மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா!

விளாம்பழம்
பிரீமியம் ஸ்டோரி
News
விளாம்பழம்

மருத்துவம் - 3 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

னது பள்ளிப்பருவத்தில் ஒரு தமிழ் வகுப்பின்போது…

‘நேர் நேர் - தேமா

நிரை நேர் - புளிமா

நேர் நிரை - கூவிளம்

நிரை நிரை - கருவிளம்’

என்று தமிழாசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, நான் அவரிடம் ‘ஐயா, கூவிளம் என்றால் என்ன’ என்று கேட்டேன். அவர் ‘கூவிளம் என்பது ஒரு தாவரம். இடையில பேசாதே அதிக பிரசங்கி, வெளியில போயி நில்லு’ என்று எனக்குத் தண்டனை கொடுத்துவிட்டார். அன்றிலிருந்தே கூவிளம் குறித்த எனது தேடல் தொடங்கியது.

மகா வில்வம்
மகா வில்வம்

அந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்து, செடிகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் சென்றிருந்தேன். அங்கு ஒருவர், வில்வ மரக்கன்றுகளைக் காட்டி ‘கூவிளம்’ என்று சொன்னார். அப்போதுதான், ‘கூவிளம் என்றால் என்ன’ என்று எனக்குத் தெரிந்தது. அன்று நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. பழைய சங்கத் தமிழ்ச் சொற்களும், பழக்க வழக்கங்களும் இன்றைய கேரளத்தில்தான் மிகவும் உயிர்ப்புடன் உள்ளன என்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.

கூவிளம் எனப்படும் வில்வம், சிவாலயங்களில் காணக் கிடைக்கும். சிவபூஜையில் வில்வத்துக்குச் சிறப்பிடம் உண்டு. இமயம் முதல் குமரி வரை மிகவும் குளிர்ச்சியான இடங்களைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் இது வளரும். மலைக்காடுகளிலும் பாறைக்குன்றுகளிலும் இயல்பாகக் காணப்படுகிற ஒரு குறுமரம் இது. வில்வ மரத்தின் வேர், கட்டை, பட்டை, இலை, பூ, காய், கனி, விதை என அனைத்திலுமே மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளன. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு முள்மர இனம் இது.

காசி வில்வம்
காசி வில்வம்

முற்காலத்தில் கட்டடம் கட்டும்போதும் கிணற்றுக்கு உட்சுவர் கட்டும்போதும், சுண்ணாம்புடன் வில்வக்குழம்பையும் சேர்த்து உபயோகித்து வந்தனர். இதனால், சுவர்கள் வலுவாக விளங்கின.

பொதுவாக, வில்வமரத்தின் இலைகள், மூன்று மூன்று இலைகள் கொண்ட கூட்டிலைகளாகக் காணப்படும். ‘மகாவில்வம்’ என்று அனைவராலும் சொல்லப்படும் ஓர் இனத்தில் 9, 12 மற்றும் 13 இலைகள் இருக்கும். ஆனால், மகாவில்வம் என்பது, இது இந்த இனத்துக்கு வழக்கு பெயர்தானே ஒழிய, உண்மையில் மகாவில்வம் என்பது வேறு. சைவ மடாலயங்களில் பெரிய இலைகளைக் கொண்ட வில்வமரங்கள் உள்ளன. இவற்றை, ‘காசி வில்வம்’ என அழைக்கிறார்கள். இந்த இனத்தின் விதைகள் காசி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிவாலயங்களிலிருந்து கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. உண்மையில் இவைதான், மகாவில்வ மரங்கள்.

 வில்வம்
வில்வம்
முற்காலத்தில் கட்டடம் கட்டும்போது சுண்ணாம்புடன் வில்வக்குழம்பையும் சேர்த்து உபயோகித்து வந்தனர். சித்த மருந்துக் கடைகளில் வில்வாதி லேகியம், பில்வாதி லேகியம் கிடைக்கும்.

