Published:Updated:

கொரோனாவிற்கான இந்திய தடுப்பூசியும் நாக்பூரின் 20 குரங்குகளும்... கோவாக்சின் உருவான கதை தெரியுமா?

புனே வைராலஜி ஆய்வுக்கூடத்தில் இவ்வளவு பெரிய தடுப்பூசி ஆராய்ச்சியை இதற்கு முன்பு செய்ததில்லை. ஆகவே இதற்காக நிறைய கருவிகளை வாங்க வேண்டியிருந்தது.

நம்மில் பல லட்சம் பேர் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டு நிம்மதி அடைந்திருக்கிறோம். இது நமக்குக் கிடைத்ததற்கு நாம் 20 குரங்குகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். வெற்றிகரமாக இந்தத் தடுப்பூசியை உருவாக்குவதற்காக நம் மருத்துவ விஞ்ஞானிகள் போலவே, இந்தக் குரங்குகளும் செய்த தியாகம் அதிகம்.

இந்தியா உருவாக்கிய சுதேசி கொரோனா தடுப்பூசி என்று பெருமையுடன் அடையாளப்படுத்தப்படுகிறது கோவாக்சின் தடுப்பூசி. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இதை உருவாக்கியது. பாரத் பயோடெக் நிறுவனம் இதை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

GOING VIRAL: MAKING OF COVAXIN - THE INSIDE STORY
GOING VIRAL: MAKING OF COVAXIN - THE INSIDE STORY

ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளைச் சந்தித்து வந்தது இந்தத் தடுப்பூசி. உலக சுகாதார நிறுவனம் இதற்கு அங்கீகாரம் கொடுக்க பெரும் தாமதம் செய்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே இதற்கு சமீபத்தில் அங்கீகாரம் கிடைத்தது. இந்தத் தடுப்பூசியின் திறன் குறித்து சர்வதேச ஆய்வுகளும் வந்து கொண்டிருக்கின்றன.

கொரோனா என்ற பெருந்தொற்று இந்த உலகையே சில மாதங்களில் முடக்கியது. முடக்கிய குறுகிய காலத்துக்குள் அதி வேகத்தில் பல தடுப்பூசிகளை உருவாக்கி மானுட சமூகத்தை மீட்டெடுத்ததில் மருத்துவர்களின் பங்கு அதிகம். அதில் இந்தியாவின் பெருமைக்குரிய பங்களிப்பு கோவேக்சின். இந்தத் தடுப்பூசி உருவான கதையை பரபரப்பான நூலாக எழுதியிருக்கிறார், ஐ.சி.எம்.ஆர் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா. 'GOING VIRAL: MAKING OF COVAXIN - THE INSIDE STORY' என்ற அந்த நூல், கோவேக்சின் தடுப்பூசி உருவாக்கத்தில் எதிர்கொண்ட சவால்களை சுவாரஸ்யமாக விவரிக்கிறது.

தடுப்பூசியை உருவாக்கியதும், முதலில் சிறிய விலங்குகளுக்குக் கொடுத்து பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்தப் பரிசோதனை வெற்றி அடைந்தது. அதன்பிறகு மனிதர்களைப் போலவே உடல் அமைப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்ட விலங்குகளிடம் பரிசோதனை நடத்த வேண்டும். Rhesus macaque எனப்படும் செம்முகக் குரங்குகளே இந்தப் பரிசோதனைக்குப் பொருத்தமானவை. உலகெங்கும் மருந்து ஆராய்ச்சிகளில் இந்தக் குரங்குகளையே பயன்படுத்துகிறார்கள். இவற்றில் சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டால், அந்த மருந்துகள் மனிதர்களுக்குப் பாதுகாப்பானவை என்று நினைக்கலாம்.

இந்தியாவில் இப்படிக் குரங்குகளை வைத்து பரிசோதனை செய்யும் வசதியுள்ள ஒரே ஆய்வுக்கூடம், ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி. இது புனே நகரில் உள்ளது. இந்த ஆய்வுக்கூடம், சவாலான இந்தப் பரிசோதனைக்குத் தயாரானது.
Rhesus macaque
Rhesus macaque
Davidvraju, CC BY-SA 4.0, via Wikimedia Commons

முதல் கட்டத்திலேயே ஒரு சிக்கல் எழுந்தது. இப்படிப்பட்ட ஆய்வுகளுக்காக லேபாரட்டரிகளிலேயே குரங்குகளை வளர்ப்பார்கள். புனே ஆய்வுக்கூடத்திலும் அப்படி வளர்க்கப்பட்ட சில குரங்குகள் இருந்தன. ஆனால், அவை எல்லாமே முதிய வயதில் இருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யும் உடல்நலத்தில் அவை இல்லை. இளம் குரங்குகளின் உடலில்தான் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும். அவற்றை வைத்துப் பரிசோதனை செய்தால்தான் துல்லியமான ரிசல்ட் கிடைக்கும்.

