Published:Updated:

ஆகஸ்ட்-15 உரைக்கான விளம்பரமா `கோவாக்ஸின்?' #LongRead

கோவாக்ஸின்: அவசர அவசரமாக தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நினைப்பது அறிவியலுக்குப் புறம்பானது, மனித குலத்துக்கு எதிரானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வல்லரசு நாடுகள் தொடங்கி வளரும் நாடுகள் வரை கோவிட்-19க்கான தடுப்பூசியைக் கண்டறிவதில்தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் மட்டும் 14 தடுப்பூசி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் நான்கு தடுப்பூசிகளின் ஆய்வுகள் இன்னும் சில மாதங்களில் மனித சோதனைகள் (க்ளினிக்கல் ட்ரையல்) கட்டத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, புனேயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

அந்த ஆய்வு தற்போது மூன்றாம்கட்ட க்ளினிக்கல் ட்ரையலை எட்டியுள்ளது. ஆய்வு நிறைவடைவதற்கு முன்னரே தடுப்பூசி தயாரிக்கும் பணிகளையும் தொடங்கிவிட்டது அந்த நிறுவனம். காரணம், ஆய்வு வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் தாமதமில்லாமல், பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பூசி விநியோகத்தைத் தொடங்க முடியும் என்பதால் அவ்வாறு செயல்படுகிறது.

vaccine
vaccine

ஹைதரபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 'கோவாக்ஸின் (COVAXIN)' என்ற தடுப்பூசியை புனேவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. முதற்கட்ட ஆராய்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், க்ளினிக்கல் ட்ரையல் நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கோவாக்ஸின் தடுப்பூசி மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப்பட உள்ளது.

சர்ச்சையான கடிதம்

இந்நிலையில், 'ஆகஸ்ட் 15-ம் தேதியன்று தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் க்ளினிக்கல் ட்ரையல் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும். அதில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் இந்த ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளித்து அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். க்ளினிக்கல் ட்ரையலில் ஈடுபடுத்தப்படும் நபர்களின் பதிவை ஜூலை 7-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பார்கவா ஜூலை 2-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார். அலுவலக ரீதியாக அனுப்பப்பட்ட இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் பரவிவிட்டது.

கொரோனா தடுப்பூசி ஆய்வுகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடத்த வேண்டும்.
சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

தடுப்பூசி கண்டறிவதில் இத்தனை அவசரம் காட்டுவது ஏன் என்ற கண்டனக் குரல்கள் எழுந்ததையடுத்து, 'க்ளினிக்கல் ட்ரையல் முடிவுகள் மட்டுமே சுதந்திர தினத்தன்று வெளியாகும். இரண்டு படிநிலை ஆய்வு முடிவுகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்குக் கூடுதல் நாள்கள் ஆகும். பரிசோதனைகள் வெற்றியடைந்தால் 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்' என்று ஐ.சி.எம்.ஆர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இது தொடர்பாகப் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், "கோவிட்-19 நோய்க்கு விரைவில் தடுப்பூசி கண்டறிய வேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால் மருத்துவ நெறிமுறைகளுக்கு உட்பட்டு அதைக் கண்டறிய வேண்டும் என்பதும் முக்கியம்.

கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சியில் க்ளினிக்கல் ட்ரையலின் மூன்றாம் நிலை மிகவும் முக்கியமானது. அதில் 20,000 முதல் 30,000 பேரை ஈடுபடுத்த வேண்டும். வேகமாக இந்த ட்ரையலைச் செய்தால்கூட அது நிறைவடைய ஓரிரு ஆண்டுகள் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

38 நாள்களில் மூன்று கட்ட பரிசோதனை சாத்தியமா?

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், "கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில் நோய் அரும்பும் காலம் இரண்டு முதல் 14 நாள்கள். சிலருக்கு 28 நாள்கள்வரை கூட ஆகலாம். தடுப்பூசியை க்ளினிக்கல் ட்ரையலுக்காக ஒருவருக்குச் செலுத்தி 28 நாள்களுக்குப் பிறகு அவரை வைரஸ் தொற்றுக்கு உட்படுத்தி, தொற்று உருவாகிறதா என்று கண்டறிய வேண்டும். அதன் பிறகு மீண்டும் 28 நாள்கள் காத்திருக்க வேண்டும்.

ஜூலை 7-ம் தேதி ஆய்வுக்கு உட்படுத்தப்படுவோரின் பதிவு முடியும்பட்சத்தில் வெறும் 38 நாள்களுக்குள் மூன்று கட்டப் பரிசோதனைகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

Dr.G.R.Ravindranath
Dr.G.R.Ravindranath

அவசர அவசரமாகத் தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நினைப்பது அறிவியலுக்குப் புறம்பானது, மனித குலத்துக்கு எதிரானது. இந்த விஷயத்தில் ஐ.சி.எம்.ஆர் அறிவியல்பூர்வமாகச் செயல்பட வேண்டும். கோவாக்ஸின் தடுப்பூசி க்ளினிக்கல் ட்ரையலுக்குத் தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

எனவே, தடுப்பூசி ஆய்வுக்கு தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்தாமல், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை போன்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

சுதந்திர தின உரைக்கான விளம்பரம்?

'ஆகஸ்ட் 15-ம் தேதி முடிவுகள் வெளியிட வேண்டும் என்ற முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. பிரதமர் உரையில் தடுப்பூசி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதற்காக ஆய்வில் அவசரம் காட்டப்படுகிறது' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இது பற்றி நம்மிடம் பேசிய மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், "முதல் க்ளினிக்கல் ட்ரையல் நிறைவடைவதற்கே ஆறு மாதங்களுக்கு மேலாகும். முதல் ட்ரையல் 100-க்கும் குறைவானவர்களுக்குச் செய்யப்படும். ஆரோக்கியமானவர்களுக்கு இந்தத் தடுப்பூசி கொடுத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான ஆன்டிபாடி உடலில் உருவாகிறதா என்றும், அந்த ஆன்டிபாடியை செல்களின் நினைவில் நிறுத்தப்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும்.

Independence day speech
Independence day speech

இது தவிர, தடுப்பூசி செலுத்தியதால் வேறு பிரச்னைகள் உடலில் ஏற்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும். அதனால் தடுப்பூசி வழங்கிய பிறகு 14, 28, 104, 194 நாள்களில் அவர்களைக் கண்காணிப்பார்கள். முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால்தான் இரண்டாம் நிலை க்ளினிக்கல் ட்ரையல் நடத்த முடியும். அதில் சுமார் 1,000 பேரை ஈடுபடுத்துவார்கள். அவர்களில் 500 பேருக்குத் தடுப்பூசி கொடுப்பார்கள், 500 பேருக்கு கொடுக்க மாட்டார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுகிறது என்று பார்ப்பார்கள்.

15 மாதங்கள் ஆய்வு

ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 1,000 பேரும் லாக்டௌன் காரணமாக வீட்டிலேயே இருந்துவிட்டார்கள், வைரஸ் வெளிப்பாட்டுக்கு ஆளாகவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் யாருக்குமே நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றால் ஆய்வை நடத்த முடியாது. அதனால் இரண்டாம்நிலை ஆய்வைப் பொறுத்தவரை எப்போது முடியும் என்று வரையறுக்க முடியாது என்பதால் தோராயமாக ஒன்பது மாதங்கள் ஆய்வு செய்வார்கள். அப்படியென்றால் இரண்டு நிலை ஆய்வுகள் முடிய சுமார் 15 மாதங்கள் ஆகும். அப்படியிருக்கும்போது வெறும் 38 நாள்களில் முடிவை எப்படி வெளியிட முடியும்?