நம் மாநிலத்தில் பரவலாகக் காணப்படும் வில்வ மரங்களின், காய் மற்றும் கனிகள் சிறியதாக இருக்கும். ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் 500 கிராம் எடை கொண்டிருக்கும். காசி வில்வத்தின் கனிகள் மிகவும் பெரிய அளவில் இருக்கும். ஒவ்வொன்றும் 1,500 கிராம் முதல் 1,800 கிராம் வரை எடை இருக்கும். வில்வ மரத்தை முழுமையாக வெட்டினால் மட்டுமே வேர்ப்பட்டை கிடைக்கும். வேர்ப்பட்டைக்குப் பதிலாக மரப்பட்டையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

வில்வ இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, அதைத் தேனில் கலந்து உண்ணும்போது உடலுக்குச் சூட்டைக் கொடுத்துக் குளிர்ச்சியினால் ஏற்படும் கப நோய்களைக் குணப்படுத்தும். அதையே, பசுவெண்ணெயில் கலந்து உண்ணும்போது உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, சூட்டினால் ஏற்படும் குன்ம நோயைக் குணமாக்கும். இவ்வாறு இரு வேறுபட்ட குணங்கள் ஒரே மூலிகையில் இருப்பதைக் கண்டறிந்த நம் முன்னோரின் சித்த மருத்துவ அறிவு வியக்கத்தக்கது.

மகா வில்வம்
மகா வில்வம்

ஒரு தேக்கரண்டி வில்வ இலைப்பொடியைத் தேனில் கலந்து, காலை, மாலை இரண்டு வேளையும் உணவுக்குப் பிறகு உண்டு வந்தால், நாட்பட்ட ஆஸ்துமா நோய் குணமாகும். தீராத இருமல், தலைவலி, தலைபாரம், ‘சீதபேதி’ (அமீபியாசிஸ்) முதலிய நோய்கள் குணமாகும்.

வாந்தி, மயக்கம், எரிகுன்மம் (வயிற்றுப்புண்), வயிற்றெரிச்சல், வெள்ளைப்படுதல் மற்றும் மேக நோய்கள் ஆகியவை கண்டால்… ஒரு தேக்கரண்டி வில்வ இலைப்பொடியைப் பசுவெண்ணெயில் குழைத்து உண்டு வர வேண்டும். கண் சிவப்பு, கண் எரிச்சல், கண்வலி போன்றவற்றைக் குணப்படுத்த, தளிர் வில்வ இலைகளை லேசாக வதக்கி, ஒரு துணியில் முடிந்து ஒற்றடம் கொடுக்க வேண்டும்.

விளாம்பழம்
விளாம்பழம்

பிஞ்சு, காய் ஆகியவற்றின் சதைப் பகுதிகளைப் பிரித்தெடுத்து விதை மற்றும் நரம்புகளை நீக்கி, நிழலில் நன்றாக உலர வைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை லேசாகப் புளித்த தயிருடன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும். அதிகாலை நேரத்தில் சிவாலயங்களுக்குச் சென்றால், வில்வமரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் பிஞ்சு, காய்கள் மற்றும் முதிர்ந்த கனிகளைச் சேகரிக்க முடியும்.

வில்வம் பழங்களிலிருந்து சதைப் பகுதிகளைப் பிரித்தெடுத்து, ஒரு வாயகன்ற சட்டியில் போட்டு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு, மூன்று மணிநேரம் துடுப்பு மூலம் துழாவிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு கனத்த துணியில் வடிகட்டி நீரைச் சேகரிக்க வேண்டும். இதுதான் சத்து நீர். பிறகு துணிமேல் சேகரமான திப்பியை ஒரு பாத்திரத்தில் இட்டு மூழ்குமளவுக்குத் தண்ணீர் சேர்த்து மீண்டும் துடுப்பு மூலம் துழாவி, வடிகட்டி நீரைச் சேகரிக்க வேண்டும்.

விளா மரம்
விளா மரம்
‘‘வில்வ இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, அதைத் தேனில் கலந்து உண்ணும்போது உடலுக்குச் சூட்டைக் கொடுத்துக் குளிர்ச்சியினால் ஏற்படும் கப நோய்களைக் குணப்படுத்தும்.’’

திப்பியில் முழுவதுமாக வில்வம்பழத்தின் சுவை போகுமளவுக்கு 3-4 முறை நீரிலிட்டுத் துழாவி வடிகட்டி நீரைச் சேகரிக்க வேண்டும். மொத்தமாகக் கிடைத்த சத்து நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும். அடிப்பிடிக்காத வகையில் கிளறிக் கொண்டே இருந்தால், மெழுகு பதத்துக்குச் சுண்டிவிடும். இதை ஓர் அகலமான தட்டில் ஊற்றி ஆற வைத்தால் ஜெல்லிபோல மாறிவிடும். இதை வயிற்றுக்கடுப்பு, குடற்புண், சீதபேதி போன்றவற்றுக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். 2 கிராம் முதல் 5 கிராம் வரை காலை, இரவு என இரண்டு வேளை உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்.சித்த மருந்துக் கடைகளில் வில்வாதி லேகியம், பில்வாதி லேகியம், மகாவில்வாதி லேகியம் ஆகிய பெயர்களில் வில்வ வேர்ப் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட லேகியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறைவான ஜீரண சக்தி உடையவர்கள், கிராணிக்கழிச்சல் நோயாளிகள், வாயு மற்றும் வயிற்றுப்புண் நோயாளிகள் போன்றவர்கள்… இந்த லேகியத்தைக் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி (5 கிராம்) வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமடைவர். இந்த லேகியத்தைச் சாப்பிடும்போது, குடல் மற்றும் இரைப்பை வலுவாகி அவற்றுக்கான சுரப்புகள் சீராகி, மேற்கண்ட நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் கிடைக்கிறது.

கிளை பரப்பாமல் முட்களுடன் வளரும் தன்மை உடையதால், பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் மதில் சுவரை ஒட்டி வில்வமரத்தை நட்டு வளர்க்கலாம்.

விளா

விளாம்பழம் என்றவுடனேயே, ‘விட்டதடி ஆசை, விளாம்பழத்து ஓட்டோட’ என்ற பழமொழி நினைவுக்கு வரும். விளாம்பழம் முற்ற முற்ற பழச்சதை ஓட்டைவிட்டுத் தனியாகப் பிரியத் தொடங்கிவிடும். ஆனால், ஓட்டைவிட்டு வெளியே போய் விடாது. இதேபோல, வயது முதிர முதிர உறவுகளோடு ஒட்டியும் சற்று விலகியும் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

 மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

கோயில் மரம் என்று கருதி வில்வ மரங்களைப் பலரும் நடுகிறார்கள். ஆனால், விளா மரத்தைப் பெரும்பாலும் யாரும் நட்டு வளர்ப்ப தில்லை. விளா, இளங்கன்றாக இருக்கும்போது, புழுத்தாக்குதல் ஏற்பட்டு அழிந்து போக வாய்ப்புண்டு. முதல் 4 ஆண்டுகளைத் தாக்குப்பிடித்து வளர்ந்துவிட்டால் அதன்பிறகு விளா மரங்கள் செழித்து வளர்ந்துவிடும். விளா இலைகள் நல்ல நறுமணம் கொண்டிருக்கும். இந்த இலைகளை அரைத்து குழந்தைகளுக்குப் பூசிக் குளிப்பாட்டுவார்கள். அதனால், தோல் நோய்கள் வராது. இந்த இலைக் கொழுந்தின் சாற்றை உடல்மேல் தடவிவர, கோடைக்கால வியர்க்குரு, கொப்புளங்கள் ஆகியவை நீங்கும்.

