Published:Updated:

வயாகராவுக்கு அனுமதி... கருத்தடை மாத்திரைக்குத் தடையா?

கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற கருத்தைக் கூறி, அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை மறைக்கப்பார்க்கின்றனர். வயாகரா மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால், ஆண்களின் உடல்நலம் பாதிக்கப்படும்.

drug
drug

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனைசெய்ததாக, தமிழகத்தில் 52 மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் சிவபாலன், 'கருத்தடை மாத்திரைகளுக்கு டாக்டரின் பரிந்துரைச் சீட்டு அவசியம் இல்லை. ஆனால், கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு டாக்டரின் பரிந்துரைச் சீட்டு அவசியம்' என்று தெரிவித்திருந்தார்.

drug
drug
pixabay

கருத்தடை மாத்திரைகளில்... அவசர கருத்தடை மாத்திரைகள், மாதவிடாய் சுழற்சிக்கு முன்பாக நாள்தோறும் சாப்பிட்டுவரும் கருத்தடை மாத்திரைகள் என இரண்டு வகை உள்ளன. இவற்றில் அவசர கருத்தடை மாத்திரையை உறவுகொண்ட 72 மணி நேரத்துக்குள், சம்பந்தப்பட்ட பெண் சாப்பிட்டால் கரு உருவாகாது. இந்த வகை மாத்திரைகள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்கப்படும் 'ஓடிசி(Over The Counter - OTC)' மருந்துகள் பட்டியலில் வருகின்றன. இதனால் அவற்றை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே நேரடியாக மருந்துக்கடைகளில் வாங்கிக்கொள்ள முடியும்.

ஆனால், இந்த 'ஓடிசி' மாத்திரைகள் மருந்துக்கடைகளில் தாராளமாகக் கிடைப்பதில்லை. அவசர கருத்தடை மாத்திரைகளுக்கு அதிகாரபூர்வமற்ற தடை, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நிலவுகிறது. காய்ச்சல் மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை எந்தப் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல் தாராளமாக விற்பனை செய்யும் மருந்துக்கடைகள், அவசியத் தேவையான கருத்தடை மாத்திரைகளை அவ்வளவு எளிதாக வழங்குவதில்லை. பல மருந்துக்கடைகள் அவற்றை விற்பனைக்கு வாங்கி வைப்பதையே நிறுத்திவிட்டன.

drug
drug
pixabay

"சில ஆண்டுகளுக்கு முன், அவசர கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டு சங்கத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆய்வுகள் நடத்தி, விற்பனைசெய்த மருந்தகங்களின்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னர், இந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்த தெளிவான உத்தரவு எதுவும் வரவில்லை. இதனால் மருந்துக்கடைக்கார்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவுகிறது. அந்த வகை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தால், திடீரென்று ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்ற பயம் நீடிக்கிறது. காரணம், தற்போது விதிமுறைகளை மீறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. எங்களைப்போன்ற சிறிய கடை வைத்திருப்போருக்கு அது மிகப்பெரிய தொகை. அதனால் பரிந்துரைச் சீட்டு கொண்டுவருவோருக்கு மட்டுமே கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்கிறோம்" என்று தங்கள் தரப்பு அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள்.

கருத்தரிப்பதும், கர்ப்பம் தரித்துவிட்டால் அது தேவையா இல்லையா என முடிவெடுப்பதும் ஒரு பெண்ணின் உரிமையாகப் பார்க்கப்படுகிறது. அவசர கருத்தடை மாத்திரைகளுக்கு அதிகாரபூர்வமற்ற தடை நிலவுகிறது என்ற பிரச்னையை சில ஆண்டுகளுக்கு முன் முன்னெடுத்தவர், எழுத்தாளர் வைஷ்ணவி சுந்தர். கருத்தடை மாத்திரைகள் பெண்களின் உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பிவரும் அவரிடம் இது தொடர்பாகப் பேசினோம்.

இது மருந்து மட்டுமல்ல; மினி மருத்துவர்... வியப்பூட்டும் மின்னணு மாத்திரை!
drug
drug
pixabay

"பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்துக்கடைகளில் விற்கப்படுவதில்லை. கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்வதை மருந்துக் கடைக்காரர்கள் அறநெறி சார்ந்த விஷயமாகப் பார்க்கிறார்கள். உதாரணமாக, மார்டனாக ஒரு பெண் உடையணிந்து வந்து இந்த மாத்திரைகளைக் கேட்டால் கொடுப்பதில்லை. அதுவே, திருமணமான பெண்ணின் தோற்றத்துடன் போய் ஒரு பெண் மாத்திரையைக் கேட்டால் கொடுத்துவிடுகிறார்கள்.

கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற கருத்தைக் கூறி, அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை மறைக்கப்பார்க்கின்றனர். வயாகரா மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால் ஆண்களின் உடல்நலம் பாதிக்கப்படும். ஆனால், அந்த மாத்திரைகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தாராளமாய் விற்பனை செய்யப்படுகிறதே? ஒரு பெண், தன் விருப்பப்படி உறவு கொண்டால், அதற்கான தண்டையாகவே கருவுறுதலைப் பார்க்கின்றனர். ஒரு விஷயத்தை ஆண்கள் செய்தால் சரி, பெண்கள் செய்தால் தவறு என்ற கண்ணோட்டமும் சமூகக் கட்டமைப்பும் இதற்குப் பின்னால் இருக்கிறது.

catalyst director vaishnavi sundar
catalyst director vaishnavi sundar

கருத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமே தவிர, பெண்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது. பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணுக்கு, அந்த மாத்திரை எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்?" என்றார்.

மகப்பேறு மருத்துவர்கள் மத்தியிலும் அவசர கருத்தடை மாத்திரைகள் விற்பனைக்குக் கிடைப்பதில்லை என்ற கருத்தே நிலவுகிறது. இதனால் அவர்களும் இந்த மாத்திரைகளைப் பரிந்துரைப்பதில்லை. 'அவசர கருத்தடை மாத்திரைகளின் விற்பனையைத் தாராளமாக்கும்போது, கருக்கலைப்பு மாத்திரைகளுக்கான தேவை ஏற்படாது. ஒரு விஷயம் நடைபெறுவதற்கு முன்னரே அதைத் தடுப்பதுதான் சிறந்த வழியாக இருக்கும்' என்பதும் மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

medical
medical
pixabay

இது தொடர்பாக, மருந்து கட்டுப்பாட்டு அலுவர் சிவபாலனிடம் பேசினோம். "கருத்தடை மருந்துகளில், மருத்துவரின் பரிந்துரையோடு வழங்கப்படவேண்டிய மருந்துகள், பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும் மருந்துகள் என்று இரண்டு வகை உள்ளன. அவற்றில் இரண்டாவது வகை மருந்துகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனைசெய்யலாம்.

விற்பனை உரிமம் இல்லாமலேயேகூட அந்த மாத்திரைகளை விற்பனைசெய்ய முடியும். அந்த வகையில், அவசர கருத்தடை மாத்திரைகளின் விற்பனைக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே தடை கிடையாது. மருந்துக் கடைக்காரர்கள் தவறான புரிந்துணர்வால் அதை விற்பனை செய்யாமல் இருக்கிறார்கள்" என்று தெளிவுபடுத்தினார், சிவபாலன்.

drug
drug
pixabay

சுய மருத்துவம் என்பது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், இதுபோன்ற அவசரத் தேவைகளுக்கான மருந்து விற்பனையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்பதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இதுபோன்ற மருந்துகளின் பக்கவிளைவுகள், பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். வேரில் இருக்கும் பிரச்னையைச் சரிசெய்யாமல், இலைகளைத் தண்டிப்பதில் நியாயம் இல்லை.