லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

மாரடைப்பு, பாம்புக்கடி, விபத்து, வலிப்பு... நீங்களும் செய்யலாம் முதலுதவி - முழுமையான வழிகாட்டல்!

முதலுதவி
பிரீமியம் ஸ்டோரி
News
முதலுதவி

‘பக்கத்துலதான் ஹாஸ்பிட்டல் இருக்கு. ஆம்புலன்ஸ் வர்ற வரை காத்திருக்க வேண்டாம். ஷேர் ஆட்டோல தூக்கிப் போட்டுக் கொண்டு போயிடலாம்’ என யாரேனும் தவறான அறிவுறுத்தல் கொடுத்தால் அதை தயவுசெய்து செய்யக் கூடாது.

பெரம்பலூரில் தெரு நாய்கள் துரத்திக் கடித்ததில் பல்வேறு இடங்களில் காயம்பட்டு மயங்கிய நிலையில் ஒரு குரங்குக் குட்டி கிடந்தது. அதைக் காப்பாற்றிய நபர், மனிதனுக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சை போல், குரங்கின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி, குரங்கின் வாயில் மூச்சுக்காற்றை செலுத்தி முதலுதவி செய்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இதே போல குரங்கு ஒன்று, தன் குட்டியைக் காப்பாற்றிய வீடியோவையும் பார்த்திருப்போம்.

மனிதன் உள்பட அனைத்து உயிர்களுக்குமே முதலுதவி என்பது அவசியமான ஒன்றாக உள்ளது என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. சரியான நேரத்தில் செய்யப்படும் முதலுதவி விலை மதிப்பில்லாத உயிரைக் காப்பாற்றும். அது குறித்த விரிவான விழிப்புணர்வு... இந்த இணைப்பிதழில்.

நாய்
நாய்

முதலுதவி தொடர்பாக அரசு இயற்றியுள்ள சட்டம், முதலுதவி பயிற்சி ஏன் அவசியம், பயிற்சி பெறா தவர்கள் என்ன செய்யலாம் என்பது போன்ற பல் வேறு விஷயங்களைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் முதலுதவிக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனமான `அலெர்ட் அறக்கட்டளை’ பயிற்சிப் பிரிவின் உதவி மேலாளர் ரா.காரல் மார்க்ஸ்.

`குட் சமாரிட்டன்' (Good Samaritan) சட்டம்... அனைவரும் தெரிந்துகொள்வோம்!

 ரா.காரல் மார்க்ஸ்
ரா.காரல் மார்க்ஸ்

``விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவி செய்ய நினைப்பவர்கள்கூட காவல் துறை விசாரணை, வழக்கு, நீதிமன்றத்துக்கு அலைவது என ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்வோமோ என்று பயந்து உதவாமல் சென்று விடுகிறார்கள். இதனால் காப்பாற்ற யாருமின்றி பலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. இதைத் தடுப்பதற்காக ‘குட் சமாரிட்டன்’ சட்டம் 2019-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் 134 A பிரிவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களுக்கான வரையறை இடம்பெற்றுள்ளது.

அதன்படி, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என காவல் துறை உள்பட யாரும் அவர்களைத் தடுக்க முடியாது. உதவ விரும்புபவர்கள் தாராளமாக உதவலாம். பாதிக்கப்பட்டவரை அரசு, தனியார் என எந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றாலும் ‘நீங்கள் ஏன் அழைத்து வந்தீர்கள்?’ என்பது போன்று கேள்விகளை யாரும் கேட்கக்கூடாது. உதவி செய்யும் நோக்கில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர்கள்தான் சிகிச்சைக்கு உடன் இருக்க வேண்டும், மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்கக் கூடாது. உதவி செய்த நபர் தன் தொலைபேசி எண், இமெயில் ஐடி, ஆதார் எண் போன்ற சுயவிவரங்களைக் கொடுக்க வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்கக் கூடாது. மிக முக்கியமாக, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுபவர்கள் மீது சிவில், குற்ற வழக்குகள் என எந்தவித வழக்குகளும் பதியப்படாது.

இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு பெரிய விழிப்புணர்வு இல்லை. மாறாக, விபத்தைப் பார்த்தவர்கள், உதவி செய்தவர்கள்தான் காவல்துறையில் முதல் சாட்சியாகப் பதியப்படுவார்கள் என்பது போன்ற தவறான செய்திகள்தான் மக்கள் மத்தியில் அதிகம் பரவியுள்ளன.

முதலுதவி
முதலுதவி

`பொன்னான நேரம்' என்றால் என்ன?

ஒரு நபர் விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்படுவதிலிருந்து மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை கிடைக்கும் வரை உள்ள இடைப்பட்ட நேரத்தைத்தான் `பொன்னான நேரம்' (Golden Hour) என்கிறோம். இந்தப் பொன்னான நேரத்தைத் தேவையில்லாமல் விரயமாக்கக்கூடாது. ஒருவர் விபத்தில் காய மடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு உயிரிழப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படலாம். அதற்கான காரணங்களில் ஒன்று ரத்த விரயம். விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்தப்போக்கை நிறுத்துவதுடன் தேவையான அளவு ரத்தத்தை உடலில் செலுத்தி, மூச்சுத்திணறல் இருந்தால் விரைவாக அந்தக் குறைபாடு போக்கப்பட வேண்டும். இப்படி எந்த அளவுக்கு விரைவாக சிகிச்சையளிக்கப்படுகிறதோ அந்த அடிப்படையில்தான் ‘பொன்னான நேரம்’ என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது.

பயிற்சி பெறாதவர்கள் என்ன செய்யலாம்?

விபத்தில் சிக்கி ஒருவர் அடிபட்டுக்கிடக்கிறார் என்றால், அந்த இடத்தில் மீண்டும் ஏதேனும் விபத்து நடைபெறாமல் இருக்க சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நின்றால் அவற்றை அப்புறப்படுத்துவது, அடிப்பட்டவர்கள் மீது ஏதேனும் அதிக எடையுள்ள பொருள்கள் விழுந்திருந்தால் அவற்றை அகற்றுவது, காற்றோட்டம் ஏற்படும் வகையில் சுற்றி நிற்பவர்களை அகற்றுவது என பாதிக்கப்பட்டவரைத் தொடாமல் செய்யக்கூடிய உதவிகளைத் தாராளமாகச் செய்யலாம்.

