
தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
நம் நாட்டில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும், குமரி முதல் இமயம் வரை அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பவை, இரண்டு மூலிகைகள்தாம். அவை துளசி மற்றும் வில்வம். வைணவ மரபில் துளசியும், சைவ மரபில் வில்வமும் புனித தாவரங்களாகப் போற்றப்படுகின்றன. மேலும் இவை கடவுள் வழிபாட்டிலும் இடம் பெற்றுள்ளது. இந்த இதழில் துளசி குறித்துப் பார்ப்போம்.
பெருமாள் கோயில்களில் துளசிதீர்த்தம் வழங்கப்படுவது, அன்றாட வாழ்வில் அதன் அவசியத்தை உணர்த்துவதற்காகத்தான். துளசியின் தாவரவியல் பெயர் ‘ஓசிமம் சேன்க்டம்’ (Ocimum Sanctum). சேன்க்டம் (Sanctum) என்றால், புனிதமான இடம் என்று அர்த்தம். தாவரவியல் பெயர் சூட்டிய மேலை நாட்டினர்கூட, இதன் புனிதத்தன்மையை உணர்ந்து பெயர் வைத்திருக்கிறார்கள்.

துளசியில் 22 வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், நற்றுளசி (நல்துளசி அல்லது ராம துளசி), கருந்துளசி (கிருஷ்ண துளசி), முள் துளசி, கல்துளசி, நாய்த்துளசி (கஞ்சாங்கோரை), பேய்த்துளசி (கங்கா துளசி), பெருந்துளசி (அகத்தியர் துளசி), எலுமிச்சைத் துளசி, திருநீற்றுப் பச்சிலை (திருநீற்றுப்பத்திரி), மாசிப்பச்சை (மாசிப்பத்திரி), வங்காளப் பச்சை போன்றவைதான் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
30 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டுக்குள் நுழைந்த பூனை மீசைத் துளசி மற்றும் இனிப்புத்துளசி (சர்க்கரைத் துளசி, சீனித்துளசி, ஸ்டீவியா) ஆகியவையும் துளசி வகைகளில் இணைக்கப்பட்டுவிட்டன.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் துளசியை ‘துழாய்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். திருத்துழாய், அத்துழாய் என்ற அடைமொழிகளும் வழங்கப்பட்டுள்ளன. துளசி என்பது நல்துளசியையும், கருந்துளசியையும் மட்டுமே குறிக்கும். மற்றவையெல்லாம், துளசியுடைய மணத்தையும், துளசியை ஒத்த பூங்கொத்தையும் கொண்டிருப்பதால் ‘துளசி’ என்ற அடைமொழியைப் பெற்றுள்ளது.
துளசி இலையிலிருந்து சாறெடுக்கும் விதம்
மற்ற மூலிகைகளை இடித்துப் பிழிந்து சாறெடுக்கும் முறைகள் உள்ளன. துளசியில் மட்டும் அவித்துச் சாறெடுக்கும் முறை கூறப்பட்டுள்ளது. இட்லிக் கொப்பரையில் தண்ணீர் ஊற்றி ஒரு துணியால் வேடுகட்டி அதன்மீது துளசி இலைகளைப் பரப்பி, பிட்டு அவிப்பதுபோல அவிக்கலாம். இட்லித் தட்டுகளின்மீது துளசி இலைகளைப் பரப்பியும் அவிக்கலாம். இலைகள் வெந்தப்பிறகு எடுத்துப் பிழிந்து சாறெடுக்கலாம். உரல், உலக்கை எல்லாம் பார்க்காத இத்தலைமுறையினர், மிக்ஸியில் போட்டு அரைத்துப் பிழிந்தும் சாறெடுக்கலாம்.

1 தேக்கரண்டி (3 முதல் 5 மில்லி) துளசிச்சாற்றுடன், 1 தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்துக் குழந்தைகளுக்குப் புகட்டினால் சளி, இருமல் குணமாகும். 3 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத்தான் கொடுக்க வேண்டும். கோரோசனை மாத்திரையை இதில் குழைத்துக் கொடுத்தால் சிறந்த பலன் கிடைக்கும். சிலருக்குப் பால் குடித்தால் சளி கட்டிவிடும் என்று பயந்து பால் குடிப்பதையே தவிர்ப்பர். இத்தகையோர் பசும்பாலில் சில துளசி இலைகளைப் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் குணமாகும். குரல்வளமும் மேம்படும்.

ஒரு கைப்பிடி அளவு துளசி இலை, 1 தேக்கரண்டி வேப்பம் பட்டைப்பொடி, 3-5 எண்ணிக்கையில் மிளகு ஆகியவற்றை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக்கொண்டு, வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் 4-5 வேளைகள் குடித்துவர, ஜலதோசக் காய்ச்சல் குணமாகும். துளசி இலையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால்… மூக்கில் நீர் வடிதல், தலைவலி போன்றவை குணமாகும்.
நிழலில் உலர்த்திய துளசி இலை 100 கிராம், மிளகு 40 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டு மிக்சியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை 500 மில்லிகிராம் முதல் 1 கிராம் வரை (1 பாசிப்பயறு அளவு) மாத்திரைகளாக உருட்டி, நிழலில் நன்கு உலர்த்திப் பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் நோயாளிகள், இதில் 2-3 மாத்திரைகளை வாயில் போட்டுச் சுவைத்து வந்தால், காய்ச்சலின் தீவிரம் படிப்படியாகக் குறையும்.

ஒரு கைப்பிடி அளவு கருந்துளசி இலை, 25 செம்பரத்தம்பூக்கள் (செம்பருத்தி), 35 கிராம் மருதம் பட்டைப்பொடி ஆகியவற்றை 1 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கால் லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். இதய நோயாளிகள், இக்கஷாயத்தை வேளைக்கு 100 மில்லி என்ற அளவில்… காலை, மாலை என இரண்டு வேளை குடித்துவந்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். இதய நோய்களுக்கு நாள்பட்ட ஆங்கில மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களும், அம்மருந்துகளோடு இதையும் சேர்த்துக் குடித்துவந்தால், 3-6 மாதங்களில் நல்ல குணம் கிடைக்கும். இதய நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் இம்மருந்து நன்கு வேலை செய்வதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
உங்கள் வீடுகளில் கருந்துளசியையும் செம்பருத்தியையும் வளர்த்துவந்தால் மட்டுமே இக்குடிநீர் மருந்தை நீங்கள் தினந்தோறும் தயாரித்துப் பயன்படுத்த முடியும். மருதம் பட்டைப்பொடி, நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். நெஞ்சுவலியால் நோயாளி துடித்துக் கொண்டிருக்கும்போது இம்மருந்தைக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். இதைத் தயாரிக்கவே ஒரு மணிநேரம் ஆகும். அதனால், அவசர காலத்தில் தேவைப்படும் முதலுதவிகளைச் செய்துவிட்டு, அதன்பிறகு இதைக் குடிக்கத்தொடங்கலாம்.

“பெருந்து முடற்குவெப்பு வாராமெ லோட்டும் பிருந்தமைப் பயித்தியத்தைப் பேய்” - எனும் தேரன் சித்தர் வாக்குக்கிணங்க… துளசி, உடலின் வெப்பத்தைக் குறைப்பதோடு, பேய்போல் ஆடுகிற வெறிநோயையும் போக்கும். மிகவும் ஆரவாரமாக இருக்கிற மனநோய்க்குத் துளசி இலையைத் தீர்த்தமாகவோ, சாறாகவோ, பொடியாகவோ தொடர்ந்து கொடுத்துவர நல்ல மாற்றங்கள் கிடைக்கும். துளசி இலையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஆண்மை குறையும் என்று ஒரு தவறான நம்பிக்கை மக்களிடம் நிலவி வருகிறது. இதற்கு எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை.
நாய்த்துளசி
மழைபெய்தவுடன் அனைத்து இடங்களிலும் கூட்டங்கூட்டமாக நாய்த்துளசி முளைக்கத் தொடங்கும். மிக மிக வேகமாக வளர்ந்து விதைகளைத் தரையில் போட்டுவிட்டு மிகவேகமாக வாடிவிடும். இது ஒருபருவத் தாவரமாகும். ஆனால், தண்ணீர்ப் பாயும் தென்னந்தோப்புகளில் இத்தாவரம் பல்லாண்டுகள் நீடித்து நிற்கும். துளசியைவிட அதிக காரமும் மணமும் கொண்டது. ஆனால், லேசான ஒரு குமட்டல் மணம் இருக்கும். வட மாவட்டங்களில் இதை ‘கஞ்சாங்கோரை’ என அழைக்கிறார்கள்.

