கட்டுரைகள்
Published:Updated:

வலியில்லாத அறுவை சிகிச்சை... மருத்துவரின் கடமை!

வலியில்லாத அறுவை சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
வலியில்லாத அறுவை சிகிச்சை

பொது மயக்கமாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்வதாக இருந்தாலும் சரி, அதனை மயக்கவியல் மருத்துவர்தான் மேற்கொள்ள வேண்டும்.

நவீன மருத்துவத்தில் மயக்கவியல் (Anesthesia) என்கிற துறையின் பங்கு மிக முக்கியமானது. மயக்கவியல் மருத்துவரின்றி எந்த அறுவை சிகிச்சையையும் நிகழ்த்த முடியாது. மயக்கவியலிலேயே பொது மயக்கம் (general anesthesia), குறிப்பிட்ட பகுதி மரத்துப்போதல் (regional anesthesia) என இரு பிரிவுகள் இருக்கின்றன. பொது மயக்கத்தில் நோயாளியை முழுவதும் மயங்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்வர். அதுவே சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மற்றும் காயங்களுக்குத் தையல் போடுவது, எலும்பு முறிவுக்குக் கட்டுப்போடுவது ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி மரத்துப்போக வைப்பர். மயக்கவியல் துறைக்கான நெறிமுறைகள் என்னென்ன... சென்னையைச் சேர்ந்த மயக்கவியல் மருத்துவர் மதன்குமாரிடம் கேட்டோம்.

“வலியற்ற சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதே மயக்கவியலின் நோக்கம். பொது மயக்கமாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்வதாக இருந்தாலும் சரி, அதனை மயக்கவியல் மருத்துவர்தான் மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்கையில், அறுவை சிகிச்சை மருத்துவர்களே மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். அப்படி மயக்க மருந்து செலுத்தும்போது மருத்துவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நோயாளியின் உடல் அதற்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பது தெரியாது. மரத்துப்போகிற ஊசி போடுவதன் மூலமே அரிதாக சிலருக்கு நெஞ்சுவலி வரலாம், அல்லது மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தச் சூழலைச் சமாளிக்க மயக்கவியல் மருத்துவர் உடன் இருத்தல் அவசியமாகிறது.

வலியில்லாத அறுவை சிகிச்சை... மருத்துவரின் கடமை!

மயக்கவியல் என்பது அதிக சவால்கள் உள்ள ஒரு துறைதான். ஏனெனில் சிகிச்சை பெறும் ஒருவரை மயங்க வைத்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் எழுப்புவது என்பது மிகப்பெரிய பணி. அதனால்தான் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு முன், அவர்களின் உடல் ஒத்துழைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் நோயாளியின் உடலில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அவற்றை முன்கூட்டியே அவர்களிடம் தெரியப்படுத்தி, மயக்க மருந்து செலுத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை விளக்க வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் மயக்க மருந்து கொடுப்பது பாதுகாப்பாக இருக்கும். அப்படி இல்லாமல் மருத்துவ சிகிச்சைக்கு வருபவருக்கு உடனடியாக மயக்க மருந்து கொடுக்க முடியாது.

ஒருவேளை அவர்கள் உணவு உட்கொண்டிருந்தால், அவர்களுக்கு வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம். அதனால், ரத்தப் பரிசோதனை, இதயம், நுரையீரல் மற்றும் நோயாளியால் எந்த அளவுக்கு வாய் திறக்க முடியும் என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும். அதிலுள்ள சிக்கல்களையும் ஆராய்ந்து, மிகுந்த கவனத்துடன் மயக்க மருந்து கொடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் சிறப்பு நிபுணருடன் மயக்கவியல் மருத்துவரும் இணையும்போதே அறுவை சிகிச்சை பாதுகாப்பானதாக மாறுகிறது.”

வலியில்லாத அறுவை சிகிச்சை... மருத்துவரின் கடமை!

பெரிய அறுவை சிகிச்சைக்கு முன்...

பெரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் முன், நோயாளி உடனடியாக மயக்கவியல் மருத்துவரிடம் அனுப்பப்படுவார். அங்கு, அவரது உடலை முழுமையாகப் பரிசோதனை செய்வர். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது குறைக்கப்படும். இவையெல்லாம், முன்கூட்டியே திட்டமிட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுவே அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர்களுக்கு, கட்டாயமாக மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், அதில் உள்ள பிரச்னைகளை எடுத்துக்கூறி, அதன்பிறகே மயக்க மருந்து அளிக்கப்படுகிறது.

மயக்க மருந்தால் பாதிப்புகள் வருமா?

மயக்க மருந்தினால் நுரையீரல் மற்றும் இதயத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிப்பது அல்லது குறைவது, ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது அல்லது குறைவது உள்ளிட்ட சிக்கல்கள் எழலாம்.

அறுவை சிகிச்சை முடியும்வரை.... அறுவை சிகிச்சையின்

போது முழுவதும் உடன் இருந்து, அது முடிந்த பிறகு நோயாளியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை மயக்கவியல் மருத்துவர் கண்காணிக்க வேண்டும். அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகும் வரை உடன் இருக்க வேண்டும்.

வலியில்லாத அறுவை சிகிச்சை... மருத்துவரின் கடமை!

மரத்துப்போகச்செய்யும் ஊசி பாதுகாப்பானதா...?

குறிப்பிட்ட பகுதியில் மயக்க மருந்து செலுத்துவதால் அரிதாக இதய வீக்கம், மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படலாம். மயக்க மருந்தை எப்படிக் கையாள வேண்டும் என்பது தெரிந்திருந்தால் இவற்றைத் தவிர்க்கலாம். உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் வலியில்லாத சிகிச்சை மேற்கொள்வதற்கு உரிமை உண்டு. சிகிச்சை பெற வருபவர், மருத்துவரிடம் வலி இல்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தால் அதனை மருத்துவர்கள் ஏற்று, மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிப்பது கடமை. தற்போது உள்ள நவீன மருத்துவத்தில் சுகப்பிரசவமே வலி இல்லாமல் செய்யப்படுகிறது. அதனால், எந்த ஒரு சிகிச்சையும் நோயாளிக்கு வலியின்றி வழங்கப்பட வேண்டும். அதற்காகவே மயக்கவியல் துறை இயங்குகிறது.