அது 1918-ன் முற்பகுதி. முதல் உலகப் போர் கிட்டத்தட்ட முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காலகட்டம். போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் அமெரிக்காவின் கான்ஸஸ் மாகாணத்திலுள்ள ஃபோர்ட் ரைலி என்ற ராணுவத் தளத்துக்கு அப்போது திரும்பியிருந்த நிலையில், அவர்களில் சிலருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மிகக் கடுமையான சூழலில் போரிட்டுத் திரும்பும் வீரர்களுக்கு உடல், மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவது இயல்புதான். என்றாலும், அன்று அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை, அதுவரை மருத்துவ உலகம் கண்டிராதது என்பதால் மருத்துவர்கள் திகைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைபோரின்போது அமெரிக்க வீரர்கள் பயணப்பட்ட இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வீரர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படவே, நிலைமை தீவிரமடைந்தது. அதுவரை இல்லாத அந்தப் புதிய உடல்நலக் கோளாறின் காரணத்தைக் கண்டறிய ஆய்வுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வீரர்களுக்கு ஏற்பட்ட அந்த திடீர் உடல்நலக்குறைவு, H1N1 இன்ஃப்ளூயன்ஸா என்ற வைரஸால் ஏற்பட்டிருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தபோது உலகம் அதிர்ந்தது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுதல் உலகப் போரில் ஸ்பெயின் நாடு எந்தச் சார்பும் இன்றி நடுநிலை வகித்ததால், அந்நாட்டின் பத்திரிகைகள் செய்திகளைத் தணிக்கையின்றி வெளியிட்டன. அந்த வகையில், அமெரிக்காவில் தொடங்கியதாகக் கருதப்படும் வைரஸ் தொற்று பற்றி, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து வெளியான ABC நாளிதழ் 22 மே 1918 அன்று வெளியிட்ட செய்தியால், தொற்றுப் பரவல் அதன் அறிவியல் பெயரால் அல்லாமல் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்று அழைக்கப்படலானது. நூற்றாண்டுக்கு முந்தைய பெருந்தொற்று இப்படியாகத் தொடங்கியது!

சுமார் 25 மாதங்கள் நீடித்த அந்தப் பெருந்தொற்று நான்கு அலைகளாகப் பரவியது; முதல் அலை பிப்ரவரி 1918 முதல் ஜூன் 1918 வரை; இரண்டாவது அலை ஆகஸ்ட் 1918 முதல் டிசம்பர் 1918 வரை; மூன்றாவது அலை டிசம்பர் 1918 முதல் ஏப்ரல் 1919 வரை; கடைசி அலை டிசம்பர் முதல் ஏப்ரல் 1920 வரை தொடர்ந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இரண்டாம் அலையைவிட முதல் அலையின் வீரியம் குறைவாகவே இருந்தது. ஆனால், உலகப் போரின் காரணமாக பெரிய இடப்பெயர்வு இருந்ததால் தொற்றுப் பரவல் வேகம் மிக அதிகமாக இருந்தது. கோடை காலத்தில் உருமாறிய வைரஸ், ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதங்களில் மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கியது. அது இரண்டாம் அலையாகப் பரிணமித்து, மிகக் கடுமையான நிமோனியா காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, போன்றவற்றால் இறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி ஆசியாவின் பல்வேறு பகுதிகள், ஆப்பிரிக்கா, ரஷ்யா, நியூஸிலாந்து ஆகிய இடங்களிலும் நோய்த் தொற்று பரவியது கோடையில் இரண்டாம் அலையின் காலகட்டத்தில்தான்.

1918 பெருந்தொற்றினால், உலகளவில் சுமார் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்; 5 கோடி பேர் மாண்டுபோயினர். மக்கள் காய்ச்சல் மற்றும் உடற்சோர்வினால் பாதிக்கப்பட்ட நிலையில், 24-40 வயதினர் இந்தப் பெருந்தொற்றால் அதிகம் மரணமுற்றனர். அன்றைய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இறப்பு சதவிகிதம் 2.7 சதவிகிதமாக இருந்தது. இந்தப் பெருந்தொற்றினால் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு அக்டோபர் முதல் டிசம்பர் 1918 வரையிலான இரண்டாம் அலையின் காலகட்டத்தில் ஏற்பட்டது என்று ‘ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் வைராலஜி’ மதிப்பிடுகிறது.
முதல் உலகப் போரில் பங்கெடுத்த இந்திய வீரர்கள் கப்பலில் இந்தியாவுக்குத் திரும்பியபோது, அவர்ளோடு வைரஸும் இந்தியாவுக்கு வந்துசேர்ந்தது. வீரர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, வைரஸும் அவர்களுடன் பயணித்திருக்கிறது. மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த இந்தியாவில், 1918-ன் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருந்திருக்கிறது. அப்போதைய மதிப்பீட்டில் சுமார் 1.2 - 1.3 கோடி பேர் இதனால் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது; ஆனால், நவீன ஆய்வுகள் இறப்பு எண்ணிக்கை 1.8 கோடி வரை இருக்கலாம் என்று கூறுகின்றன.

கூட்டு நோயெதிர்ப்புசக்தி பெறுவது ஒன்றின்மூலமே 1918 பெருந்தொற்று முடிவுக்கு வந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியது, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை, முகக்கவசம் போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில், சரியாக நூறு ஆண்டுகள் கழித்து, கொரோனா வைரஸ் மூலம் வரலாறு தன்னை மீண்டும் எழுதிக் கொண்டது. கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களைவிட, கோவிட்-19 தொடங்கிய இந்த ஒன்றரை ஆண்டுகளில் உலகம் எவ்வளவோ மாறிவிட்டது.

