
மருத்துவம் 25 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
‘புங்குக்கு ஆறாத புண்ணுமில்லை
நுங்குக்குத் தணியாத சூடுமில்லை’ என்பது பழமொழி. இதன் இலை, பூ, காய், பட்டை, வேர்ப்பட்டை, எண்ணெய் முதலியன அனைத்துமே சிறந்த மருத்துவப் பயன்கள் உடையவை. பொதுவாக, வேர்ப்பட்டை என்று சொல்லப்பட்ட இடங்களிளெல்லாம் வேர்ப்பட்டைக்குப் பதிலாகப் பட்டையைப் பயன்படுத்துவது நல்லது. பட்டையை எடுக்கும்போது ஒரே மரத்தில் அவ்வளவு பட்டையையும் உரித்துவிடாமல், ஒவ்வொரு மரத்திலும் 15 செ.மீ முதல் 30 செ.மீ நீளம், 15 செ.மீ அகலம் உடைய பட்டைகளாகச் சேகரிப்பது நல்லது. இதனால் அந்த மரங்கள் பட்டுப்போகாமல் இருப்பதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். பழங்காலங்களில் நெல்லைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட குதிர் எனும் பெரிய மண்பாத்திரங்களில், நெல்மணிகளைக் கொட்டிவிட்டு மேற்பகுதியில் புங்கன் இலை, நொச்சியிலை, வேப்பிலை ஆகியவற்றைப் போட்டு மூடி வைப்பார்கள். இதனால், அந்துப்பூச்சி முதலான பூச்சிகள் நெல் தானியத்தைத் தாக்காமலிருந்துள்ளது.

புங்கன் துளிர் இலை, வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றைச் சம எடையாக எடுத்து மை பதத்தில் அரைத்துக் கொட்டைப்பாக்கு அளவு உருட்டி, மூன்று நாள்கள் இரவு படுக்கப்போகும் முன்பு உண்டு வர வேண்டும். 4-ம் நாள் காலையில் 15 மி.லி. சிற்றாமணக்கு எண்ணெய் குடித்தால், பேதியாகி வயிற்றிலுள்ள அனைத்துப் புழுக்கள், கிருமிகள் வெளியாகி வயிறு சுத்தமாகும். நீண்ட நாள் படுக்கையில் இருக்கும் நோயாளரின் படுக்கையில் புங்கனிலையைப் பரப்பிவைத்தால், படுக்கைப்புண்கள் ஏற்படாது. புழு நெளியும் படுக்கைப்புண்கள் மீது புங்கனிலையை அரைத்துப் பூசிவந்தால் புழுக்கள் மறைந்து புண்கள் ஆறும். புங்க மரம் பூக்கும் காலங்களில், மரத்தைச் சுற்றிலும் சுத்தமான துணிகளை விரித்து வைத்து, உதிரும் பூக்களை மண்ணில் படாதவாறு சேகரிக்க வேண்டும். இவை வெண்மையாகவும், இளஞ்சிவப்பு வரிகள் ஓடி, பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்படும். அவ்வாறு சேகரிக்கப்பட்ட பூக்களைச் சிறிது பசுநெய் விட்டு வறுத்து, இடித்துச் சூரணமாகச் செய்துகொள்ள வேண்டும். இதற்குப் ‘புங்கம்பூச் சூரணம்’ என்று பெயர். இந்தச் சூரணத்தில் நாட்டுச்சர்க்கரை கலந்து 3 முதல் 5 கிராம் அளவு காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 40 நாள்கள் உண்டுவர எல்லாவிதமான வெள்ளைப்படுதல், மேகநோய்கள் குணமாகும். இதை எடுத்துக்கொள்ளும்போது புளி, புகை, வாய்வு பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

புங்கன் கொட்டைகளை மாலையாகக் கோர்த்து குழந்தைகளின் கழுத்தில் தொங்கவிடுவது பண்டைக்காலப் பழக்கம். ‘இந்தக் கொட்டைகளைக் குழந்தைகள் அடிக்கடி வாயில் வைத்துச் சப்பி வருவதால் கக்குவான் இருமல் வராமல் பாதுகாக்கும்’ என்பார்கள். இதன் விதைப்பருப்பைப் பொடியாக்கி குழந்தைகளுக்கு 200 மி.கி, 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 500 மி.கி வரை இருவேளை தேனில் கலந்து கொடுத்துவரக் கக்குவான் இருமல் குணமாகும். புங்கன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் ‘புங்கெண்ணெய்’ என்கிறார்கள். இது விளக்கு எரிப்பதற்கு மிகவும் சிறந்தது. இந்த எண்ணெயை உள்ளுக்குள் சாப்பிடக் கூடாது. சொரி, சிரங்கு, கரப்பான், படர்தாமரை ஆகிய தோல் நோய்களின் மேல் இந்த எண்ணெயைப் பூசிவந்தால் அவை விரைவில் ஆறும். புங்கன் வேர்களை ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை சேகரித்து, நீளநீளமாக வெட்டி மேல்தோலை நீக்கிவிட்டுத் தண்ணீரில் போட்டு, மண் இல்லாமல் அலம்பி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, கத்திரியால் பஞ்சுபோல் சீவி, இடித்துக் கைகளால் பிழியப் பால் கிடைக்கும். இதைச் சித்த மருத்துவத்தில் ‘புங்கம்பால்’ என்கிறோம்.

தண்ணீர்க் கரையோரம் நிற்கும் புங்கன் மரங்களில் ஆணிவேர் பாதிக்கப்படாமல் வெளியில் தெரிகின்ற வேர்களை வெட்டி, மேலே சொன்னபடி செய்தால் புங்கம்பால் கிடைக்கும். ஆறாத நாள்பட்ட புண்களை ஆற்றுவதில் இந்தப் பால் மிகவும் சிறந்தது. புங்கம்பாலும், தேங்காய்ப்பாலும் சம அளவு கலந்து அடுப்பிலேற்றி குறைவான தீயிட்டால், எண்ணெய் பிரியும். இந்த எண்ணெயைப் படுக்கைப்புண் முதலான எல்லாவிதமான புண்களின் மீதும் போட்டு வரலாம். மிக ஆழமான குழிப்புண்கள் மீது இந்த எண்ணெயைப் பஞ்சில் தோய்த்து குழிப்புண்களுக்குள், வெள்ளிக்கம்பியால் செலுத்தித் தொடர்ந்து வைத்துக்கொண்டு வந்தால் விரைவில் ஆறும். இப்படித்தான் பழங்காலத்தில் நடைபெற்ற போர்களில் காயமுற்றவர்களுக்கு மருத்துவம் நடைபெற்றுள்ளதாக மூத்த சித்த மருத்துவர்களிடம் வாய்வழியாகக் கேட்டு அறிந்துள்ளேன். பழங்காலப்போர்களில் பகல் பொழுது முடிந்து, இரவில் உயிருடன் பிழைக்க வாய்ப்புள்ள நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் உடலிலுள்ள புண்களின் மேல், எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி, வெட்டப்பட்ட பழத்தைக் கொதிக்கும் நல்லெண்ணெயில் தோய்த்து, சூடுபோடுவார்களாம்.

இதைத்தான், “வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல” என்று நாலாயிரத் திவ்யப்பிரபந்த வரிகள் எடுத்துரைக்கின்றன. புங்கன் வேர்களைப் போலவே, புங்கன் பட்டைகளையும் ஏற்கெனவே சொன்னபடி பால் எடுத்து, தேங்காய் எண்ணெயும் கலந்து காய்ச்சி, சொரியாசிஸ் புண்கள் மேல் போட்டு வர அவை விரைவில் குணமாகும். புங்கனில் நாட்டுப்புங்கன், காட்டுப்புங்கன் என இரண்டு வகைகள் உள்ளன. நாட்டுப்புங்கன் மிக உயரமாக வளராமல், பந்தல் போல் படர்ந்து வளரும் தன்மையுடையது. காட்டுப்புங்கன் உயரமாக வளரும். இரண்டிற்கும் மருத்துவக்குணங்கள் ஒன்றுதான்.

