Published:Updated:

வௌவால்களின் இடம்பெயர்வு, பாதுகாப்பு விழிப்புணர்வு.. நிபா வைரஸின் தற்போதைய நிலை என்ன?

`நிபா கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதனால் ஏற்படும் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலைச் சமாளிக்க போதுமான அளவு வசதிகள் இல்லை’

`நிபா' என்ற சொல்லைத் தென்னிந்திய மக்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த 2018-ம் ஆண்டு, உயிரைப் பறிக்கக்கூடிய நிபா வைரஸ் தாக்கி கேரளாவில் 18 பேர் உயிரிழந்தனர். அதன் தாக்கம் தமிழ்நாடு, ஆந்திரா உட்படத் தென்னிந்திய மக்களிடமும் பரவியது. ஓராண்டுக்கு முன்பு பரவி அடங்கிய நிபா வைரஸ் இந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் பரவி வருகிறது என்ற செய்தி வெளியாகி மக்களை மேலும் அச்சுறுத்தியது. இந்நிலையில் நிபா வைரஸ கண்டுபிடித்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நிபா வைரஸ் சர்வதேச மாநாடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்திருக்கிறது.

நிபா வைரஸ்
நிபா வைரஸ்

நிபா வைரஸின் 20-ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாகவும் நிபா வைரஸால் ஏற்படும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பின் அச்சுறுத்தலை எதிர்த்துப் புதுமையான மற்றும் பயனுள்ள தீர்வுகளைப் பற்றி விவாதிக்கவும், முதல் நிபா வைரஸ் சர்வதேச மாநாடு டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை, டியூக்-NUS மருத்துவப் பள்ளி மற்றும் Coalition for Epidemic Preparedness Innovations (CEPI) அமைப்புகள் இணைந்து நடத்தின. சிங்கப்பூர் மற்றும் மலேசிய சுகாதாரத்துறை, உலக சுகாதார அமைப்பு (World Health Organisation - WHO), அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health- NIH), சிங்கப்பூர் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

Apple bitten by Bats
Apple bitten by Bats

இதில் நிபாவின் வரலாறு, அதனால் ஏற்பட்ட இழப்புகள், நிபாவை கண்டறிவதற்கான சமீபத்திய கண்டுபிடிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளின் முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிபாவின் வரலாறு:

1999-ம் ஆண்டு, முதன்முதலில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில்தான் நிபா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டது. 2001-ம் ஆண்டில், இந்த வைரஸ் வங்கதேசத்தில் கண்டறியப்பட்டது. முன்னுரிமை தேவைப்படுகிற எட்டு வகை தொற்றுநோய்களில் ஒன்றாக இந்த நிபாவை WHO அடையாளம் காட்டியது. இது ஒரு ஜூனோடிக் (zoonotic) வைரஸ். அதாவது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிற வைரஸ். குறிப்பாக, பழந்தின்னி வௌவால்கள் மற்றும் பன்றிகளால் பரவும்.

Treatment
Treatment

இதுவரை மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறப்பு விகிதம் 40 முதல் 90 சதவிகிதம் வரை பதிவாகியுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய CEPI-ன் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹாட்சட், "நிபா கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதனால் ஏற்படும் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலைச் சமாளிக்க போதுமான அளவு வசதிகள் இல்லை. இதை மாற்ற வேண்டும். அதற்காக நிபா வைரஸ் வல்லுநர்கள், தொழில் மற்றும் முக்கிய பொது சுகாதார பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவு பகிர்வை வலுப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வௌவால்களின் உமிழ்நீர், சிறுநீரால் வேகமாகப் பரவும் நிபா வைரஸ்!
வௌவால்களின் உமிழ்நீர், சிறுநீரால் வேகமாகப் பரவும் நிபா வைரஸ்!

தற்போது நிபாவின் தாக்கம் எங்கும் பதிவிடப்படவில்லை. என்றாலும், அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் 2018-ம் ஆண்டு கேரள நிபா நிவாரண குழுவில் பணியாற்றிய தொற்றுநோய் சிகிச்சைகளுக்கான சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

"2018-ம் ஆண்டைத் தொடர்ந்து இந்தியாவில் நிபாவின் தாக்கம் அதிகளவில் குறைந்துள்ளது. 2019-ல் ஒரேயொரு நிபா வழக்குதான் பதிவாகியுள்ளது. அதுவும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது எந்த நிபா வழக்கும் இந்தியாவில் இல்லை. அதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை. பெரும்பாலும் இந்த வைரஸின் தாக்கம் நவம்பர் முதல் ஜூன் மாதம்வரை இருக்கும். முதலில் இதற்காக யாரும் பீதியடைய வேண்டாம். இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பறவைகள் குறிப்பாக வௌவால்கள் கடித்த பழங்களைத் தொடவோ, உண்ணவோ கூடாது. வௌவால்களைத் தாக்குவது தொந்தரவு செய்வது போன்றவையும் கூடாது. வௌவால்களின் இடம்பெயர்வு காரணமாகத்தான் பெரும்பாலும் இந்த வைரஸ் பரவுகிறது" என்றவரிடம் இதற்கான சமீபத்திய மருத்துவக் கண்டுபிடிப்புகள் பற்றிக் கேட்டோம்.

Doctor Abdul Gafur
Doctor Abdul Gafur
Vikatan

"நிபாவுக்கென பிரத்யேகமாக மருந்துகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் சோதனை அடிப்படையானவை. இது மிகவும் அரிய நோய் என்பதனால் சோதனை மருந்துகள் மட்டுமே இருக்கின்றன" என்றார் அப்துல் கஃபூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு