சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

குழந்தையின்மை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வரை கட்டணம்! - ஏழைகளுக்கு எட்டாக்கனியா மகப்பேறு?

குழந்தையின்மை சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தையின்மை சிகிச்சை

- ராணி கார்த்திக்

இந்தியாவில் வசிக்கும் 15 தம்பதிகளில் ஒருவருக்குக் குழந்தையின்மை பிரச்னை இருப்பதாகவும், ஆண், பெண் வித்தியாசமின்றி மொத்தம் 2 கோடியே 75 லட்சம் பேர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறது கடந்த ஆண்டு வெளியான ஆய்வறிக்கை. குழந்தையின்மை பிரச்னை இன்று சகஜமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், அதற்கான சிகிச்சையில் ஏழை, பணக்காரர் பாகுபாடு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பிரியா, “என்னோட கணவர் பெயின்டிங் வேலை பார்க்கிறார். ‘எங்களுக்குப் பிறகு கல்யாணம் ஆனவங்களுக்கெல்லாம் அடுத்தடுத்து வளைகாப்பு நடக்குது’ன்னு சொந்தக்காரங்க பேசினதால, நானும் என் வீட்டுக்காரரும் ஆறு மாசத்துக்கு முன்னால தனியார் மருத்துவமனையில சிகிச்சைக்குப் போனோம். ஒரு தடவை போனாலே ரூ.8 ஆயிரம் வரை செலவாகும். ஸ்கேன், டெஸ்ட் எல்லாம் சேர்த்து மாசம் 20 ஆயிரம் வரை செலவாச்சு. சிகிச்சைக் காகக் கடன் வாங்க ஆரம்பிச்சோம். ஏற்கெனவே அவருக்கு ரெகுலரா வேலை இல்லை... சிகிச்சைக்காக அடிக்கடி ஹாஸ்பிடலுக்கு வேற போறதால அவரோட வருமானம் ரொம்ப குறைஞ்சுபோச்சு. இதுக்கு மேலயும் கடன் வாங்கி செலவு பண்ண முடியாதுன்னு இப்ப ஒரு மாசமா சிகிச்சைக்கே போறதில்லை. கடவுளா பார்த்து குழந்தை பாக்கியம் தரட்டும்னு விட்டுட்டோம். இந்த மாதிரியான சிகிச்சையெல்லாம் பணக்காரங்களுக்குத்தான் ஒத்துவரும்போல... அரசாங்க மருத்துவமனைகள்லயும் இந்த சிகிச்சை கிடைச்சா எங்களை மாதிரி ஏழைகளுக்கு வரப்பிரசாதமா இருக்கும்” என்றார் சோகமாக.

குழந்தையின்மை சிகிச்சை
குழந்தையின்மை சிகிச்சை

இந்தக் கோரிக்கையைச் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திவரும் அறந்தாங்கி எம்.எல்.ஏ., எஸ்.டி.ராமச்சந்திரனிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் இப்போது திரும்பிய திசையெல்லாம் புற்றீசல்போல செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் கிளம்பிவிட்டன. அறந்தாங்கியைச் சுற்றிய கிராமப் பகுதிகளில்கூட செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் பெருகிவிட்டன. இவற்றில் பல மருத்துவமனைகள் லாப நோக்கில் செயல்படுவதையும், சில மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் கட்டிய மக்கள் ஏமாற்றப்படுவதையும் நாமே கண்கூடாகப் பார்த்துவருகிறோம். எனவேதான், கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலும், நடப்பு கூட்டத்தொடரிலும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மூலம் அரசே செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினேன். அரசு விரைவில் நல்ல முடிவெடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

அரசு மருத்துவமனைகளில் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் வெரோனிகா மேரியிடம் பேசினோம். “பல ஆயிரம் கோடி பணம் கொழிக்கும் சந்தையாக, குழந்தையின்மை சிகிச்சை இருக்கிறது. மதுரையில் தனியார் கல்லூரி ஆசிரியை ஒருவர் ஆரம்பகட்ட சிகிச்சைக்காக மட்டுமே 8 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருக் கிறார். ஆனாலும், எந்தப் பலனும் இல்லாததால், இப்போது அந்தத் தம்பதி ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இதேபோல, எதிர்காலச் சேமிப்புக்காக வைத்திருந்த நகை, நிலங்களை விற்று சிகிச்சை பெறும் நூற்றுக்கணக்கானோரைச் சந்தித்திருக்கிறேன். தனியார் மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சைக்காக சுமார் 2 லட்சத்திலிருந்து 20 லட்ச ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படு கிறது. இதனால் ஏழைகளுக்கு செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையும், மகப்பேறு ஆசையும் எட்டாக்கனியாக இருக்கின்றன. பல விவாகரத்து களுக்கு, குழந்தையின்மையே முக்கியக் காரணமாக இருப்பதையும் காண முடிகிறது.

எஸ்.டி.ராமச்சந்திரன், வெரோனிகா மேரி
எஸ்.டி.ராமச்சந்திரன், வெரோனிகா மேரி

இது தொடர்பாக, 2018-ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்காக, 159 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி கொடுத்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஏன் ஓர் அரசு மருத்துவமனையில்கூட செயற்கைக் கருத்தரிப்புக்கான சிகிச்சை இல்லை என்பதுதான் அப்போதும் இப்போதும் என்னுடைய ஒரே கேள்வி. மருத்துவத்துறைக்காக, பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கும் அரசு, ஒரு மருத்துவமனைக்கு 4 கோடி ரூபாய் செலவு செய்திருந்தாலே இதைச் சாத்தியப்படுத்தியிருக்க முடியும். மதுரை, திருச்சி கோவை, சென்னை போன்ற முக்கியமான இடங்களிலாவது இந்தச் சிகிச்சைக்கான மையங்கள் வந்தால்தான், குழதையின்றி தவிக்கும் ஏழைப் பெண்களுக்கு அது மிகப் பெரிய வரமாக இருக்கும். கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில், மதுரை இராசாசி அரசு மருத்துவமனை, சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை களில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களை அமைப்பதாக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது, இப்படித்தான் நெல்லை உள்ளிட்ட இடங்களில் குழந்தையின்மை சிகிச்சைப் பிரிவுக்கென கட்டடங்கள் கட்டப்பட்டன. சிகிச்சையைத் தொடங்காமல் வெறும் கட்டடங்களாகக் கட்டிக்கொண்டு செல்வதால், மக்களுக்கு என்ன பயன் இருக்கிறது?” என்றார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “சில தனியார் கருத்தரிப்பு மருத்துவமனைகள் விதிமுறைகளை மீறி, கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருப்பதாகப் பல்வேறு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், விதிமுறைகளை மீறிய பல மருத்துவமனைகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளைக் குறித்தும் மருத்துவமனைகளுக்கு துறைசார்பில் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு சார்பில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கும் பணிகள் அனைத்தும் பாதியிலேயே நின்றுவிட்டன.

கழக ஆட்சி அமைந்ததும் தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக் கின்றன. இந்த இரண்டு மையங்களும் கூடிய விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அரசின் இந்த இரண்டு புதிய மையங்களும் ஒரு செயற்கைக் கருத்தரிப்பு மையம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். அதேபோல, இந்த இரண்டு மையங்களின் செயல்பாடுகளைப் பார்த்து அரசு சார்பில் மேலும் பல இடங்களில் புதிய மையங்கள் தொடங்குவதற்கான திட்டமும் இருக்கிறது” என்றார்.

`எல்லோருக்குமான அரசு’ என்று மத்திய அரசும், மாநில அரசும் மணிக்கொரு தரம் சொல்கின்றன. அதைச் செயலிலும் காட்டுவார்களா?