கொரோனா தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தை வாங்க பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். இது கொரோனாவின் வீரியத்தைக் குறைக்கும் என்பதால் இதை ‘அதிசய மருந்து’ என்றே மக்கள் நம்பினர்.
ஆனால் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில் ரெம்டெசிவிர் இதய செயல்பாட்டைக் குறைக்கும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுவாசக் குழாய் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளின் குணமடையும் நேரத்தை, ரெம்டெசிவிர் குறைத்தாலும் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாக சர்வதேச ஆய்வில் கண்டறிப்பட்டது. அவற்றில் ஒன்று குறைந்த இதயத் துடிப்பு பாதிப்பு. தற்போது இதையே ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
ரெம்டெசிவிர் ஒரு வைரஸ் தடுப்பு முகவராகச் செயல்படுகிறது. இருப்பினும், இது மனித மைட்டோகாண்ட்ரியல் ஆர்என்ஏ பாலிமரேஸைக் கடந்து, வினைபுரிந்து, மைட்டோகாண்ட்ரியல் செயலிழப்பை ஏற்படுத்துகிறது. மைட்டோகாண்ட்ரியல் செயலிழப்பு காரணமாக பாதகமான இதய நிகழ்வுகள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த மருந்து ஏற்படுத்தக்கூடிய மற்ற பக்க விளைவுகளாக குறைந்த ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயதுடிப்பு மற்றும் மாரடைப்பு, ரத்த சோகை, சருமத்தில் அரிப்பு, சிறுநீரக நச்சுத்தன்மை ஆகியவை அடங்கும்.