே மதிய உணவை முடித்துவிட்டு சோதனை முடிவுகளுக்குக் காத்திருக்கிறார். அங்கே இருந்த சில மணி நேரத்தில், பலரது நிலையையும் பார்த்து கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்கிறது.

கொரோனா நாட்குறிப்பு!

பிற்பகல் 2 மணி ; பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு வருகிறது. லயோலா கல்லூரி தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். “சாலிகிராமத்துல இருக்கற சித்தா கேர் சென்டருக்குப் போறேன்” என்று இவர் சொல்ல “இல்ல... லயோலாதான் அனுப்புவோம். இல்லன்னா ‘ஹோம் க்வாரன்டீன்’னு போட்டுக் குடுத்துருவோம். நீங்களா வேணும்னா சித்தாக்குப் போய்க்கலாம்” என்று சொல்லப்படுகிறது. ‘சிலர் போயிருக்கிறார்களே’ என்று கேட்க, அவர்கள் மீண்டும் மறுக்கிறார்கள். சரி என்று லயோலா முகாமுக்குச் செல்கிறார்.

பிற்பகல் 4 மணி: லயோலாவில் அனுமதிக்கப்படும்போதும் சித்தா முகாமுக்கு அனுப்பச் சொல்லிக் கேட்கிறார். ஓமந்தூராரில் சொல்லப்பட்ட அதே பதில்தான் இங்கும். ‘மினிமம் 5 நாள் இருக்கணும். வீட்ல குழந்தைகள், பெரியவங்க இருந்தா தொடர்ந்து இருக்கலாம். 5 நாள்ல ஒண்ணும் இல்லைன்னா டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம்” என்கிறார்கள். குறிப்பிட்ட இடை வெளியில் கட்டில்கள் போடப் பட்டிருக்க, பிரஷ், குளிக்க & துவைக்க சோப், மாஸ்க், சோப்பு, சீப்பு, எண்ணெய், இரண்டு ‘மக்’குகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

முகாமில் முதல் நாளிலிருந்து... அங்கே இருந்த ஏழு நாள்களில்...

காலை 7 மணிக்கு கபசுரக் குடிநீர் ஒரு கப்; காலை 8 மணிக்கு மூன்று இட்லி, சிறிய தோசை, ஒரு முட்டை, காலை 9 மணிக்கு ஒரு மாஸ்க் வழங்கப்படுகின்றன. அதனுடன் மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள். மதியம் 1 மணிக்கு. சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, சிறிதளவு காய்கறிகள். மாலை 5 மணிக்கு டீ மற்றும் ஏதாவது ஒரு பயறு. இரவு 8 மணிக்கு சப்பாத்தி அல்லது இட்லி.

சக தொற்றாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். காலையிலும் இரவிலும் ஓகே. மதியம் காய்கறியின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள். ஒருவர் ‘சாப்பாடு வேகலை” என்று புகார் சொல்ல, வேறு சிலரும் அதை வழிமொழிகிறார்கள். தூய்மைப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் வார்டுக்குள் வருவதில்லை. செவிலியர்கள் வார்டுக்கு வெளியில்தான் இருக்கிறார்கள். எமர்ஜென்ஸிக்கு ஒரு ஆம்புலன்ஸ் எப்போதும் நிற்கிறது. டாய்லெட், பாத்ரூம் ஆகியவை தூய்மையாக இருக்கின்றன. அவ்வப்போது வார்டு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். யாராவது சளி, தும்மல் என்று உணர்ந்தால் ‘அரசு மருத்துவமனைக்குப் போகிறீர்களா?’ என்று விசாரித்து அனுப்புகிறார்கள். இங்கே வேறெந்த சோதனைகளும் நிகழ்த்தப்படுவதில்லை. குடிக்க வெந்நீர்கூட எங்கும் இல்லை. ஒரே ஒருவர் எலக்ட்ரிக் கெட்டில் வைத்திருந்தார். ஆனால் அவரிடம் யாரும் கேட்க முடியாத நிலை. குடிக்க வெந்நீர் கொடுக்கலாமே என்று பலரும் பேசிக்கொள்கின்றனர்.

இரண்டாம் நாளிலேயே எல்லாரும் நட்போடு பேசிக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தொடர்ந்து இருமிக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் `தனித்தனியா ஸ்க்ரீன் இருந்தா நல்லாருக்கும்’ என்று பேசிக்கொள்கிறார்கள். ‘என்னை சும்மா கூட்டிட்டு வந்துட்டாங்க. வீட்லயே இருந்திருப்பேன்’ என்று சத்தமாகப் புகார் சொல்லிக்கொண்டே இருந்தார் ஒருவர். அடுத்தநாள் அவரின் அம்மாவுக்கு சீரியஸ் ஆகி ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டதாக அழைப்பு வருகிறது. உடன் இருந்த இன்னொருவர் “வீட்ல வயசானவங்க, குழந்தைகள் இருந்தா நமக்கு அறிகுறியே இல்லன்னாலும் தனிமைப்படுத்தணும்கறது இதனாலதான். நம்ம மூலமா அவங்களுக்குப் பரவிடும்’’ என்று சொல்ல, புரிந்துகொண்டவராய் அமைதி காக்கிறார் அவர்.

கொரோனா நாட்குறிப்பு!

வீட்டில் மனைவி மகனுக்குத் தொற்று இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டு ஏழாம்நாளில் இவரை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். “நாங்கள் சொல்லும்வரை வெளியில் போகக்கூடாது, போனால் அது சட்ட மீறல்” என்று அறிவுறுத்துகிறார்கள். சுகாதாரத்துறையிடமிருந்தும், ஆசிரியர் ஒருவரிடமிருந்தும் அழைப்புகள் வரும். எப்போதும் எடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் வெளியில் அனுப்பும்போது டெஸ்ட் எதுவும் எடுப்பதில்லை. அந்த ஏழுநாளில் இவரது ஆரோக்கியத்தைக் கணக்கில் கொண்டு விடுவிக்கிறார்கள்.

அதேபோல டிஸ்சார்ஜ் செய்தபிறகும் தினமும் சுகாதாரத்துறையிடமிருந்து அழைப்பு வருகிறது. அவர்கள் சொல்லும்வரை வெளியில் போகக்கூடாது என்கிறார்கள். ‘டீச்சர் பேசறேன்’ என்று ஒருவர் தினமும் அழைத்து கவுன்சலிங் கொடுக்கிறார். இன்னும் வீட்டில்தான் இருக்கும் அவர், கொரோனா என்று பீதியுறும் தன் நண்பர்களுக்கு இப்போது ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

(கொரோனா சிகிச்சை மேற்கொண்ட சிலரின் அனுபவங்களைக் கேட்டு எழுதியது)