Published:Updated:

"என் கிட்னியை எடுத்துக்க சாமி... புள்ளையக் காப்பாத்து!" - 2 கிட்னியும் பாதித்த மகனை மீட்கப் போராடும் ஏழைத்தாய்

இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி விக்கித்து நிற்கும் இளைஞர்!

சண்முகம் குழந்தை, மனைவியோடு...
சண்முகம் குழந்தை, மனைவியோடு... ( நா.ராஜமுருகன் )

"நான் சின்னவளா இருந்தப்பவே எங்க அப்பா போய்சேந்துட்டாரு. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வளந்தேன். திருமணமானப்போ நிறைய கனவுகள்... இனிமே கஷ்டமிருக்காது. நல்ல வாழ்க்கை கிடைச்சிடுச்சுன்னு சந்தோஷமா இருந்துச்சு. இவரும் என்னைக் கண்ணுக்குக் கண்ணாப் பாத்துக்கிட்டாரு. ஆனா, அந்த சந்தோஷத்தை பறிக்கப் பாக்குது சாமி... ரெண்டு சிறுநீரகமும் செயல் இழந்து போச்சுங்கிறாங்க. இப்போ நான் என்னண்ணே பண்ணுவேன்..."- மூன்று வயதேயான பெண் குழந்தையை மடியில்போட்டுக்கொண்டு என்னைப் பார்த்து வாய்விட்டுக் கதறியழுகிற சௌமியாவுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

சண்முகம்
சண்முகம்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். பெயின்டரான அவருக்கு, எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. ஆறு மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் குன்றியிருக்கிறது. பதற்றத்தோடு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு ஓடியிருக்கிறார் சௌமியா. சோதித்த மருத்துவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகிவிட்டதாக சொல்ல, நிலைகுலைந்து நிற்கிறது குடும்பம்.

தாய் லட்சுமி தனது சிறுநீரகங்களில் ஒன்றை சண்முகத்துக்கு தரத் தயாராக இருக்கிறார். ஆனாலும் 3 லட்சம் வரை செலவாகும் என்பதால், செய்வதறியாமல் தவிக்கிறார் சௌமியா.

சண்முகம்
சண்முகம்
நா.ராஜமுருகன்

கதறியழும் தன் மருமகளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிக்கொண்டே என்னிடம் பேசினார் சண்முகத்தின் தாய் லட்சுமி. "எந்த சாமிக்கும் எங்கமேல இரக்கமில்லை தம்பி. இல்லைனா, எங்க குடும்பத்துக்கு மட்டும் ஏன் அடுக்கடுக்கா சோதனை வரணும். பள்ளப்பட்டியில் ரோட்டுக்குக் கீழே பொதுஇடத்துலதான் குடியிருக்கோம். என் வீட்டுக்காரர், இவன் பொறந்த மூணு வருஷத்துலயே, எங்களைக் கைகழுவிட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டார். அதுக்குப்பிறகு, எங்களை ஏறெடுத்தும் பார்க்கல. தனி மனுஷியா நின்னு சண்முகத்தை வளர்க்க நான் பட்ட பாட்டைச் சொன்னா, நீங்க அழுதுருவீங்க.

இவனை நல்லா படிக்க வெச்சு ஆளாக்கி, எங்களைத் தவிக்கவிட்டுப்போன அந்த மனுசன் முகத்துல கரியைப் பூசணும்னு வைராக்கியமா இருந்தேன். நான் பட்டினியா கிடந்து, இவனுக்குச் சோறூட்டி வளர்த்தேன். ஆனா, பத்தாவது முடிச்சதும் நான் படுற கஷ்டத்தைப் பார்த்து 'நான் வேலைக்குப் போறேன்'னு பெயின்ட் அடிக்கிற வேலைக்குக் கெளம்பிட்டான். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்கல. நிறைய கடனாகிப்போச்சு. கடன் கொடுத்தவங்க அவமானமா பேசுறதைப் பார்த்துட்டு மனசு கேக்காம வேலைக்குப் போனான் புள்ள.

லட்சுமி (சண்முகம் தாய்)
லட்சுமி (சண்முகம் தாய்)
ஆனா, இதயமே வெடிக்குறாப்புல, இவனுக்கு ரெண்டு சிறுநீரகங்களும் ஆறுமாசத்துக்கு முன்னாடி பழுதாயிட்டு.
லட்சுமி (சண்முகம் தாய்)

வருமானம் குறைவா இருந்தாலும், கஷ்டமில்லாம நிம்மதியா இருந்தோம். ஒண்ணரை வருஷத்துக்கு முன்னாடி சொந்தக்காரப் பொண்ணு சௌமியாவை இவனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சேன். தனிமனுஷியா நின்னு பிள்ளையை கரைசேர்த்துட்டேனு சந்தோஷப்பட்டேன். நான் கும்புடுற எல்லா சாமிகளையும் வேண்டினேன். ஆனா ஆறுமாசத்துக்கு முன்னாடி இவனுக்கு ரெண்டு சிறுநீரகங்களும் பழுதாயியிருச்சு. இதயமே வெடிக்கிறமாதிரி இருந்தது. சென்னை, மதுரை, பாண்டிச்சேரினு அழைச்சிட்டுப் போய் மருத்துவமனைகள்ல காட்டினோம். ஆனா, சொல்லி வெச்ச மாதிரி எல்லா இடத்துலயும், 'உங்க மகனுக்கு ரெண்டு கிட்னிகளும் செயலிழந்து போச்சு. வேற யாராவது கிட்னி கொடுத்தாதான் அவன் உயிர்வாழமுடியும்'னு சொல்லிட்டாங்க.

Vikatan

கோடீஸ்வரர்களுக்கு வரவேண்டிய பிரச்னை, என் பையனுக்கு வந்திருக்கேனு ரொம்ப உடைஞ்சி போயிட்டேன். நான் வாழ்ந்து கெட்டவ; அவன் வாழவேண்டியவன். புருஷன் இருந்தும் இல்லாம நான் பட்ட கஷ்டத்தை என் மருமக சௌமியா படக்கூடாதுனு நெனச்சேன். அதனால், என்னோட ஒரு சிறுநீரகத்தை அவனுக்கு தரலாம்னு இருக்கேன். என்னோட கண்ணீர் அவனை குணப்படுத்தும்" என்று லட்சுமியும் கதறுகிறார்.

"இவர் என்னோட மாமா மகன். பதினெட்டு வயசுலயே இவருக்கு என்னைக் கட்டி வெச்சுட்டாங்க. எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அப்படியே கொண்டுவந்து கொடுத்திடுவாரு. என்னை கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கிட்டார். ராணிமாதிரி வாழ்ற வாழ்க்கை கிடைச்சுருக்கேனு சந்தோஷப்பட்டேன். ஆனா, என் மடியில நெருப்பை அள்ளி கொட்டுனமாதிரி இவருக்கு இப்படி ஒரு பிரச்னை வந்திருக்கு. இதனால, என் மகளுக்கும் அப்பா இல்லாமப் போயிருமோனு பயமாயிருக்குண்ணே. எங்க அத்தை தானமா தர்ற கிட்னியை இவருக்குப் பொருத்தணும்னா, எட்டு லட்சம்வரை செலவாகுமாம். மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலமா அஞ்சு லட்சம் வரை கிடைக்கும். மீதி மூணு லட்சத்துக்கு என்ன பண்றதுனு தெரியல. ஏற்கெனவே, இதுவரைக்கும் ஒருலட்சம் ரூபாய் வரை கடன் வாங்கிதான் இவருக்கு வைத்தியம் செய்றோம். வாழ்க்கையே இருண்டமாதிரி இருக்குண்ணே!" என்று கலங்குகிறார் சௌமியா.

சௌமியா குழந்தையோடு...
சௌமியா குழந்தையோடு...

"நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைச்சதில்லை சார். எனக்கு ஏன் இப்படி ஒரு பிரச்னை வந்துச்சுனு தெரியலை. அதிகமா தண்ணீர் குடிக்காம இருந்ததால இப்படி ஆயிருக்கலாம்னு டாக்டருங்க சொல்றாங்க. எனக்கு ஏதாச்சும் ஆனா, இந்தக் குடும்பம் என்னாகும்னு நினைக்குறப்ப மனசு வலிக்குது சார். என் அம்மா மட்டும் இல்லைன்னா, நான் இத்தனை வருஷம் வாழ்ந்திருக்க மாட்டேன். இப்போ இந்த மாதிரி ஒரு பிரச்னை இருக்கும்போதுகூட, அம்மாதான் அவங்களோட கிட்னியை எனக்கு தானம் கொடுக்க முன்வந்திருக்காங்க. எனக்கு இப்படி ஒரு பிரச்னையைக் கொடுத்த ஆண்டவன்தான், எங்களை தவிக்க விட்டுட்டுபோன மோசமான அப்பாவையும், இந்த மாதிரி ஒரு தங்கமான அம்மாவையும் கொடுத்திருக்கான். இவங்களுக்கு ஈரேழு பிறவிகள் எடுத்து, நான் நன்றிக்கடன் செய்யணும் சார்" என்று நெகிழ்ந்து பேசினார் சண்முகம்.