சினிமா
தொடர்கள்
Published:Updated:

3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி?

3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி?

முதல் இரு அலைகளில் பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தாலும், நம் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இன்னும் பாதிப்படையாமல்தான் இருக்கிறார்கள்

கொரோனா முதல் அலையில் நம் மக்களிடம் இருந்த விளையாட்டுத்தனமும், அலட்சியமும் இப்போது அறவே இல்லை. இரண்டாம் அலையில் ஒவ்வொரு தனிநபரும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே மூன்றாம் அலையைக் குறித்து அச்சமும் பரவலாகக் காணப்படுகிறது. ‘மூன்றாவது அலையைத் தவிர்க்கவே முடியாது; ஆனால் மிகச்சிறிய விஷயங்களில் கவனம் கொள்வதன் மூலம் அதன் பாதிப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்’ என நம்பிக்கையளிக்கிறார்கள் மருத்துவர்கள்.

3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி?

‘மூன்றாவது அலையை எதிர்கொள்வது எப்படி’, ‘மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் எனக் கணிக்கப்படும் நிலையில் நம் வீட்டுச் சிறார்களைப் பாதுகாப்பது எப்படி’, ‘கோவிட் 19 உடனான இந்தப் போரில் செய்யக் கூடியதும் செய்யக் கூடாததும் என்ன’ போன்ற சில கேள்விகளை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் முன் வைத்தோம்.

3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி?

டாக்டர். சுரேஷ் குமார் - தொற்றுநோயியல் நிபுணர்

“முதல் இரு அலைகளில் பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தாலும், நம் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இன்னும் பாதிப்படையாமல்தான் இருக்கிறார்கள். தடுப்பூசியும் அனைவருக்கும் செலுத்தப்படவில்லை. முதல் இரு அலைகளில் பாதிக்கப்பட்டவர்கள்கூட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே மூன்றாவது அலையின்போது அனைவருமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொற்றுநோய்ப் பரவல் என்பது சில நூறாண்டுகளாகவே தொடர்ந்து இருப்பதுதான். இது தெரிந்திருந்தும் அவற்றை எதிர்கொள்ள நாம் போதிய முன்னெடுப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. கொரோனாப் பெருந்தொற்று தொடங்கியபோதும் இப்படித்தான். ‘நம்மிடம் மிகச் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது’ என இறுமாப்புடன் இருந்த முன்னேறிய நாடுகளே இந்தப் பெருந்தொற்றில் நிலைகுலைந்தன. ஆகவே முதலில் நம் மருத்துவக் கட்டமைப்பை இன்னும் பலமாக்க வேண்டும்.

இரண்டாவது, மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கான பயிற்சி. பத்து நாளில் சீனா மருத்துவமனை கட்டுகிறது. பத்து நாளில் இந்தியா கல்லூரிகளை மருத்துவக் கட்டமைப்புகளாக மாற்றுகிறது. ஆனால் அப்படி மாற்றிய இடங்களில் சிகிச்சை அளிக்கவும், நோயாளியைப் பராமரிக்கவும் போதுமான நிபுணர்கள் இல்லை. பொதுவாக ஐ.சி.யூ வார்டில் ஒரு செவிலியருக்கு ஒரு நோயாளி என்கிற விகிதம்தான் இருக்கும். ஆனால் பெருந்தொற்று காலத்தில் ஒரு செவிலியர் ஐந்து நோயாளிகள் வரை பார்க்க வேண்டியிருந்தது. இந்தக் குறையைப் போக்க அதிக எண்ணிக்கையில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்களையும், மருத்துவ நிபுணர்களையும் உருவாக்கவேண்டியது அவசியம்.

மூன்றாவது, ஹெர்ட் இம்யூனிட்டி. ஆரம்பத்தில் ‘மக்கள்தொகையில் 70 சதவிகிதம் பேருக்கு எதிர்ப்புசக்தி உருவானால் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் பரவலான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் கோவிட் 19 கொரோனா வைரஸின் புதிய உருமாற்றங்கள் அதை சாத்தியமற்றதாக்கி யிருக்கின்றன. எனவே நூறு சதவிகித மக்கள் தொகையும் நோயிலிருந்து மீண்டோ, அல்லது தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியோ பெற்றால் மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி சாத்தியம். ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை இரு தடுப்பூசிகளுக்கு இடையே இடைவெளி விடுவது சிறப்பாகச் செயலாற்றும் என்றாலும், அந்தக் குறிப்பிட்ட காலத்தில் ஒருவர் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பதிகம் என்பதால் இரு தடுப்பூசிகளுக்கும் இடையே நான்கு வார இடைவெளி விடுவது சிறந்தது. அதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.

பரிசோதனைகளை அதிகமாக்க வேண்டும். முடிவுகளை விரைவாகக் கண்டறியவேண்டும்.கொரோனா வைரஸின் உருமாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும். அது சரியான சிகிச்சைகளைத் தீர்மானிக்க உதவும். தனிநபரைப் பொறுத்தவரை ஏற்கெனவே சொன்னதுபோல தடுப்பூசி செலுத்திக்கொள்வதும், சரியான பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிகள்.”

3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி?

டாக்டர். மீனாக்ஷி தியாகராஜன் - குழந்தைகள் நல நிபுணர்

“கொரோனாவின் இரண்டு அலைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டது வயதானவர்களும், இளைஞர்களுமே. ஏற்கெனவே தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா பெரும்பாலும் மீண்டும் தாக்காது என்கிற எண்ணத்தினாலும் 18 வயது தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுவதனாலும் அடுத்த அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் உருவாகியிருக்கிறது. இரண்டாம் அலை தொடங்கியபோது இருந்த அலட்சியம் மூன்றாவது அலையின்போதும் இருக்கக்கூடாது என்பதால் சில தற்காப்பு நடவடிக்கைகளைப் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். பெருந்தொற்று நிமித்தம் மூன்று கட்டங்களில் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டியிருக்கிறது.

முதலில் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு. முதல் இரு அலைகளில், குழந்தைகள் அதிகம் வெளியில் செல்லாமல், பள்ளிகள் இல்லாமல், வெளியுலகத் தொடர்பிலிருந்து அதிகம் விலகி இருந்தது அவர்கள் பாதுகாப்பாக இருக்க முக்கிய காரணம். இனிமேலும், அவசியமின்றி குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்வதைத் தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே சென்றாலும் மாஸ்க் அணிவது, பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஆகியவை அவசியம்.

இரண்டாவது, குழந்தைகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டால் அதற்கான சிகிச்சை முறைகள். வைரஸ் தொற்றிற்குத் தனிப்பட்ட மருந்துகள் கிடையாது, குழந்தைகளுக்கு இருக்கும் அறிகுறிகள் பொறுத்து, அந்த அறிகுறிகளுக்கான சிம்ப்டமாட்டிக் (Symptomatic) சிகிச்சை அளிப்பதே உகந்தது. குழந்தைகளின் உடல் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது, போதுமான அளவு நீர் அருந்த வைப்பது, சத்துள்ள உணவு கொடுப்பது, ஓய்வில் வைத்திருப்பது இவை நான்குமே அவர்கள் விரைவில் குணமடைய உதவும்.

மூன்றாவது, குழந்தைக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்த பிறகு வரும் இணை பிரச்னைகள் (post covid diseases). குழந்தை குணமான பிறகும் அவர்களின் சின்னச் சின்ன உடல் அறிகுறிகளையும் பெற்றோர்கள் கண்காணிப்பது அவசியம். குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால், அதற்கு அவர்களின் உடல் ஒருவிதமான எதிர்வினையை ஆற்றும். அந்த எதிர்வினை அதிகமானால் சமயங்களில் ‘MIS-C (Multisystem inflammatory syndrome in children)’ எனும் நோய் பாதிப்புக்கு குழந்தைகள் உள்ளாவார்கள். அதாவது, நோய்க்கு எதிராக அதீதமாக அவர்களின் உடல் செயலாற்றி அது குழந்தைகளின் உடல் உறுப்பு தசைகளில் வீக்கத்தை உருவாக்கும். கோவிட் பாதிப்பு ஏற்பட்ட சில குழந்தைகளுக்கு இந்தச் சிக்கல் உண்டாவதைக் காண முடிகிறது. அப்போது உடனடி மருத்துவ உதவியை நாடுவது அவசியமானது.

ஆகவே பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கடுத்த ஆறு மாதங்களும் கவனத்துடன் இருப்பது முக்கியம்.”

3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி?

டாக்டர் என்.கே. நாராயணன் - சர்க்கரை நோய் நிபுணர்

“கோவிட் 19 நோய்த்தொற்றினால், இணை நோய்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமானது சர்க்கரை நோய். ஒருவருக்கு உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது, கோவிட் 19 நோய்த்தொற்றிற்கு அளிக்கும் மருந்துகள் அவர்கள் உடலில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களின் உடல்நிலையை கோவிட் மருந்துகள் ஓரளவிற்கு பாதிக்கின்றன. எனவே சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கோவிட் காலத்தில் மிகவும் முக்கியம்.

3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி?

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வீட்டிலேயே அடைந்து கிடைக்கும் மக்களுக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்பது, போதிய உடற்பயிற்சிகள் இல்லாதது போன்ற ஆரோக்கியமற்ற தினசரி வழக்கங்கள் பழகியிருக்கின்றன. புதிதாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுபவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். குழந்தைகளும்கூட இதனால் பாதிப்படைந்து இருக்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என மூன்றாவது அலை வருவதற்கு முன்பான இடைப்பட்ட மாதங்களில் நாம் நம்மை முடிந்தவரையில் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாம்பழம், வாழைப்பழம், அன்னாசி போன்ற பழங்களைத் தவிர்க்க வேண்டும். இருமல் இருப்பவர்கள் டானிக் வாங்கும்போது, சர்க்கரை இல்லாத டானிக்தானா என சரிபார்த்துவிட்டு வாங்கவேண்டியது அவசியம். மருத்துவரின் பரிந்துரையோடு மட்டுமே சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுக்க வேண்டும்.’’