அதனால், 'எங்களுக்கு ஆய்வுக்காக இளம் செம்முகக் குரங்குகள் வேண்டும்' என்று நாடு முழுக்க இருக்கும் உயிரியல் பூங்காக்களுக்கும் பரிசோதனைக் கூடங்களுக்கும் ஐ.சி.எம்.ஆர் அமைப்பு கடிதம் எழுதியது. 'இப்படி எங்கோ தொலைதூரத்திலிருந்து குரங்குகளைத் தருவிப்பதைவிட, மகாராஷ்டிரா காடுகளில் வசிக்கும் குரங்குகளைப் பிடித்து வரலாம்' என்று சிலர் யோசனை சொல்ல, ஒரு குழு காடுகளை நோக்கிக் கிளம்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாக்பூர் காடுகளில் செம்முகக் குரங்குகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. வழக்கமாக இவை சாலையோரங்களிலேயே சுற்றித் திரியும். மனிதர்கள் கொடுக்கும் உணவுப்பொருள்களே இவற்றின் பசியாற்றும். ஆனால், கொரோனா ஊரடங்குக் காரணமாக மனித நடமாட்டமே இல்லாமல் போயிருந்தது. 'இந்த மனுஷங்களுக்கு என்ன ஆச்சு?' என புரியாமல் குழம்பிய குரங்குகள், உள்ளடர்ந்த காடுகளுக்குப் போய் உணவு தேட ஆரம்பித்திருந்தன. மகாராஷ்டிரா வனத்துறையினர் காடுகளுக்குள் சென்று தேடி, 20 குரங்குகளைப் பிடித்துவந்து கொடுத்தனர்.

அந்தக் குரங்களின் உடலில் தடுப்பூசியை செலுத்தி, அது சரியாக செயல்படுகிறதா என்று பார்க்க வேண்டும். அதற்கு முதல் கட்டமாக அவற்றுக்குக் கொரோனா தொற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றிய குரங்குகளில் தடுப்பூசியின் திறனைப் பரிசோதிக்க முடியாது.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி, புனே
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி, புனே

மனிதர்களிடமிருந்து வெகு சுலபமாக குரங்குகளுக்கு நோய் தொற்றிக்கொள்ளும். அந்த அபாயத்தை முதல் கட்டமாகத் தடுக்க வேண்டும். எனவே, குரங்குகளுக்கு உணவு கொடுப்பவர்கள், குரங்குகள் இருக்கும் அறைகளை சுத்தம் செய்பவர்கள் தொடங்கி, ஆராய்ச்சிக் குழுவில் இருக்கும் பலரும் தங்களை க்வாரன்டீன் செய்து கொண்டனர். வாரா வாரம் அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. லேசாக அறிகுறிகள் இருப்பவர்களை ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது.

புனே வைராலஜி ஆய்வுக்கூடத்தில் இவ்வளவு பெரிய தடுப்பூசி ஆராய்ச்சியை இதற்கு முன்பு செய்ததில்லை. ஆகவே இதற்காக நிறைய கருவிகளை வாங்க வேண்டியிருந்தது. குரங்குகளைப் பரிசோதனை செய்வதற்கும் பல பிரத்யேகக் கருவிகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

"எங்கள் விஞ்ஞானிகள் பிரத்யேகக் கவச உடை அணிந்துகொண்டு, குரங்குகள் இருந்த தடுப்புப் பகுதிக்குள் தினமும் 10 முதல் 12 மணி நேரம் உழைத்தனர். இடையில் தண்ணீர் குடிக்கக்கூட வெளியில் வர முடியாது. ஒரு நாளின் ஆராய்ச்சியை முடித்தபிறகே, வெளியில் வந்து ஏதாவது சாப்பிட முடியும். ஒரே நேரத்தில் பல பந்துகளை அந்தரத்தில் எறிந்து கைகளில் பிடிக்கும் விளையாட்டு விளையாடுவார்களே, அதில் ஒரு பந்தைக் கூட கீழே விழுந்துவிடாமல் பிடிப்பதற்கு சாமர்த்தியமும் சாகசமும் வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கவனத்துடன் செய்ய வேண்டிய ஆராய்ச்சியாக இது இருந்தது.

ஐ.சி.எம்.ஆர் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா
ஐ.சி.எம்.ஆர் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா

யாரும் களைத்துப் போகாமல் இதில் வெற்றி பெற்றோம். இது நம் தேசத்தின் சாதனையானது. இந்த ஆராய்ச்சிக்கு தங்களை ஒப்புக்கொடுத்த தன்னார்வலர்களுக்கு மனித இனம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அதுபோலவே இந்தக் குரங்குகளுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்" என்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார் பல்ராம் பார்கவா.

`நம் முன்னோர்கள் ஒன்றும் அலட்சியம் செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல' என்று சொல்லத் தோன்றுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு