Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 13: இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு... வினோத் கண் மருத்துவமனை!

“முற்றிப்போன கேட்ராக்ட் நோயாளிகளுக்கு பெருமளவு பார்வை போயிருக்கும். அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் சார்ட் படிக்கும்போது அவரின் முகத்தில் தோன்றும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.”

ஒரு நோயைக் குணமாக்குவதில் மருந்தின் அளவுக்கு மருத்துவரின் நம்பிக்கை வார்த்தைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு. எவ்வளவு பெரிய வலியும் மருத்துவரின் அருகில் இருந்தால் சற்று தணிந்துதான் போகும். நோயாளியின் உடல்நிலையை மட்டுமின்றி மனநிலையையும் அறிந்து நோயின் தன்மையை உணரவைத்து ஆற்றுப்படுத்துபவரே நம்பிக்கைக்குரிய மருத்துவராக மக்களால் கொண்டாடப்படுகிறார். திருச்சியைச் சேர்ந்த வினோத் அப்படிப்பட்ட மருத்துவர்தான்.
வினோத் கண் மருத்துவமனை
வினோத் கண் மருத்துவமனை
DIXITH

திருச்சி கிழக்கு தில்லை நகரில் இருக்கிறது, வினோத்தின் கண் மருத்துவமனை. கண் மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய இந்த மருத்துவமனையை டாக்டர் வினோத்தின் மனைவி சத்ய கிருத்திகா நிர்வகிக்கிறார். வினோத், குளுக்கோமா ஸ்பெஷலிஸ்ட். 'கண் நீர் அழுத்த நோய்' எனப்படும் குளுக்கோமாவை 'பார்வையைக் கொள்ளையடிக்கும் மௌனமான திருடன்' என்று வர்ணிக்கிறார் வினோத். அவருடனான உரையாடல் மிகவும் மனதிற்கினியதாக இருக்கிறது. எதைப்பற்றி பேசத் தொடங்கினாலும் கண் பாதுகாப்பு என்ற புள்ளியில் வந்து நிற்கிறது உரையாடல்.

வினோத் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். அப்பா அருணாசலம், சிட்பண்ட்ஸ் நடத்துகிறார். வினோத் ஒரே பிள்ளை. முதல் தலைமுறை பட்டதாரி. போரூர் ராமச்சந்திராவில் எம்பிபிஎஸ்-சும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். சும் படித்தார். படிப்பு முடிந்ததும் கோவை அரவிந்த் மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பெல்லோஷிப் பெற்றார். தொடர்ந்து 5 ஆண்டுகள், அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார்.

அரவிந்த் மருத்துவமனை தந்த ஏழாண்டு அனுபவம்தான் வினோத்தை சமூக அக்கறையுள்ள மருத்துவராக முழுமைப்படுத்தியுள்ளது.

கண் மருத்துவர் வினோத்
கண் மருத்துவர் வினோத்
DIXITH

"அரவிந்த் மூலம் நிறைய மருத்துவ முகாம்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு 3000 அறுவை சிகிச்சைகளுக்குமேல் செய்திருக்கிறேன். 200 முகாம்களுக்கு மேல் பங்கேற்றுள்ளேன். ஒவ்வொரு முகாமிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். குறைந்தது 500 பேராவது பாதிப்போடு வருவார்கள். அவர்களைத் தேர்வு செய்து அறுவை சிகிச்சைக்கு அழைத்து வருவோம். அதுதவிர, அரவிந்தில் ஃபேக்கே டிரையினராகவும் இருந்தேன். இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மருத்துவர்கள் வருவார்கள். அவர்களுக்கு அறுவை சிகிச்சை பயிற்சியளிப்பேன். குளுக்கோமா குறித்த பயிற்சியும் பலநூறு மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறேன்" என்ற வினோத்திடம்,

"மருத்துவராவது உங்கள் சிறுவயது கனவா?" என்று கேட்டேன்.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 8 | ‘காட்டு விவசாய’த்தின் முன்னோடி அமரதன்! இவர் செய்த சாதனை என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"8ம் வகுப்பு வரை பெரிய கனவெல்லாம் இல்லை. அதன்பிறகு தான் அந்த விதை விழுந்தது. உறவினர்களில் சிலர் மருத்துவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, நம் குடும்பத்திலிருந்தும் நாம் முதல் மருத்துவராக வரவேண்டும் என்று தோன்றியது. பிளஸ் டூ முடித்ததும் அப்பா, 'நீ விரும்பியதைப் படி' என்றுதான் சொன்னார். நான் சிறிதும் யோசிக்காமல் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்துவிட்டேன். எம்பிபிஎஸ் முடித்துவிட்டு கண் மருத்துவப் படிப்பைப் பற்றி தெரிந்துகொள்ள ஜோசப் கண் மருத்துவமனையில் சீனியர் ஹெல்த் ஆபீசராக ஓராண்டு வேலை செய்தேன். அங்கும் நிறைய முகாம்கள் சென்றிருக்கிறேன்.

கண் மருத்துவர் வினோத்
கண் மருத்துவர் வினோத்
DIXITH

அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதுதான் என் திட்டம். கண் சார்ந்த படிப்பைத் தேர்வு செய்ததில் ஒரு காரணம் இருக்கிறது. இருட்டுக்குள் இருக்கும் ஒருவருக்கு ஒளியைப் பெற்றுத்தருவதுதான் கண் மருத்துவரின் பணி. முற்றிப்போன கேட்ராக்ட் நோயாளிகளுக்கு பெருமளவு பார்வை போயிருக்கும். அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் சார்ட் படிக்கும்போது அவரின் முகத்தில் தோன்றும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அரவிந்த் கண் மருத்துவமனையில் பணியாற்றுவதும் என் கனவாக இருந்தது. அங்குதான் மனிதநேய மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்பினேன். ஒரு மருத்துவர், சமூகத்துக்கு தன் பங்களிப்பை எப்படித் திருப்பிச் செலுத்தவேண்டும் என்பதை அரவிந்த் மருத்துவமனை கற்றுத்தந்தது. ஒரு நோயாளிக்கு என்ன சிகிச்சை தேவையோ அதை மட்டும் தான் அரவிந்தில் செய்வார்கள். தேவையில்லாமல் எந்தச் சோதனையும் செய்வதில்லை.

இப்போதுவரை நான் அரவிந்தில் என்ன கற்றேனோ அதைத்தான் செயல்படுத்தி வருகிறேன். அறுவை சிகிச்சை தேவை என்று நான் 100 சதவிகிதம் கருதினால் ஒழிய அதை என் பேஷண்ட்க்கு பரிந்துரைக்கமாட்டேன். கேட்ராக்ட் கூட தேவைப்படும் பட்சத்தில்தான் அறுவை சிகிச்சைக்குச் செல்வேன்.

கண் மருத்துவமனை
கண் மருத்துவமனை
DIXITH

திருச்சியில் குளுக்கோமாவுக்கென சிறப்பு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கவேண்டும் என்று விரும்பினேன். காரணம், குளுக்கோமா பற்றி இங்கு விழிப்புணர்வே இல்லை. அதை சாதாரணப் பிரச்னை என்று நினைக்கிறார்கள். உலகத்திலேயே பார்வையிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது பெரிய நோய் குளுக்கோமா தான். கோவை, சென்னையில் எல்லாம் ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது. திருச்சி மாதிரி நகரங்களில் அதுபற்றி பெரிய அளவில் தெரியவில்லை. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி குளுக்கோமா பவுண்டேஷன் என்று எங்கள் அமைப்புக்குப் பெயர் வைத்தோம்.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 11: வாழைப் பொருள்களை மதிப்புக்கூட்டி சாதித்த சிவகுமார் - சசிரேகா!

குளுக்கோமாவுக்கு ஓரிரு மாதங்கள் மருந்து போட்டால் போதாது. வாழ்க்கை முழுவதும் மருந்து தேவைப்படலாம். குளுக்கோமா என்பது கரையான் மாதிரி. நரம்புகளை எல்லாம் அரித்துவிடும். குளுக்கோமா வந்தால் முதலில் சைடு பார்வைதான் பறிபோகும். அதை உணரவே முடியாது. நடந்து போகும்போது சைக்கிள்காரன் இடித்துவிட்டான்; நிலையில் தலையை முட்டிக்கொண்டேன்; கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டேன் என்றுதான் வருவார்கள். இரண்டு பக்கங்களிலும் கீழ்ப்பகுதியிலும் பார்வை மெல்ல மெல்லகுறைந்துவிடும்..." என்கிறார் வினோத்.

வினோத் கண் மருத்துவமனை
வினோத் கண் மருத்துவமனை
DIXITH
குளுக்கோமா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நிறைய பணிகளைச் செய்கிறார் வினோத். அந்நோய் பற்றியும் கண் பாதுகாப்பு பற்றியும்கூட அவரிடம் நிறைய பேசவேண்டியிருக்கிறது. அடுத்தவாரம் தொடர்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு