Published:Updated:

ஏழு மாத கர்ப்பிணிக்கு கொரோனா... போராடி வென்றது எப்படி?!

கொரோனா - கோவிட்-19 ஆல் பாதிப்படைந்த ஒரு தாயும் அவரது 28 வார குறைப்பிரசவக் குழந்தையும் காப்பற்றப்பட்ட ஓர் அரிய வெற்றிக் கதை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இருண்ட காலங்களிலும் சில வெற்றிக்கதைகள் புது வெளிச்சம் பரப்பும். உலகம் முழுக்க கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், கொரோனாவை வென்றிருக்கும் ஒரு மருத்துவ சாதனை அப்படியான நம்பிக்கையை அளிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி ஏழு மாத கர்ப்பிணியான திருமதி ப்ரியதர்ஷினிக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாதிருக்கவே, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார் பிரியதர்ஷினி. திடீரென அவருக்கு 21-ம் தேதி காலை மூச்சுத்திணறல் அதிகமாகவே அவரது குடும்பத்தார் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

காவேரி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
காவேரி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
www.kauveryhospital.com

அதிகாலை நேரம் அவசர சிகிச்சைக்காக வந்த ப்ரியதர்ஷினியை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதாய் கண்டு உடனடியாக வென்ட்டிலேட்டர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என உணர்ந்திருக்கிறார்கள். பொதுவாகத் தீவிர ஆக்ஸிஜன் குறைபாடு நிகழ்வுகளில், நோயாளியை வென்ட்டிலேட்டரில் குப்புறப்படுத்த நிலையில் வைத்தே சிகிச்சை வழங்கப்படும். பிரியதர்ஷினி கர்ப்பிணி என்பதால், அவ்வாறு செய்வது சாத்தியமில்லை.

இந்நிலையில், தாய் மற்றும் குழந்தையின் நலனை உறுதிசெய்வதற்காக மருத்துவக் குழு, அவசரக்கால சிசேரியன் அறுவை சிகிச்சையைப் பரிந்துரை செய்திருக்கிறது. அப்பெண் 28 வாரக் கர்ப்பத்திலிருந்தார். அந்த கர்ப்ப நிலையில் குழந்தையின் நுரையீரலும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது, இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வதில் நிறையவே ஆபத்து இருந்திருக்கிறது. ஆனால் இரண்டு உயிரையும் காப்பாற்றியே ஆக வேண்டும் என மருத்துவர்கள் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

Treatment
Treatment
(Representational Image)

அதன்பிறகு, தாயை வென்ட்டிலேட்டரிலும், குழந்தையை பச்சிளங்குழந்தைகள் ஐ.சி.யூ-விலும் வைத்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். மிகவும் சவாலான ஒரு வாரம் அது. தாயையும் சேயையும் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துத் தொடர் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஒரு வாரத்திற்குப் பிறகு பிரியதர்ஷினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு கொரோனா நோய்த் தொற்று முழுவதும் குணமான பிறகு, முதல்முறையாக தன் குழந்தையைச் சந்தித்திருக்கிறார். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவும் அவரை மருத்துவர்கள் அனுமதி அளித்ததை அடுத்து, அவர் குழந்தையை அள்ளி அணைத்துப் பாலூட்டியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாக்டர் என். எழிலன் - பொது மருத்துவ ஆலோசகர், டாக்டர் என். ஸ்ரீதர், தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர், டாக்டர் டி.எஸ். சபீஹா - மூத்த ஆலோசகர் - மகப்பேரியல் மற்றும் பெண்ணோயியல், டாக்டர் ஹேமலதா ஐயனார் - ஆலோசகர் மயக்க மருந்தியல் நிபுணர், டாக்டர் கார்த்திக் தியாகராஜன், பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஆகிய மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு நேரத்தோடும், நோயோடும் போராடி இந்த அரிய சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

கொரோனா -டாக்டர்
கொரோனா -டாக்டர்

காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், "நோய்த்தொற்றுடன் போராடி, குழந்தை பாதுகாப்பாக இருப்பதாய் உறுதிசெய்வதற்கு, தாய் காட்டிய தைரியமும் மனவலிமையும் உண்மையில் பாராட்டத்தக்கது. இந்த வெற்றி உலகெங்கிலும் உள்ள பலருக்குத் தைரியத்தையும், நம்பிக்கையும் தரும் என்று நாங்கள் நம்புகிறோம். தொற்றுநோய்க்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஊக்குவித்த நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது நன்றிகள்" என்றார்.

`டிப்ரெஷனுக்கு போதைப்பொருள்கள் தீர்வல்ல!' - தவறான நம்பிக்கையும் மருத்துவ எச்சரிக்கையும்

சாதி, மதம், இனம் என எல்லாம் கடந்து உயிர்காத்திருங்கள் என மருத்துவரிடம் கை கூப்புகிறோம். நேரம், காலம், பசி, தூக்கம் மறந்து உயிர் காக்க மருத்துவர்கள் சேவை செய்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து உயிர் காத்த மருத்துவர்களின் சேவைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு இந்த கதை. வெள்ளை கோட் உள்ளே வாழும் இந்தக் கடவுள்களுக்கு ராயல் சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு