
மருத்துவம் 26 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
ஆல், அரசு, அத்தி, இத்தி, நாவல் ஆகிய ஐந்து மரங்களும் சேர்ந்து ‘பஞ்ச துவர்ப்பிகள்’ என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ‘நாவல்’ தவிர மற்ற அனைத்து மரங்களிலும் பால் உண்டு. இவற்றின் காய், பழம், விதை, பட்டை, வேர்ப்பட்டை முதலான அனைத்துமே சிறந்த மருந்துகளாகப் பயன்படுகின்றன.
இவை அனைத்தும் துவர்ப்புச்சுவை உடையவை என்பதால், இச்சுவை உடலை வளர்ப்பதுடன், ரத்தத்தை வலுப்படுத்திப் புண்களையும் ஆற்றும். ‘ஆல்’ என்றவுடன் நம் அனைவரின் மனதிலும் படர்வது அதன் பிரமாண்டம்தான். ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியின் அடுத்த வரிகளான ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்பதை நம்மில் பெரும்பாலானோர் மறந்துவிட்டோம்.

இதில், ‘ஆல்’ என்பது ஆலமரத்தையும், ‘வேல்’ என்பது வெள்வேல் மரத்தையும் குறிக்கும். அதேபோல, ‘நாலு’ என்பது நாலடியாரையும், ‘இரண்டு’ என்பது திருக்குறளையும் குறிக்கும். ஆலமரத்தின் குச்சி அல்லது விழுதுகளைத் தறித்துப் பல் குச்சிபோல வைத்துக்கொண்டு பல் துலக்கி வரப் பற்கள் உறுதிப்படும். அத்துடன், ஆடும் பற்களின் மீது ஆலம் பாலைத் தொடர்ந்து பூசிவர ஆட்டம் நின்று உறுதிப்படும். ஆலம் விழுதின் நுனியில் இருக்கும் மஞ்சள் மற்றும் சிவப்புநிறத் துளிர்களைப் பறித்து இடித்துச் சாறெடுத்து, அதில் சவ்வரிசியைப் போட்டு வெயிலில் உலர வைத்துக் கொள்ளவும். இதைக் கஞ்சியாகவோ அல்வாவாகவோ செய்து சாப்பிட்டு வரத் தாது பலப்படும்.

ஆலம் பழங்கள் பழுக்கும் சமயங்களில் மரத்தைச் சுற்றிலும் துணிகளை விரித்து வைத்து விழுகின்ற பழங்களை மண் ஒட்டாமல் சேகரிக்க வேண்டும். பிறகு, விதைகள் தனியாகவும், பழச்சதைகள் தனியாகவும் பிரித்துப் பத்திரப்படுத்தவும். இதைப்போலவே அரசு மற்றும் அத்தி மரங்களின் விதைகளையும் சேகரித்துக்கொள்ளலாம். இந்த விதைகளை இடித்துச் சூரணம் செய்து லேகியமாகச் செய்து சாப்பிட்டு வர, விந்தணுக்களின் எண்ணிக்கையையும், வீரியத்தையும் கூட்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் ‘மகா பூரணாதி இளகம்’ மிகச்சிறந்த பலனைத் தருகிறது.

ஆல், அரசு, அத்தி மர விதைகளை வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா, சாரப்பருப்பு, முருங்கை விதையை வகைக்கு 2 எண்ணம் எடுத்து, இவற்றை நன்கு காய்ச்சிய பாலில் 15 நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து, அத்துடன் காய்ச்சின பசும்பால் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, 90 நாள்களில் விந்தணுக்கள் குறைபாடு தீரும். முற்றிலும் விந்தணுக்களே இல்லாத நிலைக்கு (Azoospermia) தகுந்த காரணங்களைக் கண்டறிந்து, அதற்கான மருத்துவம் பார்த்துவிட்டு மேற்சொன்ன இம்மருந்தையும் எடுத்துக்கொண்டால் நல்ல குணம் கிடைக்கும். உதட்டுப்புண்கள், நாக்குப்புண்கள் மீது ஆலம் பாலைப் பூசிவர அவை விரைவில் ஆறும். ஆலமரத்தின் துளிர் இலைகளை அரைத்து ஒரு நெல்லிக்காயளவு எடுத்துத் தயிரில் கலக்கிக் கொடுத்து வந்தால் ரத்த பேதி, மூலக்கடுப்பு நீங்கும். ஆலம்பாலைக் கால்வெடிப்புகள் மீது பூசி வந்தாலும் அவை விரைவில் ஆறும். பழுத்து உதிர்ந்து விழுந்து கிடக்கும் ஆலம் இலைகளைச் சேகரித்துத் தீயிலிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கி, அச்சாம்பலை நல்லெண்ணெயில் குழப்பிக் கரப்பான் புண்கள்மீது போட்டு வர அவை விரைவில் ஆறும். ஆலமரத்தின் பட்டை, வேர்ப்பட்டை ஆகியவற்றைக் குறுகத் தரித்து, ஒன்றிரண்டாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இப்பொடியில் 50 கிராம் அளவு எடுத்து, அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதை அடுப்பிலேற்றி, கால் லிட்டராக வற்ற வைத்து வடிகட்டிக் குடித்து வரவும். இவ்வாறு தொடர்ந்து 4 மண்டலங்கள், அதாவது 192 நாள்கள் குடித்து வர, சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். இதே குடிநீரைக் கொண்டு சர்க்கரை நோய்ப் புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும். ஆலம் பழம், விழுது, கொழுந்து ஆகியவற்றைச் சம அளவு எடுத்துக் காய்ச்சின பசும்பால் விட்டுக் காலையில் வெறும் வயிற்றில் ஒரு எலுமிச்சை அளவு 120 நாள்கள் உண்டு வர, விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.


அரசு
புத்தரின் ஞானத்தோடும், இந்துமத நம்பிக்கையில் விநாயகரோடும் அரசமரம் தொடர்புப்படுத்திப் பேசப்படுகிறது. ‘அரசமரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்’, ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை’ ஆகிய சொல் வழக்குகள் பெண் மலட்டைக் குணமாக்கும் அரசமரத்தின் மருத்துவக் குணத்தை எடுத்துக்கூறுகிறது. இம்மரத்தின் கொழுந்து இலைகளைப் பசும்பால் விட்டுத் துவையல்போல் அரைத்துச் சாப்பிட்டால் பெண் மலடு தீரும். அரசமரத்துப் பட்டைகளை இடித்துப் பொடியாக்கி, அதைத் தீயிட்டு எரித்துக் கருக செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பிப் போட்டுவரக் கரப்பான், சொறி, சிரங்கு குணமாகும். இலைக்கொழுந்துகளை அரைத்துப் பற்று போட புண்கள் ஆறும். அதே இலைக் கொழுந்துகளைக் குடிநீராக்கி தனியாகவோ, பாலில் கலந்தோ குடித்துவர சுரம் தணிவதுடன், சுரத்தில் ஏற்படும் அதிக தாகமும் தணியும். இதன் பட்டைப் பொடியைக் குடிநீரில் கலந்து புண்களைக் கழுவினால் அவை விரைவில் ஆறும். இதன் விதைகள் விந்தணுக்களைப் பெருக்கும் லேகியங்களில் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. ‘உலர்ந்த அரசம் பழங்களைப் பொடி செய்து அதில், ஒரு கிராம் பொடியை ஒருவேளை வெந்நீரில் கலந்து குடித்துவர, எப்பேர்ப்பட்ட சுவாசகாசம் (ஆஸ்துமா) குணமாகும்’ எனச் சித்த மருத்துவ மாமேதை கண்ணுசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

மரங்கள் மற்றும் தாவரங்கள்மேல் வளரும் ஒட்டுண்ணித் தாவரங்களைப் புல்லுருவி எனச் சித்த மருத்துவம் கூறுகிறது. பனைமரத்துப்புல்லுருவி, ஆலமரத்துப் புல்லுருவி, கள்ளி மரத்துப் புல்லுருவி என 108 வகைப் புல்லுருவிகள் குறித்துப் போகர் நூல்கள் பதிவு செய்து வைத்துள்ளன. அதில் அரச மரத்துப் புல்லுருவி இலைகளை அரைத்து ஒரு எலுமிச்சை அளவு குழந்தைப் பேரில்லாத பெண்கள், மாதவிடாய்க்கு 3 நாள்களுக்கு முன்பு காலையில் வெறும் வயிற்றில் உண்டால் நலம் பயக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை உள்ளது. அடுத்த இதழில்... அத்தி, இத்தி குறித்துப் பார்ப்போம்.