
மருத்துவம் 24 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
‘மரம் நடுதல்’ தமிழகத்தில் மிகப்பெரிய கலாசாரமாக விளங்கிவருவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், எந்த இடத்தில் எந்தெந்த மரங்களை நடுவது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆற்றங்கரை அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் வளர்க்க வேண்டிய மரங்கள் மருது, இலுப்பை, நாவல், புன்னை, புங்கன் ஆகியவை.
இவற்றில், மருதமரம் நீரோட்டத்தின் அருகில் நடப்பட வேண்டும். மருதுவைத் தொடர்ந்து இலுப்பை, நாவல், புன்னை, புங்கன்… என்ற வரிசையில் நட வேண்டும். பெருவெள்ளம் வந்தாலும், அவற்றைத் தாங்கி நிற்பதற்குத் துடுப்புகள் போன்ற அமைப்பு மருதுவுக்கும் இலுப்பைக்கும் உண்டு. 2 மாதங்கள்வரை தண்ணீர்த் தேங்கி நின்றாலும் மருது, இலுப்பை, நாவல், புன்னை, புங்கன் ஆகிய மரங்கள் பாதிக்கப்படாது. இதில், மருது குறித்து ‘நல்மருந்து’ தொடரின் முதல் பாகத்தில் விரிவாகப் பதிவு செய்துள்ளோம். இத்தொடரில் இலுப்பை, புன்னை, நாவல் ஆகியவை குறித்துப் பார்ப்போம்.

பிரமாண்டமான ஆலயங்களும், கருவறையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுப்பிராகாரமும் நமது தமிழகத்தின் பெருமைகளாகும். மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இந்தக் கோயில்கள் எவ்வாறு ஒளியூட்டப்பட்டன? இலுப்பை, புன்னை மரங்கள்தான் அன்றைக்கு ஒளியூட்டின. இதன் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய், புகை இல்லாமல் எரியக்கூடியவை. இதற்காக ஒவ்வொரு திருக்கோயிலிலும் இலுப்பை, புன்னை மரங்களை வளர்ப்பதற்காகவே தனித்தோப்புகள் இருந்திருக்கின்றன. தேர் செய்வதற்கும் இலுப்பை மரம் மிகவும் சிறப்பானது. முற்காலங்களில் படகுகள் செய்வதற்கும் இலுப்பை மரமே பயன்பட்டுள்ளது. இதன் பூக்கள், சிறந்த மருத்துவப் பயன்களைக் கொண்டவை.
‘ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்ற பழமொழி அனைவரும் அறிந்ததுதான். சர்க்கரை ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை மரத்தின் பூக்கள்தான் சர்க்கரை என்பதே இதன் பொருள். சர்க்கரைக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. சர்க்கரை நோயாளிகள் இதைப் பயன்படுத்தி, தங்களது இனிப்புத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதனால், தேவையற்ற வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்படும் ‘சுகர் ஃப்ரீ’ மாத்திரைகளைத் தவிர்க்கலாம். 10 கிராம் இலுப்பைப்பூவை 100 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 25 மி.லி ஆக வற்றவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இனிப்புத் தேவைப்படும் காபி, டீ ஆகியவற்றில் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறையும்.
5 கிராம் இலுப்பைப்பூவை, 100 மி.லி பசும்பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்துவர உடல் வலிமை பெருகி தாது பலப்படும். தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள ‘பத்ராச்சலம்’ என்ற வைணவத் திருத்தலத்தின் பிரசாதமே இலுப்பைப்பூதான். இங்கு ஆண்டு முழுவதும் உலர வைத்த இலுப்பைப்பூ கிடைக்கும். அங்குள்ள காடுகளில் நிறைய இலுப்பை மரங்கள் உள்ளன. இவை பூக்கிற சமயங்களில் அப்பகுதியில் உள்ள அடித்தட்டு மக்கள், பூக்களைச் சேகரித்து விற்பனை செய்வார்கள். இதன் மூலம் ஆண்டில் 3 மாதங்களுக்குப் பிழைப்பு நடத்தி வருவதாகச் சொல்கிறார்கள். முற்காலங்களில் இலுப்பைப் பூக்களிலிருந்து மது தயாரித்து விற்பனை செய்ததாகவும், அது வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுவைவிடத் தரமாக இருந்ததாகவும், உடலுக்குக் கேடு விளைவிக்காமல் இருந்ததாகவும் அங்குள்ள பூர்வ குடிமக்கள் கூறியதை எனது களப்பணியில் கேட்டிருக்கிறேன்.

சித்த மருத்துவத்தில் மிகச்சிறப்பான மருந்தான அயச்செந்தூரம் தயாரிப்பில் இலுப்பைப்பூச்சாறு சேர்க்கப்படுகிறது. பித்தசுரக் குடிநீரிலும் இதன் பூக்கள் சேர்கிறது. இவை மிகவும் அழகான துளிர் இலைகளை உடையவை. இந்தத் துளிர்களை அரைத்துப் பாலூட்டும் தாய்மார்கள், மார்பகங்களில் பூசி வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். ஆற்றோரங்களில் வளர்ந்துள்ள இலுப்பை மரத்தின் இலைகள் மிகவும் பயனுடையவை. ஆண்டுக்கு ஒருமுறை பூத்துக் காய்த்து, விதைகளைக் கொட்டும் இதன் பழங்களைத் தின்பதற்காக எண்ணற்ற கிளிகள் படையெடுத்து வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். புரட்டாசி, ஐப்பசி (செப்டம்பர், அக்டோபர்) மாதங்களில் பழங்கள் பழுத்துக் காணப்படும். ஏறக்குறைய சிறிய சப்போட்டா பழ வடிவத்தில் இதன் பழங்கள் காணப்படும். இதன் விதைகளை ஆட்டி எண்ணெய் எடுப்பார்கள். எண்ணெய்க்குப் பிறகு கிடைப்பது இலுப்பைப் பிண்ணாக்கு. இந்த எண்ணெயும், பிண்ணாக்கும் தற்போது மறந்துபோன பொருள்கள். ஆனால், இவற்றின் மருத்துவப் பலன்கள் மிக அதிகம்.
இலுப்பை எண்ணெயை லேசாகச் சூடாக்கி, முதுகுவலி, இடுப்புவலிக்குப் பூசி, சிறிது வெந்நீர் ஒற்றடம் கொடுத்தால் வலி நன்கு குறையும். 100 மி.லி இலுப்பை எண்ணெயை அடுப்பிலேற்றிச் சூடாக்கி, அதில் 10 கிராம் பூங்கற்பூரம் 5 கிராம் ஓம உப்பு, 5 கிராம் புதினா உப்புப் போட்டு இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதை மேலுக்குப் பூசினால் வலிகளிலிருந்து விடுதலை பெறலாம். இலுப்பை எண்ணெயைக் குழந்தைகளுக்கு ஏற்படும் மண்டைக்கரப்பான், கால் கரப்பான் ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகப் பூச நல்ல குணம் கிடைக்கும். சோப்பு நமது நாட்டிற்கு அறிமுகம் ஆகும் முன்பு, தலைக்குத் தேய்த்து, உடம்புக்கும் பூசிக் குளிக்கப் பயன்படுத்தப்பட்டவை அரப்பு எனப்பட்டது. பலவிதமான அரப்புகள் இருந்தன. சீகைக்காய்ப் (சீயக்காய்) பொடி, முடியை நன்கு வளர்க்கும். ஆவாரைப்பூப் பொடியை அரப்பாகப் பயன்படுத்தினால், கண்களுக்குக் குளிர்ச்சி உண்டாகி, கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கி, கண்களின் பார்வைத்திறன் மேம்படும்.

உசிலை அரப்பை, தலை, உடல் முழுவதும் பூசிக் குளித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். அந்த வரிசையில் இலுப்பைப் பிண்ணாக்கை நன்கு பொடி செய்து, 2 முதல் 3 தேக்கரண்டியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக் காலையில் தலைக்குப் பூசி, தப்பணம் போட்டு (தலை முழுவதும் தேய்த்தல்) ஒரு மணிநேரத்திற்குக் குறையாமல் ஊறவைத்து, நன்கு தேய்த்துக் குளித்துவந்தால், தலையில் ஏற்படும் அனைத்துவிதமான பொடுகு, செதில் பறத்தல், ஊறல், மண்டைக்கரப்பான் முதலான தலை சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். சிலருக்குப் பல ஆண்டுகளாக இருந்துவந்த தலைவலி, மூக்கடைப்புகூடக் குணமானதை எனது அனுபவத்தில் கண்டு இங்கு பதிவிடுகிறேன். சோப்பு, ஷாம்புகள் இலுப்பைப் பிண்ணாக்கை அப்புறப்படுத்திவிட்டன.
இலுப்பைப் பிண்ணாக்கு, பூவரசம்பட்டை, வேப்பம்பட்டை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து நெருப்பனலில் போட்டுக் கரியாக்கி, அதனுடன் சம எடை கார்போகரிசி, மஞ்சள் பொடி கலந்த கலவையைப் போட்டுக் கலந்து வைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு ஏற்படும் மண்டைக்கரப்பான், கால் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாக, இப்பொடியைத் தேங்காய் எண்ணெயில் குழப்பிப்போட, அவை விரைவில் ஆறும். இன்று கொசுக்களை ஒழிக்கக் கொசுவர்த்திச்சுருள், எலி மற்றும் கரப்பான்பூச்சியை ஒழிக்க ஒரு மருந்து என மிகக்கொடிய வேதியியல் நஞ்சு மருந்துகளை நமது வீடுகளில் சர்வசாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறோம். பழங்காலங்களில் மாலைப் பொழுதுகளில் இலுப்பைப் பிண்ணாக்கை மட்டும் புகைப்போட்டு கொசு, எலி, கரப்பான்பூச்சித் தொல்லைகளை நீக்கியுள்ளனர். இலுப்பைப் பிண்ணாக்கையும் சாம்பிராணியையும் சேர்த்து அரைத்துக் கரி நெருப்பனலில் போட்டு எழும் புகையோடு காலில் உள்ள சேற்றுப்புண்கள் மீது காட்டினால், 2 அல்லது 3 நாள்களில் அவை ஆறிவிடும்.

இலுப்பைப் பிண்ணாக்கை நீர்விட்டு அரைத்து அடுப்பிலேற்றிக் களிபோலக் கிண்டி, இளஞ்சூட்டில் நீர், வாயு, ரத்தம் தங்கிய விதைவீக்கங்களின் மீது பூசிவர அவை மறையும். குடலிறக்கத்தினால் ஏற்படும் விதைவீக்கத்தை இது குணமாக்காது. அதற்கு அறுவை மருத்துவம் ஒன்றே தீர்வாகும். இலுப்பைப் பிண்ணாக்கைச் சுட்டு, பொடியாக்கி மூக்கினுள் ஊதினால் மயக்கம், வலிப்பு தெளியும். ஊமத்தை விதை, அரளி வேர், ஒடுவன்தழை முதலான மிகக்கொடியத் தாவர நஞ்சுகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு, 10 கிராம் இலுப்பைப் பிண்ணாக்கை 50 மி.லி வெந்நீரில் கரைத்து, அந்தக் கரைசலைக் குடிக்கக்கொடுத்தால் வாந்தியாகி நஞ்சுகள் வெளியேறும். இதை முதல்முறை கொடுத்து வாந்தி எடுத்தால், அரைமணி நேரம் கழித்து மீண்டும் கொடுத்து வாந்தி வரவைக்கலாம். இப்படி 2, 3 முறை வாந்தி எடுத்தால் எல்லா நஞ்சுகளும் வெளியேறிவிடும்.
இவை அனைத்தையும்விட முக்கியமான தகவல் என்னவென்றால், தற்போது உயிரிழந்தவரை வைக்கும் ‘ப்ரீஸர் பாக்ஸ்’ எனப்படும் குளிர்பதனப் பெட்டி வருவதற்கு முன்பாக, இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டிய பிறகு, தலையில் இலுப்பைப் பிண்ணாக்கைப் பூசி வைக்கும் பழக்கம் முற்காலங்களில் இருந்துள்ளது. இன்றளவும், இரவு நேரத்தில் கடைகளில் இலுப்பைப் பிண்ணாக்கை வழங்குவதில்லை. இந்த இரண்டு விஷயங்களுக்கான காரணம் தெரியவில்லை. தலைக்குத் தேய்க்கும் அரப்பாக, கால்களில் பித்தவெடிப்பு, முதுகுவலி, இடுப்புவலி போக்கும் வலி நிவாரணியாக, கொசு, எலி, கரப்பான்பூச்சி விரட்டியாக, விஷத்தை வெளியேற்றும் மாமருந்தாக... எனத் தனிமனித தற்சார்பு வாழ்க்கை வாழ விரும்புபவர்களுக்கு இலுப்பை மரம் அவசியமாகிறது. இயற்கை நலவிரும்பிகளுக்குச் சுற்றுச் சூழலை மேம்படுத்தும் மரமாகவும் இலுப்பை அமைகிறது.
அடுத்த இதழில் புன்னை, புங்கன் மரங்கள் குறித்துப் பார்ப்போம்.