Published:Updated:

மெட்டல் டிடெக்டர் பரிசோதனையில் கதிரியக்கம் வெளிப்படுமா - என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்?

லட்சுமணன்.ஜி

மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையங்கள், மால்கள் போன்றவற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காகச் செய்யப்படும் பரிசோதனைகளின்போது பயன்படுத்தப்படும் கருவிகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் பாதிக்க வாய்ப்பிருக்கிறதா?

புற்றுநோய்
புற்றுநோய்

ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு புற்றுநோயாளி இருந்தால் அதிகம். இப்போது, தெருவுக்கு இரண்டு பேர் புற்றுநோய் பாதித்து தவித்து வருகிறார்கள். இதுதான் காரணம் என்று சொல்லவியலாமல் பலரையும் பீடித்து வதைக்கிறது புற்றுநோய். சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் தொடங்கி கம்ப்யூட்டர், டி.வி, செல்போன் கோபுரங்கள் போன்றவற்றிலிருந்து மின்காந்த அலைகள் வெளிவருகின்றன. அதுமட்டுமல்லாமல் எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், மாமோகிராம், எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளின்போதும் கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

விமான நிலையம்
விமான நிலையம்

'பயணிகளைப் பரிசோதனை செய்யும் நேரத்தைக் குறைக்கிறோம், துல்லியமாகப் பரிசோதனை செய்கிறோம்' என்று கூறிக்கொண்டு விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்கின்றனர். புற்றீசல்போல முளைத்துநிற்கும் மால்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இத்தகைய பரிசோதனைகளின்போது பயன்படுத்தப்படும் கருவிகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் உலவுகிறது.

"அந்தச் செய்தி உண்மையா. அடிக்கடி இதுமாதிரியான பரிசோதனைகளுக்கு உட்படுவது பாதிப்பை ஏற்படுத்துமா?" அறுவைசிகிச்சை புற்றுநோயியல் மருத்துவர் சரவணன் பெரியசாமியிடம் கேட்டோம்.

விமான நிலையம் பரிசோதனை
விமான நிலையம் பரிசோதனை

"புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணம் கதிரியக்கம்தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், 'கதிர்வீச்சுக்கு உள்ளானாலே புற்றுநோய் வந்துவிடும்' என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது. கதிர்வீச்சு (Radiation) என்பது ஒரு ஊடகத்தில் ஊடுருவிச் செல்லும் ஆற்றல் கொண்டது. கதிர்வீச்சில் இரண்டு வகையுள்ளது. முதல்வகை, 'அயனியாக்கும் கதிர்வீச்சு' (Ionising Radiation). ஆல்ஃபா துகள்கள், பீட்டா துகள்கள், காமா கதிர்கள், ஊடுகதிர் அலை (X-ray), புற ஊதாக் கதிர்கள் (Ultraviolet rays) போன்றவை அயனியாக்கும் கதிர்வீச்சு வகையாகும். மற்றொன்று, 'அயனியாக்கம் இல்லாத கதிர்வீச்சு' (Non-Ionizing Radiation). ஒளி அலைகள் (Visual light), நுண்ணலைகள் (Microwaves), ரேடியோ அலைகள் (Radio Waves) போன்றவை அயனியாக்கம் இல்லாத கதிர்வீச்சுகள்.

அயனியாக்கும் கதிர்வீச்சுதான் மிகவும் ஆபத்தானது. இது அதிகளவு உடலில் படும்போது உடலில் உள்ள திசுக்களையும் செல்களையும் பாதிக்கும். மரபணுவைப் பாதித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். அயனியாக்கம் இல்லாத கதிர்வீச்சுகளால் புற்றுநோய் உண்டாகிறது என்பதற்கான எந்த ஆய்வுகளும் உறுதி செய்யப்படவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பயணிகளைப் பரிசோதிக்கவும் பயன்படுத்தப்படும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக் கருவிகளில் வெளிப்படுவது இந்த வகை கதிர்வீச்சுகளே. எனவே, விமான நிலையம், மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பரிசோதனைக் கருவிகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் புற்றுநோய் பாதிப்பு வரும் என்ற அச்சம் தேவையில்லை.

X-Ray
X-Ray

அயனியாக்கும் கதிர்வீச்சு ஆபத்தானது என்றாலும்கூட குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் மட்டுமே அது புற்றுநோயை உண்டாக்கும். அதாவது, கதிரியக்கத்தின் அளவு ‘மில்லி ஸீவெர்ட்ஸ்’ (Milli Sieverts - mSv) என்ற அளவால் குறிப்பிடப்படுகிறது. 'ஒரு மனிதன் ஒரு வருடத்துக்கு 50 mSv வரை கதிரியக்கத்தை அனுமதிக்கலாம்' என்கிறது சர்வதேச கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணைக்குழு (International Commission on Radiation Protection - ICRP). மருத்துவப் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளிலும் கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்றாலும் அது உடனடியாகப் புற்றுநோயை உண்டாக்கும் அளவுக்கு அதிகமானதல்ல. உதாரணமாக, குறைந்தபட்சமாக டெக்ஸா ஸ்கேன் பரிசோதனையின்போது 0.001 mSv என்ற அளவிலும், இதயத்துக்கான சி.டி.ஸ்கேன் பரிசோதனையின்போது 12 mSv என்ற அளவிலும் கதிரியக்கம் உடலில் நுழைகிறது.

Vikatan

எக்ஸ்ரே கதிர், சி.டி.ஸ்கேனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் மட்டுமே இந்த விதமானவை. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ பரிசோதனைகளிலும் கதிரியக்கம் இல்லை. எனவே, அவசியமான நேரங்களில் மருத்துவர் அறிவுறுத்தும்போது கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மருத்துவ பரிசோதனை
மருத்துவ பரிசோதனை

பொதுவாக, புற்றுநோய் உடலில் நகம், முடியைத்தவிர எங்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்கு மரபு, சூழல், உணவு என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அத்துடன், இந்தக் காரணங்களால்தான் ஒருவருக்குப் புற்றுநோய் வந்தது என அறுதியிட்டுக் கூறமுடியாத காரணங்களும் இருக்கின்றன. அதற்காக ஓரிருமுறை எக்ஸ்ரே எடுத்தாலே புற்றுநோய் வரும் என்று சொல்லிவிட முடியாது. வீணாக அஞ்சத் தேவையில்லை" என்கிறார்.