மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி!

செம்பரத்தை
பிரீமியம் ஸ்டோரி
News
செம்பரத்தை

மருத்துவம் - 5 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்

ழைக்காலங்களில் வேகமாக வளரும் ஒரு கொடி இனம் வேலிப்பருத்தி. வேலிகளில் படர்ந்து வளர்வதாலும், பருத்தியைப்போல வெடித்துச் சிதறும் காய்களை உடையதாலும் ‘வேலிப்பருத்தி’ என அழைக்கப்படுகிறது. இதற்கு உத்தாமணி என்ற பெயரும் உண்டு. இதன் இலைகள், இதய வடிவில் காணப்படும். இலை, கிளையை ஒடித்தால் பால் வரும். வேலிப்பருத்தி இலையின் அளவைப் பொறுத்து, அந்த ஆண்டுக்குரிய மழைப்பொழிவை முன்னோர்கள் கணக்கிட்டுள்ளனர்.

வேலிப்பருத்தி…
வேலிப்பருத்தி…

சென்ற இதழில், குழந்தைகளின் மாந்த நோய் போக்கும் மூலிகைகளாகக் குறிப்பிட்ட நொச்சி, பொடுதலை, மஞ்சணத்தியின் வரிசையில் கடைசியாக இடம்பெறும் மூலிகை வேலிப்பருத்தி.

வேலிப்பருத்தி மிளகுப் பாவனை

அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளுக்கு இது சிறந்த மருந்து. வேலிப்பருத்தி இலைகளை நன்கு கழுவி, சாறெடுத்துக்கொள்ள வேண்டும். அதில், மூழ்குமளவிற்கு மிளகைப் போட்டு, மொட்டை மாடியில் காய வைக்க வேண்டும். சாறு சுண்டிய பிறகு மீண்டும் வேலிப்பருத்திச் சாறுவிட்டு வெயிலில் வைக்க வேண்டும். இவ்வாறு ஏழுமுறை செய்த பிறகு, நன்கு பொடி செய்து ஒரு மெல்லிய துணியில் சலித்துக் காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும். இதில் 130 மில்லி கிராம் முதல் 250 மில்லி கிராம் வரை எடுத்துத் தேனில் கலந்து கொடுத்து வந்தால் 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் குளிர்ந்து போதல், வலிப்பு போன்றவை குணமாகும்.

நல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி!

சில நேரங்களில் என்ன கடித்தது என்று தெரியாமல் உடல் முழுவதும் ஊறல், அரிப்பு ஏற்படும். இதைக் ‘காணாக்கடி’ என்கிறது சித்த மருத்துவம். அந்த நிலையில் வேலிப்பருத்தி இலைச்சாற்றை உடம்பில் பூசி வைத்தால் ஊறல் குறையும். குழந்தைகளுக்கு ஏற்படும் செரியாக் கழிச்சலுக்கு ‘தொக்கம் எடுத்தல்’ பழக்கம் இன்றைக்கும் தென் மாவட்டங்களில் உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தொக்கம் எடுப்பவர் இருக்கிறார். அவர் செரியாக் கழிச்சல் உள்ள குழந்தையின் வாயில் ஒரு குழாயை வைத்து ஊதி, குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு கரித்துண்டு, ஒரு எலும்புத்துண்டு அல்லது ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொடுப்பார். பின்னர், ஒருபொடியைப் பொட்டலம் போட்டுக் கொடுத்து, குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொல்வார். அந்தப் பொடிதான் கழிச்சல் நோயைக் குணப்படுத்துகிறது.

மைக்கேல் செயராசு
மைக்கேல் செயராசு

வேலிப்பருத்திச் சாற்றில் உப்பு, வசம்பு சுட்டக்கரி (வசம்பை நெருப்பில் வாற்றிய கரி) சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்ச, நீரெல்லாம் வற்றி உப்பு உறையும் பக்குவத்தில் அடுப்பைவிட்டு இறக்க வேண்டும். இதை ‘உத்தாமணிக் கருக்கு’ என்று சொல்வோம். இதை 50 மில்லி கிராம் முதல் 200 மில்லி கிராம் வரை கொடுத்துவந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துவிதமான கழிச்சல்களும் குணமாகும். நோய் குணமாவது இந்த மருந்தினால்தான். ஆனால், வயிற்றுக்குள்ளிருந்து ஏதாவது ஒரு பொருளை ஊதி வெளியே எடுத்தால்தான் கழிச்சல் நிற்கும் என மக்கள் நம்புகிறார்கள்.

‘‘மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்டால், உள் வர்மம் ஏற்படாமல் இருக்க உடனே வேலிப்பருத்தியிலைச் சாறு 30 மில்லி முதல் 50 மில்லி வரை குடிக்கக் கொடுக்கலாம்.’’

நெஞ்சில் சளி அதிகமாகி மூச்சுவிடத் திணறும் குழந்தைகளுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறு 5 மில்லி முதல் 10 மில்லி வரை குடிக்கக் கொடுத்துவந்தால், சிறிது நேரத்தில் அவ்வளவு சளியும் வாந்தியாக வெளியேறிவிடும். ஒருவேளை வாந்திவரத் தாமதமானால், குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டுக் குமட்டும்படி செய்தால் வாந்தியாகிச் சளி வெளியேறும். இதே வாந்தி மருத்துவத்தைப் பெரியவர்களுக்கும் செய்யலாம். சாற்றின் அளவை 15 மில்லி முதல் 30 மில்லி வரை கொடுக்க வேண்டும். வேலிப்பருத்தி இலைகளை லேசாக வெதும்பி ஒரு துணியில் பொட்டலமாக முடிந்து, நனைத்து ஒற்றடம் கொடுத்து வந்தால் மூட்டுவலி, இடுப்புவலி முதலான வாத வலிகளும், சுளுக்கு முதலிய வர்மப் பிடிப்புகளும் குணமாகும்.

சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவான வர்ம மருத்துவத்தில் வேலிப்பருத்தி இலை அதிகமாகப் பயன்படுகிறது. பனையேறும் தொழிலாளர்கள், பனைமரத்திலிருந்து தவறி விழுந்து விட்டால், உடனே தூக்கிக்கொண்டு வர்ம ஆசானிடம் போவார்கள். அவர் உள் வர்மம் ஏற்படாமல் இருக்க, உடனே வேலிப்பருத்தியிலைச் சாறு 30 மில்லி முதல் 50 மில்லி வரை குடிக்கக் கொடுப்பார். உள் வர்மம் என்பது மிகவும் முக்கியமானது. எலும்பு முறிவு, காயங்கள் மருத்துவம் பார்த்தால் குணமாகிவிடும். ஆனால், உள் வர்மப்பிடி ஏற்பட்டால், நாளுக்கு நாள் குறுகிக்கொண்டே வந்து மரணம் ஏற்படும். வேலிப்பருத்தியிலைச் சாற்றை அதிகமாகச் சேர்த்து காயத்திருமேனி முதலான பல வர்ம தைலங்கள் காய்ச்சப்படுகின்றன. எனவே, வேலிப்பருத்திக்கு வர்ம மருத்துவத்தில் ‘வெற்றிப் பச்சிலை’ என்ற அடையாளப்பெயரும் உண்டு.

செம்பரத்தை
செம்பரத்தை

வயிற்று நோயைக் குணமாக்கும் ஆமையோட்டுப் பற்பம், இதய நோய்களைக் குணமாக்கும் சிருங்கி (மான்கொம்பு) பற்பம் ஆகியவை வேலிப்பருத்தி இலைச்சாற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. வேலிப்பருத்தி வேர்ப்பொடியை 3 கிராம் முதல் 5 கிராம் வரை வெந்நீரில் கலந்துகொடுத்தால், நன்கு வாந்தியாகி விஷக்கடி, கரப்பான், வாய்வு மற்றும் வாதப்பிடிப்புகள் குணமாகும். இவ்வளவு சிறப்புமிக்க வேலிப்பருத்திக் கொடி, கோடைக்காலத்தில் முழுமையாகக் காய்ந்துவிடுகிறது. எனவே, இந்தச் செடியை நம் வீட்டிலோ, தோட்டத்திலோ, தண்ணீர்ப் பாயக்கூடிய இடத்திலோ வைத்து வளர்க்கலாம்.

செம்பரத்தை

இன்று நடைமுறையில் செம்பருத்தி என்று அழைக்கப்படுவது, மருத்துவ நூல்களில் ‘செம்பரத்தை’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பருத்தி இனங்களில் சிவப்பு நிறப் பூப்பூக்கும் ஒரு தாவரமே செம்பருத்தி ஆகும். செம்பரத்தையை அழகுக்காகவும், அந்தப் பூக்களைக் கொண்டு பூஜை செய்வதற்காகவும் வீடுகளில் வளர்த்து வருகிறோம். இதன் பூ மற்றும் இலைகள், மருத்துவப் பயன்மிக்கவை. பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் பூக்கள் காணப்பட்டாலும் சிவப்பு நிறத்தில் காணப்படும் நாட்டுச் செம்பரத்தை வகையையே மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும்.

செம்பரத்தம்பூ மணப்பாகு

50 எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, சாறெடுத்து வடிகட்டி, ஒரு பீங்கான் பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அதனுடன் 250 செம்பரத்தம்பூ இதழ்களைப் போட்டு 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு மத்தினால் நன்கு கடைந்து, அதனுடன் சமஅளவு தேன் அல்லது நாட்டு வெல்லம் கலந்துகொள்ள வேண்டும். பிறகு அதை அடுப்பிலேற்றி சூடுபடுத்தி, மணப்பாகு பக்குவத்தில் அடுப்பைவிட்டு இறக்கி வைத்துக்கொள்ளவும். அதிகாலையில் ஒரு தேக்கரண்டியும், இரவு உணவுக்குப் பிறகு ஒரு தேக்கரண்டியும் சாப்பிட்டு வருவது இதய நோயுள்ளவர்களுக்கு நல்லது. மேலும், வெள்ளை, வெட்டை நீரெரிச்சல், பெரும்பாடு என்னும் அதிக ரத்தப்போக்கு முதலியன அதிசயிக்கத்தக்க வகையில் குணமாகும். ரத்த விருத்தியையும், ரத்த சுத்தியையும் உண்டாக்கும்.

செம்பருத்தி
செம்பருத்தி

சர்க்கரைநோயுள்ளவர்கள் இந்த மணப்பாகைச் சாப்பிடக் கூடாது. ‘சன்மார்க்கி பானம்’ என்ற பெயரில் பழைய சித்த மருத்துவ நூல்களில் இந்தத் தயாரிப்பு முறை இடம்பெற்றுள்ளது. செம்பரத்தம் பூவின் சாற்றுக்குச் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, தலையில் தடவி வர, முடி கறுத்துச் செழுமையாக வளரும்.

செம்பருத்தி

செம்பருத்திக்கென்று சிறப்பான மருத்துவக் குணங்கள் இல்லை. இதன் பிஞ்சுக்காய் அப்படியே சுவைத்துச் சாப்பிட வாய்ப்புண், வாய் வேக்காடு தீரும்.

‘வேர் பாரு தழைபாரு மிஞ்சினக்கால்

பற்ப செந்தூரம் மெல்ல மெல்ல பாரு’

எனும் சித்த மருத்துவக் கூற்றுக்கிணங்க, மூலிகைகளால் குணமாகாத, பல கொடிய நோய்கள் உலோக, பாடாணங்களால் தீரும். அந்தவகையில் தங்கம் சேர்த்துச் செய்யப் படுகின்ற ‘பூரணச் சந்திரோயதம்’, ‘பஞ்ச பாடாணச் செந்தூரம்’ ஆகிய பெருமருந்து செய்முறைகளில் செம்பருத்திப்பூச்சாறு பயன்படுகிறது.

கத்திரி, கண்டங்கத்திரி, முள்ளுக்கத்திரி ஆகியவை குறித்து அடுத்த இதழில்…

தாவரவியல் பெயர்கள்

வேலிப்பருத்தி (உத்தாமணி)- Pergularia Daemia

செம்பருத்தி- Gossypium Arboreum

செம்பரத்தை- Hibiscus Rosa Sinensis