Published:Updated:

ஆந்த்ராக்ஸ் நோய் கிருமியில் இருந்து வலி நிவாரணியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்... எப்படிச் சாத்தியம்?

வலி நிவாரணி
News
வலி நிவாரணி

ஆந்த்ராக்ஸ் என்பது கால்நடைகளிடம் பரவலாகக் காணப்படும் ‌ஒரு நோய். அவ்வப்போது மனிதர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நம் உடலில் ஏற்படும்‌ வலியைக் குறைப்பதற்கான வலி நிவாரணிகளை உருவாக்குவதில் புதிய வழியைத் தற்போது‌ அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‌ஒரு‌ நுண்ணுயிரியின் துணையுடன் இதைச் செய்துள்ளனர். 'ஆந்த்ராக்ஸ்' என்னும்‌‌ நோயை உருவாக்கும் நுண்ணுயிரியில் இருந்து எடுக்கப்படும் ஒரு டாக்சினை நம் உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கப் பயன்படுத்த முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.

உடல்வலி
உடல்வலி

ஆந்த்ராக்ஸ் என்பது கால்நடைகளிடம் பரவலாகக் காணப்படும் ‌ஒரு நோய். அவ்வப்போது மனிதர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோயானது நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துவது, தோலில் புண்களை உருவாக்குவது எனப் பல வகையான‌ பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இந்த நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் 'பேஸிலஸ் ஆந்த்ராசிஸ்' (Bacillus Anthracis). இந்த பாக்டீரியாவின் பின்னணியில் ஒரு பெரிய வரலாற்றுச் சம்பவமே உள்ளது. ஆந்த்ராக்ஸ் நோயை தன்னுடைய‌ எதிரி நாடுகளின் கால்நடைகளிடம் பரப்புவதற்காக ‌முதலாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனி, இந்த நுண்ணுயிரியை ஒரு உயிரி ஆயுதமாக (Bio weapon) பயன்படுத்தியதற்கான சாட்சியங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றன. அந்த அளவிற்கு‌ இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரியாக இருந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆனால், இந்த நுண்ணுயிரியில் கூட‌ எதிர்பாராத ஒரு பலன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிரி உற்பத்தி செய்யும் 'ஆந்த்ராக்ஸ் எடிமா டாக்ஸின்' (Anthrax edema toxin) விலங்குகளின் உடம்பில் ஏற்படும் பல்வேறு வகையான வலிகளைக் குறைக்கும் ஆற்றல் மிக்கதாம்.

நம் உடலில் வலி ஏற்படும்போது அந்த வலியை நாம் உணர்வதற்கு முக்கிய காரணம் நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள நியூரான் (Neuron) எனப்படும் நரம்பு செல்கள்தான். நம்முடைய உடம்பில் ஏற்படும் வலியை உணர்வதற்கென்றே பிரத்யேக நியூரான்கள் நம் நரம்பு மண்டலத்தில் இருக்கும். இந்த வலியை உணரும் நியூரான்களில் அந்த்ராக்ஸ் நுண்ணுயிரிலிருந்து எடுக்கப்பட்ட டாக்சினை செலுத்தும் போது அது இந்த நியூரானின் சிக்னலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நியூரானின் வலி உணரும் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டு, நமக்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது எனக் கூறியிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஆந்த்ராக்ஸ்
ஆந்த்ராக்ஸ்

இந்த முறையைப் பயன்படுத்தி நம் உடலில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் வலிகளுக்கும் நிவாரணம் கொடுக்க முடியுமாம். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான ஐசக் சியு (Isaac Chiu) இது குறித்துக் கூறுகையில், "இப்படி பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படும் டாக்சின் உதவியுடன், வலியை உணர வைக்கும் நியூரானின் செயல்பாடுகளில் இடையூறு செய்வதால் நம்மால் வலியைக் குறைக்க முடியும். இது வலி நிவாரணிகளை உருவாக்குவதில் ஒரு புதிய அணுகுமுறை" என்கிறார்.

தற்போது வரை பெரும்பாலான இடங்களில் வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுவது ஓபியாய்ட் என்னும்‌ மருந்துதான். இந்த ஓபியாய்டை நாம் எடுத்துக் கொண்டால் அது மூளையில் உள்ள சில செல்களைத் தூண்டி நமக்கு வலியை மறக்கச் செய்யச் செயற்கையான இன்பத்தை உருவாக்கும். எனவே நமக்கு வலி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், இந்த ஓபியாய்டைப் பயன்படுத்துவதில் பலவித பிரச்னைகளும் இருக்கின்றன. இதனை அதிகமாகப் பயன்படுத்துவது நம்மை அந்த மருந்தின் பயன்பாட்டிற்கு அடிமை ஆக்கி விடும். இதனை அதிகமாகப் பயன்படுத்தும் போது பக்கவிளைவுகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு ஆராய்ச்சியாளரான நிகோல் யாங் (Nicole yang) கூறுகையில், "ஓபியாய்ட் அல்லாத பிற‌ வலி நிவாரணிகளை நம்முடைய‌ பயன்பாட்டிற்கு‌க் கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படிக் கண்டுபிடிக்கும் மருந்து நம்மை ஓபியாய்ட் போல அடிமை ஆக்கிவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். இப்போது இந்த ஆராய்ச்சி மூலம் பாக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் இந்த டாக்சினை உபயோகித்து வலியைக் குறைப்பது ஆய்வக அளவில் வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறது" என்கிறார்.

Bacillus Anthracis
Bacillus Anthracis

தற்போது இந்த முறையில் முதல் படியையே எட்டியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த முறையில் இன்னும்‌ பல கட்ட‌ ஆராய்ச்சி மேற்கொள்ள‌ வேண்டுமாம். தற்போது செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சியானது, மனித உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ள நியூரான்களிலேயே செய்து பார்க்கப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள எலியின் உடலிலும் இந்த டாக்சின்கள் வலியைக் குறைப்பது‌ நிரூபணம் ஆகியுள்ளது. இனிதான் இந்த டாக்சினை மனித உடலில் செலுத்தி அதன் செயல்திறனை ஆராய்ந்து‌ வலி நிவாரணிகள் உருவாக்குவது‌ பற்றி ஆராய வேண்டுமாம். அதன் பிறகே நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இதனை உருவாக்க முடியும் எனக் கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.