கோவிட்-19 தடுப்பில் மற்றொரு மருந்தின் பெயர்... ஐசிஎம்ஆர்-க்கு தமிழக மருத்துவர் பரிந்துரை!

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தோமெதசின் மருந்து கோவிட்-19 தொற்றைத் தடுக்காது.
கோவிட்-19 -க்கான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்புகளில் உலக நாடுகள் மும்முரமாக இருக்க, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்துகுறித்து, இந்திய மருத்துவக் கழகத்துக்கு பரிந்துரைக் கடிதம் எழுதியுள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன்.
'சைட்டோகைன் புயல்' (Cytokine storm) எனப்படும் உடல்நிலைக் கோளாற்றைத் தடுக்க, 1989-ல் முதன்முதலில் நோயாளிகளுக்கு 'இந்தோமெதசின் (Indomethacin)' என்ற மருந்தைப் பயன்படுத்தியவர், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன். இப்போது, இதே மருந்தை கொரோனா வைரஸ் சிகிச்சையிலும் முன்வைக்கிறார்.

கோவிட்-19-ல் தீவிரத்தன்மை மற்றும் மரணம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கும் 'சைட்டோகைன் ஸ்டார்ம் (Cytokine storm)'ஐ, ஆன்டி இன்ஃப்ளமேட்டரி ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸுக்கான மருந்தான (anti-inflammatory rheumatoid arthritis drug) இந்தோமெதசின் கட்டுப்படுத்தும் என்றும், அதை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கும் (ICMR), அதன் அமெரிக்க, இங்கிலாந்து செயல்பாட்டு அமைப்புகளுக்கும் பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, இங்கிலாந்து சுகாதாரத்துறை இவரது பரிந்துரையை சம்பந்தப்பட்ட பணிக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.
மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரனிடம் பேசினோம். ''இந்தோமெதசின் மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டால், கொரோனா வைரஸ் பாதிப்பதால் 'சைட்டோகைன் புயல் (cytokine storm)' ஏற்பட்டு அபாய நிலைக்குச் செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கலாம்'' என்று ஆரம்பித்தவர், அது பற்றி விரிவாகப் பேசினார்.
''கோவிட்-19 வைரஸ்தான் உயிரைப் பறிக்கிறது என நினைக்கிறோம். ஆனால், இந்த வைரஸ் தாக்கிய பின் உடலில் ஏற்படும் அதிக தடுப்புவினையே (Hyperactive immune response) நிலைமையை மரணம்வரை மோசமாக்குகிறது. வைரஸை அழிக்க நம் உடல் போராடும்போது, தானே உருவாகும் ரசாயனங்கள்தான் சைட்டோகைன்ஸ். வைரஸால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைவிட, இந்த சைட்டோகைன்களால் உடலில் ஏற்படும் பாதிப்பே அதிகம்.
சிலருக்கு இந்த பாதிப்புகளின் உச்சமான 'சைட்டோகைன் ஸ்டார்ம்' வரை ஏற்படும். சிலருக்கு அவ்வளவு தீவிரமாகச் செல்வதில்லை. இது யாருக்கு மிதமாக இருக்கும், யாருக்குத் தீவிரமாக இருக்கும் என்பதைக் கணிக்கமுடியவில்லை.

இந்த சைட்டோகைன் ஸ்டார்ம், வைரஸை அழிக்கும் நோக்கில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்களை உருவாக்கும்போது, அவை நுரையீரலுக்குள் நுழைய வழிசெய்துவிடுகிறது. இதனால் நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கத்தைக் குறைந்த செலவில் கட்டுப்படுத்த, இந்தோமெதசின் மருந்து உதவும்'' என்கிறார் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன்.
சைட்டோகைன் ஸ்டார்ம் பாதிப்பைத் தடுக்கும் மருந்துகள் பல இருந்தாலும், ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் (Hydroxycholoroquine) மருந்து உலகெங்கிலும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

சைட்டோகைன் ஸ்டார்ம் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 'டோசிலிஸுமாப் (Tocilizumab)' மருந்தின் விலை ஒரு டோஸுக்கு ரூ. 60,000. அதுவே ஒரு இந்தோமெதசின் காப்ஸ்யூலின் விலை ஐந்து ரூபாய்.

''இதில் கவனிக்கவேண்டிய விஷயம், இந்தோமெதசின் மருந்து கோவிட்-19 தொற்றைத் தடுக்காது. ஆனால், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஆரம்பக்காலத்தில் இந்தோமெதசினைப் பயன்படுத்துவது, சைட்டோகைன் ஸ்டார்ம் ஏற்பட்டு நோய் முற்றுவதைத் தடுத்து, சம்பந்தப்பட்ட நபர் புறநோயாளியாக சிகிச்சை பெற உதவும்'' என்கிறார் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன்.
ஆராய்ச்சிகள் முடிந்த பின்னர் ஐசிஎம்ஆர்-ரின் முடிவுகள் வெளியான பின்னர்தான் இதை குறித்து தெளிவான ஒரு பார்வை கிடைக்கும் எனலாம். எந்த மருந்தை உட்கொள்ளும் முன்பும், மருத்துவரின் பரிந்துரையைக் கேட்பது அவசியமானது.