‘வெளியிலை யாக்கமுதல் வேண்டிவைர்க்கெப் போதும்

வெள்ளியிலை யாக்கவரு மேல்’

- தேரன் யமக வெண்பா

‘மன்னன் முதல்மூவர் மாறுபாடில்லாம

லுன்ன நினைத்துத் துதவுகளாற் - பன்னிச்

செபித்த வுடலாண்மை சேர்வித் திடலாற்

கபித்தம விழ்தக்கற்பகம்’ – தேரவெண்பா

இந்த இருபாடல்களிலும் ‘வெள்ளில்’, ‘கபித்தம்’ எனக் குறிக்கப்படும் வார்த்தைகள் விளாவின் வேறு பெயர்கள். விளா மரத்தின் வேர், இலை, காய், கனி முதலியவற்றைக் கற்ப முறையாக உண்டு வந்தால் வளி (வாதம்) முதலிய முக்குற்றங்களையும் தன்னிலைப் படுத்தி உடலாண்மையைத் தரும். நோய் அணுகாது. நீண்டகாலம் வாழலாம். கற்பமுறை என்பது நமது சித்த மருத்துவத்தினால் நோய் வராமல் இருக்கச் சொல்லப்பட்ட வழிமுறையாகும். மற்றபடி, வில்வமரத்தின் இலை, பூ, காய், கனி, பழச்சாறு முதலியவற்றிற்குக் கூறப்பட்ட மருத்துவக் குணங்கள் அனைத்தும் விளா மரத்துக்கும் பொருந்தும்.

விளா மரத்தின் பிசின் மிகவும் சிறப்பான மருத்துவக்குணம் உடையது. விளா மரப் பிசினைத் தூய்மைப்படுத்திப் பொடியாகச் செய்து சாப்பிட்டு வந்தால், பொங்குகின்ற நீரிழிவு நோய் (மிக அதிகமான சர்க்கரை அளவு உள்ள நிலை) குணமாகும். ஒரு துண்டுப் பிசினை வாயில் போட்டு உமிழ்நீரை மட்டும் விழுங்கிக் கொண்டிருந்தால், வறட்டு இருமல், நெஞ்செரிச்சல் தீரும். பிசின் பொடியைச் சுத்தமான தேன் அல்லது எருமைத் தயிரில் கலந்து கொடுத்துவரச் சீதபேதி குணமாகும்.

தரைக்காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் விளா மரம் காணப்படும். வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை ஒட்டியுள்ள மலைக்காடுகளில் விளா மரங்கள் இயற்கையாகவே அதிக அளவில் காணப்படுகின்றன. வில்வம், விளா ஆகிய இரண்டின் விதைகளையும் பழத்தைவிட்டு எடுத்தவுடனேயே விதைத்து விட வேண்டும். நாள்பட நாள்பட முளைப்புத்திறன் குறைந்துவிடும்.

- அடுத்த இதழில்

நொச்சி குறித்துப் பார்ப்போம்.

வில்வம் பழ சர்பத்

த்துப்பொருள்கள் நிறைந்த வில்வம் பழச் சாற்றுடன் சர்க்கரை கலந்து சர்பத் போலச் சாப்பிடலாம். வட இந்தியாவில் வில்வம் பழ முரபா தயாரித்துச் சாப்பிடுகிறார்கள் வட இந்தியர்கள். வில்வம் பழச் சதை மூலம் சர்பத் தயாரிக்கும் வழிமுறையை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பழச்சதையின் எடையில் பாதியளவில் நீர் எடுத்து 70 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலைக்குச் சூடுபடுத்தி, அதில் வில்வம் பழச்சதையை இட்டுக் கிளற வேண்டும். இந்த வெப்பநிலையில் பழச்சதை நன்கு கரைந்துவிடும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எவர்சில்வர் சல்லடையில் வடிகட்டினால், நார்ப்பொருள்கள் மற்றும் விதைகளும் சல்லடையில் தங்கிவிடும். நீரில் கரைந்த சதைப்பகுதி மட்டும் தனியாகக் கிடைக்கும். உடனடியாக இதைக் குளிரச்செய்ய வேண்டும். குளிர்ந்த பழச்சாற்றில் கனியின் நறுமணம் இருக்கும். இதில் சர்க்கரைப் பொருள் 30 சதவிகித அளவில் இருக்கும். இந்தச் சாற்றைக் கொண்டு சிரப், ஜாம், ஸ்குவாஷ், மிட்டாய் எனத் தயாரிக்கலாம்.

100 கிராம் வில்வம் பழச் சதையில் உள்ள சத்துகள்

நீர் - 61.50 கிராம்

புரதம் - 1.80 கிராம்

கொழுப்பு - 0.30 மில்லி கிராம்

மாவுப்பொருள் - 37.80 கிராம்

நார்ப்பொருள் - 2.90 கிராம்

கால்சியம் - 85 மில்லி கிராம்

பாஸ்பரஸ் - 50 மில்லி கிராம்

இரும்பு - 0.60 மில்லி கிராம்

தையாமின் - 0.13 மில்லி கிராம்

ரிபோ ஃபிளேவின் - 1.20 மில்லி கிராம்

நியாசின் - 1.10 மில்லி கிராம்

ஆக்சாலிக் அமிலம் - 18.70 மில்லி கிராம்

வைட்டமின் சி - 8 மில்லி கிராம்

கரோட்டீன் - 55 மைக்ரோ கிராம்

சக்தி - 137 கலோரி

கோ-கோ கோலாவுக்குச் சவால்விடும் வில்வம் பழம்!

நான் மூலிகைகள் மீதும் மரங்களின் மேலும் அதிக நாட்டமுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம், கடந்த 1992-ம் ஆண்டு முதல் நான் படித்து வரும் ‘வளம் தரும் மரங்கள’ என்னும் 5 தொகுதி நூல்களே ஆகும். தமிழகச்சூழலில் வளர்கிற அல்லது வளர்க்க வேண்டிய சுமார் 300 மரங்களைப் பற்றிய அரிய தகவல் களஞ்சியமாகும். 1988-ம் ஆண்டு முதல் வெளியிடத் தொடங்கி 1992-ம் ஆண்டு 5-வது தொகுதியை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளனர். இந்நூலாசிரியர்கள் பி.எஸ்.மணி மற்றும் என்.கமலா நாகராஜன் ஆகிய இருவரும் மிகவும் அரும்பாடுபட்டு மரங்களைப் பற்றி அனைத்துத் தகவல்களையும் திரட்டி ஒருங்கே தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு இயற்கை மற்றும் மர ஆர்வலர்களும் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும்.

“இந்தியத் தொழிலதிபர்கள் வில்வம் பழ சர்பத், ஜாம், ஜெல்லி.. எனப்பல தொழில்கள் துவங்கிவிட்டால், நிச்சயமாக வறண்டப் பகுதியிலுள்ள விவசாயிகளின் வீடுகளிலும் திருமகள் குடிபுகுந்துவிடுவாள். அருமையான வில்வம் பழப் பானங்கள் தயாரிக்கத் தொடங்கிவிட்டால், கோ-கோ கோலாக்களும், பெப்சி கோலாக்களும் குடியேறிவிடாது. அந்நியச் செலவாணியும் விரயமாகாது. நமக்கென ஒரு தேசிய பானமாக வில்வப்பழப் பானத்தைப் பரவச் செய்யலாமே” என அந்நூலில் குறிப்பிட்டுள்ளனர். 31 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை. தமிழக விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் அவர்களது கனவை நனவாக்க முயற்சி மேற்கொண்டு வில்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

மூலிகைப் பெயர் தாவரவியல் பெயர்

தேமா Mangifera indica

புளிமா Spondias mangifera

கூவிளம் (வில்வம்) Aegle marmalor

கருவிளம் Limonia acidissima, Feronia limonia, Feronia elephantum

மகா வில்வம் Naringi crenulata