“கண்டத மிண்டத துன்னுக்கிட்டு கஞ்சாங் கோரய கசக்கி ஊத்து”- என்ற ஒரு சொல்வழக்கு வட மாவட்டங்களில் உண்டு. சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளுக்கு நாய்த்துளசி இலைகளைக் கசக்கிச் சாறெடுத்துக் குடித்தால் குணமாகும். சித்த மருத்துவத்தில் சிறுகுழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்களுக்கு மருந்தாகக் கூறப்படும் ‘பாலசஞ்சீவி’ மாத்திரையை நாய்த்துளசி இலைச்சாறு, தேன் ஆகியவற்றுடன் கலந்து கொடுக்கக் காய்ச்சல் மற்றும் பேதி ஆகியவை விரைவில் குணமாகும்.
கல்துளசி மரணத்தைத் தரக்கூடிய கொடிய சிறுநீரகச் செயலிழப்புக்கு அருமருந்து. திருநீற்றுப் பச்சிலையின் விதைகள் ‘சப்ஜா விதை’ என்று விற்பனை செய்யப்படுகின்றன. தண்ணீரில் இட்டால், கொழகொழப்பாக ‘ஜெல்லி’ போல ஆகிவிடும்.
பேய்த்துளசி அல்லது கங்கா துளசி
சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் புதராக மண்டிக்கிடக்கும் தாவரம் இது. துளசி இனங்களிலே இதுதான் அதிக உயரம் வளரக்கூடியது. 5-6 அடி உயரம்கூட வளரும். எந்தக் கோடைக்கும் இது காய்வதில்லை. துளசியைப் போன்றே மணமும் பூங்கொத்தும் கொண்டிருக்கும். இதுவொரு சிறந்த கொசுவிரட்டித் தாவரம். இதைச் சேகரித்துக் குறுகத் தறித்து, நிழலில் காயப்போட்டுப் பொடி செய்து, பசுஞ்சாணத்துடன் கலந்து உருண்டைகளாகச் செய்து உலர்த்தி… சாம்பிராணிபோல நெருப்பிலிட்டுப் புகையைப் பரவச்செய்தால் கொசுக்கள் பறந்தோடிவிடும். பேய்த்துளசியை உள்மருந்தாகப் பயன்படுத்துவதில்லை.
பெருந்துளசி அல்லது அகத்தியர் துளசி
பொதிகை மலைக்காடுகள் மற்றும் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் காணப்படும் ஒரு அரிய வகைத்தாவரம் இது. பழங்குடியின மக்கள், ரத்த வாந்தியைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.
கல் துளசி
பூனைமீசை எனப்படும் ‘ஜாவா டீ’யைப் போன்றே காணப்படும். இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தரையோடு தரையாக ஒட்டி வளர்வது. இதைச் சிலர், நிலத்துளசி என்பர். இன்னொன்று, மேல்நோக்கி வளர்வது. குமரி மாவட்ட மூத்த மருத்துவர் சின்னாப்பிள்ளை அவர்கள் இதை ‘குழி மீட்டான் பூண்டு’ என்று அழைக்கிறார். அதாவது, மரணத்தைத் தரக்கூடிய கொடிய நோயான, விஷப்பாண்டு நோய்க்கு இது அருமருந்து. சிறுநீரகச் செயலிழப்பைத்தான், விஷப்பாண்டு என நம் முன்னோர் கருதினர். இந்நோயில்தான் ரத்தம் குறைந்துகொண்டே வந்து விரைவில் நோயாளிகள் மரணம் அடைவர். அறிவியலின் மேம்பட்ட சிகிச்சை முறையான ‘டயாலிசிஸ்’ முறையால் 1-2 ஆண்டுகள் உயிர்வாழ முடிகிறது.
‘‘துளசி என்பது நல்துளசியையும், கருந்துளசியையும் மட்டுமே குறிக்கும். மற்றவையெல்லாம், துளசியுடைய மணத்தையும், துளசியை ஒத்த பூங்கொத்தையும் கொண்டிருப்பதால் ‘துளசி’ என்ற அடைமொழியைப் பெற்றுள்ளது.’’