நூறாண்டுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட வழிமுறைகளைப் போலவே இப்போதும் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியது, நாடுதழுவிய பொதுமுடக்கம், தனிமனித இடைவெளி, முகக்கவம், சானிட்டைசர், கைகளைக் கழுவுவது, ஆக்ஸிஜென், ரெம்டெசிவிர், தடுப்பூசி எனப் பல்வேறு நடவடிக்கைகள் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு இப்போது தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், உருமாறும் வைரஸால் அடுத்தடுத்த அலைகள் குறித்த அச்சமும் பீதியும் மக்களிடம் தங்கியுள்ளது. இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்தே இன்னும் மீண்டிருக்காத நிலையில், இந்தியாவில் மூன்றாம் அலை பரவல் குறித்த பேச்சுக்களே இப்போது எங்கும் நிறைந்திருக்கின்றன.
1918 பெருந்தொற்றைப் போலவே கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியா மோசமாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் முதல் தொற்று ஜனவரி 30, 2020-ல் கேரளாவில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து நாடு முழுவதும் பரவிய வைரஸ், நாளொன்றில் 90 ஆயிரம் தொற்றுகளுடன் முதல் அலையாக உருவெடுத்து செப்டம்பர் மத்தியில் உச்சம்பெற்றது. அதைவிட மோசமான இரண்டாவது அலை பிப்ரவரி 2021-ல் ஏற்பட்டது. மே மாதத்தில் நாளொன்றில் தொற்று எண்ணிக்கை நான்கு லட்சம்வரை சென்றது. முதல் அலையில் 1,000-1,200 வரை இருந்த தினசரி இறப்பு அளவு, இரண்டாவது அலையில் நாளொன்றில் 4 ஆயிரம் வரை சென்றது.

தடுப்பூசி, கூட்டு நோயெதிர்ப்புசக்தி உருவாகியிருப்பது என இரண்டாம் அலையிலிருந்து இந்தியா தற்போது மீண்டிருந்தாலும், ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாம் அலை தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரித்திருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலையின் போது இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. உச்சகட்டமாக நாளொன்றில் சுமார் 36 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. சுமார் ஒரு மாதத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை ஏற்பாடு செய்வதில் பெரும் சிக்கல்களைத் தமிழ்நாடு எதிர்கொண்டது. தமிழ்நாட்டின் அரசு, தனியார் மருத்துவமனைகளின் வாசல்களில் ஆம்புலன்ஸ்கள் வரிசையில் நின்றன.

இந்தப் பின்னணியில்தான், கொரோனாவின் மூன்றாவது அலை தமிழ்நாட்டில் தாக்கினால், அதனை மாநிலம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் டி.எஸ்.செல்வவிநாயகம் பேசும்போது, “எந்தவொரு வைரஸ் தொற்றுப் பரவலின்போதும், மிக எளிதாக பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அலைகள் உருவாகின்றன. இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு நோயெதிர்ப்பு சக்தி உருவாக வேண்டும், அல்லது தடுப்பூசி போடப்பட்டு நோயெதிர்ப்பு சக்தி உருவாக வேண்டும். இந்த இரண்டில் ஏதோ ஒன்றின் மூலம் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும்வரை தொற்று ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்; முதல், இரண்டாம், மூன்றாம் என அலைகளும் வந்துகொண்டுதான் இருக்கும்.

எத்தனை அலை வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளக் கூடிய திறனும் இருந்தால் அதை எளிதாகக் கடக்கலாம். ஆனால், அது உச்சம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இப்போது நம்முடைய கவலை. பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டல் நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால், தொற்றுப் பரவலின் வீரியம் கட்டுப்படுத்தப்பட்டு, அலையின் தீவிரம் குறையும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “Integrated Health Information Platform என்ற அமைப்பின் மூலம் தொற்றுப் பரவலைக் கண்காணித்து வருகிறோம். இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்போது, உடனடியாகக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும். அதன் மூலம் தொற்றுப் பரவலின் வேகம் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
தமிழ்நாட்டில் போடப்பட்டிருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை தற்போது 2 கோடியைத் தாண்டியிருக்கும் நிலையில், இன்னும் சில மாதங்களில் தடுப்பூசிப் போடுதல் 80-90 சதவிகிதத்தைத் தொட்டுவிடும். அப்போது கொரோனா, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பரவும் endemic நிலைக்கு வந்துவிடும். என்றாலும், பாதிக்கப்படக் கூடிய மக்கள் இருக்கும்வரை அலைகள் வந்துகொண்டுதான் இருக்கும்; அவை இரண்டாம் அலையைப் போல் தீவிரமாக இருக்குமா என்பதைக் கணிப்பது கடினம். ஆனால், இப்போதைய நிலையில் கொரோனாவை எதிர்கொள்ளக் கூடிய திறன் நன்றாகவே இருக்கிறது” என்று நம்பிக்கையளிக்கிறார்.

கூட்டு நோயெதிர்ப்புசக்தி பற்றி பேசிய செல்வவிநாயகம், “‘ஹெர்டு இம்யூனிட்டி’ எனப்படும் கூட்டு சக்தியைப் பொறுத்தவரை, முதலிரண்டு ‘ஜீரோ’ சர்வேயைவிட, தற்போது நிகழ்வில் உள்ள மூன்றாம் சர்வே மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள் நம்பிக்கையளிக்கின்றன. சீராகத் தடுப்பூசி போடுதல், நோய்த் தடுப்பு வழிமுறைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடித்தல் ஆகியவற்றுடன் வைரஸ் உருமாறாமல் இருக்கும்பட்சத்தில், எத்தனை அலைகளையும் நாம் சமாளிக்கலாம்!” என்றார்.