பொதுவாக விபத்து நடைபெற்ற இடங்களில் கூட்டம் கூடிவிடும். ஆம்புலன்ஸுக்கு அவர் அழைத்தார், இவர் அழைத்தார் என்று நினைத்துக் கொண்டு யாருமே அழைத்திருக்க மாட்டார்கள். இதனால் பொன்னான நேரத்தில் 10-15 நிமிடங்கள்கூட வீணாகிவிடும். முதலுதவி பயிற்சி பெறாதவர்கள் என்றால் முதலில் அங்கு யாராவது ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருக்கிறார்களா என்று ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்துவிட்டு யாருமே பண்ணவில்லை என்றால் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும்.

முதலுதவி
முதலுதவி

கார், ஷேர் ஆட்டோவைத் தவிருங்கள்!

‘பக்கத்துலதான் ஹாஸ்பிட்டல் இருக்கு. ஆம்புலன்ஸ் வர்ற வரை காத்திருக்க வேண்டாம். ஷேர் ஆட்டோல தூக்கிப் போட்டுக் கொண்டு போயிடலாம்’ என யாரேனும் தவறான அறிவுறுத்தல் கொடுத்தால் அதை தயவுசெய்து செய்யக் கூடாது. ஆம்புலன்ஸில்தான் ஸ்ட்ரெச்சர் படுக்கை, அடிப்படையான முதலுதவிக்குத் தேவையான விஷயங்கள், முறையாக பயிற்சி பெற்ற டெக்னீஷியன் அல்லது செவிலியர் என அனைத்தும் இருக்கும். முதலுதவியைச் சரியாகச் செய்யும்போது உயிரைக் காப்பாற்றிவிடலாம். கார், பைக், ஷேர் ஆட்டோ, ஆட்டோ என எதிலாவது அழைத்துச் சென்றால் உயிர் போவதற்குகூட வாய்ப்புள்ளது.

வயிற்றில் அழுத்தி தண்ணீரை வெளியேற்றலாமா?

பல சினிமாக்களில் கதாநாயகி தண்ணீரில் விழுந்துவிடுவார், கதாநாயகன் சென்று காப்பாற்றுவார். காப்பாற்றியதும் வயிற்றில் கையை வைத்து அழுத்தி தண்ணீரை வெளியில் எடுப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அது தவறான விஷயம். வயிற்றுக்குள் சென்ற தண்ணீர் சிறுநீராக வெளியேறிவிடும். அதனால் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், மூக்கு வழியாக நுரையீரலுக்குள் தண்ணீர் போயிருக்கும். பாதிக்கப்பட்டவருக்கு மூச்சு இருக்கிறது என்றால் அவரை ஒருபக்கமாக திருப்பிப் படுக்கவைத்தால் தண்ணீர் வெளியேறும்.

மூச்சு இல்லை என்றால், இதயத்தை முதலில் இயங்க வைக்கும் சிபிஆர் முதலுதவியைச் செய்ய வேண்டும். சிபிஆர் செய்யும்போதே நுரையீரல், மூச்சுக்குழாய், மூக்கு ஆகிய இடங்களில் உள்ள தண்ணீர் வெளியேறிவிடும். வயிற்றில் அழுத்தினால் அப்பகுதியில் உள்ள தண்ணீர் வெளியேறாது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

நாக்கிடமிருந்து காப்பாற்றுங்கள்!

விபத்திலோ, மாரடைப்பு போன்ற பிரச்னையாலோ பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தவர்களுக்கு அவர்களின் நாக்குதான் எதிரியாக இருக்கும். மயக்க நிலையில் இருக்கும்போது நாக்கு உள்பக்கமாகச் சென்று மூச்சு செல்லும் பாதையைத் தடுத்துவிடும். இதனால் மூச்சு தடைப்பட்டு உயிரிழப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, சுயநினைவை இழந்து மயக்க நிலையில் உள்ளவர்களின் நெற்றியில் ஒரு கை, தாடையில் இரு விரல் வைத்து தலையைச் சற்று பின்னோக்கிச் சாய்க்க வேண்டும். தண்ணீரில் மூழ்கியவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், மாரடைப்பு ஏற்பட்டவர்கள் என மயக்க நிலையில் இருக்கும் அனைவருக்கும் இதைச் செய்ய வேண்டும்.

நாக்குப் பகுதி தொண்டையில் சிக்காமல் தடுத்த பிறகு அவர்களின் சுவாசத்தைப் பரிசோதிக்க வேண்டும். அதற்கு நமது காதை அந்த நபரின் மூக்கின் அருகில் கொண்டு சென்று கேட்க வேண்டும். அவரது நெஞ்சுப்பகுதியில் அசைவு இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். நமது காது மிகவும் சென்சிட்டிவ்வான பகுதி. எனவே மூச்சுக்காற்று காதில் பட்டதும் சிலிர்க்கும். இதை வைத்து மூச்சு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

 தவப்பழனி
தவப்பழனி

விஷத்துக்கு உப்பு!

விஷம் அருந்தியவர்களை வாந்தி எடுக்க வைப்பதற்கு ஆட்டுச் சாணம், மாட்டுச் சாணம் போன்ற அருவருக்கத்தக்க பொருள்களை தண்ணீரில் கரைத்து குடிக்கக் கொடுப்பார்கள். அவை நோய்த்தொற்றை ஏற்படுத்தும். விஷம் சாப்பிட்டவர்கள் சுயநினைவுடன் இருந்தால் மட்டும் ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு அல்லது தண்ணீரில் வேப்பெண்ணெய் கலந்து குடிக்கக் கொடுக்க வைத்து வாந்தி எடுக்க வைக்கலாம். சுயநினைவை இழந்துவிட்டால் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக்கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்’’ என்று விளக்கினார் ரா.காரல் மார்க்ஸ்.

