Published:Updated:

கேன்சருக்கு தங்கம் கலந்த நானோ மருந்துகள்- தமிழகத்தில் அறிமுகம்!

அந்த மருந்துகளில் ரசாயனங்கள், நச்சுப்பொருள்கள் இல்லாததால், கீமோதெரபி மருந்து கூடுதலாகச் செயலாற்றியது. இதுபோன்று பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

தங்கத்திலிருந்து எடுக்கப்படும் நானோ துகள்களை ஆயுர்வேத மூலிகைகளுடன் இணைத்து மருந்துகள் தயாரிக்கப்படும் பசுமை நானோ தொழில்நுட்பம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முழுக்க தாவரங்களிலிருந்து தயாரிப்பதால், இந்த மருந்துகளில் நச்சுப்பொருள்கள் எதுவும் கிடையாது. புற்றுநோய், கீல்வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆலோசனையளிக்கும் ஆயுர்வேத மருத்துவர்
ஆலோசனையளிக்கும் ஆயுர்வேத மருத்துவர்

இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம் நோயாளிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் வகையிலான இலவச மருத்துவ முகாம், சென்னை தியாகராயநகரில் உள்ள நானோ லைஃப் பல்நோக்கு மருத்துவ மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சுமார் 100 பேர் இதில் பங்கேற்றனர்.

முகாமில், நோயாளிகளுக்கான அடிப்படைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இலவச மருத்துவ ஆலோசனைகளை ஆயுர்வேத மருத்துவர்கள் வழங்கினார்கள்.

பேராசிரியர் கட்டேஷ் வி.கட்டி
பேராசிரியர் கட்டேஷ் வி.கட்டி

இந்த மருந்துகளைக் கண்டறிந்தவர், அமெரிக்காவில் உள்ள மிசோரி பல்கலைக்கழகப் பேராசிரியரும் 'பசுமை நானோ தொழில்நுட்பத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவருமான கட்டேஷ் எம்.கட்டி. இதுதொடர்பாக பேராசிரியர் கட்டேஷ் வி.கட்டி கூறும்போது, "பசுமை நானோ தொழில்நுட்பத்தின்மூலம் பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவ சிகிச்சையை நோயாளிகளுக்கு அளிப்பதே எங்கள் நோக்கம். மருந்துகளுக்கான பரிசோதனை (Clinical trial) நடைபெற்றபோது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு, பசுமை நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்பட்டன.

அந்த மருந்துகளில் ரசாயனங்கள், நச்சுப்பொருள்கள் இல்லாததால், கீமோதெரபி மருந்து கூடுதலாகச் செயலாற்றியது. இதுபோன்று பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும். எனவே, தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

ஆலோசனை வழங்கும் மருத்துவர்
ஆலோசனை வழங்கும் மருத்துவர்

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷை சந்தித்து நானோ பல்நோக்கு மருத்துவ மைய மருத்துவர்கள் இந்த சிகிச்சை முறை தொடர்பாக விளக்கியிருக்கின்றனர். அப்போது, 'தமிழக அரசு வலி மற்றும் நிவாரண சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. எனவே, இந்தத் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.