கல்துளசியைச் சேகரித்து நிழலில் காய வைத்து ஒன்றிரண்டாகப் பொடி செய்து, 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராக வற்ற வைத்து வடிகட்டிப் ஃப்ளாஸ்க்கில் வைத்துக்கொண்டு வேளைக்கு 50-60 மில்லி என்ற அளவில் 4-5 வேளை குடித்து வரவும். வெளிநாட்டு இனமான பூனை மீசை நாற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், அதையொத்த நமது உள்ளூர்த் தாவரமான கல்துளசி, அதே அளவு மருத்துவக்குணம் உடையதாக இருப்பதால் இதைப் பயன்படுத்தி மருத்துவச் செலவைக் குறைக்கலாம். மழைக் காலங்களில் மலையடிவாரக் காடுகளில் ஏராளமாகக் கிடைக்கும்.
எலுமிச்சைத் துளசி
துளசி மணத்துடன் எலுமிச்சை மணமும் சேர்ந்து காணப்படும் ஓர் அரியவகைத் தாவரம். துளசி போன்றே பூங்கொத்து உடையது. 3-5 அடிவரை வளரும். இதை வளர்ப்பதும் பெருக்குவதும் மிக எளிது. இதன் தண்டுகளை வெட்டி நட்டு வைத்தாலே துளிர்த்துவிடும். இதன் இலைகளை அரைத்துக் கட்டிகள் மற்றும் வீக்கங்கள் மீது வைத்துக் கட்டினால், கெட்ட நீரை உறிஞ்சிக் குணப்படுத்திவிடும். இதைக் குடிநீராகச் செய்து குடிக்க நீர்ப்பையில் உள்ள கற்கள் உடைந்து வெளிவரும். அதைச்சார்ந்த நரம்புகளின் வீக்கத்தைக் கரைக்கும். இக்குறிப்பை, வைத்திய ரத்தினம் க.ச.முருகேச முதலியார் அவர்கள் ‘குணபாடம்’ நூலில் எழுதியுள்ளார். இது ஆய்வுக்குரியது.
திருநீற்றுப்பத்திரி
துளசிக் குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ‘பச்சிலை’ என்று பொதுப்பெயரில் அழைக்கப்படுகிறது. துளசி போன்றே மணமும் விறுவிறுப்பும் நிறைந்தது. இதன் இலைகளை அரைத்துக் கட்டிகள்மீது பூசினால் விரைவில் பழுத்து உடையும். இலைகளை முகர்ந்தால்… தலைவலி, இதயப் படபடப்பு ஆகியன நீங்கும்.
துளசியைப் போன்றே சளிநோய்க்கும் இதய நோய்க்கும் இதைக் கொடுக்கலாம். திருநீற்றில் மணம் சேர்ப்பதற்காக இதை முற்காலங்களில் பயன்படுத்தி உள்ளனர். இதன் இலைகளைச் சுவைப்பதால் வாய் வேக்காடு நீங்கும். இதன் இலைகளை அரைத்துத் தலைக்குப் பற்று போட்டுக் குளித்துவந்தால், தீராத பேன் தொல்லை தீரும். இவ்வாறு 3-5 நாள்கள் செய்துவர மிகவும் நலன் பயக்கும்.
இதன் விதைகள் ‘சப்ஜா விதை’ என்று விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைத் தண்ணீரில் இட்டால், கொழகொழப்பாக ‘ஜெல்லி’போல ஆகிவிடும்.
இந்த விதைகளில் 5 கிராம் எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுக்கடுப்பு, வாய்ப்புண், மூலக்கடுப்பு முதலியன குணமாகும். இந்த விதைகள் ஆண்மைப்பெருக்கி லேகியங்களில் அதிகம் சேர்க்கப்படுகின்றன.
மாசிப்பச்சை
குழந்தை மருத்துவத்தில் அதிகம் பயன்பட்டதால், இச்செடி முன்னர் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்பட்டது. இதன் இலைகளை அரைத்துப் பிழிந்து சாறெடுத்து 1 தேக்கரண்டி அளவுடன் 1 தேக்கரண்டி சுத்தமான தேன் கலந்து கொடுத்துவந்தால்… குழந்தைகளின் மாந்தம், சளிக்கட்டு, காய்ச்சல் முதலிய அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.
- அடுத்த இதழில் வில்வம் பற்றிப் பார்ப்போம்.