Published:Updated:

`என்ன நடக்கும்.. எப்படி நடக்கும்?' - மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய அறுவை சிகிச்சை நடைமுறைகள்

சிகிச்சைக்குப் பயன்படுத்திய காட்டன் உள்ளேயே வைத்து தைக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு, தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் நேர்ந்த பெரும் சோகம் அது. கவனக்குறைவான சிசேரியன் ஆபரேஷனால், குழந்தை பெற்று நான்கு நாள்களே ஆன பெண் உயிரிழந்தார்.

விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 24 வயது பிரியாவுக்கு, டிசம்பர் 27-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிரியா, சிசேரியன் மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அறுவைசிகிச்சை
அறுவைசிகிச்சை

சில நாள்கள் கழிந்ததும், சிசேரியன் செய்யப்பட்ட இடத்தில் வலி தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறது பிரியாவுக்கு. மருத்துவர்கள் அவரை ஜிப்மர் மருத்துவனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்திருக்கின்றனர். அங்கு சென்றதும், பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரியாவுக்கு சிசேரியன் செய்யப்பட்டபோது, சிகிச்சைக்குப் பயன்படுத்திய காட்டன் உள்ளேயே வைத்து தைக்கப்பட்டுள்ளது. காட்டன் உள்ளேயே இருந்ததில் நோய்த்தொற்று ஏற்பட்டு, தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலிருந்த பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகம்.

"அழகு சிகிச்சை முதல் அவசர சிகிச்சை வரை நாள்தோறும் மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற அறுவைசிகிச்சைகளுக்கான மருத்துவ நடைமுறைகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். இவற்றைப் புரிந்துகொண்டு கவனிக்கத் தொடங்குவதன் மூலம், சிகிச்சை நடைமுறைகளில் நேர்கின்ற தவறுகளைத் தவிர்க்கலாம்" என்கிறார், பொது அறுவைசிகிச்சை நிபுணர் ராஜீவ் ராஜ். அதுகுறித்து அவர் வலியுறுத்தியவை இங்கே.

1. "அறுவைசிகிச்சைக்கான மருத்துவப் படிவங்களை, இந்திய மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகாரக் குழு வழங்குகிறது. இந்தக் குழு வழங்கியுள்ள ஒப்புதல் படிவங்களையே நாடு முழுவதிலும் இருக்கும் மருத்துவமனைகள் பயன்படுத்துகின்றன. தவறும் மருத்துவமனைகளுக்கு, அங்கீகாரமும் காப்பீட்டு உரிமையும் வழங்கப்படுவதில்லை.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

2. அறுவைசிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், நிச்சயமாக நோயாளி மற்றும் அவர் உறவினர்களின் சம்மதம் வேண்டும். அதற்காக, நோயாளியும் உறவினரும் ஒப்புதல் படிவம் (consent form) நிரப்பிக் கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும். அறுவைசிகிச்சை செய்யவிருக்கிற நிபுணர்களிடமும் இந்தக் கையெழுத்து பெறப்படும்.

3. சிகிச்சைக்கு சில மணிநேரத்துக்கு முன், நோயாளியும் நிபுணர் குழுவும் அமர்ந்து பேச வேண்டும். நோயாளிக்கு நம்பிக்கையளிக்கும் விதமாகப் பேசிக்கொள்வதோடு, அறுவை சிகிச்சையின் தன்மை, அதில் உள்ள சாதக பாதகங்கள் தொடர்பாகவும் உரையாட வேண்டும். 100% வெற்றிக்காகத்தான் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், அது எல்லா நேரத்திலும் நடந்துவிடுவதில்லை. இதை, நோயாளிகளைப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.

4. ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச்செல்லும் முன்னர் நோயாளி, நிபுணர்கள், செவிலியர்கள் என அந்தக் குழுவில் உள்ள எல்லோரும் ஒவ்வொருவராக, என்ன சிகிச்சை நடைபெறவிருக்கிறது, இடம், வலம் என உடலின் எந்தப் பக்கத்தில் உள்ள எந்தப் பாகத்தில் சிகிச்சை செய்ய வேண்டும் என்று எல்லாவற்றையும் வாய்மொழியாக ஒருமுறை சொல்லிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் மருத்துவ வழக்கில் 'டைம் அவுட்' செயல்பாடு (time out procedure) எனப்படும்.

5. சில ஆபரேஷன்களின்போது, அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுகிற வாய்ப்பு உள்ளது. அதற்காக, சிகிச்சை முடிந்ததும் கரைகின்ற தன்மை வாய்ந்த காட்டன்களை உடலில் வைத்துத் தைத்துவிடுவார்கள். அவை, ரத்தம் வீணாகாமல் கட்டுப்படுத்தி நிறுத்தச் செய்வதோடு, 6 முதல் 8 வாரங்களுக்குள் தானாகக் கரைந்தும் போய்விடும். தவறுதலாக உடலில் காட்டனை வைத்து தைத்துவிட நேர்வதை 'Gossypiboma' என மருத்துவ மொழியில் குறிப்பிடுவார்கள்.

பொது அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் ராஜ்
பொது அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் ராஜ்

6. ஆபரேஷன் தியேட்டரிலும் சில வரைமுறைகள் பின்பற்றப்படும். என்னென்ன மருத்துவ சாதனங்கள், உபகரணங்கள் உள்ளதெனக் குறிப்பிடப்பட்டு ஒப்புதல் பெறப்படும். மேலும், ரத்தம் துடைக்கப் பயன்படும் காட்டன்கள் உள்பட, அறுவைசிகிச்சைக்குத் தேவையான உபகரண செட் (surgery set) சரியாக எண்ணி வைக்கப்படும். இதனை காஸ் கவுன்ட் (gauze count) என்பார்கள். இவை எல்லாவற்றையும் சரிபார்த்த பின்னரே சிகிச்சையை முடிப்பார்கள்.

7. சிகிச்சைக்கு மிகவும் அவசியப்படுகிற உபகரணங்களான மெடிக்கல் பிளேடு, க்ளிப், ஸ்டென்ட், துணிகள், ஃபோர்செப்ஸ் (Forceps), ரிட்ராக்டர்ஸ் (Retractors) எல்லாம் செட்டாக இருக்கும். இன்ன சிகிச்சைக்கு இத்தனைதான், இவ்வளவுதான் எனக் கணக்கிடப்பட்டு வழங்கப்படுவதால், கூடுதலாக எதுவும் தேவைப்படாது. நிபுணர்கள் கேட்டாலும் கொடுக்கப்பட மாட்டாது.

8. மருத்துவ உபகரணங்கள் எல்லாவற்றுக்கும் எக்ஸ்ரே டேக் (X-ray tag) பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்று தவறுதலாக உடம்பில் வைத்து தைக்கப்பட்டுவிட்டால், எக்ஸ்ரே செய்து பார்க்கும்போது, அந்த டேக் காட்டிக் கொடுத்துவிடும். இத்தனை பாதுகாப்புகள் இருப்பதால் தவறுகள் நேர்ந்துவிட 99.9% வாய்ப்பில்லை. அந்த 0.01 சதவிகிதமும் கவனக்குறைவால் ஏற்படுபவையாகத்தான் இருக்கும்.

அறுவைசிகிச்சை
அறுவைசிகிச்சை
Vikatan

9. சிகிச்சைக்கு முந்தைய சில மணிநேரம், மயக்கவியல் நிபுணர்கள் (anesthetist) தொடர்பானது. நோயாளியின் உடல்நிலை, சிகிச்சையின் காலம் ஆகியற்றைப் பொறுத்து மயக்க மருந்து அளிப்பர். எல்லாமே லேப்ராஸ்கோபி முறைதான். சிகிச்சைகள், முந்தைய, பிந்தைய நடைமுறைகள் அனைத்தும் டெக்னிக்கலாகவும், நர்சிங் புக்கில் எழுத்தாகவும் பதிவுசெய்யப்படும்.

10. அறுவைசிகிச்சை முடிந்ததற்கான எல்லா ஆவணங்களும் நோயாளியிடம் ஒப்படைக்கப்படும். சிகிச்சை நடைபெற்ற இடத்தில் வலியோ சிரமமோ ஏற்பட்டால், அறுவைசிகிச்சை செய்த மருத்துவரிடம் சென்றுதான் பரிசோதிக்க வேண்டும். சிகிச்சை தொடர்பாக நோயாளியிடம் எத்தனை ஆவணங்கள் இருந்தாலும், சிகிச்சை செய்த மருத்துவருக்குத்தான் அந்த உடலில் என்ன நடக்கிறது என்பது துல்லியமாகத் தெரியும்.

Vikatan

அறுவைசிகிச்சை செய்துகொள்பவர்களுக்குச் சொல்லவேண்டிய முக்கியமான ஒன்று. சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றாலும் உடல்நிலையை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். காய்ச்சல், மயக்கம், சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் வலியெடுத்தல் அல்லது சீழ் வடிதல் போன்றவை ஏற்பட்டால், சிகிச்சை செய்த மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். தாமதம் கூடாது" என்றார்.

இவையனைத்தும் சரியாக நடக்கவேண்டியுள்ளது, ஒரு வெற்றிகரமான அறுவைசிகிச்சைக்கு!