ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆஷிஷ் சதாவ், கவிதா சதாவ்

ஆஷிஷ் சதாவ், கவிதா சதாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஷிஷ் சதாவ், கவிதா சதாவ்

சேவை - 25

‘இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. இந்தியாவின் வளர்ச்சி, கிராமங்களில் உள்ளது’ – காந்தியின் இந்த வரிகள், இளம் வயதிலேயே ஆஷிஷ் சதாவின் (Ashish Satav) மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. வருங்காலத்தில் தானும் கிராமங்களுக்குச் சென்று சேவையாற்ற வேண்டும் என்று ஏழாவது படிக்கும்போதே முடிவெடுத்தார். அதில் அவரின் தாத்தாவும் காந்தியவாதியுமான வசந்த்ராவ் பாம்பத்கருக்கும் பங்கு உண்டு.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆஷிஷ் சதாவ், கவிதா சதாவ்

பன்னிரண்டாவது படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று முடிவுசெய்தார் ஆஷிஷ். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. படிக்கும் காலத்திலேயே பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, மருத்துவப் பயிற்சி மேற்கொண்டார். மருத்துவ வசதியே இல்லாமல் கிராம மக்களும் பழங்குடியினரும் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்ட அவர், தேசத்தின் சுகாதாரத்துறை எவ்வளவு மோசமாக இயங்குகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டார்.

மகாராஷ்டிராவின் சேவா கிராமத்தில் அமைந்த `மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்’ (Mahatma Gandhi Institute of Medical Sciences - MGIMS) மருத்துவமனையில் ஆஷிஷ் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். சில வருடங்களில் பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. அப்படியே மருத்துவ மேற்படிப்பை முடித்தவர், MGIMS வேலையை ராஜினாமா செய்தார்.

அதுவரை மருத்துவராகப் பணியாற்றிச் சேமித்துவைத்திருந்த பணம் ஒரு லட்ச ரூபாய் இருந்தது. 1998-ம் ஆண்டு `மஹான்’ (MAHAN) என்ற அரசு சாரா சேவை அமைப்பு ஒன்றைப் பதிவுசெய்தார் ஆஷிஷ். `மெடிடேஷன், எய்ட்ஸ், ஹெல்த், அடிக்‌ஷன், நியூட்ரிஷன்’ (Meditation, AIDS, Health, Addiction, Nutrition) ஆகியவற்றின் சுருக்கமே `மஹான்’ (MAHAN). மேல்கட்டின் கோலுபுர் என்ற சிறிய கிராமத்தில் மகாத்மா காந்தி பழங்குடியினர் மருத்துவமனையைக் கட்டினார். சுமார் 1,000 சதுர அடிகளில், ஓலைகளாலும், காட்டுப் புற்களாலும், மூங்கில்களாலும் வேயப்பட்ட சற்றே பெரிய அந்தக் குடிசை நான்கு அறைகளைக்கொண்டது. ஆரம்ப நாள்களில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மிக மிகக் குறைவே. பழங்குடியினரான அவர்கள் ஸ்டெதாஸ்கோப்புடன் வரும் மருத்துவரையும், மாத்திரை மருத்துவத்தையும் நம்பத் தயாராக இல்லை. தவிர, அவர்களில் பலர் மருத்துவமனை என்பதையே அதுவரை அறிந்ததில்லை. ஆஷிஷ், அவர்களைத் தேடிச் சென்று அன்பாக உரையாடினாலும், அவர்கள் டாக்டரை வேற்றுக்கிரகவாசியைப்போலப் பார்த்தார்கள்.

ஆஷிஷ் பொறுமையாகக் காத்திருந்தார். எளிய மக்களுக்கு மருத்துவச் சேவையாற்ற வேண்டும் என்று தன்னைப்போலவே எண்ணம்கொண்ட ஒரு வாழ்க்கைத்துணை அமைந்தால், தன் பலம் அதிகரிக்கும் என்று எண்ணினார். கண் மருத்துவரான கவிதாவைச் சந்தித்தார். அவரும் தன்னலமற்ற சேவைக்குத் தயாராக இருந்தார். எனவே அன்புடை நெஞ்சங்கள் கலந்தன.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆஷிஷ் சதாவ், கவிதா சதாவ்

அப்போது அந்தப் பகுதியில் வாந்தி பேதியால் சில குழந்தைகள் பாதிக்கப்பட்டு, இரண்டு கிராமங்களில் ஐந்து குழந்தைகள்வரை இறந்து போனார்கள். ‘நாம் இங்கே மருத்துவமனையை மூடிவிட்டு வேறு இடத்தில் திறக்கலாம்’ என்று கவிதா ஆலோசனை சொன்னார். ஆஷிஷ் வேறு மாதிரி யோசித்தார். கிராமங்களில் சேவை செய்யும் மனம்கொண்ட பெண் மருத்துவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்தார். அவர்கள் குறிப்பிட்ட தினங்களில் ஒவ்வொரு பழங்குடி கிராமமாகத் தேடிச் சென்று குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சிகிச்சையளிக்கத் தொடங்கினார்கள். அதன் மூலம் மக்களுக்கு நெருக்கமானார்கள். ஒருநாள் இரவு 12 மணி. இதயவலியால் அவதிப்பட்ட பெரியவர் ஒருவரைத் தூக்கி வந்தார்கள். ஆஷிஷிடம் மாரடைப்பு சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லை. அவர் வசமிருந்தது ஓர் `ஈசிஜி’ (ECG) இயந்திரம் மட்டுமே. அந்த நபர் பிழைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லுமளவுக்கு உடல்நிலை மிக மோசமாக இருந்தது. அங்கிருந்து 150 கி.மீ தூரத்தில் பெரிய மருத்துவமனை அமைந்திருந்தது. அங்கே எடுத்துச் செல்லும்வரை நோயாளி தாங்க மாட்டார் என்பதே உண்மை.

ஆஷிஷ் மனதில் பெரும் குழப்பம். `இந்த நோயாளியின் உயிர் போய்விட்டால், அவ்வளவுதான். ஊர் மக்கள் நிச்சயமாக என்னைத் துரத்தியடித்துவிடுவார்கள். எப்படியாவது இவரைப் பிழைக்கவைத்துவிட்டால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடலாம்.’ சுமார் நான்கு மணி நேரப் போராட்டம். தன் அனுபவத்தாலும் விடாமுயற்சியாலும் அவரைப் பிழைக்கச் செய்தார். அடுத்த சில மாதங்களில் 50 வயதுமிக்க நோயாளி ஒருவர் அந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கோமாநிலையில் இருந்தார். இந்தூர், அமராவதியைச் சேர்ந்த மருத்துவர்களெல்லாம் அவரைக் கைவிட்டிருந்தார்கள்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஆஷிஷ் சதாவ், கவிதா சதாவ்

ஆஷிஷ், அந்த நோயாளிக்குச் சிகிச்சையளிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலையில் சிறிய அளவில் முன்னேற்றம் தெரிந்தது. கோமாவிலிருந்து மீண்ட நோயாளி, ஏழாவது நாள் நடக்க ஆரம்பித்துவிட்டார். டாக்டர் ஆஷிஷ், அந்த மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்ற தருணம் அது. பல்வேறு சேவை அமைப்புகளின் உதவி ஆஷிஷுக்குக் கிடைக்கத் தொடங்கியது. வசதிகள் மேம்படுத்தப்பட்டன. குடிசை, கல் கட்டடமானது. 2001-ம் ஆண்டு அதே பகுதியில் கவிதா, கண் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். முதல் இரண்டு ஆண்டுகள் போதிய நிதி இல்லாமல் சிரமப்பட்டார். உதவிக் கரங்கள் நீண்டன. பிறகு ஏராளமான மக்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனையாக அது இயங்கத் தொடங்கியது. பெண்களுக்கான பொது மருத்துவச் சிகிச்சைகளையும் கவிதா மேற்கொள்ளத் தொடங்கினார். அங்கே பிரசவங்களும் நடக்கின்றன. பழங்குடிப் பெண்களைக் கொண்டு ‘தாய்ப்பால் வங்கி’யையும் நடத்திவருகிறார் கவிதா.

தற்போதுவரை மேல்கட்டின் பழங்குடி கிராமங்களில் எந்த ஒரு மருத்துவராலும் சிறு கிளினிக்கூடத் தொடங்கப்படவில்லை. ஆனால், எந்த வசதியும் இல்லாமல் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி மருத்துவமனை, இப்போது 40 படுக்கைகளுடன், சகல மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சைகளுக்கான வசதிகளுடன், சர்வதேசத் தரத்தில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சுமார் ஒரு லட்சம் மக்கள் இதனால் பயன்பெறுகிறார்கள்.

டாக்டர் தம்பதியினர், பழங்குடி மக்களுடன் உரையாடி, அவர்கள் மத்தியில் நோய்கள் குறித்த விழிப்புணர்வையும், சுகாதாரம் குறித்த அறிவுரைகளையும் வழங்கிவருகின்றனர். இயற்கை விவசாயம், தொழிற் பயிற்சிகள், வீட்டில் காய்கறிகள் வளர்ப்பது, போதை மறுவாழ்வு மற்றும் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது போன்ற பல்வேறு நலப்பணிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

மேல்கட் பழங்குடி மக்களின் வாழ்க்கை இன்று மேம்பட்டிருக்கிறதென்றால், அதற்கு 22 ஆண்டுகளாகத் தொடரும் டாக்டர்கள் ஆஷிஷ் – கவிதா தம்பதியின் தன்னலமற்ற உழைப்பும் சேவையும் மட்டுமே காரணம்.

சேவை தொடரும்...