கட்டுரைகள்
Published:Updated:

இசையால் வெல்வோம் வலிகளை!

Music Therapy
பிரீமியம் ஸ்டோரி
News
Music Therapy

#Music Therapy

“உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும்..

காதலில் வலியும் இன்பம்தானே தானே...”

காதல் வலி வேண்டுமானால் இன்பமாக இருக்கலாம். ஆனால் நோயினால் ஏற்படும் வலியை யாராலும் இன்பமாகக் கருத முடியாது. வலி என்றாலே வலி நிவாரண மாத்திரைகளைத்தான் பலர் தீர்வாகக் கருதுகின்றனர். வலி நிவாரண மாத்திரைகளை அதிகம் எடுப்பதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இசையின் மூலம் வலிக்குத் தீர்வு காணலாம் என்கிறார் மயக்கவியல் மருத்துவரும் வலி நிர்வாகச் சிறப்பு மருத்துவருமான மதன்.

‘‘குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும்போதே தாயின் இதயத்துடிப்பிலிருந்து தாலாட்டு வரை இசையைக் கேட்கத் தொடங்கிவிடும். நம்மில் பலருக்கு சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும், இசையைக் கேட்கும் பழக்கம் இருக்கும். சந்தோஷமாக இருக்கும் போது அதை நீட்டிக்கவும், கவலையாக இருக்கும்போது மனநிலையை மாற்றவும் இசை உதவுகிறது.

Iமதன்
Iமதன்

எப்படி சிகிச்சையாக மாறும்?

இசையை எல்லாருமே ரசிப்போம். அதையே சிகிச்சையாக மாற்றுவதைத்தான் மியூசிக் தெரபி என்கின்றனர். ஒருவர் வலியுடன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குப் பிடித்த இசையைக் கேட்கச் சொல்வோம். இதனால் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்பட்டு நல்ல உணர்வைக் கொடுக்கும். அது அவர்களின் வலியைக் குறைக்கும்.

மியூசிக் தெரபி வலியைக் குறைக்கிறது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. மருந்தோ ஊசியோ கொடுப்பதைவிட மியூசிக் தெரபி நல்ல பலனைக் கொடுக்கிறது.

சிலருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்தாலும் தங்களுக்கு வலி இருக்கிறது என்ற எண்ணம் மனதில் பதிந்துவிடும். அதனால் வேறு எந்தச் சிகிச்சை கொடுத்தாலும் வலி இருக்கிறது என்றே சொல்லுவார்கள். இவர்களுக்கு மியூசிக் தெரபி கொடுப்பதன் மூலம் மனதில் நிறைவான உணர்வு ஏற்படும். வலி பற்றிய எண்ணத்தை மறந்து தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள்.

இசையால் வெல்வோம் வலிகளை!

எந்தப் பிரச்னைக்கு மியூசிக் தெரபி?

வலியில்லா பிரசவம், புற்றுநோய் வலி, தீவிர முதுகுவலி, தீவிர கழுத்துவலி, தலைவலி, மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு இந்த சிகிச்சை பயன்படும். மனமும் உடலும் நன்றாக ஆகிவிட்டால் உடலின் மற்ற இயக்கங்களும் சரியாகிவிடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு கையை அசைக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். இசையைக் கேட்கும்போது அவர்களை அறியாமலேயே கையை அசைக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே, இசை, இயன்முறை சிகிச்சையைப் போன்றும் உதவும் என்று சொல்லலாம்.

இசையால் வெல்வோம் வலிகளை!

பக்க விளைவுகள்

சிகிச்சை என்பதற்காக 24 மணி நேரமும் இசையைக் கேட்க வேண்டும் என்பது கிடையாது. ஹாட் ராக் உள்ளிட்ட சில இசை வகைகள் அதீத தாளத்துடன் காது ஜவ்வுகளைக் கிழிக்கும் வகையில் இருக்கும். அதுபோன்ற இசையைக் கேட்பதால் மனது பாதிக்கப் படலாம். இது ஒரு நபரின் நடத்தையைக்கூட (Behaviour) மாற்றலாம். எனவே, மியூசிக் தெரபியில் மனதை இலகுவாக்கும் மென்மை யான இசையைத்தான் கேட்கச் சொல்வோம்.

காஸ்ட்லியான சிகிச்சையா?

மியூசிக் தெரபி என்பது அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை கிடையாது. இதில் நோயாளிகளுக்குப் பிடித்த இசையைத்தான் கேட்கச் சொல்வோம். அதை எப்படிக் கேட்க வேண்டும் என்று மருத்துவர்கள், நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள். ஒரு மருத்துவரிடம் ஒரு கன்சல்டேஷனுக்கு ஆகும் செலவுதான் இந்தச் சிகிச்சைக்கு ஏற்படும். சிலருக்கும் மருத்துவரிடம் தெரபிக்குச் சென்ற மூன்று விசிட்டிலேயே பலன் கிடைத்துவிடும். சிலருக்குக் கூடுதலாக நேரம் தேவைப்படலாம். நோயாளி விருப்பப்பட்டால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சையைத் தொடர முடியும். சிகிச்சைக்கான காலம் என்பது ஒவ்வொருவருக்கும் அவர் பிரச்னைக்குத் தகுந்தாற்போல் மாறுபடலாம்” என்றார்.