சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

‘டெங்கு’ - அடுத்த நோயை ஆரம்பத்திலேயே தவிர்ப்போம்!

கொசு
பிரீமியம் ஸ்டோரி
News
கொசு

டெங்குவும் வைரஸால் பரவும் ஒரு நோய்தான். மலேரியா, சிக்குன் குன்யா, ஜிகா போல இதையும் கொசுக்கள்தான் பரப்புகின்றன

கொரோனாத் தாக்குதலால் நிலைகுலைந்த தமிழகம் சற்றே நிமிரும் தருணத்தில், மிரட்டத் தொடங்கியிருக்கிறது டெங்கு காய்ச்சல். ஆங்காங்கே மழை வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில், வரும் நாள்களில் பாதிப்பு அதிகமாகலாம் என்று கவலையுடன் சொல்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம். டெங்கு தாக்கம் அதிகமுள்ள 9 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக மாறியிருக்கிறது. சமீபத்தில் மத்திய சுகாதாரக்குழு தமிழகம் வந்து டெங்கு பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றிருக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கியது டெங்கு. நிறைய பேர் உயிரிழந்தார்கள். இந்தியாவிலேயே தமிழகம்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக அந்த நோய் கட்டுக்குள் வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்கம் இருந்துவந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக டெங்குவைப் பரப்பும் `ஏடீஸ் எஜிப்டி' (Aedes aegypti) கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் மீண்டும் பரவலாக டெங்குவின் தாக்கம் தொடங்கியிருக்கிறது.

எப்படிப் பரவுகிறது டெங்கு?

“டெங்குவும் வைரஸால் பரவும் ஒரு நோய்தான். மலேரியா, சிக்குன் குன்யா, ஜிகா போல இதையும் கொசுக்கள்தான் பரப்புகின்றன. டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் ஏடீஸ் வகைக் கொசுக்கள், அந்தக் கிருமியை இன்னொருவரின் உடலுக்குள் செலுத்துகின்றன. அதன்மூலமாகவே இந்த நோய் பரவும். இருமல், தும்மல் மூலமாகப் பரவாது. இதில் DEN-1, DEN-2, DEN-3, DEN-4 என 4 விதமான வைரஸ்கள் உள்ளன. DEN-2, DEN-4 இரண்டும் தீவிர நிலையை உருவாக்கலாம்'' என்கிறார் தொற்றுநோய்கள் துறை மருத்துவ நிபுணர் வி.ராமசுப்பிரமணியன்.

 ‘டெங்கு’ - அடுத்த நோயை ஆரம்பத்திலேயே தவிர்ப்போம்!

ஏடீஸ் கொசுக்களின் இயல்புகள்

இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் அனாபெலிஸ் (Anopheles), ஏடீஸ் வகை கொசுக்கள்தான் மிகவும் ஆபத்தானவை. இவற்றால்தான் இந்தியாவில் பல்லாயிரம் உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலான கொசுக்கள் கழிவுநீரில்தான் வாழும்... இனப்பெருக்கம் செய்யும்.

