சினிமா
தொடர்கள்
Published:Updated:

புதிய மருந்து... புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி!

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி

இந்த மருந்தின் மூலம் குணமான முதல் நபராக சாச்சா ரோத் அறியப்படுகிறார். 38 வயதான சாச்சாவுக்கு மலக்குடலில் சில சமயம் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

‘புற்றுநோய் குணப்படுத்தவே முடியாதது என்கிற சித்தரிப்பை முதலில் மாற்ற வேண்டும்’ என்பார் மருத்துவர் சாந்தா. அவர் மறைந்து ஓராண்டுக்குப் பின்னர் அதன் முதல் படியை நாம் எட்டியிருக்கிறோம். ஆம், மலக்குடல் புற்றுநோய்க்கு மருத்துவர்கள் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார்கள். அறுவைச்சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை போன்ற வலிகளும் வாதைகளும் நிறைந்த நடைமுறைகள் இல்லாமல், வெறுமனே மருந்து கொடுத்து ஒரு புற்றுநோயைக் குணப்படுத்தியுள்ளார்கள்.

இப்படி மருந்தின் மூலமாக நோயாளிகள் பூரண குணமடைந்திருக்கிறார்கள் என்பதால்தான் இது உலகின் தலைப்புச்செய்தி ஆகியிருக்கிறது. இதுகுறித்து டாக்டர் ஹன்னா K.சனாஃப் எழுதிய கட்டுரையை வெளியிட்டிருக்கிறது New England Journal of Medicine. இந்த சோதனைக்கு GlaxoSmithKline நிறுவனம் உதவியிருக்கிறது. இன்னும் பெரிய அளவில் இதுகுறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறபோதிலும், மலக்குடல் புற்றுநோயிலிருந்து பூரணமாகக் குணமடைந்த 12 பேரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு மூன்று வாரத்துக்கும் ஒரு டோஸ் என ஆறு மாத காலத்துக்கு டோஸ்டார்லிமாப் என்கிற மருந்து இந்த நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்த மாயத்தைச் செய்திருக்கிறது.

முழுமையாகக் குணப்படுத்த முடியாத ஒரு நோய் புற்றுநோய். மேற்கத்திய நாடுகளில் 10-ல் 7 பேர் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டுதான் புற்றுநோயுடன் போராடிவருகிறார்கள். இந்தியாவில் புற்றுநோயுடன் நீண்ட காலம் வாழ்பவர்கள் பத்தில் நான்கு பேர் மட்டுமே.

மலக்குடல் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை மிகவும் கடுமையானது. அதிலும் இரண்டாம் கட்டத்திலோ, மூன்றாம் கட்டத்திலோ நோய் கண்டறியப்பட்டால் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை என வாழ்க்கையே முற்றிலுமாய் மாறிவிடும். சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், 20 முதல் 30% நோயாளிகளுக்கு புற்றுநோய் மீண்டும் வரும் அபாயம் இருக்கவே செய்கிறது. இந்தச் சிகிச்சையின் பின்விளைவுகளும் மோசமானவை. குடல் மற்றும் சிறுநீரகம் இயல்பாகச் செயல்படாமல்போகலாம். மலட்டுத்தன்மை ஏற்படலாம். பாலியல் ரீதியலான செயல்களில் நிரந்தரமான பாதிப்புகள் உண்டாகும். அதே சமயம், இத்தகைய சிகிச்சைகளின் முடிவில் புற்றுநோய் முற்றிலுமாய் உடலை விட்டு நீங்கியிருக்காது என்பதுதான் பெருந்துயரம்.

ஆனால், இப்போது அந்த 12 பேரும் நிம்மதியாக இருக்கிறார்கள். எல்லா சோதனைகளும் செய்து பார்த்ததில், இவர்களின் உடலில் புற்றுநோய் செல்கள் இல்லை என்பதே அந்த நிம்மதிக்கான காரணம். சிகிச்சை முடிந்து ஒருவருடத்துக்குப் பின்னர் அந்த 12 பேருக்கும் எந்தவிதமான கூடுதல் சிகிச்சையும் தேவைப்படவில்லை. யாருக்கும் புற்றுநோய் செல்கள் மீண்டும் உருவாகவில்லை. யாரும் புற்றுநோயின் மூன்றாவது கட்டத்துக்குச் செல்லவில்லை.

புதிய மருந்து... புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி!

இந்த மருந்தின் மூலம் குணமான முதல் நபராக சாச்சா ரோத் அறியப்படுகிறார். 38 வயதான சாச்சாவுக்கு மலக்குடலில் சில சமயம் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. சாச்சாவை சோதனை செய்த மருத்துவர், அவருக்குப் புற்று நோய் இருப்பதை உறுதி செய்தார். கீமோதெரபி சிகிச்சைக்குச் செல்ல முடிவெடுத்தார் சாச்சா. ஆனால், இவருக்கு வந்திருக்கும் புற்றுநோய்க்கு கீமோதெரபி பயனளிக்காது என மருத்துவர் நிராகரித்தார். இப்படியாக டோஸ்டார்லிமாப் சோதனைக்கான வாய்ப்பு சாச்சாவுக்குக் கிடைத்தது. இந்தச் சிகிச்சையின்மீது பெரிய நம்பிக்கை இல்லாமல்தான் சாச்சா, தன்னைப் பரிசோதனை எலியாக மாற்றிக்கொண்டார். இந்த சோதனை முடிந்ததும் மற்ற சிகிச்சை முறைகளைத் தேடவும் ஆயத்தமானார். ஆனால், அவரே ஆச்சர்யப்படும்விதமாக அவர் குணமடைந்தார். டோஸ்டார்லிமாப் சிகிச்சை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவிலும் சாச்சாவுக்குப் புற்றுநோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை.

டோஸ்டார்லிமாப் என்பது புதியதொரு மருந்து கிடையாது. அது ஏற்கெனவே கர்ப்பப்பைப் புற்றுநோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒன்றுதான். புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் வேலையை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பிடம் விட்டுவிடுகிறது இந்த மருந்து.

அதே சமயம், இது வெறும் 12 பேரிடம் மட்டுமே செய்யப்பட்ட ஒரு சிறிய மருத்துவ சோதனை. பலமுறை சோதனை செய்தாலும், இதே மாதிரியான முடிவுகள் வருகின்றனவா என சரிபார்த்தல் அவசியம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இம்மாதிரியான மருந்துகளின் விலையும் அதிகம். டோஸ்டார்லிமாப் சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் வரை செலவாகலாம். எதிர்காலத்தில் இந்தியா போன்ற நாடுகள் ஜெனரிக் முறையில் இந்த மருந்துகளை உருவாக்கும்போது விலை குறையக்கூடும்.

‘புற்றுநோயை மருந்துகளால் குணப்படுத்த முடியும்’ என்ற நம்பிக்கை வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது இந்த மருந்து. இது இன்னும் பல புதிய வழிகளை உருவாக்கக்கூடும்.