Published:Updated:

``போலி மருத்துவர்களை உருவாக்கவா தேசிய மருத்துவ ஆணையம்?” - இந்திய மருத்துவர் சங்கம் கேள்வி

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

`வணிக நோக்கமற்ற, லாபநோக்கமற்ற என்ற வார்த்தையை மாற்ற முடியவில்லை என்பதால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையூறாக உள்ள அந்த அமைப்பையே கலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’.

பேட்டி
பேட்டி ( ஆர்.எம்.முத்துராஜ் )

மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய மருத்துவ ஆணையம், இந்தியா முழுவதும் போலி மருத்துவர்களை உருவாக்கும் என மருத்துவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் கண்டன கூட்டம்
இந்திய மருத்துவ சங்கத்தின் கண்டன கூட்டம்
ஆர்.எம்.முத்துராஜ்

இந்திய மருத்துவ சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளைச் செயலர் அறம் கூறும்போது, ``இந்திய மருத்துவக் கழகத்தில் முறைகேடு, ஊழல் நிறைந்துள்ளதாகவும், கிராமப்புறங்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை, மருத்துவக் கல்லூரிகளின் தரம் சரியில்லை என்றும் கூறி, மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பைக் கொண்டு வர முயல்கிறது. இது, அப்பட்டமான பொய். வணிக நோக்கமற்ற, லாபநோக்கமற்ற நபர்கள்தான் மருத்துவக் கல்லூரி நடத்த வேண்டும் என இந்திய மருத்துவக் கழக விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கல்வி, மருத்துவத்தை தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திறந்துவிட மத்திய அரசு முயற்சி செய்கிறது. வணிகநோக்கமற்ற, லாபநோக்கமற்ற என்ற வார்த்தையை மாற்ற முடியவில்லை என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையூறாக உள்ள அந்த அமைப்பையே கலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் அமலானால், 50 சதவிகித இடங்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்யும். மீதி 50 சதவிகித இடங்களுக்கான கட்டணத்தை தனியார் கல்லூரிகளே நிர்ணயம் செய்யும். தனியார் கல்லூரிகள், தங்கள் விருப்பம் போல வசூல் செய்யலாம். தனியார் கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பதால் நீட் தேர்வு திட்டம் கொண்டு வந்ததாகக் கூறினார்கள். தற்போது, கட்டணத்தைத் தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளும் உரிமையைத் தனியார் கல்லூரிகளிடம் கொடுத்துவிட முயல்கின்றனர். இது முரண்பாடானது. 1000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரத்தை அடைவதற்கு அரசே நிறைய கல்லூரிகளை உருவாக்கலாம்.

இந்திய மருத்துவ சங்கத்தின் கண்டன கூட்டம்
இந்திய மருத்துவ சங்கத்தின் கண்டன கூட்டம்
ஆர்.எம்.முத்துராஜ்

ஆனால் அதற்கு மாறாக, பார்மசிஸ்ட், செவிலியர், லேப் டெக்னீஷியன் படித்தவர்கள் மருத்துவ சிகிச்சையளிக்கலாம் என்றும் அவர்களுக்கு 5 ஆண்டு மருத்துவப் படிப்பு கற்றுத் தருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தால், நாடு முழுவதும் போலி மருத்துவர்கள் உருவாவார்கள். இதனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மக்களின் உடல் நலத்தோடு விளையாடும் இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. மருத்துவத்துறையை முழுக்க முழுக்க தனியார்மயம் ஆக்குவதுதான் தேசிய மருத்துவ ஆணையத்தின் நோக்கம்” என்று தெரிவித்தார்.