மணிப்புங்கு
இதில், ‘மணிப்புங்கு’ என்ற மற்றொரு ரகமும் உண்டு. இதையே, ‘சோப் நட் மரம்’ என்று அழைக்கிறார்கள். இதன் காயைப் பொடி செய்து சோப்புக்குப் பதிலாகத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும், காதணிகளில் உள்ள அழுக்குகளை நீக்கவும் பயன்படுத்துவதுண்டு. இதன் பழச்சதையில் அரை கிராம் எடுத்துத் தண்ணீரில் கரைத்துக் குடிக்கக்கொடுத்தால், வாந்தியாகிச் சளி முழுவதும் வெளியேறும். 5 கிராம் பழச்சதையைத் தண்ணீரில் கரைத்து விஷக்கடி உள்ளவர்களுக்குக் கொடுத்தால் வாந்தியாகி விஷம் இறங்கும். இப்பழச்சதையினுள் இருக்கும் விதைகளைப் பொடி செய்து 200 முதல் 300 மி.கி. எடுத்துத் தாய்ப்பாலில் 10 நிமிடங்கள் ஊறவைத்து மூர்ச்சை, வலிப்பினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் மூக்கில் 2 முதல் 3 துளி விட்டால், மூக்கிலும் வாயிலும் தங்கியுள்ள கோழை வெளியேறும். இதனால், நோயாளிக்கு மூச்சடைப்பு ஏற்படாமல், அபாயக் கட்டங்கள் தவிர்க்கப்படும் என்ற இத்தகவலை, கண்ணுசாமிப்பிள்ளை, அவரது ‘பதார்த்த குணவிளக்கம்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இன்றைய நவீன மருத்துவமனைகளில் ‘ஆஸ்பிரேட்டர்’ என்ற கருவியால், சளியை அகற்றும் பணி நடக்கிறது. ஆனால், நமது முன்னோர்கள், மூலிகைகளைக் கொண்டு சளியை அகற்றிப் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது வியப்பிற்குரியது.

புன்னை
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் புன்னை மரம் பதிவாகியுள்ளது. செழிப்பான தண்ணீர் கரை ஓரங்களில் மட்டுமே இதை வளர்க்க முடியும். ஓடை, ஆறு, குளத்துக்கரைகளில் வளர்ப்பதற்கு இது ஏற்ற மரம். எழுத்தில் ‘புன்னை’ என்று எழுதினாலும், பேச்சுவழக்கில், ‘பின்னை’ என்றும், இதன் எண்ணெய், ‘பின்னங்கெண்ணெய்’ என்றும் சொல்லப்படுகிறது. இதன் அழகிய இலையைக் கண்டு தாவரவியல் வல்லுநர்கள் ‘அயனோஃபில்லம்’ (Ionophyllum) என்று பெயரிட்டுள்ளனர். இதன் கொட்டையில் உள்ள பருப்பை, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்துக் காதுகளில் வரும் புண்களுக்கும், விரல்களில் நகக்கண்களைச் சுற்றிவரும் அரிப்பு, ஊறல் ஆகியவற்றின் மேல் போட்டுவர அவை விரைவில் ஆறும். புன்னை எண்ணெயில் பயோடீசல் மதிப்பு மிக அதிகமாக உள்ளதால், எதிர்காலத்தில் இதன் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மின்சாரத்திற்கு முற்பட்ட காலங்களில் வீடுகளில் விளக்கு எரிக்கவும், கோயில்களில் வெளிச்சத்திற்காகப் பந்தங்கள் எரிக்கவும், இந்த எண்ணெய் அதிகமாகப் பயன்பட்டுள்ளது. மிகக்கொடிய வாதநோய்களைக் குணமாக்கும் தைலங்கள் தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயைத் தனியாகவும் சூடாக்கி பக்கவாத நோயாளிகளின் பாதிக்கப்பட்ட கை, கால்கள்மீது தொடர்ந்து பூசிவரத் துவண்டு விழுந்த கை, கால்கள் சரியாகிவிடும். 15 முதல் 20 துளி எண்ணெயை, சர்க்கரையுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 3 வேளை கொடுத்துவர, சிறுநீர்ப்பாதை தொற்றுகள், வெள்ளைப்படுதல் ஆகியவை விரைவில் குணமாகும். புன்னையில் சிறுபுன்னை, காட்டுப்புன்னை ஆகிய வகைகள் உண்டு. இவை பெரும்பாலும், புன்னையின் மருத்துவக் குணங்களையே கொண்டிருக்கும். ஆனால், ‘சுர புன்னை’ என்பது வேறு. இதை அலையாத்தி மரம் என்றும் சொல்வார்கள். பிச்சாவரம் முதலான காடுகளில் இவை அதிகமாகக் காணப்படும்.
அடுத்த இதழில்... ஆல், அரசு, அத்தி, இத்தி ஆகியவை குறித்துப் பார்ப்போம்.