Published:Updated:

தினமும் ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கும் `சூப்பர் பக்'... தப்பிப்பது எப்படி? #AntibioticResistance

Antibiotic Resistance

தினமும் ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கும் `சூப்பர்பக்'.. தப்பிப்பது எப்படி? #ExpertOpinion #SuperBugs #AntibioticResistance

தினமும் ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கும் `சூப்பர் பக்'... தப்பிப்பது எப்படி? #AntibioticResistance

தினமும் ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கும் `சூப்பர்பக்'.. தப்பிப்பது எப்படி? #ExpertOpinion #SuperBugs #AntibioticResistance

Published:Updated:
Antibiotic Resistance

இன்று உலகத்தை அதிகமாகப் பயமுறுத்திக்கொண்டிருக்கும் வார்த்தை, `ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (Antimicrobial Resistance)'. இந்தப் பிரச்னையால் உலகம் முழுவதும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்னையைச் சாதாரண வார்த்தைகளில் Super Bugs-ன் தாக்கம் என்று அழைக்கின்றனர். அதென்ன சூப்பர் பக்? அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்? விளக்குகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஏ.பி.ஃபரூக் அப்துல்லா.

சூப்பர்பக்
சூப்பர்பக்

"நம்மைத் தாக்கி நோய் வரச்செய்யும் கிருமிகளைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. பாக்டீரியா (Bacteria)

  2. ஃபங்கை எனும் பூஞ்சைத்தொற்று (fungi)

  3. வைரஸ் (Virus)

இவற்றுள் பாக்டீரியா மூலம் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுக்குப் பொதுப்பெயர் `ஆன்டிபயாடிக்ஸ் (Antibiotics)'. அதேபோல, பூஞ்சைக்கு எதிராக வழங்கப்படும் மருந்துகள் `ஆன்டிஃபங்கல்ஸ் (Antifungals)' என்றும், வைரஸ்களுக்கு எதிராகக் கொடுக்கப்படும் மருந்துகள் `ஆன்டிவைரல் (Antiviral)' மருந்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மூன்றையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் சொல் `ஆன்டி மைக்ரோபியல்ஸ் (Anti-microbials)'.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று உலகம் முழுவதும், பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்றுகளுக்கு எந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தாலும் குணமாகாத தன்மை அதிகமாகி வருகிறது. இதை 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் (Antibiotic Resistance)' என்று அழைக்கிறது மருத்துவ உலகம்.

சூப்பர்பக்
சூப்பர்பக்

ஆன்டிபயாடிக் மருந்துகள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன?

ஒரு ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிக்கப்படும்போது அது சில பாக்டீரியாக்களை அழிக்க வல்லது என்று பரிசோதித்துக் கண்டறியப்படுகிறது. இவ்வகைப் பரிசோதனைகளை முதலில் சோதனைக்கூடங்களில் நடத்துவார்கள். பாக்டீரியாவை டிஷ்களில் வளர்ப்பார்கள். அதில், புதிதாகக் கண்டுபிடித்த ஆன்டிபயாடிக்கைக் கொடுத்து அந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை அது குறைக்கிறதா என்று பார்ப்பார்கள். இதில் தேறி வரும் மருந்தை சோதனைச்சாலையில் எலிகள் போன்ற சிறு மற்றும் பெரிய விலங்குகளுக்குக் கொடுப்பார்கள். அதிலும் பக்கவிளைவுகள் குறைவாக இருந்து கிருமிகளை ஒடுக்கும் திறன் அதிகமாக இருக்கும் ஆன்டிபயாடிக்களுக்கு மட்டுமே, மனிதர்கள் மீது நடத்தப்படும் சோதனைக்கு அனுமதி கிடைக்கும். மனிதர்களிடம் நடக்கும் பரிசோதனைகளில் நான்கு படிநிலைகள் உண்டு. இத்தகைய அக்னிப் பரீட்சைகளைக் கடந்துதான் வருகிறது, மனிதன் எடுக்கும் ஒவ்வொரு ஆன்டிபயாடிக் மருந்தும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தனை பரிசோதனைகளுக்குப் பிறகு சந்தைக்கு வரும் மருந்துகள்கூட, பாக்டீரியாவைக் கொல்லும் வீரியம் இழந்து, பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்' ஏற்படுகிறதே... எப்படி?

'Survival of the fittest' கோட்பாடுதான் இங்கும் வேலை செய்கிறது. அதாவது, உடலில் செலுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அந்தக் கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, அதன் அடுத்த தலைமுறைக் கிருமிகளுக்கும் மருந்தை எப்படி எதிர்த்துப் பிழைக்க வேண்டும் என்ற வித்தையைக் கடத்திவிடுகின்றன. அதனால் நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகள் அந்தக் கிருமியின் எந்தப் பகுதியில் அதைத் தாக்குகிறது என்று நினைக்கிறோமோ, அதே பகுதி மேலும் வலிமையடைந்துவிடும்.

சூப்பர்பக்
சூப்பர்பக்

நோய்க்கிருமிகளின் அடுத்த தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?

மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதன் தாய், தந்தை வழிப் பிறந்து இன்னொரு குழந்தையை ஈன்றெடுக்க ஆகும் வயது, ஒரு தலைமுறை என்று கணக்கிடப்படுகிறது. இது சுமார் 30 ஆண்டுகள் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் பாக்டீரியாவில் நிலைமையே வேறு. ஈ-கோலி (E-coli) என்ற பாக்டீரியாவின் தலைமுறை இடைவெளி வெறும் 20 நிமிடங்கள்தான். ஸ்டாஃபைலோகோக்கஸ் (Staphylococcus) எனும் பாக்டீரியாவின் தலைமுறை இடைவெளி வெறும் 30 நிமிடங்கள்தான். அதாவது 24 மணி நேரத்தில் ஸ்டாஃபைலோகோக்கஸ் கிருமி தனக்கு மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப்பேரன் இன்னும் பெயர் இடப்படாத பேரன்களைக்கண்டு, 48 தலைமுறைகளைக் கண்டுவிடும்.

இதனால் நாம் எடுக்கும் மருந்துகளைச் சரியான அளவில் (Dose), சரியான நேர இடைவெளியில் (Frequency of Dose), சரியான கால அளவில் (Duration of Treatment) எடுக்காவிட்டால், ரெசிஸ்டன்ஸ் தன்மையை தனது பேரன், கொள்ளு, எள்ளுப் பேரன்களுக்குப் பரப்பிக்கொண்டேயிருக்கும்.

சூப்பர்பக்
சூப்பர்பக்

இதே வகை ரெசிஸ்டன்ஸ் தன்மையைக் கொசுக்களிடமும் காணலாம். ஒரு காலத்தில் சுருள் வடிவ கொசுவத்தியைப் பயன்படுத்தினோம். பிறகு லிக்யூடேட்டர் வந்தது. இப்போது அட்வான்ஸ்டு லிக்யூடேட்டர் என்கிறார்கள். லிக்யூடேட்டர் ஆன் ஆகி இருக்கும். ஆனால் கொசு 'நான் ஈ' நானி போல அதன் மீதே ஏறி உட்கார்ந்து 'யாரிடம் இன்று பிளட் மீல்ஸ் எடுக்கலாம்' என்று பிளான் செய்துகொண்டிருக்கும். இதற்கும் காரணம் கொசுக்களின் மிகக்குறைவான தலைமுறை இடைவெளிதான்.

ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் கிருமிகள் மீது மட்டும் பழிபோட்டு விட்டு, நாம் விலகிக்கொள்ளலாமா? ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் உருவாவதற்கு முக்கியக் காரணமே, நாம்தான். நம் உடலை நாடாகவும் நம் நாட்டுக்குள் நுழையும் எதிரிகளாக பாக்டீரியாவையும் கற்பனை செய்துகொண்டு பின்வரும் காட்சிகளைப் படியுங்கள்.

காட்சி 1

நமது உடலைக் கிருமிகள் தாக்குவதை, எதிரிகள் நம் நாட்டுக்குள் சதி/கலகம் செய்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். கலகம் செய்வது வலு குறைந்த எதிரிகள் (கிருமிகள்) எனில் நமது எதிர்ப்பு சக்தி (போலீஸ் படை) அவற்றை வென்றுவிடும்.

காட்சி 2

தற்போது நம்மைத் தாக்குவது வலு அதிகமான எதிரி எனில் போலீஸுடன் ரிசர்வ் படையும் கைகோக்கும். எதிரிகள் வென்றெடுக்கப்படுவர்.

காட்சி 3

எதிரிகள் கைகளில் அதிரடி ஆயுதங்களுடன் மும்பையில் நுழைந்த கசாப் போல் நுழைந்துவிட்டால், போலீஸால் ஒன்றும் செய்ய இயலாது. ராணுவம் வந்தாலும் ட்ரைடென்ட் ஹோட்டலை ஆக்கிரமித்ததைப்போல, கிருமிகள் நமது முக்கியமான பாகங்களை ஆக்கிரமிக்கும். அப்போதுதான் நமது NSG (NATIONAL SECURITY GUARDS) கமாண்டோக்கள் இறக்கப்படுவர். அவர்கள்தான் ஆன்டிபயாடிக்குகள். இவர்களைச் சரியான அளவு, சரியான நாள்கள் பணி செய்யவிட்டால் நம்மால் எதிரிகளை வெல்ல இயலும்.