ஆனால் ஏடீஸ் கொசுக்கள், நன்னீரில் வளரும். இது பகலில் மட்டுமே கடிக்கும் என்று நம்பப்பட்டது. தற்போது இரவிலும் கடிக்குமளவுக்கு இது பரிணமித்துவிட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கறுப்பு நிறத்திலிருக்கும் இந்தக் கொசுவின் கால்களில் வெள்ளை நிறத்தில் வரிகள் இருக்கும். அதனால் இதை Tiger Mosquito என்றும் குறிப்பிடுகிறார்கள். பெண் கொசுக்களே மனிதர்களைக் கடித்து நோயைப் பரப்பும். ஆண் கொசுக்கள் தாவரங்களில் தங்களுக்கான உணவைத் தேடிக்கொள்ளும். பத்துச் சொட்டு நல்ல தண்ணீர் இருந்தால்கூட அதில் முட்டையிட்டு இனத்தைப் பெருக்கிவிடும். இந்தக் கொசுவின் அதிகபட்ச ஆயுள்காலம் 30 நாள்கள். ஒரு ஏடீஸ் கொசு தன் வாழ்நாளில் 300 முட்டைகள் இடும். தண்ணீர் வற்றினாலும் சில மாதங்கள் வரை இந்த முட்டைகள் அழியாது. மீண்டும் ஈரம் கிடைத்தால் லார்வா நிலையை அடைந்துவிடும். முட்டையிலிருந்து கொசுவாக மாற 8 முதல் 10 நாள்களாகும். சுமார் 400 மீட்டர் சுற்றளவு வரை இவை செல்லும். நம் சுவாசக் காற்று, வியர்வையிலிருந்து வெளியேறும் லாக்டிக் அமிலம், யூரிக் அமிலம், கொழுப்பு அமிலங்களின் வாசனை இந்தக் கொசுவை ஈர்க்கும். அதிக உடல் வெப்பம் உள்ளவர்களையும் இந்தக் கொசு தேடிச்சென்று கடிக்கும்.

டெங்கு அறிகுறிகள் என்னென்ன?

“வைரஸ் உடலுக்குள் சென்ற 4 முதல் 7 நாள்களுக்குள் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். பிரதான அறிகுறி காய்ச்சல்தான். அதோடு கடுமையான சோர்வும் உடல்வலியும் நடுக்கமும் இருக்கும். கண்ணுக்குப் பின்புறம் வலி, இதன் இன்னொரு முக்கிய அறிகுறி. விழிகளை அசைக்கும்போது வலிக்கும். தலைவலி, முதுகுவலியும் இருக்கும். வாந்தி, வயிற்றுவலியும் சிலருக்கு ஏற்படலாம். பல்துலக்கும்போது ரத்தம் வரலாம். வாந்தியிலும் ரத்தம் சேர்ந்து வரக்கூடும்.

டெங்கு வைரஸ் நம் உடலில் உள்ள நீர்த்தன்மையை வெகுவாகக் குறைத்துவிடும். நம் ரத்தத்தில் வெள்ளையணு, சிவப்பணுபோல தட்டணுக்களும் இருக்கின்றன. இவை எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகும். இயல்பாக 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை உடலின் தன்மைக்கேற்ப ரத்தத் தட்டணுக்கள் இருக்கும். காயம், சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது அதை உறைய வைப்பது இந்தத் தட்டணுக்கள்தான். டெங்கு வைரஸ், இந்த அணுக்களை அழிக்கிறது. அதனால், பற்களின் வழியாகவோ, சிறுநீர், மலம் மூலமாகவோ ரத்தம் கசியத் தொடங்கும். தட்டணுக்கள் மிகவும் குறைந்து, நுரையீரல் பகுதியில் நீர் சேரும்போது `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்புண்டு. அதுதான் ஆபத்தான தருணம்.

வி.ராமசுப்பிரமணியன்
வி.ராமசுப்பிரமணியன்

சிகிச்சைகள் என்னென்ன?

``டெங்கு வைரஸுக்கு என்று நேரடி சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளின் தன்மைக்குத் தக்கவாறு, பாராசிட்டமால் போன்ற மருந்துகளைத் தரலாம். முழுமையான ஓய்வு தேவை. காய்ச்சல் அல்லது காய்ச்ச லுடன் வயிற்றுவலி, மயக்கம், வாந்தி ஏற்பட்டால் மருத்து வரைப் பார்க்க வேண்டியது அவசியம். டெங்குவைக் கண்டறிய NS1 Ag, Dengue IgM போன்ற பரிசோதனைகள் உள்ளன. ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை, ரத்தத்தில் நீரின் அளவு இரண்டையும் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். நீராகாரம், பாராசிட்டமால் எடுத்துக் கொண்டாலே 95 சதவிகிதம் சரியாகிவிடும். 5 சதவிகிதம் பேருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 50,000த்துக்கும் கீழே குறைந்துவிடலாம். அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். தேவைப் படும்பட்சத்தில் ரத்தத் தட்டணுக்கள் ஏற்றப்பட வேண்டும். யாரும் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்'' என்கிறார் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்.

Dengue Hemorrhagic Disease, Dengue Shock Syndrome ஆகிய நிலைகளுக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெறலாம்.

டெங்கு தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

சுற்றுப்புறத்தையும் நம்மையும் சுத்தமாக வைத்துக்கொள்வது ஒன்றுதான் வழி. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் சேகரிக்கப் பயன்படுத்தும் டிரம்கள், தரைத் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், சிமென்ட் தொட்டிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்து சரியாகப் பராமரிக்கவேண்டும். வீட்டருகே கிடக்கும் உபயோகமற்ற பொருள்கள், பிளாஸ்டிக் கப்கள், பெயின்ட் டப்பாக்கள் போன்றவற்றை அகற்றவேண்டும். வீட்டைச் சுத்தமாகவும் வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்க வேண்டும். கொசுவலை பயன்படுத்துவது நல்லது. முழுக்கை ஆடை அணிவது பாதுகாப்பு. குறிப்பாக குழந்தைகளுக்குக் கால், கைகளை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

கொரோனா காய்ச்சல், டெங்கு காய்ச்சல்... எப்படிப் பிரித்தறிவது?

“இது மழைக்காலம் என்பதால் இந்த சீசனில் ஃப்ளூ வைரஸ்களும் பரவி வருகின்றன. சாதாரண சீசனல் வைரஸ் காய்ச்சல் 3 முதல் 5 நாள்களுக்குக் காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, லேசான இருமல் என்று இருந்துவிட்டு குணமாகிவிடும். இது பாராசிட்டமால் மாத்திரைக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படும். நல்ல ஓய்வு, எளிதாக செரிமானம் ஆகும் உணவுகள், கூடவே காய்ச்சல் மற்றும் சளிக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது.

டெங்கு வந்தால் முதல் மூன்று நாள்களுக்கு 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடிக்கும். கூடவே கண்களுக்குள் வலி, முதுகு வலி, மூட்டுக்கு மூட்டு அதீத வலி இருக்கும். பாராசிட்டமால் மாத்திரை போட்டாலும் சில மணி நேரத்தில் மீண்டும் காய்ச்சல் தலைதூக்கும்.

கொரோனாத் தொற்றாக இருந்தால், பெரும்பாலானவர்களுக்கு சாதாரண வைரஸ் தொற்று போல வந்து தானாக குணமாகிவிடும். சிலருக்குக் காய்ச்சல், இருமல் இரண்டும் மூன்று நாள்களில் குணமாகாமல் அடுத்து முற்றிய நிலைக்குச் செல்லும். நாளுக்கு நாள் இருமல் அதிகமாகிக்கொண்டே சென்று மூச்சுத்திணறல் நிலையை அடையும். எனவே காய்ச்சல், இருமல் ஆகிய இரண்டு அறிகுறிகளும் தோன்றினால் அலட்சியமின்றி கொரோனாப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

ஐந்து நாள்களுக்கு மேல் இருமலும் காய்ச்சலும் இருப்பின் மருத்துவர் பரிந்துரைப்படி நெஞ்சுப்பகுதிக்கு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். வீடுகளில் பல்ஸ் ஆக்சிமீட்டர் வைத்துக்கொண்டு ரத்த ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வரலாம். ஆக்சிஜன் அளவுகள் 95 சதவிகிதத்துக்குக் கீழ் செல்லுமானால் உடனே அலர்ட் ஆக வசதியாக இருக்கும்'' என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

மாறி மாறி பேரிடர்கள் வந்து தாக்கும் தருணம் இது. எச்சரிக்கையாக இருப்போம் நண்பர்களே!