எந்தெந்தப் பிரச்னைக்கு என்னென்ன முதலுதவிகள் செய்யலாம் என்று விரிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த விபத்து மற்றும் அவசரகால மருத்துவர் தவப்பழனி.

எது முதலுதவி?

``விபத்து, காயம், உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளானவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் உடல்நிலையில் பின்னடைவோ, உயிரிழப்போ ஏற்படலாம். சில நேரங்களில் பாதிப்பின் தீவிரம் அதிகமாகலாம். அது போன்ற நேரங்களில் உடல்நலத்தில் ஏற்படும் பின்னடைவைத் தள்ளிப்போடவோ, தடுக்கவோ பின்பற்றப்படும் மருத்துவ உதவியை ‘முதலுதவி’ என்கிறோம். தக்க தருணத்தில் செய்யப்படும் முதலுதவி, உயிரைக் காப்பாற்றும். பல நேரங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்படாமல், ரத்த இழப்பு அதிகரிக்காமலும் தடுக்கும்.

முதலுதவி
முதலுதவி

ABC... பொதுமக்களும் பின்பற்றலாம்!

’ஏபிசி’ என்ற கருத்தாக்கம் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் பொதுமக்களும் இதைப் பின்பற்றலாம். A - Airway, B - Breathing, C - Circulation.

Airway: மயக்கமோ, மூச்சுத்திணறலோ ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களைச் சுற்றி கூட்டம் போடாமல் காற் றோட்டத்தை ஏற்படுத்துவது; வீடாக இருந்தால், ஜன்னலைத் திறந்து காற்று வருவதற்கு வழிசெய்வது ‘ஏர்வே.’

Breathing: விபத்தில் அடிபட்டு, முகம் தரையில்படும் நிலையில் மயக்கத்திலிருப்பவர்கள், வாந்தியெடுத்த நிலையில் குப்புற விழுந்து மயங்கிய நிலையில் இருப்பவர் களுக்கு மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படும். அவர்களை ஒருக்களித்துப் படுக்க வைத்தால், மூச்சுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு நீங்கி, இயல்பாக சுவாசிப்பார்கள். ஆஸ்துமா நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழும்போது அவர்கள் தலையைச் சற்று உயர்த்திப் பிடித்தால் இயல்பாக சுவாசிப்பார்கள்.

Circulation: காயம்பட்ட இடத்தில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவது. விபத்துக்குள்ளாகிக் காயம்படும்போதோ, விளையாடும்போது தலை மற்றும் தாடைப் பகுதியில் அடிபடும்போதோ அல்லது கத்தி, அரிவாள்மணை கீறும்போதோ காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். முகம் மற்றும் கைகளில் இயல்பாகவே ரத்த ஓட்டம் அதிகமாகக் காணப்படுவதால், காயம்படும்போது அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படும். அப்போது ரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தில் சுத்தமான துணியை வைத்து மிதமாக அழுத்திப் பிடிக்க வேண்டும். அடிபட்ட இடத்தைச் சற்று உயர்த்திய நிலையில் வைக்க வேண்டும். இதனால் ரத்தப்போக்கு விரைவில் நிற்க வாய்ப்புள்ளது.

முதலுதவி
முதலுதவி

சி.பி.ஆர்.... எப்படிச் செய்ய வேண்டும்?

நின்றுபோன இதயத்துடிப்பை மீட்கச் செய்யும் முதலுதவிதான் `சி.பி.ஆர்’ எனப்படும் ‘கார்டியோபல்மோனரி ரிசசிட்டேஷன்’ (Cardiopulmonary Resuscitation - CPR). மாரடைப்பு ஏற்பட்டோ, மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்தோ ஒருவர் மயங்கி விழுந்தால், முதலில் அவருக்கு சுவாசம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.

வயிறு, நெஞ்சுப் பகுதியில் அசைவிருந்தால் மூச்சு இருக்கிறது என்று பொருள். நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதைக் கழுத்தின் பக்கவாட்டில் இருக்கும் பெரிய ரத்தக்குழாயில் இரு விரல்களை வைத்துப் பரிசோதிக்க வேண்டும். இரண்டு இடங்களிலும் அசைவு, துடிப்பு இல்லையென்றால் இதயத்துடிப்பு நின்றுவிட்டது (Cardiac Arrest) என்று பொருள். அத்தகைய சூழலில் முதலுதவி செய்யாவிட்டால் அவர்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. மயங்கி விழுந்து இதயத்துடிப்பு நின்றுவிட்டால், குறுகிய நேரத்தில் இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முதலுதவி செய்ய வேண்டியது அவசியம்.

இந்தச் செயல்முறையைச் செய்வதற்கு முன்னர் ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் கொடுத்துவிட வேண்டும். அதன் பிறகு மயங்கிய நிலையில் இருப்பவரின் நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் (Chest Compression) கொடுப்பதுதான் `சி.பி.ஆர்’ செயல்முறை. நடுநெஞ்சுப் பகுதியில் உள்ளங்கைக்கு மேல் மற்றொரு கையின் உள்ளங்கையை வைத்து, உடல் 5 செ.மீ அளவு உள்ளே அழுந்துமாறு அழுத்த வேண்டும். சௌகர்யப்பட்டால், சம்பந்தப்பட்டவரின் வாயோடு வாய்வைத்தும் மூச்சைக் கொடுக்கலாம்.

முதலுதவி
முதலுதவி

30 முறை நெஞ்சுப்பகுதியை அழுத்துவது, பிறகு வாய்வழியாக இரண்டு முறை மூச்சைக் கொடுப்பது என இரண்டையும் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இரண்டு முறை இவற்றைச் செய்து முடிக்க இரண்டு நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு, ‘நாடித்துடிப்பு இருக்கிறதா?’ என்று மீண்டும் கழுத்தில் கை வைத்துப் பரிசோதிக்க வேண்டும். நாடித்துடிப்பு இல்லையென்றால், மீண்டும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும். இதைச் செய்ய ஆரம்பிக்கும்போது அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். ஒரே நபரால் தொடர்ந்து நீண்ட நேரம் செய்ய முடியாது என்பதால், ஆம்புலன்ஸ் வரும்வரை இன்னொருவர் உதவியுடன் செய்யலாம்.

பக்கவாதம்... சி.டி ஸ்கேன் அவசியம்!

மாரடைப்பு, பக்கவாதம் இரண்டும் ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் இருப்பதால், இவை இரண்டுக்குமான மூல காரணங்கள் ஒன்றாகவே இருக்கும்.

85% பக்கவாதம், மூளையின் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால் வருகிறது. மீதமுள்ள 15% மூளையின் ரத்தக்குழாய் வெடிப்பது, ரத்தக்குழாயில் ரத்தம் கசிவதால் ஏற்படுகிறது.

10, 15 வருடங்களுக்கு முன்னர் நவீன சிகிச்சைகள் இல்லாமலிருந்தன. ரத்தம் உறையாமலிருக்க ஆஸ்பிரின் மாத்திரை, மேற்கொண்டு வேறு பிரச்னைகள் ஏற்படாமலிருக்க ஆதரவு சிகிச்சை, பிறகு பிசியோதெரபி பயிற்சி ஆகியவை மட்டுமே சிகிச்சைகளாக இருந்தன. ஆனால் இன்று, பக்கவாதத்துக் கான சிகிச்சை முறைகள் மேம்பட்டிருக்கின்றன. மூளையில் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

கை, கால் இயங்காதது, மரத்துப் போவது போன்ற நிலை, முகம் கோணலாவதுபோல இருப்பது, பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ரத்த ஓட்டம் தடைப்பட்டு ஆக்சிஜன் செல்லாமல் இருந்தால், மூளை செல்களால் நீண்ட நேரம் இயங்க முடியாமல் போனால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்பு அதிகரிக்கும்.

முதலுதவி
முதலுதவி

மாரடைப்பு என்றால் `ஈசிஜி’ மட்டுமே எடுத்துவிட்டு, பெரும்பாலும் 15 நிமிடங்களில் சிகிச்சையைத் தொடங்கிவிடலாம். ஆனால், பக்கவாதத்துக்கு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்து ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்த பிறகே சிகிச்சையைத் தொடங்க முடியும். இரு பாதிப்புக்கும் சிகிச்சை மாறுபடும் என்பதால் முதலில் காரணத்தைக் கண்டறிய வேண்டும். இந்த நடைமுறைகளை முடிக்க குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் ஆகிவிடும். பக்கவாதத்தைப் பொறுத்தவரை, எவ்வளவு சீக்கிரம் நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் என்பதுதான் முதலுதவி.

சாலை விபத்து... காயங்களை வைத்து தீவிரத்தை கணிக்க முடியாது!

பொதுவாகவே சாலை விபத்தின்போது காயங்களின் தீவிரம் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. ‘காலில் சுளுக்கு, தலையில் லேசான வலி’ என்று அவற்றை அலட்சியப்படுத்துவதால், பின்னாளில் பலருக்குத் தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன. காயங்களை மட்டும் வைத்து விபத்தின் தீவிரத்தைக் கணிக்க முடியாது. உள்ளுறுப்புகளிலும் காயம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் விபத்தில் சிக்கி, சிறிய காயங்கள் ஏற்பட்டால்கூட மருத்துவமனையில் பரிசோதிப்பது நல்லது. விபத்துகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்குப் பல்வேறு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். அதனால் விபத்தில் சிக்கியவர்களை விபத்துகளைக் கையாளும் சரியான மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியதும் அவசியம்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்போது அவர்களை மிகவும் மென்மையாகக் கையாள வேண்டும். பொதுவாக சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அடிபட்டவர்களின் கைகால்களை இஷ்டம் போலப் பிடித்து இழுத்து, அவர்களை மிகவும் வலிமையாகக் கையாள்வார்கள். இது மிகவும் தவறான செயல். சாலை விபத்தில் சிக்கியவர்களை நிதானமாகக் கையாளவில்லையென்றால், ரத்தப்போக்கு பல மடங்கு அதிகரிக்கும்.

முதலுதவி
முதலுதவி

காயம்பட்ட இடத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறினால், கைக்குட்டை அல்லது சிறிய துணியால் அந்த இடத்தில் மிதமாக அழுத்திப் பிடிக்க வேண்டும். கை, கால்களில் அடிபட்டு ரத்தம் வெளியேறினால் அதை நிறுத்த அவற்றைச் சற்று உயர்த்திப் பிடிக்கலாம். கழுத்து, கைகால் போன்ற இடங்களில் அடிபடாமல் நெஞ்சுப் பகுதியில் அடிபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர்களை உட்காரவைக்க வேண்டும். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், அந்தப் பகுதி அசையாமலிருக்க அட்டை அல்லது மரக்கட்டையால் இரண்டு பக்கமும் தடுப்பு வைத்து, அவை நகராமல் கட்டுப் போட்டுவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சாலை விபத்து அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்படும்போது உதவுவதற்கு யாரும் இல்லையென்றால், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஆம்புலன்ஸ் சேவையை அழைக்காமல் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

கால் முறிவு போன்ற பிரச்னைகளின்போது அதிக வலி இருந்தால், தொடர்ந்து நடக்காமல் அதே இடத்தில் இருக்க வேண்டும். வேறு இடங்களில் அடிபட்டிருந்தால், அந்த இடத்துக்கு அதிக அசைவு கொடுக்காமல் இருக்க வேண்டும். மேலும் அடிபட வாய்ப்பிருக்கும் சூழல் நிலவினால், அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு நகர்ந்து சென்றுவிட வேண்டும். அருகில் உதவிக்கு யாரேனும் இல்லையென்றால், சத்தம் எழுப்பி உதவிக்கு ஆள்களை வரவைத்துக்கொள்வது நல்லது.

பட்டாசு விபத்துகள்!

பொதுவாக காயத்தின் அளவைத்தான் கவனிப்போமே தவிர, அதன் ஆழத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். பட்டாசு விபத்துகள் ஆழமான காயத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் காயம் குணமாக, தாமதமாகும். தவிர, பட்டாசு வெடித்த சத்தத்தால் காது ஜவ்வு பாதிக்கப்படலாம் என்பதால் அதிலும் கவனம் தேவை. பட்டாசு விபத்து ஏற்பட்டால், குழாய் நீரில் காயத்தைக் கழுவிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

பட்டாசு விபத்து உள்பட தீக்காயம் பட்டவர்கள்மீது வாழை இலையைப் போர்த்துவது, காயத்தில் மஞ்சள் பூசுவது ஆகியவை மருத்துவரீதியாக நிரூபிக்கப்படாத தற்காலிக நிவாரணங்கள். எனவே, இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். மாவு, பேனா மை, மணல் போன்ற பொருள்களைத் தீக்காயத்தின் மீது பூசக்கூடாது. இவற்றைச் செய்வதால், நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

முதலுதவி
முதலுதவி

தற்கொலை... இவையெல்லாம் ஆபத்தானவை!

விஷம் அருந்தியதால் மயக்கத்தில் இருப்பவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படாமலிருக்க, அவர்களை ஒருக்களித்துப் படுக்கவைக்க வேண்டும். அதே நிலையிலேயே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். விஷம் அருந்தியதால் அரை மயக்கத்தில் இருப்பவர்களுக்கு வாயில் விரலைவிட்டு வாந்தியெடுக்கவைப்பது, உப்புத் தண்ணீர் அல்லது புளியை நீரில் கரைத்துக் குடிக்கக் கொடுப்பதெல்லாம் மிகவும் ஆபத்தானவை. இதனால் மூச்சடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். மேலும் ஆசிட் போன்ற தீவிர ரசாயனங்களைக் குடித்திருந்தால் அது ஏற்கெனவே உணவுக்குழாய், ஜீரண மண்டலம் அனைத்தையும் சேதப்படுத்தியிருக்கும். வாந்தியின் மூலம் அவற்றை வெளியேற்றும்போது சேதமடைந்த பகுதிகளை மீண்டும் சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது.

எந்த மருந்தைக் குடித்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அந்த மருந்து பாட்டிலை மருத்துவமனைக்குக் கூடவே எடுத்துச் செல்வது அல்லது அந்த பாட்டிலை செல்போனில் படம் பிடித்துச் செல்வது முக்கியம். எந்த மருந்தைக் குடித்தார் என்று தெரிந்தால்தான் அதற்கேற்ற சிகிச்சைகளை உடனடியாக மருத்துவர்களால் அளிக்க முடியும்.

தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுபவர்களின் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் தூக்குப்போட்ட நிலையில் உயிருடன் காப்பாற்றப்பட்டால், அவர்களது கழுத்து தொங்காதவாறு அவர்களைப் படுக்கவைக்க வேண்டும். கழுத்துப் பிசகியிருந்தாலோ, முறிந்திருந்தாலோ பாதிப்பு தீவிரமடையாமலிருக்க சமதளத்தில் படுக்கவைக்க வேண்டும். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போதும் கழுத்து, தலை, உடல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு வைக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு அதிக இயக்கம் கொடுக்காமல் அவர்களைக் கையாள வேண்டும்.

மணிக்கட்டில் உள்ள நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மன அழுத்தம் காரணமாக இதுபோலத் தன்னைத் தானே வருத்திக்கொள்வது அதிக அளவில் நடக்கிறது. வீட்டிலிருக்கும் போது இது போன்ற செயலில் ஈடுபட்டால், மணிக்கட்டில் இருக்கும் பெருந்தமனியையே அறுத்தாலும்கூட சுத்தமான துணியைக்கொண்டு அந்த இடத்தில் அழுத்திப் பிடித்தால், ரத்தக்கசிவை நிறுத்திவிடலாம். கையைச் சற்று உயர்த்திவைக்க வேண்டும். பிறகு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலைக்கு முயல்பவர்களைத் தடுத்து, அரவணைக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். உளவியல் ஆலோசகர்கள் மூலம் தேவையான ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.

முதலுதவி
முதலுதவி

சமையலறை விபத்துகள்... வெட்டுக்காயம், தீக்காயத்துக்கு..!

சமையலறையில் கத்தி அல்லது அரிவாள்மணையைப் பயன்படுத்தும்போது விரல் வெட்டுப்பட்டுவிட்டாலோ அல்லது மிக்ஸியில் விரல் சிக்கி, காயம் ஏற்பட்டாலோ ஓடும் நீரில் காயம்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு சுத்தமான ஒரு துணியை காயம்பட்ட இடத்தில்வைத்து, மிதமான அழுத்தம் கொடுத்துப் பிடிக்க வேண்டும். கையைச் சற்று உயர்த்திய நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்து, ரத்தக்கசிவு நின்றுவிடும். பிறகு தேவைப்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ரத்தத்தை நிறுத்துவதற்காக சுண்ணாம்பு, காபித்தூள், மஞ்சள்தூள் போன்றவற்றைப் பூசக் கூடாது.

சமையல் செய்யும்போது எண்ணெய் தெறித்துக் கொப்புளங்கள் ஏற்பட்டால், காயத்தை நீரில் கழுவிவிட்டு அதில் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட் (Cling Film) வைத்து மூட வேண்டும். கொப்புளங்களைக் குத்தி உடைக்கக் கூடாது. சில மணி நேரத்தில் அல்லது ஒரு நாளில் அந்தக் கொப்புளங்கள் தாமாகவே அமிழ்ந்துவிடும். கொப்புளத்தின் மேல் காணப்படும் சருமம்தான் அந்தக் காயத்துக்குச் சிறந்த ‘டிரெஸ்ஸிங்’ ஆகச் செயல்படும்.

அதைக் குத்தி உடைத்துவிட்டால், நோய்த்தொற்றின் அளவு அதிகரிக்கும். பெரிய கொப்புளமாக இருந்தால் மருத்துவமனையில் மருத்துவர்கள் அதை அகற்றும் செய்முறையைச் செய்வார்கள். கொப்புளங்களில் உடனே களிம்பு எதுவும் போட வேண்டும் என்ற அவசியமில்லை. காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டால், மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம். சிறிய காயங்கள் என்றால் தாமாகவே ஆறிவிடும்.

நகம் பெயர்தல்... ரத்தம் உறைந்திருந்தால்..!

காயம் எதுவும் இல்லை, ரத்தக்கசிவு இல்லாமல் வெறும் நகம் மட்டும் பெயர்ந்திருந்தால், அந்த இடத்தில் அரைகுறையாக இருக்கும் நகத்தை நகவெட்டி மூலம் வெட்டி அகற்றிவிட்டால், நகம் மீண்டும் வளரத் தொடங்கிவிடும். ஆனால், நகத்துக்கு அடியில் ரத்த உறைவு இருந்தால், மருத்துவமனைக்குச் செல்வதே நல்லது. அங்கே நகத்துக்குக் கீழே உறைந்திருக்கும் ரத்தத்தை மட்டும் அகற்ற வேண்டுமா, நகத்தையும் சேர்த்து அகற்ற வேண்டுமா என்று மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். நகத்துக்கு அடியில் காயம் ஏற்பட்டிருந்தால், நகத்தை அகற்றிவிட்டுத் தையல் போடுவார்கள். அதன் பிறகு பெரும்பாலும் நகம் வளரத் தொடங்கிவிடும்.

முதலுதவி
முதலுதவி

வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து இழப்புக்கு... உப்பு சர்க்கரை கரைசல்!

வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அதுபோன்ற சூழலில் நீர்ச்சத்தை உடலில் அதிகரிக்க வேண்டியது அவசியம். அதனால் உப்பு சர்க்கரைக் கரைசலை (ஓ.ஆர்.எஸ்) நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு தொடர்ந்தாலும், இந்தக் கரைசலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் குடித்தால் மேலும் வாந்தி வர வாய்ப்பிருக்கிறது. அதனால்

50 மில்லி அளவில் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை குடித்தால், அது உடலுக்குள் எளிதாகக் கிரகிக்கப்பட்டுவிடும். அதிக முறை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கை நிறுத்த, மருந்துக் கடைகளில் சுயமாக மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிடக்கூடாது. நீர்ச்சத்து இழப்புக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல் சிறந்த தீர்வாக இருக்கும்.

ரத்தச் சர்க்கரை அளவு குறைந்தால்... அறிகுறிகள்!

சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் நிலை ஏற்படாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்படாதவர்கள், ‘காலையில் சாப்பிடவில்லை, சர்க்கரை அளவு குறைந்திருக்கும். அதனால்தான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்’ என்று சொல்வது இயல்பானது அல்ல. வேறு ஏதோ காரணத்துக்காகத்தான் மயக்கம் போட்டிருப்பார்கள்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரையின் அளவை அதிகமாக எடுத்துக்கொண்டாலோ, மாத்திரை போட்டுவிட்டு சாப்பிடாமல் இருந்தாலோ, வேறு பிரச்னைகளுக்காக மாத்திரையைக் கூடுதலாக எடுத்துக்கொண்டாலோ வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையை மருத்துவர் ஆலோசனையின்றி தானாகவே நிறுத்தினாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம்.

அதிகமாக வியர்ப்பது, படபடப்பு, தெளிவில்லாமல் பேசுவது, வித்தியாசமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகள் இருக்கும். நிலைமை மோசமாகும்போது மயக்கம் அல்லது கோமாநிலைக்குச் சென்றுவிடுவார்கள். சர்க்கரை நோயாளிகள் வீட்டில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கும் குளூக்கோமீட்டர் கருவியை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி சர்க்கரையின் அளவு குறையும் நிலை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி, அவர்கள் எடுக்கும் மாத்திரை, சிகிச்சையை சரிப்படுத்த வேண்டும்.

ரத்தச் சர்க்கரையின் அளவு குறைந்து, மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் சர்க்கரைத் தண்ணீர், சாக்லேட், இனிப்பு போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்க உதவும். நோயாளி சாப்பிடும் அளவுக்குத் தெளிவாக இருந்தால் மட்டுமே கொடுக்க வேண்டும். மயக்கமானால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

முதலுதவி
முதலுதவி

குழந்தைகள், முதியோர்... பிரத்யேக கவனம் வேண்டும்!

குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அது தீவிரமாகும்வரை வெளியே தெரியாது. தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டால், குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியும். சில குழந்தைகள் யாரிடமும் பேசாமலிருந்தாலோ, தூங்கிக்கொண்டே இருந்தாலோ, உணவு உட்கொள்வதில் பிரச்னை, வாந்தி எடுப்பது மற்றும் சிறுநீர் போகவில்லை என்றாலோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று பொருள். அதனால் குழந்தைகள் நல மருத்துவர் அல்லது அவசரகால மருத்துவரிடம் உடனடியாகக் கூட்டிச் செல்வது நல்லது.

வயதானவர்களும் கிட்டத்தட்ட குழந்தைகள் போன்றவர்கள்தான். தீவிர நோய்த்தொற்று, மாரடைப்பு, சர்க்கரை அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகள் மற்றும் முதியோரை உடனடியாக கவனித்து, அவர்களுக்குத் தேவையான முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் எப்போதும் குழந்தைகள், முதியவர்கள் மீது பிரத்யேக கவனம் செலுத்த வேண்டும்.

ஆஸ்துமா... இன்ஹேலரே துணை!

ஆஸ்துமா நோயாளி களுக்குத் தங்களது பிரச்னையை அதிகரிக்கும் காரணங்கள் எவையெவை என்பது தெரிந்திருக்கும். பெரும்பாலும் காற்று மாசு, தீவிர உடற்பயிற்சி, அதீத விளையாட்டு, உணர்ச்சிவசப்படுதல் போன் றவை காரணங்களாக இருக்க லாம். பிரச்னைக்குக் காரண மான விஷயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். வழக்கமாக இரண்டு முறை இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள், மூச்சுத்திணறல் அதிகரிக்கும்போது 4 முதல் 10 முறை வரைகூடப் பயன்படுத்தி மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தலாம்.

முதலுதவி
முதலுதவி

விளையாட்டு விபத்துகள்...

விளையாட்டு வீரர்களுக்கு கை, காலில் அடிபட்டு எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் மரப்பலகை, அட்டை என ஏதாவது ஒன்றைக்கொண்டு தடை ஏற்படுத்தி, அந்தப் பகுதி அசையாத வகையில் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். உடைந்த எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசுவது, நகர்வது போன்றவற்றால்தான் பாதிப்பு அதிகமாகி வலி அதிகரிக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்'' என்று விளக்கமளித்தார் விபத்து மற்றும் அவசரகால மருத்துவர் தவப்பழனி.

ஓர் உயிர் காப்பாற்றப்படுவது என்பது மிகப்பெரும் செயல். முதலுதவி என்ற எளிய பயிற்சியை அனைவராலும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். அதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். பள்ளி, கல்லூரி, பணியிடம் என அனைத்து இடங்களிலும் முதலுதவி பற்றிய பயிற்சியை அளிக்க வேண்டும்.

முதலுதவி அளிப்போம்... விலை மதிப்பில்லாத உயிரைக் காப்போம்!

முதலுதவி
முதலுதவி

பயிற்சி பெற்றவர்கள்தான் முதலுதவி செய்ய வேண்டுமா?

முதலுதவி செய்யக் கற்றுக்கொண்டவர்களுக்கு எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று நன்றாகத் தெரியும். முதலுதவி செய்யக் கற்றுக்கொள்ளவில்லை, ஆனால், உதவி செய்ய விருப்பமுள்ளது என்ற ஆர்வத்தில் தவறான விஷயங்களைச் செய்துவிட வாய்ப்புள்ளது. விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பவர்களை ஆம்புலன்ஸ், முதலுதவி நிபுணர் வரும்வரை எக்காரணம் கொண்டும் தூக்கக்கூடாது என்று பயிற்சி சொல்லிக் கொடுத்திருப்போம். ஆனால், அதுபற்றித் தெரியாதவர்கள் அடிபட்டவர் ரொம்ப நேரமாக வெயிலிலேயே கிடக்கிறாரே என்று அவரைத் தூக்கி வேறு இடத்துக்கு மாற்றுவார்கள்.

அந்த நபரைத் தூக்கும்போது தலையை ஒருவர், காலை ஒருவர் பிடித்து U வடிவில் தூக்கிவிடுவார்கள். அப்படித் தூக்கும்போது அனைத்துப் பளுவும் தண்டுவடத்துக்குச் சென்று அழுத்தி, அதிலிருக்கும் `டிஸ்க்' (Disc) நழுவி, நரம்புகள் அழுத்தப்பட்டு கழுத்துக்கு கீழ் அல்லது இடுப்புக்குக் கீழ் நிரந்தர செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்தான் அனைவரும் முதலுதவியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முதலுதவி
முதலுதவி

மீட்பு நிலை... ஒருக்களித்துப் படுக்க வைக்கலாமா?

மயக்க நிலையில் இருப்பவர்களை ஒருக்களித்துப் படுக்க வைப்பதை மீட்பு நிலை (Recovery Position) என்பார்கள். தண்ணீரில் மூழ்கியவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், மாரடைப்பு ஏற்பட்டவர்கள், வலிப்பு வந்தவர்கள், மின்சார ஷாக் அடித்தவர்களுக்கு இது பயனளிக்கும். ஒருக்களித்துப் படுக்க வைக்கும்போது இதயத்திலிருந்து மூளைக்கு வேகமாக ரத்த ஓட்டம் சென்று அவர் விழித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. நாக்கு உள்ளிழுத்து மூச்சுப் பாதையை அடைக்காது. ஆம்புன்ஸ் வரும்வரை அதே நிலையில் வைத்திருக்க முடியும். வாயில் ரத்தம், எச்சில் என எதுவும் தேங்கியிருந்தால் அவை மூச்சுக்குழாய்க்குள் செல்லாமல் வெளியேறிவிடும். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளதைப் போல் தெரிந்தால் அவர்களை ஒருக்களித்துப் படுக்க வைக்கக்கூடாது. பாம்பு கடித்தவர்களையும், விஷம் சாப்பிட்டவர்களையும் ஒருக்களித்துப் படுக்க வைக்கக்கூடாது.

குறிப்பு: எந்தப் பக்கம் என கவலைப்பட வேண்டாம்.

மாரடைப்பு... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

மாரடைப்பு ஏற்பட்டதும் தீவிர நெஞ்சுவலி வரும். சிலருக்கு நெஞ்செரிச்சல், நெஞ்சில் நெருடுவது போன்ற உணர்வு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம். ரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர் ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் இருப்பவர்கள். இவர்களுக்கு நெஞ்சுவலி தொடர்பான அறிகுறிகள் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இதுபோன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு யாரிடமாவது வாக்குவாதம் செய்யும்போதோ, உடற்பயிற்சியில் ஈடுபடும் போதோ நெஞ்சுவலி ஏற்பட்டால், முதலில் அந்தச் செயலை நிறுத்த வேண்டும். அதன் பிறகு ஆஸ்பிரின் மாத்திரை அல்லது தண்ணீரில் கரைத்துக் குடிக்கும் டிஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும் பணியைச் செய்யும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றுவிட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இதயத்தின் தசை செயலிழந்துகொண்டேயிருக்கும்.

மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்வது நல்லது. அப்போதுதான் உடல்நிலையைக் கண்காணித்துக்கொண்டே மருத்துவமனைக்குச் சென்று சேர முடியும். ஆம்புலன்ஸில் இருக்கும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் வலிக்கான சிகிச்சைகளை அளிப்பார்கள். மேற்கூறிய ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு நெஞ்சுப்பகுதியில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் வலி நிவாரணக் களிம்பு பூசுவது, வாய்வுத் தொந்தரவு என நினைத்து கஷாயம் வைத்துக் குடிப்பது என நேரத்தைக் கடத்தாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

தீக்காயம்... அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஒருவர் உடலில் தீப்பற்றி எரிகிறது என்றால், அடர்த்தியான கம்பளி அல்லது போர்வையைப் போர்த்தி அவர்களைத் தரையில் போட்டு உருட்டி தீயை அணைக்க வேண்டும். பருத்தித் துணி அல்லாத வேறு ரக உடையை அணிந்திருந்தால் அதை அகற்றிவிட வேண்டும். காரணம், பருத்தித் துணிகளைத் தவிர பிற ரக உடைகளுக்கு வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை இருக்கும். நெருப்பு அணைந்தால்கூட உடையிலிருக்கும் வெப்பம் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.

தீக்காயம் பெரிதாக இருந்தாலோ, முகத்தில் காயம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. காரணம், நச்சுப்புகை, தீ ஆகியவற்றால் உதடு, நாக்கு ஆகிய இடங்களில் வீக்கமோ, காயமோ ஏற்படலாம். சூடான காற்று வாய்வழியாக உள்ளே சென்று மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம். இவை ‘ஹை ரிஸ்க்’ பட்டியலில் வரும் பாதிப்பு என்பதால், காயம்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

கை, கால்களில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தால், குளிர்ந்த குழாய் நீரில் காயம்பட்ட பகுதியைக் கழுவ வேண்டும். அந்தப் பகுதியைச் சுத்தமான, மென்மையான பருத்தித் துணி (Gauze) அல்லது பிளாஸ்டிக் ஷீட் (Cling Film) மூலம் மூட வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் நரம்புகள் வெளியே தெரிந்துகொண்டிருக்கும் என்பதால், அதில் காற்று படும்போது வலி அதிகரிக்கும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு வலிதான் பெரிய பிரச்னையாக இருக்கும். அந்த நேரத்தில் வலிக்கு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பலருக்கும் தோன்றாது. வலி அதிகமாக இருந்தால் `பாராசிட்டமால்' போன்ற ஏதாவது ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

சிறு வயதில் தடுப்பூசி போடாதவர்கள், அண்மையில் `டெட்டனஸ் டாக்ஸைடு' (டி.டி) தடுப்பூசி போடாதவர்கள் மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகுதான் நோய்த்தொற்று உருவாகும் என்பதால், தீக்காயம் ஏற்பட்டதும் களிம்பு பூச வேண்டும் என்ற அவசியம் இல்லை.

முதலுதவி
முதலுதவி

பாம்புக்கடி... நடப்பது, ஓடுவது கூடாது!

பாம்பு கடித்தால் கடிபட்ட இடத்தை நன்றாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு, அந்த இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பாம்பு காலில் கடித்திருந்தால், அந்தப் பகுதியில் ஓர் அட்டையையோ அல்லது மரக்கிளையையோ தடுப்பாகக் கொடுத்து, நகராமல் இருக்குமாறு வைத்துக் கட்ட வேண்டும். கடிபட்டதும் நடப்பது, ஓடுவது, காலை மடக்கி மடக்கி நீட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், உடல் முழுவதும் விஷம் பரவிவிடும். கடிபட்ட இடத்துக்கு மேல் இறுக்கமாகக் கட்டுவது, அந்த இடத்தைக் கத்தியால் கீறி ரத்தத்தை உறிஞ்சித் துப்புவது போன்றவை தவறான செயல்கள்.

பூச்சிக்கடி... கொடுக்கை நீக்க வேண்டும்!

பூச்சிக்கடியால் மூச்சுத்திணறல், மயக்கம், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுவது, அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பூச்சிக்கடியால் ஓரிடத்தில் மட்டும் வீங்கியிருந்தால், அந்தப் பகுதியைத் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு அந்தப் பகுதியைச் சற்று உயர்த்திவைக்க வேண்டும். குளவி, வண்டு போன்றவை கடித்து, கடிவாயில் கொடுக்கு இருந்தால் அதனை அகற்றிவிட வேண்டும். வீக்கம் அதிகமாவது, கடிபட்ட பகுதி சிவந்துபோவது, வீக்கம் பரவுவது, அக்குளில் நெறிகட்டுவது மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், மருத்துவரை அணுகி ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேள் கடி... நேரம் கடத்தக் கூடாது!

பிற பூச்சிக்கடிகளைவிட தேள் கடி சற்று ஆபத்தானது. தேள் கடித்ததும் அதிகமாக வியர்ப்பது, மயிர்க்கூச்செறிவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும். தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ‘வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம்’ என்று நேரத்தைக் கடத்தக் கூடாது. தேள் கடிக்கு மருத்துவமனையில் கண் காணிப்பில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும்.

முதலுதவி
முதலுதவி

வலிப்பு... கையில் எதையும் கொடுக்கக் கூடாது!

நரம்பியல் பாதிப்பு மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு, வாய்க்குள் அல்லது மலத்துவாரத்தில் வைப்பதற்கான மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்திருப்பார்கள். அது போன்ற நேரங்களில் அருகிலிருப்போர் அந்த மாத்திரையை உடனடியாகக் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும். முதன்முறையாக ஒருவருக்கு வலிப்பு வருகிறது என்றால், அவரை எந்தப் பொருள்களும் அருகில் இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும். அருகில் ஏதேனும் பொருள்கள் இருந்தால், அவற்றில் இடித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வலிப்பு வந்து அவதிப்படுபவர்களுக்கு கையில் சாவிக்கொத்தைக் கொடுப்பது, உலோகங்களைக் கொடுப்பது எந்தவிதப் பயனையும் தராது. மேலும் அதனால் அவர்களுக்குக் காயம் ஏற்படலாம்.