காட்சி 4

இந்த கமாண்டோக்களைச் சரியான நேரத்தில் அனுப்பவில்லையெனில் அல்லது குறிப்பிட்ட நாள்கள் யுத்தம் நடக்கவில்லையெனில் எதிரிகளில் சிலர் தப்பிப் பிழைக்க வாய்ப்புண்டு. அவர்கள் மீண்டும் பெரிய இயக்கமாக உருவாகி ஊருக்குள் கலகத்தை ஏற்படுத்துவர். இதை 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்' என்று கூறுகிறோம். ஆகவே, கமாண்டோக்களாகிய ஆன்டிபயாடிக்குகளை மருத்துவர் பரிந்துரைக்கும் நாள்கள் வரை நிச்சயமாக எடுக்க வேண்டும்.

காட்சி 5

கலகக்காரர்கள் ஊருக்குள் நுழைந்ததும் அவர்களை போலீஸ் கொண்டோ, கமாண்டோக்கள் கொண்டோ அழிக்காமல், அவர்களுடன் மறைமுகமாகப் பேசி நாட்டை அழிக்கும் திட்டம் தீட்டுவதற்குச் சமம், ஸ்டீராய்டு மாத்திரைகளை விழுங்குவது. இவை மருந்துக்கடைகளில் செட் மாத்திரைகளாக வழங்கப்படுகின்றன. இப்போது புரிந்திருக்குமே? ஆன்டிபயாடிக்குகளைக் கண்டறிந்ததும் நாம்தான். அது வேலை செய்யாமல் போவதும் நம்மால்தான்.

பொதுநல மருத்துவர் ஏ.பி.ஃபரூக் அப்துல்லா
பொதுநல மருத்துவர் ஏ.பி.ஃபரூக் அப்துல்லா

ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  • என்ன உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். மருந்தகங்களுக்கு நேரடியாகச் சென்று ஆன்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது.

  • மழைக்காலங்களில் வரும் சளி, மூக்கடைப்பு, காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்குப் பெரும்பாலும் வைரஸ்களே காரணமாக இருக்கும். அவற்றுக்கு ஆன்டிபயாடிக் எனும், பாக்டீரியாவுக்கு எதிரான மருந்துகளை எடுத்து பிரயோஜனமே இல்லை.

  • இறைச்சிக்காகக் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு நடைபெறும் பண்ணைகளில் ஆன்டிபயாடிக் உபயோகத்தைக் குறைக்க வேண்டும். அதன் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும்.

  • முடிந்த அளவு தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்தால், ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுக்கும் நிலையைத் தவிர்த்துவிடலாம்.

  • வைரஸ் காய்ச்சல் பரவும் காலங்களில் கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுவது, இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டை கொண்டு மூக்கையும் வாயையும் மூடுவது, தண்ணீரை வடிகட்டிக் காய்ச்சிக் குடிப்பது, பொதுவெளியில் மலம் கழிக்காமல் இருப்பது போன்ற சாதாரண அன்றாட நடவடிக்கைகள் மூலம் நோய்க்கிருமித் தொற்றுகளிலிருந்து காத்துக்கொள்ள முடியும்.

  • மருத்துவர் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அதை அவர் எவ்வளவு டோசேஜில், என்ன கால இடைவெளியில், எத்தனை நாள்கள் எடுக்கப் பரிந்துரை செய்கிறாரோ அந்த அளவு கட்டாயம் எடுத்து முடித்துவிட வேண்டும்.

சூப்பர்பக்
சூப்பர்பக்
  • அடுத்த முறை சளி வரும்போது உதவும் என்று, மருத்துவர் ஐந்து நாள்களுக்குப் பரிந்துரைத்த மாத்திரைகளை இரண்டு நாள்கள் மட்டும் போட்டுவிட்டு மிச்சத்தை வைத்திருந்தால், தீவிரவாதிகள் எழுச்சியுடன் திரும்ப வருவதைப்போன்று கிருமிகளும் திரும்ப வரும். அப்போது இதே ஆன்டிபயாடிக் உடலில் எந்த வேலையும் செய்யாது.

ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸால் கண்டுபிடித்த அனைத்து ஆன்டிபயாடிக் மருந்துகளும் வேலை செய்யாமல் பல மரணங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன. இதைத்தான் 'Total Drug Resistance' என்கிறார்கள். இத்தகைய கிருமிகளை 'Super Bugs' என்கிறார்கள். அப்படி ஒரு கிருமி நம்மில் யாரைத் தாக்கினாலும் நம்மைக் காப்பதற்கு ஒரு ஆன்டிபயாடிக்கூட இருக்காது என்பது நிதர்சனமான உண்மை!" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism