உலகம் முழுவதிலும் இந்திய இருமல் சிரப் மருந்துகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள், குழந்தைகளின் இறப்புக்கு வழிவகுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட குளோபல் பார்மா ஹெல்த்கேர், அதன் முழு கண் சொட்டு மருந்துகளையும் பிப்ரவரியில் திரும்பப் பெற்றது.
இந்த நிலையில், இந்திய இருமல் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) சில நெறிமுறைகளைத் திங்களன்று அறிவித்துள்ளது.

அதன்படி, இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன், குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளைச் சோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும். 2023 ஜூன் 1 முதல், இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்தியல் ஆணையம், சண்டிகர் மற்றும் கவுஹாத்தியில் உள்ள பிராந்திய மருந்து சோதனைக்கூடம், கொல்கத்தாவின் மத்திய மருந்து ஆய்வுக்கூடம், சென்னை, ஹைதராபாத், மும்பையில் உள்ள மத்திய மருந்து சோதனை ஆய்வகம், சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம், மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற மருந்து பரிசோதனை ஆய்வகங்களில் இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள், இருமல் சிரப்களுக்கான சோதனைகளை மேற்கொண்டு சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.