Published:Updated:

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 14: குளுக்கோமா... வினோத் கண் மருத்துவமனையின் விழிப்புணர்வு!

“குடும்பத்தில் யாருக்காவது குளுக்கோமா இருந்தால் 20 வயதிலேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மரபு ரீதியாக 20 சதவிகிதம் வர வாய்ப்பிருக்கிறது."

திருச்சி கிழக்கு தில்லைநகரில் விசாலமாக அமைந்திருக்கும் வினோத் ஐகேர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அத்தனை கனிவாக இருக்கிறார்கள். மருத்துவமனைக்கே உரிய இறுக்கம் இன்றி, கலகலவென்றிருக்கிறது மருத்துவமனை.யார் எந்தப் பிரச்னையோடு வந்தாலும் அவர்களுக்கு குளுக்கோமா பரிசோதனையையும் இணைத்தே செய்கிறார் வினோத். பெரும்பாலும் குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாகவே இருக்கிறது. அதனால் அதை முதன்மைப்படுத்தியே சிகிச்சையளிக்கிறார். தன்னிடம் வரும் எல்லா நோயாளிகளிடமும் அதுகுறித்து பேசுகிறார்.

கண் மருத்துவர் வினோத்
கண் மருத்துவர் வினோத்
DIXITH

"நிறைய பேருக்கு குளுக்கோமா பத்தி முழுமையாத் தெரியலே. ஏதோ ரெண்டு மாசம் மருந்து போட்டுட்டு விட்டுட்டாப் போயிடும்ன்னு நினைக்கிறாங்க. உண்மையில் வாழ்க்கை முழுவதும் மருந்து தேவைப்படும். யார் எந்தப் பிரச்னைக்காக வந்தாலும் அவங்ககிட்ட அதுபத்தி கால் மணி நேரமாவது பேசுவேன்.

குடும்பத்தில் ஒருவருக்கு குளுக்கோமா இருந்தால் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வரலாம். அப்பாவுக்கு இருந்தால் மகளுக்கோ மகனுக்கோ வரலாம். குடும்ப ஹிஸ்டரி கேட்டு சிகிச்சையளிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ, அந்த அளவுக்கு குணப்படுத்தமுடியும். சரியான நேரத்தில் கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால் பார்வை பறிபோகும். இது மீளாப்பார்வை. பார்வையை மீட்டெடுக்கவே முடியாது.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 13: இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு... வினோத் கண் மருத்துவமனை!

குளுக்கோமாவுக்கு முக்கியக் காரணம், கண்ணில் ஏற்படும் அழுத்தம்தான். கண்ணுக்குள் ஒரு திரவம் சுழற்சி முறையில் சுற்றிக்கொண்டேயிருக்கும். ஏதோவொரு காரணத்தால் அது சில நேரங்களில் தேங்கிவிடும். அதனால் கண்ணுக்கு அழுத்தம் ஏற்படும். சிலருக்கு இந்த திரவம் செல்லும் பாதை குறுகலாக இருக்கும். சிலநேரங்களில் அடைத்துக்கொள்ளும். அதனாலும் குளுக்கோமா வரும். இவைதவிர, அதிகமாக ஸ்டீராய்டு எடுத்துக்கொள்வதாலும்கூட குளுக்கோமா வரலாம்.

வினோத் கண் மருத்துவமனை
வினோத் கண் மருத்துவமனை
DIXITH

பிறந்த குழந்தைகளுக்கும்கூட குளுக்கோமா வரலாம். கருவுற்றிருக்கும்போதே, நீர்வழிப்பாதையில் தடை ஏற்பட்டு குளுக்கோமா வர வாய்ப்புண்டு. குளுக்கோமாவை 'பார்வைத்திருடன்' என்றுதான் சொல்லவேண்டும். இந்த பாதிப்பை அவ்வளவு எளிதில் பாதிக்கப்பட்டவர் உணர முடியாது. நாற்பது வயதுக்கு மேல் பார்வைக்குறைபாடு ஏற்பட்டு பரிசோதனைக்கு வரும்போதுதான் இந்த தாக்கம் தெரியவரும். முன்பு வீடுகளில் குண்டு பல்பு பயன்படுத்துவார்கள். குளுக்கோமா பாதித்தவர்கள் அந்த பல்பைப் பார்த்தால் வானவில் போல பல வண்ணங்கள் தெரியும். 'கலர்டு ஹாலோஸ்' என்று சொல்வோம். அது, குளுக்கோமாவின் அறிகுறி. சிலர் அடிக்கடி ரீடிங் கிளாஸ் மாற்றுவார்கள். அதுவும் குளுக்கோமா அறிகுறிதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக 40 வயதுக்கு மேல் உடம்பில் ரத்த அழுத்தம் சோதிப்பதுபோல, குளுக்கோமா பரிசோதனையும் செய்துகொள்வது நல்லது. குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் 20 வயதிலேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மரபு ரீதியாக 20 சதவிகிதம் வர வாய்ப்பிருக்கிறது." என்கிறார் டாக்டர் வினோத்.

"கொரோனாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பலருக்கு ஸ்டீராய்டு தரப்பட்டுள்ளது. அவர்களுக்கும் குளுக்கோமா வர வாய்ப்புண்டா?" என்று டாக்டர் வினோத்திடம் கேட்டேன்.

கொரோனா
கொரோனா

"கொரோனா நோயாளிகளுக்குத் தரப்பட்டது குறுகிய கால ஸ்டீராய்டு சிகிச்சை. அதனால் குளுக்கோமா ஏற்பட வாய்ப்பில்லை. நாங்களுமே கூட கேட்ராக்ட் நோயாளிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு ஸ்டீராய்டு கொடுப்பதுண்டு. அதனாலெல்லாம் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மாதக்கணக்கில் ஸ்டீராய்டு பயன்படுத்துவார்கள். அவர்கள் கண்டிப்பாக குளுக்கோமா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். தோல் நோய்களுக்கு அதிக ஸ்டீராய்டு கலந்த ஆயிண்மெண்ட்களை சிலர் பயன்படுத்துவார்கள். அவர்களும் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். கண்ணுக்குப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள்களில் ஸ்டீராய்டு அதிகமிருந்து, அதனால் குளுக்கோமா பாதித்தவர்களும்கூட இருக்கிறார்கள் " என்கிறார் வினோத்.

"சர்க்கரை நோயாளிகள், ஒற்றைத்தலைவலி உள்ளவர்களும் குறிப்பிட்ட இடைவெளியில் குளுக்கோமா பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்" என்கிறார் வினோத்.

"குளுக்கோமா இருப்பது உறுதி செய்யப்பட்டால் என்ன செய்யவேண்டும்?"

வினோத் கண் மருத்துவமனை
வினோத் கண் மருத்துவமனை
DIXITH

"முதலில் பாதிப்பின் தன்மையைக் கண்டறியவேண்டும். 50 முதல் 60 சதவிகித பாதிப்பு இருந்தால் மருந்தின் மூலமாகவே குணப்படுத்த முயற்சிக்கலாம். இவர்கள் மருந்தை ரெகுலராகப் பயன்படுத்த வேண்டும். இடையில் நிறுத்தினால் பாதிப்பின் தீவிரம் அதிகமாகலாம்.

பாதிப்பின் தீவிரம் அறுபது சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும். அதுவும், அறுவை சிகிச்சை செய்துவிட்டால் நோய் முற்றிலும் குணமாகிவிடும் என்று சொல்ல முடியாது. இருக்கிற பார்வையை தக்கவைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 10 | காட்டு விவசாயத்துக்கு நிலத்தைத் தயார்படுத்துவது எப்படி?

அறுவை சிகிச்சை என்பது, வாய்க்காலை உடைத்து நீர்போக்குவரத்தை சரி செய்வது போலதான். கண்களுக்குள் நீர் செல்லும்பாதையில் சிறிய ஹோல் போட்டு சரி செய்வது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பெயர் Trabeculectomy. சிலருக்கு ஹோல் போட்ட இடத்தில் ஐந்தாறு வருடங்கள் கழித்து அடைப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் மருந்து மட்டுமே தீர்வு. தொடர்ந்து பரிசோதனைக்கு வந்தால்தான் இதைக் கண்டறிய முடியும்.

இந்த Trabeculectomy அறுவை சிகிச்சையிலும் சில ரிஸ்க் இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவருக்கு இருக்கும் பார்வையும் பறிபோகும் வாய்ப்பிருக்கிறது. 95 சதவிகிதம் பாதிப்பு இருப்பவர்களுக்கு இது நடக்கலாம். அதனால் சீக்கிரமே கண்டறிவது நல்லது." என்கிறார் வினோத்.

வினோத் கண் மருத்துவமனை
வினோத் கண் மருத்துவமனை
DIXITH

வழக்கமாக மருத்துவர்கள் பத்திரிகையாளர்களுடனான சந்திப்புகளில் தங்கள் மருத்துவமனையைப் பற்றியும் தங்கள் நிபுணத்துவத்தைப் பற்றியுமே அதிகம் பேசுவார்கள். வினோத், வித்தியாசப்படுகிறார். அவருடனான உரையாடலின் பெரும்பகுதி கண் பாதுகாப்பு, குளுக்கோமா பற்றியதாகவே இருக்கிறது.

அரவிந்த் மருத்துவமனையில் அவர் கற்ற மருத்துவக் கல்வி அவரைப் பண்படுத்தியிருக்கிறது. எந்த நோயாளிக்கு எது தேவை, எது தேவையில்லை என்று வழிநடத்துவதுதான் நல்ல மருத்துவரின் பண்பு. வினோத், அதில் தெளிவாக இருக்கிறார். நோயாளி நடந்துவரும் தன்மையை வைத்தே அவரின் பிரச்னையைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறார்.

நோயாளியின் வாழ்க்கைத்தரத்தைப் பார்த்து சிகிச்சையளிக்கவும் அரவிந்த் மருத்துவமனை கற்றுத்தந்திருக்கிறது. எளிய மக்கள் வந்தால் தன்னிடம் இருக்கும் மருந்துகளை தந்து வழியனுப்பி வைக்கிறார்.

வினோத் கண் மருத்துவமனை
வினோத் கண் மருத்துவமனை
DIXITH

எல்லோருமே ஆண்டுக்கொருமுறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார் வினோத். "முறையாக ஆப்தமாலஸிஸ்டைப் பார்த்து கிளாஸ் மாற்றிக்கொள்ள வேண்டும். தினமும் காலையும் மாலையும் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும். கோவிட் காரணமாக பிள்ளைகள் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துகின்றனர். அது சின்னக் குழந்தைகளுக்கு மைனஸ் பவர் ஏற்படுத்தும். குறைந்தபட்சம் கம்ப்யூட்டர், லேப் டாப் மாதிரி பெரிய ஸ்க்ரீனையாவது குழந்தைகளுக்குத் தாருங்கள். முடிந்தால் லேப் டாப்பிலிருந்து டிவியில் கனெக்ட் செய்து பார்க்கச் செய்யலாம்.

திருச்சி மைல்ஸ்டோன் மனிதர்கள் - 7 | `சில்வர்லைன்’ கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைமுறை!

பெரும்பாலானோர் கம்ப்யூட்டரில் வேலை செய்வதால் யூ.வி கதிர்வீச்சு நம் கண்களைப் பாதிக்கிறது. குறிப்பாக ஐ.டியில் வேலை செய்பவர்கள் ப்ளூ கட் கிளாஸ்களைப் பயன்படுத்துங்கள்." என்கிறார் வினோத். வினோத் மருத்துவத்துறைக்கு வைக்கும் கோரிக்கையும் ஒன்று உண்டு.

கண் மருத்துவர் வினோத்
கண் மருத்துவர் வினோத்
DIXITH

"மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் குளுக்கோமாவையும் சேர்க்க வேண்டும்." நோயாளிகளைப் பணம் காய்க்கும் மரங்களாகப் பார்க்காமல் சக மனிதர்களாகப் பார்த்து அரவணைக்கும் நல்ல மனம் வினோத்துக்கு வாய்த்திருக்கிறது. முதல் தலைமுறைப் பட்டதாரி... அப்படித்தான் இருப்பார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு