மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள்! - ரேணுகா ராமகிருஷ்ணன்

Renuka Ramakrishnan
பிரீமியம் ஸ்டோரி
News
Renuka Ramakrishnan

சேவை - 26

ப்போது ரேணுகாவுக்கு 16 வயது. கும்பகோணம் மகாமகக் குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்தப் பகுதியைக் கடந்து போகும் எல்லோருமே மூக்கைப் பொத்திக்கொண்டு சென்றனர். அவர்கள் முகத்தில் அருவருப்பு தெரிந்தது. ‘புண்ணியமே போச்சு. குளத்தை முழுக்க சுத்தம் பண்ணணும்’ என்று சிலர் முணுமுணுத்தனர். ஓரிடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். அந்த இடத்தை நோக்கி ரேணுகா வேக வேகமாகச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி மனதைப் பதைபதைக்கச் செய்தது.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ரேணுகா ராமகிருஷ்ணன்

மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின் புனிதம் கெட்டுப் போய்விட்டது என்று அங்கலாய்த்தார்களே தவிர, யாருக்கும் இறந்துகிடந்த மனிதர்மீது கொஞ்சம்கூடப் பரிதாபம் வரவில்லை. காரணம், இறந்து கிடந்தவர் கைகால் விரல்கள் சூம்பிப் போன ஒரு தொழுநோயாளி.

படிக்கட்டில் வேக வேகமாக இறங்கிய ரேணுகா, தன் துப்பட்டாவை எடுத்து அந்தப் பெரியவரின் உடல்மீது போட்டு மானம் காத்தார். அங்கே கூட்டமாகக் கூடி நின்றிருந்த அனைவரும் ரேணுகாவை விநோதமாகப் பார்த்தார்கள். ‘யாராவது உதவி பண்ணுங்களேன். இவரை இங்கிருந்து தூக்கிட்டுப் போயிடலாம்’ என்று அங்கே நின்றிருந்தவர்களிடம் ரேணுகா கோரிக்கை வைத்தார். ஒருவரும் முன்வரவில்லை. சிலர் விலகிப் போனார்கள். ‘உனக்கெதுக்கும்மா வேண்டாத வேலை...’ என்று சிலர் இலவச அறிவுரை வழங்கினார்கள். `இறந்த பிறகு யாருக்கும் இப்படியெல்லாம் அவமரியாதை நிகழக் கூடாது’ என்று ரேணுகாவின் மனம் விசும்பியது. தானே எப்படியாவது அந்தப் பெரியவரின் உடலுக்கான இறுதிக் காரியங்களையெல்லாம் நிகழ்த்திவிடலாம் என்று முடிவெடுத்தார். அதுவரை இறந்த ஒருவரின் உடலை ரேணுகா அவ்வளவு பக்கத்தில் பார்த்ததுகூட இல்லை. ஆனால், மனித சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை, ரேணுகாவுக்குள் உத்வேகத்தைக் கொடுத்தது. ரிக்‌ஷாக்காரர் ஒருவர் உதவ முன்வந்தார். ‘கையில துணியைச் சுத்திட்டு வாங்க. தூக்கி அந்த ரிக்‌ஷாவுல வையுங்க போதும்’ என்று சுற்றியிருப்பவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினார். சில மனிதர்கள் கைகொடுத்ததால் ரிக்‌ஷாவில் பெரியவரின் பிணம் ஏற்றப்பட்டது. ரேணுகா இடுகாட்டுக்குச் சென்றார்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ரேணுகா ராமகிருஷ்ணன்

‘இது மத்தவங்க காரியம் பண்ற இடம். தொழுநோயாளி பொணத்துக்கெல்லாம் இங்கே காரியம் பண்ண முடியாது’ என்று மனசாட்சியே இல்லாமல் அங்கே அனுமதி மறுத்தார்கள். ரேணுகா கலங்கவில்லை. அந்தப் பெரியவரைத் தன் மடியில் ஏந்திக்கொண்டார். ரிக்‌ஷா மேலும் பல மைல்கள் தள்ளி உள்ள இடுகாடு ஒன்றை அடைந்தது. அங்கே மனிதநேயமிக்க வயதானவர் ஒருவர் இருந்தார். ரேணுகா நடந்ததைச் சொன்னார். ‘என்கிட்ட பத்து ரூபாதான் இருக்கு. உதவி பண்ணுங்க தாத்தா!’ என்று மனம் கலங்கிப் பேசினார். ‘சின்னப்பொண்ணு நீ! எவ்ளோ பெரிய விஷயம் பண்ணியிருக்கே...’ என்று ரேணுகாவைப் பாராட்டிய அந்த மனிதர் அங்கே காரியம் பண்ண அனுமதித்தார். இதையடுத்து இறுதிக் காரியங்கள் அனைத்தையும் ரேணுகாவே முன் நின்று செய்தார். தண்ணீர்ப் பானை உடைக்கப்பட்டபோது, அந்த இடுகாட்டு மனிதரின் கண்கள் கலங்கியிருந்தன.

எல்லாம் முடிந்ததும் ரேணுகா வீடு திரும்பினார். ராணுவ அதிகாரியான அவரின் தந்தையிடம், ‘அப்பா, நான் இடுகாட்டிலிருந்து வர்றேன்’ என்று நடந்த எல்லாவற்றையும் கூறினார். இதைக் கேட்டதும், ‘மிகப்பெரிய காரியம் செய்திருக்கிறாய். ஆனால், இப்போதைக்கு வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம். சொன்னால் எல்லோருக்கும் புரியவும் செய்யாது’ என்று அக்கறையுடன் சொன்னார் ரேணுகாவின் தந்தை. அப்போது ரேணுகாவின் மனதில் பெரும் லட்சிய விதை ஒன்று விதைக்கப்பட்டதாக உணர்ந்தார். `நிச்சயமாக மருத்துவம் படிக்க வேண்டும். இந்தச் சமுதாயமே புறக்கணிக்கும் தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்ய வேண்டும்’ என்பதே அந்த லட்சியம். ரேணுகாவின் கண்களில் அன்னை தெரசா புன்னகைத்தார்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ரேணுகா ராமகிருஷ்ணன்

கும்பகோணத்தில் வளர்ந்த ரேணுகாவுக்கு, சிறு வயது முதல் டாக்டர் விளையாட்டு என்றால் அத்தனை பிரியம். தான் ஒரு டாக்டராகவும் மற்ற குழந்தைகளுக்கு ஊசி போடுவதுபோலவும் விளையாடுவது அவருக்குப் பிடித்திருந்தது. வளர வளர அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் சேர்ந்தே வளர்ந்தது. மகாமகச் சம்பவம் ரேணுகாவின் வைராக்கியத்தை அதிகரித்தது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ரேணுகாவுக்கு பாண்டிச்சேரி ஜிப்மரில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. தொழுநோய் சிகிச்சைகளுக்கான சிறப்புப் படிப்பை முடித்துவிட்டு, சருமநோய் மருத்துவராக வெளியே வந்தார்.

சருமநோய் மருத்துவராகப் பணிக்குச் சேர்ந்தாலும், தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கிக்கொண்டார். சுமார் ஒரு வருட காலம் மருத்துவர்கள் இல்லாத கிராமங்களுக்குச் சென்று சேவை செய்துவந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தொழுநோய் மையத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். தொழுநோயாளிகளைத் தொட்டால் தொழுநோய் ஒட்டிக்கொள்ளும் என்ற மூடநம்பிக்கை, சமூகத்தில் இப்போதும் இருக்கிறது. தொழுநோயாளிகள் பலரே தங்களை யாரும் நெருங்காத வண்ணம் முடங்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களைத் தேடிச் சென்று, உரிய சிகிச்சைகள் அளித்து, அன்புடன் பேசி, அரவணைத்து, ஆறுதல் சொல்லி, அவர்களைத் தேற்றுகிறார் ரேணுகா. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் எனச் சமுதாயமே புறக்கணித்தாலும், `உங்களுக்கு நான் இருக்கிறேன்’ என்று தொழுநோயாளிகளின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்கிறார். அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறார். ஆம், அந்த நோயாளிகள் ரேணுகாவை அன்னை தெரசாவின் மறு உருவமாகவே பார்க்கிறார்கள்.

சென்னை ஷெனாய் நகரில் இயங்கிவரும் `ஜெர்மன் லெப்ரசி அண்ட் டிபி ரிலீஃப் அசோசியேஷன்’ (German Leprosy and TB Relief Association)-ல் டாக்டர் ரேணுகா, தொழுநோயாளிகளுக்காகத் தொடர்ந்து சேவையாற்றிவருகிறார். தமிழகமெங்கும் பல்வேறு தொழுநோயாளிகள் குடியிருப்புகளுக்குச் சென்று மருத்துவச் சேவை செய்கிறார். பல்வேறு ஊர்களில் இலவச தொழுநோய் முகாம்களையும் தொடர்ந்து நடத்திவருகிறார். ‘தொழுநோய் இல்லாத இந்தியா’ என்று அறிவிக்கப்பட்டாலும், உண்மையான கள நிலவரம் அப்படி இல்லை. தொழுநோயாளிகளுக்கென தம் வாழ்வை அர்ப்பணித்துவரும் டாக்டர் ரேணுகா போன்றோரால்தான் தொழுநோய் கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது மற்றும் சமூக சேவைக்கான பல்வேறு விருதுகள் என்று ஏராளமான கௌரவங்கள் டாக்டர் ரேணுகாவுக்குக் கிடைத்திருக்கின்றன. 28 ஆண்டுகள் மருத்துவச் சேவையை நிறைவு செய்திருக்கும் டாக்டர் ரேணுகாவுக்கு லட்சியம் ஒன்று இருக்கிறது.

‘தொழுநோயாளிகளுக்கான இலவச மையம் ஒன்றை அமைக்க வேண்டும். என் வாழ்வின் இறுதிவரை அவர்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்பதே ஆசை. எனக்குப் பிறகும் அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களும் தொழுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கென தொடர்ந்து சேவையாற்ற முன்வர வேண்டும். சமூகம் புறக்கணிப்பதுபோல, மருத்துவர்களும் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. தொடுதலால் தொழுநோய் பரவாது என்பதற்கு நானே வாழும் உதாரணம்!’ என்கிறார் டாக்டர் ரேணுகா.

(நிறைந்தது)