Published:Updated:

உலகம் அங்கீகரிக்கும் சித்த மருத்துவம்!

தெய்வநாயகம்
பிரீமியம் ஸ்டோரி
தெய்வநாயகம்

ஓவியம் ம.செ.,

உலகம் அங்கீகரிக்கும் சித்த மருத்துவம்!

ஓவியம் ம.செ.,

Published:Updated:
தெய்வநாயகம்
பிரீமியம் ஸ்டோரி
தெய்வநாயகம்

தமிழ்ப் பாரம்பரியத்தின் பெருமிதங்களில் ஒன்றான சித்த மருத்துவம் தமிழ்நிலம் தாண்டியும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. பண்டைய தமிழ்நாட்டில் உருவாகி வளர்ந்த சித்த மருத்துவம், இன்று தமிழ்நாட்டுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமுறையாகப் பின்பற்றப்பட்டுவருகிறது.

ஆனால், நவீன அறிவியலின் அளவீடுகள், வரைமுறைக்குள் வராமல் இயங்கிக் கொண்டிருக்கும் சித்த மருத்துவம், நவீன மருத்துவத்தின் இடைவெளியை நிரப்பும் தற்காலிக வழிமுறையாகச் சுருங்கியிருக்கிறது. இந்தப் பின்னணியில், சித்த மருத்துவத்தை முதன்மை மருத்துவ முறையாகக் கொண்டுவரும் முயற்சிகள் தமிழ்நாட்டுக்கு வெளியே இப்போது செயல்வடிவம் பெறத்தொடங்கியுள்ளன.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையம் (Global Center for Siddha Medicine and Research) இத்தகைய முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு அமெரிக்காவிலும் இயங்கிவரும் இந்த மையத்தின் முயற்சியால், ஜார்ஜியா மாகாணத்தில் அமைந்துள்ள மோர்ஹவுஸ் மருத்துவப் பள்ளியின் மருத்துவப் பாடத்திட்டத்தில் சித்த மருத்துவப் படிப்புகள் 2019-ம் ஆண்டு முதன்முறையாகச் சேர்க்கப்பட்டன.

உலகம் அங்கீகரிக்கும் சித்த மருத்துவம்!

இதைத் தொடர்ந்து இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்று பிப்ரவரி மாதம் நிறுவப்பட்டிருக்கிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சியாளரும், சித்த மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையத்தின் நிறுவனத் தலைவருமான மருத்துவர் செல்வசண்முகம், இந்த முன்னெடுப்பு குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.

“30 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் தெய்வநாயகம் முன்னெடுத்த அலோபதி-சித்தா இணைவு, சித்த மருத்துவத்தை முதன்மை மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு அடித்தளம் இட்டது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965-ம் ஆண்டின் சிறந்த மாணவருக்கான பதக்கத்துடன் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த தெய்வநாயகம், இங்கிலாந்தில் நெஞ்சக நோய்த் துறையில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றார். இந்தியா திரும்பியவர், தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். காசநோய் உள்ளிட்ட நெஞ்சக நோய்கள் மிகத் தீவிரமாக இருந்த 1980-களின் தொடக்கத்தில், தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சக நோய் சிகிச்சைப் பிரிவை உருவாக்கினார்; இந்த நோய்கள் தொடர்பான பட்டய, முதுநிலைப் பட்டப் படிப்புகளைக் கொண்டுவந்து அதில் நிபுணர்கள் உருவாக வழிவகுத்தார்” என்று தன் ஆசான் குறித்துப் பெருமைபொங்கப் பேசுகிறார் செல்வசண்முகம்.

செல்வசண்முகம்
செல்வசண்முகம்

“1990-களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் ஹெச்.ஐ.வி பாதிப்பு தீவிரமாக இருந்தது. தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக அப்போது பணியாற்றிவந்த தெய்வநாயகம், காசநோயாளிகள் அதிக அளவில் எச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதையும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் காசநோய்த் தொந்தரவுக்கு ஆளாவதையும் கண்டறிந்தார். இந்தப் பின்னணியில்தான், எச்.ஐ.வி நோயாளிகளுக்குத் தாம்பரம் மருத்துவமனையில் தனிப் பிரிவைத் தொடங்கினார் தெய்வநாயகம். அந்தக் காலகட்டத்தில் எச்.ஐ.வி மருந்துகளின் விலை மிக அதிகமாக இருந்ததால், சிகிச்சைக்கான மாற்றுவழியாக, ரசகந்தி மெழுகு, அமுக்கராச் சூரணம், நெல்லிக்காய் லேகியம் ஆகியவை இணைந்த ‘RAN தெரபி’ எனப்படும் சித்த மருத்துவ முறையை நோயாளிகளுக்கு வழங்கினார். அலோபதி மருத்துவராக இருந்தாலும், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டு அவர் வழங்கிய இந்தச் சிகிச்சை, நம்பமுடியாத வகையில் எச்.ஐ.வி நோயாளிகளிடமிருந்த வைரஸ் வீரியத்தைக் குறைத்தது. அலோபதியும் சித்த மருத்துவமும் இணைந்த இந்தச் சிகிச்சை முறையால் சுமார் 70,000 பேர் வரை பயனடைந்தது இன்றுவரை கவனம் பெறவில்லை” என்று பிரமிப்பும் வருத்தமும் மேலிடப் பேசுகிறார்.

அலோபதி-சித்த மருத்துவ இணைவின் முடிவு நம்பமுடியாத பலன்களைத் தரவே, சித்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து, ‘ஹெல்த் இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை 2001-ல் தெய்வநாயகம் தொடங்கினார். அதுவரை தெய்வநாயகத்தைத் தொலைவிலிருந்து கவனித்துவந்த செல்வசண்முகம், இந்தக் காலகட்டத்திலிருந்து அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த பல்வேறு மருத்துவக் கருத்தரங்குகளில் சித்த மருத்துவம் குறித்து செல்வசண்முகம் வழங்கிய விரிவான உரைகளாலும், சித்த ஆராய்ச்சி மையத்தின் தொடர் முயற்சியாலும் ஜார்ஜியா மாகாணத்தில் அமைந்துள்ள மோர்ஹவுஸ் மருத்துவப் பள்ளியின் மருத்துவப் பாடத்திட்டத்தில் சித்த மருத்துவப் படிப்புகள் 2019-ல் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டன; மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கிப் பயிற்சி மேற்கொள்வதும் பாடத்திட்டத்தின் அங்கமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. 8 வார ஆன்லைன் படிப்புக்கும் தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது மோர்ஹவுஸ் மருத்துவப் பள்ளி.

தெய்வநாயகம்
தெய்வநாயகம்

“இந்தப் பின்னணியில்தான், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வெளியே ஆராய்ச்சி மையம் ஒன்றைத் தொடங்கி நவீன அறிவியல் மொழியில் சித்த மருத்துவத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன்படி, சித்த மருத்துவத் துறையில் இதுவரை 40 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கும், சித்த மருத்துவ ஆராய்ச்சியில் 4 முனைவர் பட்ட மாணவர்களை உருவாக்கியிருக்கும் கர்நாடகாவின் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டிருப்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். பதிப்பிக்கப்படாத, ஆராயப்படாத சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளை ஆய்வுசெய்து பதிப்பிப்பது, புற்றுநோய், சொரியாசிஸ் போன்ற வீரியமிக்க நோய்களுக்கான சிகிச்சைக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்வது ஆகியவை இந்த மையத்தின் முதன்மைச் செயல்பாடுகளாக இருக்கும்.

அடுத்தபடியாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன் இங்கெல்லாம் இதுபோன்ற மையத்தைத் தொடங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமாக இருக்கிறது. இன்று நடுத்தரக் குடும்பங்களின் மிகப்பெரிய சுமையாக மருத்துவச் செலவுகள் மாறியிருக்கின்றன. இந்தப் பின்னணியில், நவீன மருத்துவத்துடன் சித்த மருத்துவம் இணையும்போது ஏழை, எளிய மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் எட்டும்!” நம்பிக்கை மேலிடப் பேசுகிறார் செல்வசண்முகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism