Published:Updated:

டைப் 2 சர்க்கரை நோயை இளம் வயதிலேயே கண்டுபிடிக்கலாம்... ஆய்வு சொல்வது என்ன?

பிற்காலத்தில் வரும் சர்க்கரைநோயை 16, 18 வயதில் முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

Diabetes
Diabetes ( pixabay )

நடுத்தர மற்றும் வயதான காலத்தில் வரக்கூடிய டைப் 2 சர்க்கரைநோயை, ஒருவரது குழந்தைப்பருவத்திலேயே கண்டுபிடித்துவிடலாம் என்கிறது, இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. இந்த ஆய்வு, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்று சொல்லலாமா? தனக்கு வரும் பாதிப்பை முன்கூட்டியே அறிந்தால், அந்நோய் வருவதைத் தடுக்க முடியுமா என்று சர்க்கரைநோய் மருத்துவர் ராஜ்குமாரிடம் கேட்டோம்.

Diabetes
Diabetes
pixabay

``பிற்காலத்தில் வரக்கூடிய சர்க்கரை நோயை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய அந்த ஆய்வில், 8 வயது மற்றும் 16, 18, 25 வயதுகளில் ஒருவரது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது கண்காணிக்கப்பட்டுள்ளது. 8 வயதில் ஹெச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு குறைவதும், 16, 18 வயதில் கிளைக்கோ புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களின் அளவு அதிகரித்ததும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் ஏற்படாமல் தடுப்பதன்மூலம் டைப் 2 சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Diabetes
Diabetes
pixabay

இந்த ஆய்வின்போது, ரத்த மாதிரிகளை எடுத்து, அதில் 162 மரபணுக்களும் 200 வளர்சிதை மாற்ற மூலக்கூறுகளும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவில், டைப் 2 சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டன. ஆனாலும், சர்க்கரைநோய் தொடர்பான இந்த ஆரம்பநிலை ஆய்வை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு முடிவுசெய்துவிட முடியாது.

Diabetic Blood test
Diabetic Blood test
pixabay

40 வயதில், சில நோய் அறிகுறிகளை வைத்து, அது சர்க்கரை நோயாக இருந்தால் என்ன செய்வது என்று ரத்தப் பரிசோதனைகூட செய்யாமல் இருப்பவர்கள் பலர். இந்தச் சூழலில், பிற்காலத்தில் வரும் சர்க்கரைநோயை 16, 18 வயதில் முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள இது வசதியாக இருக்கும். அதேநேரத்தில், ஒருவித பயத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

Type 2 Diabetes
Type 2 Diabetes
pixabay

இதற்கிடையே, ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். 2030-ம் ஆண்டில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 70 சதவிகிதம் தொற்றா நோய்கள்தான் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க உடல் பருமன், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் உணவுப்பழக்கத்தை முறைப்படுத்துவது, புகையிலை, மதுப் பழக்கத்தை நிறுத்தவேண்டியது முக்கியம்'' என்கிறார், டாக்டர் ராஜ்குமார்.