தொடர்கள்
Published:Updated:

குழந்தைகளைக் கொல்லும் இருமல் மருந்துகள்!

குழந்தைகளைக் கொல்லும் இருமல் மருந்துகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகளைக் கொல்லும் இருமல் மருந்துகள்!

- குழந்தை நல மருத்துவர் மு.ஜெயராஜ்

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் உற்பத்தியாகும் மேரியான் பயோடெக் நிறுவனத்தின் Dok-1 Max இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது. அதில் எத்திலீன் க்ளைகால் (Ethylene Glycol) என்னும் உயிர்க்கொல்லி கலப்படமாக இருந்துள்ளதை உஸ்பெகிஸ்தான் மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. இந்திய இருமல் மருந்துகளில் உயிர்க்கொல்லிக் கலப்படங்கள், ஒன்றுமறியா குழந்தைகளைக் கொல்வது இது முதல் முறையல்ல. மூன்று மாதங்களுக்கு முன் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 70 குழந்தைகள், ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இருமல் மருந்துகளை உட்கொண்டதால் கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட காம்பியா நாடாளுமன்றக் குழு, தனது இறுதி அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்தது. அந்த இருமல் மருந்துகளில் எத்திலீன் க்ளைகால், டைஎத்திலீன் க்ளைகால் (Diethylene Glycol) போன்ற உயிர்க்கொல்லிக் கலப்படங்கள் இருந்ததை அது உறுதி செய்துள்ளது.

கலப்பட இந்திய மருந்துகளால் பிற நாட்டு அப்பாவிக் குழந்தைகள் இறந்திருப்பது, உலக அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இதேபோன்ற மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது பலரும் அறியாத உண்மை.

குழந்தைகளைக் கொல்லும் இருமல் மருந்துகள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் 12 அப்பாவி இந்தியக் குழந்தைகள் இறப்பதற்கு காரணமான ColdBest-PC என்னும் இருமல் மருந்தில் இருந்த டைஎத்திலீன் க்ளைகால் என்னும் உயிர்க்கொல்லி வெளியே தெரிவதற்கும், கலப்பட இருமல் மருந்து பாட்டில்கள் அழித்து மேலும் அப்பாவிக் குழந்தைகள் இறப்பதைத் தடுப்பதற்கும் காரணமாயிருந்த மருத்துவக் குழுவில் அங்கமாயிருந்த எனக்கு, காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நிகழ்வுகள் பேரதிர்ச்சியாகவும் ஆற்றாமையாகவும் உள்ளன.

2020 ஜனவரியில் நான் சண்டிகர் PGIMER-ல் MD இறுதி செமஸ்டர் பயின்றுகொண்டிருந்தேன். அங்கு சிறுநீரகத் துறையில் ஒரேவிதமான அறிகுறிகளோடு இரு குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்த அவ்விரு குழந்தைகளுக்கும் காய்ச்சல், சளி, இருமலைத் தொடர்ந்து, சிறுநீரின் வெளியேற்றம் குறைந்திருந்தது. பரிசோதனைகளில் இருவருக்கும் கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்டு சிகிச்சை அளித்தோம். ராம்நகரைச் சேர்ந்த மேலும் மூன்று குழந்தைகளும் அதே பாதிப்புகளுடன் வர, அந்தப் பகுதியில் தீவிர வைரஸ் தொற்று பரவுகிறதா அல்லது குடிநீரில் நச்சுகள் கலந்துள்ளதா என விசாரிக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளை எச்சரித்தோம்.

பாதிப்புக்கான காரணங்களைக் கண்டறிய விரிவான பரிசோதனைகள் செய்தோம். எனினும் காரணத்தைக் கண்டறிவது மிகக் கடினமாக இருந்தது. ஒரு வாரம் டயாலிசிஸ் மற்றும் வென்டிலேட்டர் செயற்கை சுவாசம் கிடைத்த பிறகும் தன் மகனின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், அவரின் தந்தை வறுமை காரணமாக குழந்தையுடன் வீடு திரும்ப விரும்பினார். சிறுநீரக பாதிப்பு எதனால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்தால், அனைத்துக் குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். அவரின் பெற்றோரை சமாதானப்படுத்தினோம். அவர்களுக்காகத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகளைப் பெற்றோம்.

இரு குழந்தைகளுக்கும் சிறுநீரக பயாப்ஸி எடுத்ததில், நச்சினால் பாதிப்பு வந்துள்ளது என முடிவுகள் வந்தன. குழந்தைகளின் பெற்றோரை வீட்டிற்கு அனுப்பி, குழந்தைகள் உட்கொண்ட அனைத்தையும் கொண்டுவந்து பரிசோதனைக்கு அனுப்பினோம். குழந்தைகள் குடித்த ColdBest-PC இருமல் மருந்தில், டைஎத்திலீன் க்ளைகால் என்னும் உயிர்க்கொல்லி நச்சு கலப்படமாக இருந்ததை பரிசோதனை முடிவில் அறிந்ததும் பேரதிர்ச்சி அடைந்தோம். இதைத் தொடர்ந்து எங்கள் PGIMER மருத்துவக் குழு, சண்டிகரிலிருந்து 400 கி.மீ பயணித்து ராம் நகர் சென்றது. பாதிப்புகள் ஏற்பட்ட வேறு குழந்தைகள் உட்கொண்ட மருந்து மாதிரிகளையும் சேகரித்தனர். அனைத்திலும் டைஎத்திலீன் க்ளைகால் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ColdBest-PC இருமல் மருந்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பாட்டில்களிலும் அந்தக் கலப்படம் இருப்பது உறுதியானது.

உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்தியாவின் வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த அந்தத் தொகுதியின் 3400 இருமல் மருந்து பாட்டில்கள் அழிக்கப்பட்டன. அதன்மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிப்படைவது தடுக்கப்பட்டது. ராம்நகரில் 12 அப்பாவிக் குழந்தைகளின் மரணத்திற்கும், 17 குழந்தைகளின் தீவிர பாதிப்புகளுக்கும் அந்தக் கலப்பட இருமல் மருந்து காரணமாய் இருந்துள்ளது. அதனை உற்பத்தி செய்த இமாசலப்பிரதேச மருத்துவ நிறுவனமான டிஜிட்டல் விஷன் பார்மா சீல் வைக்கப்பட்டது.

டைஎத்திலீன் க்ளைகால் தீவிர சிறுநீரக பாதிப்பு, தீவிர நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் மரணம் ஏற்படுத்தக்கூடிய கொடிய நச்சாகும். எங்களின் மூன்று வார தீவிர சிகிச்சை, செயற்கை சுவாசம் மற்றும் டயாலிசிஸிற்குப் பிறகு, இரு குழந்தைகளும் எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் முற்றிலும் குணமடைந்தனர்.

இருமல் மருந்துகளில், மருந்துப் பொருள்களுடன் (Active Pharmaceutical Ingredients), அதன் நிறம் மற்றும் சுவையைக் கூட்டவும், மருந்து குடலில் எளிதில் உறிஞ்சப்படுவதற்கும், மருந்து நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதற்கும் பல்வேறு பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றை துணைப்பொருள்கள் (Excipients) என்றழைப்பர். மருந்துகள் கெடாமல் இருப்பதற்கும், மருந்துகளில் இணைக் கரைப்பானாகவும் (co-solvent) பாலிஎத்திலீன் க்ளைகால் (Polyethylene Glycol) என்னும் துணைப் பொருள் சேர்க்கப்படும். இது பாதுகாப்பானது. ஆனால், இதற்கு பதிலாக தவறுதலாக எத்திலீன் க்ளைகால் மற்றும் டைஎத்திலீன் க்ளைகால் நச்சுகள், குழந்தைகள் மரணங்களை ஏற்படுத்திய இருமல் மருந்துகளில் அளவுக்கதிகமாகக் கலந்துள்ளது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

காப்பாற்றப்பட்ட ராம் நகர் குழந்தை மற்றும் பெற்றோருடன் டாக்டர் ஜெயராஜ்
காப்பாற்றப்பட்ட ராம் நகர் குழந்தை மற்றும் பெற்றோருடன் டாக்டர் ஜெயராஜ்

மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ள நல்ல உற்பத்தி நடைமுறைகள்படி (Good Manufacturing Practice), மருந்துகளில் எத்திலீன் க்ளைகால் மற்றும் டைஎத்திலீன் க்ளைகாலின் அளவு 0.1 சதவிகிதத்திற்குக் கீழிருக்க வேண்டும். காம்பியாவில் 70 குழந்தைகள் மரணத்திற்குக் காரணமான இருமல் மருந்துகளை சுவிட்சர்லாந்து ஆய்வகத்தில் பரிசோதித்தனர். அதில் 22% எத்திலீன் க்ளைகால் மற்றும் 11% டைஎத்திலீன் க்ளைகால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவை வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தீவிர சிறுநீரக பாதிப்பு, தீவிர நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் மரணம் ஏற்படுத்தக்கூடிய கொடிய நச்சுகள். தரக்கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளை மீறி, இந்த அளவு நச்சுத்தன்மை உள்ள இருமல் மருந்துகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியானது அதிர்ச்சி தருகிறது.

‘உலகின் பார்மசி' என்ற பெருமையை இந்தியா இப்போது பெற்றிருக்கிறது. உயிர்காக்கும் மருந்துகள் பல மடங்கு விலைமலிவாய் இங்கிருந்து உலகம் முழுக்கப் போகின்றன. ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் 24 பில்லியன் டாலர் அந்நியச் செலவாணி கிடைக்கிறது. நம் நாட்டில் உற்பத்தியான கொரோனாத் தடுப்பூசிகள், தரமாகவும் பல மடங்கு விலை மலிவாகவும் இருந்ததை உலகமே வியந்து பாராட்டியது. ஆனால், இதன் விளைவாக மருந்து உற்பத்தி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகிவிட்டன. கொரோனா காலத்தில் இது இன்னும் அதிகரித்துள்ளது. மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், தரம் குறைந்த மருத்துவ நிறுவனங்கள் அதிகரிப்பதை அனுமதிக்கவே முடியாது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையர் (DCGI), மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை (CDSCO) மற்றும் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையினர் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். கலப்பட மருந்துக்கு அப்பாவி உயிர்கள் பலியானால், இந்த அமைப்புகளின் தோல்வியாகவே அதைக் கருத வேண்டும்.

குழந்தைகளைக் கொல்லும் இருமல் மருந்துகள்!

உதாரணமாக, 70 காம்பியா குழந்தைகளின் மரணங்களுக்குக் காரணமாய்க் கருதப்படும் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மருந்துகள் முன்னதாக வியட்நாமிலும், பீகார் அரசாலும் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தன. கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீரில் பரிசோதனையில் தரங் குறைந்துள்ளதாக அதன் மருந்துகள் கண்டறியப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து தரப் பரிசோதனைகளில் தோல்வியடைந்த ஒரு மருந்து நிறுவனத்திற்கு வெளிநாட்டு ஏற்றுமதி எவ்வாறு கொடுக்கப்பட்டது? நச்சுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தும், டிசம்பர் 13 அன்று உலக சுகாதார அமைப்பிற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையர் (DCGI) எழுதிய கடிதத்தில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் இருமல் மருந்து மாதிரிகளில் எவ்விதக் கலப்படங்களும் இல்லையென்று எழுதியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

காய்ச்சல் மற்றும் இருமல் மருந்துகளை ‘ஓவர் த கவுன்ட்டர் (Over the counter) மருந்துகள் என்பர். அதாவது இந்த மருந்துகளை மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமலே மருந்துக் கடைகளில் பெற முடியும். இந்த மருந்துகளிலேயே கலப்படம் செய்யப்பட்டு, உயிர்க்கொல்லிகளாய் மாறுவதைக் காணும்போது, மிகப்பெரும் அச்சம் எழுகிறது. மருந்துக்கடைகளும் பொறுப்புணர்வுடன், மருந்துகளின் தரத்தில் கேள்வி எழுந்தாலோ, புதிய மருந்துகள் பிரபல மருந்து நிறுவனத்தின் மருந்துகள் போன்று பெயர்த் தோற்றத்துடன் போலியாய் இருக்கக்கூடிய சாத்தியமிருந்தாலோ, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையினருக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும். ‘மக்களுக்குக் கிடைப்பவை தரம் வாய்ந்த மருந்துகளே! உயிர்க்கொல்லிகள் அல்ல!’ என்பதை இனியேனும் அரசு உறுதி செய்ய வேண்டும்.