பெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா? #DoubtOfCommonMan

``பெருங்குடல் புண் பிரச்னையை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியுமா? அது உயிருக்கு ஆபத்தான நோயா?" என்ற கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருந்தார் வாசகர் பிரம்மா.
உடல் எடையைக் குறைக்க சிலர் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வார்கள்; விதவிதமான `டயட்'களைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால், என்னதான் போராடினாலும், `குறைவேனா?' என அவர்களது உடல் எடை அவர்களுக்குச் சவால்விடும். ஒரு சிலர் எந்தவித முயற்சியும், பயிற்சியும் செய்யாமலேயே அவர்களது உடல் எடை சரசரவெனக் குறையும். ``கஷ்டமின்றி `ஸ்லிம்' ஆவது நல்லதுதான் என்றாலும், எந்தவித உணவு முறையையும் பின்பற்றாமல், உடற்பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் திடீரென உடல் எடை குறைவது `பெருங்குடலில் புண்' ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்" என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

``பெருங்குடல் புண் பிரச்னையை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியுமா?அது உயிருக்கு ஆபத்தான நோயா?" என்ற கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருந்தார் வாசகர் பிரம்மா.
`` `பெருங்குடல் புண்' அல்லது `மலக்குடல் புண்' என்பது குறிப்பிட்ட ஒரு பிரச்னையை மட்டும் குறிப்பிடும் வார்த்தையல்ல. ஆனால் பொதுவாக, அல்சர் (Ulcerative colitis), மற்றும் குடலிய அழற்சி (Crohn's disease) ஆகிய இரண்டையும் பெருங்குடல் புண் என்று சொல்வோம்" என்கிறார் இரைப்பை மற்றும் குடல்நோய் மருத்துவர் மகாதேவன்.

``பெரும்பாலும் மாத்திரை, மருந்துகளாலேயே இந்தப் பாதிப்பைச் சரிசெய்யமுடியும். நெடுநாள்களாகப் பாதிப்பின் தன்மையைக் கண்டுகொள்ளாமல் விட்டு, பெருங்குடல் முழுமையாகப் பாதிக்கப்பட்டால் மட்டும் அறுவை சிகிச்சை செய்து முழுமையாக அகற்ற வேண்டிவரலாம். சிறுகுடலை பெருங்குடலாக மாற்றி, பெருங்குடலின் வேலையைச் செய்ய வைப்போம்.
பெருங்குடல் புற்றுநோயையும்கூட (Colon cancer), `பெருங்குடல் புண்' என்றுதான் சொல்வோம். பயாப்சி (biopsy) சோதனை மூலம் இந்தப் பாதிப்பைக் கண்டறியலாம். பாதிப்பின் தன்மை அடிப்படையில் மருத்துவர் இதை உறுதிசெய்வார். மலக்குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மருந்து, மாத்திரைகளாலேயே சரிசெய்துவிட முடியும். முற்றிய நிலையில் என்றால், நிச்சயமாக அறுவை சிகிச்சை செய்து பெருங்குடலை அகற்ற வேண்டியிருக்கும்.

மலச்சிக்கலால் ஏற்படும் அல்சரையும் 'பெருங்குடல் புண்' என்றுதான் சொல்வோம். இந்தப் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் வயிற்றுவலி, அடிக்கடி மலம் கழித்தல் அல்லது மலச்சிக்கல், மலத்தோடு ரத்தம், சளி வெளியேறுதல், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு உடலில் ஹீமோகுளோபின் குறைந்து, அனீமியா பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாகவும்கூட 'பெருங்குடல்புண்' பாதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்புகளை மருந்து, மாத்திரைகளால் சரி செய்துவிடலாம்.
சிலருக்கு மலம் கழிக்கும்போது அதிகமாக முக்கினால், மலக்குடல் (Rectal prolapse) கீழே இறங்கிவிடும். அதன் காரணமாக அல்சர் உருவாகும். `ரெக்டோபெக்ஸி' (Rectopexy) என்ற அறுவை சிகிச்சை செய்து மலக்குடல் கீழே இறங்குவதைத் தடுக்கமுடியும்.

`அல்சரேட்டிவ் கோலிட்டிஸ்' (Ulcerative colitis) பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்குக் குறிப்பிட்ட காரணம் கண்டறியப்படவில்லை. குடலிய அழற்சி (Crohn's disease) பாதிப்பு, புகை பிடிப்பவர்களுக்கு வரும். பெருங்குடல் புற்றுநோய் , அதிகமான கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு, நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாதவர்களுக்கு, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
மேற்கண்ட அனைத்துப் பாதிப்புகளுமே ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் எந்தப் பாதிப்பும் இல்லை. கண்டுகொள்ளாமல் விட்டு நோயின் தன்மை அதிகமானால் கொஞ்சம் ஆபத்துதான்'' என்கிறார் மருத்துவர் மகாதேவன்.
