Published:Updated:

டாக்டர்கள் விளம்பரம் செய்தால் 25 ஆயிரம் அபராதம், சஸ்பெண்டு - எச்சரிக்கும் மருத்துவ கவுன்சில்!

லட்சுமணன்.ஜி

விதிகளுக்குப் புறம்பாகத் தொடர்ந்து செயல்படும் மருத்துவர்களுக்கு 10,000 முதல் 25,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதை கவுன்சில் முடிவு செய்யும். அத்துடன் தொடர்ச்சியாக இப்படிச் செயல்படும் மருத்துவர்கள் மருத்துவக் கவுன்சிலிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.

மருத்துவர்
மருத்துவர் ( pixabay )

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவுசெய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களில் சிலர், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து விளம்பரப்படுத்தி நோயாளிகளை ஈர்த்துப் பணம் சம்பாதிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு நிறைய புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, கவுன்சிலில் பதிவுசெய்த அனைத்து மருத்துவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Vikatan

மருத்துவம் என்பது ஒரு சேவையாக இருந்தவரை பிரச்னைகள் இல்லை. வணிகமாகி, தனியார்களும் மருத்துவமனைகளைத் திறக்கத் தொடங்கிய பிறகு, பிரச்னைகள் தொடங்கின. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, மருத்துவர்கள் நோயாளிகளிடம் தவறாக நடந்துகொள்வது, நேர்மை தவறுவது, தங்களை விளம்பரம் செய்வது போன்றவை சட்டத்துக்கு எதிரானவை. அதை மீறும் மருத்துவர்கள்மீது அந்தந்த மாநில மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும். அண்மைக்காலமாக, சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்கள் குறித்த விளம்பரங்கள் அதிக அளவில் வருகின்றன.

இதுகுறித்து தமிழக மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் நம்மிடம் பேசினார்.

"தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபாரைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மருத்துவர்கள் தமிழக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 90,000 மருத்துவர்கள் மருத்துவச் சேவையாற்றி வருகின்றனர். அதில் 3 சதவிகிதம் பேர் அதாவது, சுமார் 3,000 பேர் தங்களைப் பற்றி விளம்பரம் செய்கிறார்கள். அவர்களில் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட 98 மருத்துவர்களிடம் விளக்கம்கேட்டு தமிழக மருத்துவக் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 75 பேர் மட்டுமே விளக்கமளித்துள்ளனர். 28 பேர் இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.

மருத்துவர் விளம்பரம்
மருத்துவர் விளம்பரம்
pixabay

விளக்கமளித்தவர்களில் பெரும்பாலானோரின் பதில் திருப்திகரமாக இல்லை. எனவே, விளக்கம் கொடுக்காதவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கம் அளிக்காதவர்களிடம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம். விதிகளுக்குப் புறம்பாகத் தொடர்ந்து செயல்படும் மருத்துவர்களுக்கு 10,000 முதல் 25,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதை கவுன்சில் முடிவு செய்யும். அத்துடன் தொடர்ச்சியாக இப்படிச் செயல்படும் மருத்துவர்கள் மருத்துவக் கவுன்சிலிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.

ஆனால், மருத்துவக் கவுன்சிலின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மருத்துவச் செயற்பாட்டாளர் காசி சண்முகம் மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். "மருத்துவர்கள் தங்களை விளம்பரம் செய்துகொள்ளும் போக்கு நீண்டநாள்களாகவே இருக்கிறது. திடீரென இதுபோன்று எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மருத்துவக் கவுன்சிலுக்கு உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. யார் விதிமுறை மீறினாலும் தவறுதான். ஆனால், சில குறிப்பிட்ட மருத்துவர்களின் வளர்ச்சி மீது உள்ள காழ்ப்புணர்வு காரணமாக அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும்போக்கு இருக்கிறது. கவுன்சில் நிர்வாகிகளுக்குப் பிடிக்காதவர்கள்மீதுதான் இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிலருக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன'' என்கிறார் அவர்.

போலி மருத்துவர்
போலி மருத்துவர்

மேலும், "சில மருத்துவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மருத்துவமனை நிர்வாகங்கள் அவர்களது பெயர்களைக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்துகின்றன. மருத்துவர்கள்மீது மட்டும் நடவடிக்கை எடுப்பவர்கள் மருத்துவமனைகளை ஏன் கண்டுகொள்வதில்லை..? குற்றம் சாட்டப்படும் மருத்துவர்களைப் பணி இடைநீக்கம் செய்வது மட்டுமன்றி, அவர்களது மருத்துவப் பதிவையே ரத்துசெய்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகூட எடுக்கலாம். ஆனால், அந்த நடவடிக்கை நேர்மையாக இருக்க வேண்டும். மருத்துவ கவுன்சில் விதிப்படி மருத்துவர்கள் ஆறு இஞ்சுக்குமேல் போர்டு வைத்துக்கொள்ளக்கூடாது. குழந்தையின்மை தொடங்கி குணப்படுத்தமுடியாத பல்வேறு நோய்களைச் சரியாக்குவதாக பொய்யான விளம்பரங்கள் வெளியாகின்றன.

எந்த மருத்துவத் தகுதிகளும் இல்லாத ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார். அவற்றைத் தடுக்க நடவடிக்கை இல்லாதது ஏன்?
மருத்துவச் செயற்பாட்டாளர் காசி சண்முகம்

மேலும், அங்கீகாரம் இல்லாத மருத்துவப் படிப்புகள், தொலைதூரக் கல்வி மூலம் படித்த படிப்புகள், சர்ட்டிபிகேட் படிப்புகள் எனப் பல்வேறு படிப்புகளை மருத்துவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்கிறார்கள். இதனால் அதிகம் படித்திருக்கிறார் என்று நினைத்து மக்கள் அவர்களிடம் செல்கிறார்கள். இவற்றையும் தடுக்க நடவடிக்கை வேண்டும்" என்கிறார் அவர்.

காசி சண்முகத்தின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மருத்துவக் கவுன்சில் தலைவர் செந்தில்.

Vikatan

"தனிப்பட்ட மருத்துவர்கள்மீது எந்தவிதமாக காழ்ப்புணர்வும் இல்லை. மருத்துவக் கவுன்சிலின் கீழ் வரும் மருத்துவர்கள்மீது மட்டுமே எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். மருத்துவமனைகள் எங்கள் வரம்புக்குள் வராது. அதனால் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. குறிப்பிட்ட மருத்துவர்களை மட்டுமே குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறோம் என்ற குற்றச்சாட்டுக்கு இங்கு இடமில்லை. மருத்துவர்கள், விளம்பரம் மூலம் மருத்துவச் சேவையை வணிகமயமாக்கிவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். விதிகளுக்கு புறம்பாகச் செயல்படும் மருத்துவமனைகள்மீதும் நடவடிக்கை எடுக்கும் உரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்காகத் தனியாகச் சட்டம் கொண்டுவந்தால்தான் அது சாத்தியம்.

அங்கீகாரம் இல்லாத மருத்துவப் படிப்புகள் படித்தவர்கள், அதைத் தங்களது பெயர்களுக்குப் பின்னால் போடுவதும் தவறுதான். அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் படிப்புகளை மருத்துவத்தில் தங்களது திறன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். தவிர, அதை ஒரு தகுதியாகப் பெயருக்குப் பின்னால் போடக்கூடாது.

மருத்துவக் கவுன்சில் தலைவர் செந்தில்
மருத்துவக் கவுன்சில் தலைவர் செந்தில்

செய்தித்தாள்கள், தொலைக்காட்சியில் மருத்துவம் குறித்துக் கட்டுரை எழுதுபவர்கள் தங்களது பெயரையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் போட்டுக்கொள்ளலாம். அதற்கு மாறாக, தங்களது முகவரி, பணிபுரியும் மருத்துவமனை விவரம் போன்றவற்றைக் குறிப்பிடக் கூடாது. மருத்துவர்கள் பெரிய அளவில் போர்டு வைக்கக் கூடாது என்று எச்சரித்திருக்கிறோம். 'குணப்படுத்த முடியாத நோய்களைச் சரியாக்குவோம்' என்று ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்படாத மருந்துகள் குறித்து 'மாற்று மருத்துவம்' என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் பங்கேற்று பேசுகிறார்கள். நாளிதழ் மற்றும் வார இதழ்களில் விளம்பரம் செய்கிறார்கள். எங்களுக்கு இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வழி இல்லை. இருந்தாலும், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சார்பில் 'லீகல் விங்' என்ற பெயரில் சட்டப் பிரிவு ஒன்றைத் தொடங்கியிருக்கிறோம். அதன்மூலம் அவர்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்" என்றார் டாக்டர் செந்தில்.