Research
Research

இரண்டு ஆய்வையும் ஒன்றாக நடத்தத் திட்டம்?

க்ளினிக்கல் ட்ரையலின் இரண்டு நிலைகளையும் ஒரே நேரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசி கண்டறிவதன் முதல் கொள்கை என்பது 'Do no harm' என்பதுதான். அதனால், மக்களுக்குத் தடுப்பூசி உதவி செய்யாவிட்டாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பு என்ற பெயரில் உபத்திரவம் செய்யக் கூடாது. குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் மத்தியில் நடத்தப்படும் முதல் நிலை ஆய்வே நிறைவடையாமல், அதிக எண்ணிக்கை கொண்டவர்களின் மத்தியில் ஆய்வு நடத்துவது மிகவும் ஆபத்தானது. இது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது" என்றார் அவர்.

உண்மை நிலை என்ன?

இந்தியாவில் நடைபெறும் தடுப்பூசி ஆய்வுகள் குறித்த உண்மை நிலை என்னவென்று மத்திய அரசின் விக்யான் பிரசார் நிறுவனத்தில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.

"ஹைதரபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக், அகமதாபாத்தைச் சேர்ந்த ஸைடஸ் கடிலா ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் மனித சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

Senior scientist Venkateswaran
Senior scientist Venkateswaran

இரண்டு வகையாக தடுப்பூசி ஆய்வு நடைபெறும். கொரோனா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்து, உயிரிழக்க (inactivate) வைப்பார்கள். Formaldehyde என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி வைரஸைச் செயலிழக்க வைப்பார்கள். அந்த ரசாயனம் உயிரினத்தை அழித்துவிடும். ஆனால் வைரஸின் பாகங்களை அப்படியே வைத்திருக்கும். செயலிழந்த அந்த வைரஸை உடலுக்குள் செலுத்தும்போது அதற்கு எதிரான ஆன்டிபாடி உருவாகும்.

கொரோனா வைரஸின் மரபணுவில் (Genome), முட்கள் போன்ற புரதம் ஓர் அங்கமாக இருக்கும். அதை மட்டும் வெட்டி எடுத்து, வேறு மரபணுவுடன் சேர்த்து வட்டவடிவமாக மாற்றிவிடுவார்கள். அந்த மரபணுவை உடலுக்குள் அனுப்பும்போது மனித செல்களுக்குள் முட்கள் போன்ற புரதம் உருவாகும். உடல் அதற்கு எதிரான ஆன்டிபாடியை உருவாக்கும்.

ஒருமுறை ஆன்டிபாடி உடலில் உருவாகிவிட்டால், அது உடலின் செல்களில் குறிப்பிட்ட காலத்துக்கு நினைவாகப் பதிவாகிவிடும். கொரோனா வைரஸ் தாக்கும்போது உடல் ஆன்டிபாடியை உருவாக்கி நோய்த் தொற்றாமல் பாதுகாக்கும்.

vaccine research
vaccine research
COVAXIN: இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி... ஆகஸ்ட் 15 -ல் ஆய்வு முடிவுகள்?

இந்த இரண்டு வகையான தடுப்பூசிகள் ஆய்வுகள்தான் நடைபெற்று வருகின்றன. இரண்டுமே க்ளினிக்கல் ட்ரையலுக்குச் செல்கின்றன. இரண்டு ஆய்வுகளின் பரிசோதனைகளும் நிறைவடைந்து ஒப்புதல் கிடைக்க 15 - 18 மாதங்கள் எடுக்கும். அதற்குப் பிறகு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால் உடனடியாக கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

இந்திய மக்கள்தொகையில் 10 சதவிகிதத்துக்குத் தயாரிக்க வேண்டும் என்றாலும் குறைந்தது 12 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும். இரண்டு வகையான ஆய்வுகளுமே சிறந்தவைதான். சாதகமான முடிவுகளை எட்டும்பட்சத்தில் நோயின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு