Published:Updated:

சிறுகுடல் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அரிய அறுவை சிகிச்சை - அசத்திய அரசு மருத்துவர்கள்!

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

புதுக்கோட்டையில் பிறவிக் கோளாறு காரணமாக வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்குச் சிறுகுடல் இல்லாமல், வயிறு வீங்கி ஆபத்தான நிலையில், இருந்த பச்சிளம் குழந்தைக்கு, இரு அறுவை சிகிச்சைகள் செய்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழு
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழு ( வெங்கடேஷ்.ஆர் )

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் - வினிதா தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில தினங்களே ஆன நிலையில், அதன் வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டது. தாய்ப்பால் அருந்தவும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, குழந்தையைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழு
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழு
வெங்கடேஷ்.ஆர்

பரிசோதனையில், பிறவியிலேயே குழந்தைக்கு 10 செ.மீ. நீளத்துக்கு சிறுகுடல் வளர்ச்சியடையாதது தெரியவந்தது.

இந்தப் பிரச்னையை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியம், மயக்கவியல் நிபுணர்கள் ரவிக்குமார், கணேசன், ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். முதலில் அறுவை சிகிச்சை செய்து சிறுகுடலை அகற்றினர். அப்போது சிறுகுடலின் மேல்பகுதி வீக்கமடைந்தும் நடுப்பகுதி வளர்ச்சியடையாமலும் கீழ்ப்பகுதி சுருங்கிய நிலையிலும் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறுகுடலில் வளர்ச்சியடையாத நடுப்பகுதி நீக்கப்பட்டது. அதன்பிறகு மேல்பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாக இணைக்கப்பட்டது.

அடுத்தநாள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யப்பட்ட சிறுகுடல் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டது. அதன் பிறகு சிறுகுடலில் ஏதேனும் கசிவு ஏற்படுகிறதா என்றும் பரிசோதிக்கப்பட்டது. இரண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை இயல்பாக தாய்ப்பால் அருந்தி நலமாக உள்ளது.

இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ``குழந்தை கருவில் வளரும்போது ஏதேனும் ஒரு பகுதியில் திடீரென ரத்த ஓட்டம் தடைப்பட்டால் குறிப்பிட்ட ஒரு பகுதி வளர்ச்சி அடையாமல்போகும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னையை உரிய நேரத்தில் சரிசெய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

சவாலான இந்த அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையில் சாத்தியப்படுத்தி இருப்பது மருத்துவ உலகின் பெரிய சாதனை. குழந்தை தற்போது நலமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடும். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் சுமார் ரூ.2 லட்சம் வரையில் செலவாகும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது" என்றார்.