Published:Updated:

மார்பகத்தில் உண்டாகும் புற்றுநோயை அடையாளம் காண்பதெப்படி?

பா.கவின்

குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மெனோபாஸ் நிலையில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உடையவர்கள், தாய்ப்பால் புகட்டாத தாய்மார்கள் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

நாற்பது வயது பேராசிரியை அவர். நல்ல வருமானம், இனிய குடும்பம் என்று நிறைவாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. மாணவர்களின் நலனில் கருத்தாய் இருந்தவர், தன் உடல்நலனில் அக்கறை காட்டவில்லை. தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் அவர் கண்டுகொள்ளவில்லை. காரணம், அவர் கண்ட மாற்றத்தில் வலி இல்லை. அதைவிடப் பெரிய காரணம், அதைப்பற்றி வெளியில் பேசக் கூச்சம்.

யதேச்சையாக தன் தோழியிடம் இதுபற்றிப் பேசுகையில் பயம் தொற்றிக்கொள்ள மருத்துவரை நாடுகிறார். பரிசோதனையில் அந்த வலியில்லாக் கட்டி `மார்பகப் புற்றுநோய்' என்று கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமாக மருத்துவரை அணுகுவதற்கு ஏழ்மையோ படிப்பறிவின்மையோ கிடையாது; விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம்.

`மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க பெரிய கருவிகளோ நவீன தொழில்நுட்பமோ தேவையில்லை. வீட்டில் செய்யும் எளிய சுயபரிசோதனையின் மூலம் பெண்களே தங்களைப் பரிசோதித்து அறிந்துகொள்ள முடியும்' என்கின்றனர் புற்றுநோய் மருத்துவர்கள்.

மார்பகப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்

யாருக்கெல்லாம் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம், அதை எப்படிக் கண்டறிவது என்று புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.அழகு கணேஷிடம் கேட்டோம்.

``பத்து வயதுக்குள் பூப்பெய்திய பெண்கள், 55 வயதுக்குப் பிறகும் மெனோபாஸ் நிலையை அடையாதவர்கள், 35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள், பல வருடங்களாகக் கருத்தடை மாத்திரை உட்கொள்பவர்கள், குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மெனோபாஸ் நிலையில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உடையவர்கள், தாய்ப்பால் புகட்டாத தாய்மார்கள் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்கள் குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பல உடலுறுப்புகளின் வளர்ச்சி பூர்த்தியாகிவிடும். ஆனால், மார்பகம் என்ற உறுப்பு தனித்துவமானது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். மார்பகங்களில் இரண்டு வகையான திசுக்கள் காணப்படும்.

பாலூட்டும் தாய்மார்
பாலூட்டும் தாய்மார்

ஒன்று பால் சுரக்கும் பணிகளைச் செய்யும் `கிளாண்டுலர்' திசு (Glandular tissue), மற்றது மார்பகங்களுக்கான `ஆதரவுத் திசு' (Supporting tissue) எனப்படும் கொழுப்புத் திசு. பெண் குழந்தை பூப்பெய்திய பின்பு பால் சுரக்கும் திசுக்கள் அதிகரிக்கும். அதன்பிறகு வயது அதிகரிக்க அதிகரிக்க கொழுப்புத்திசுக்களும் அதிகரிக்கும்.

ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரொஜஸ்டிரான் (Progesterone) என்ற ஹார்மோன்களால்தான் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போதும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் வருவதற்கு சில நாள்களுக்கு முன்பு மார்பகத்தில் ஏற்படும் வலியும் மார்பகங்கள் கனமாய் இருப்பதும் சாதாரணமானவையே.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.அழகு கணேஷ்
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.அழகு கணேஷ்
மாதவிடாய் வருவதற்கு சில நாள்களுக்கு முன்பு மார்பகத்தில் ஏற்படும் வலியும் மார்பகங்கள் கனமாய் இருப்பதும் சாதாரணமானவையே.
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.அழகு கணேஷ்

அதனால், பயம்கொள்ளத் தேவையில்லை. மார்பகத்தில் வரும் அனைத்துக்கட்டிகளுமே புற்றுநோய் அல்ல. மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்யும் முறையை அறிந்துகொண்டால், தொடர் பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பைக் கண்டுபிடிக்க முடியும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி முடிந்தவுடன் மார்பகத்தைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்குப் பால் புகட்டிய பின் பரிசோதிக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி முற்றுப்பெற்றவர்கள், கருப்பையை நீக்கியவர்கள் ஆகியோரும் மாதம்தோறும் குறிப்பிட்ட ஒரு தேதியில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தாய்ப்பால் தவிர்க்காதீர்!
தாய்ப்பால் தவிர்க்காதீர்!

சுயபரிசோதனை செய்யும் முறை

* கண்ணாடியின் முன்நின்று தோள்பட்டையை நேராகவும் கைகளை இடுப்பிலும் வைத்துக்கொண்டு மார்பகங்கள் இயல்பான வடிவிலும் நிறத்திலும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

* அடுத்ததாக, கைகளை உயர்த்திக்கொண்டு மேற்சொன்ன அனைத்தையும் கவனிக்கவும்.

* மூன்றாவதாக, ஒருபுறமாக ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு வலது கையினால் இடது மார்பகத்தையும் இடது கையினால் வலது மார்பையும் பின்வருமாறு சோதிக்க வேண்டும்.

விரல்களை ஒன்றாகச் சேர்த்துவைத்துக்கொண்டு விரல்நுனிகளால் மென்மையாகவும் அழுத்தமாகவும் சிறிய வட்டங்களாக மார்பகம் முழுவதும் அழுத்திப் பார்க்கவேண்டும்.  காம்பிலிருந்து ஆரம்பித்து வட்டவடிவில் சிறிய வட்டத்திலிருந்து பெரிய வட்டமாக மார்பகத்தின் வெளிச்சுவர் வரை பரிசோதிக்க வேண்டும். அக்குள் பகுதியிலும் மாற்றங்கள் தெரிகிறதா என்று இதே முறையில் பரிசோதிக்க வேண்டும். பரிசோதனையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனே மருத்துவரை  அணுக வேண்டும். சுயபரிசோதனையின்போது கட்டிகள் தென்பட்டால் மும்முனைப் பரிசோதனை செய்ய வேண்டும். முதலில் மருத்துவர்கள் மார்பகத்தைப் பரிசோதனை செய்வார்கள். 

மேமோகிராம்
மேமோகிராம்

அதற்கு அடுத்தபடியாக, 40 வயதுக்குட்பட்ட பெண்கள் அல்ட்ராசோனாகிராம் ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வயதினருக்கு பால் சுரக்கும் திசுக்கள் அதிகமாகவும் மார்பகம் கனமானதாகவும் இருக்கும் என்பதால் புற்றுநோய் பாதிப்பை மேமோகிராமால் துல்லியமாகக் கண்டறியமுடியாது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாம். இப்பரிசோதனைகளுக்குப் பின்னும் கட்டியின் தன்மையை அறிய முடியவில்லை என்றால் `பையாப்சி' (Biopsy) எனும் திசுப்பரிசோதனை செய்ய வேண்டும். மார்பகத்தில் இருக்கும் செல்களைச் சேகரிப்பது, திசுக்களை எடுத்துச் சோதிப்பது என திசுப்பரிசோதனை இரண்டு வகையாகச் செய்யப்படும்.

இதுதவிர, மார்பகத்தில் கட்டி இருந்து வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், மார்பகத் தோலில் சுருக்கமோ வீக்கமோ இருந்தால், காம்பு உள்நோக்கி இழுக்கப்பட்டிருந்தால், புண், வலி, சிவப்பு நிறம் தடிப்பு போன்ற அறிகுறிகள் தெரிந்தால், காம்பிலிருந்து நீரோ, ரத்தக்கசிவோ, சீழோ வந்தால், மார்பகங்கள் சமஅளவில் இல்லாதிருந்தால், அக்குள் பகுதியில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பரிசோதனை
பரிசோதனை

புற்றுநோய் இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சையின் மூலம் அதற்குத் தீர்வு காண முடியும். மார்பகத்தையும் இழக்காமல் காப்பாற்ற முடியும்" என்கிறார் டாக்டர் அழகு கணேஷ்

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது கூட்டு முயற்சியே. முதலில் நோயாளிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோய் உறுதிசெய்யப்பட்டால் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிரியக்கம் எனப் பல்வேறு நிபுணர்களின் கூட்டுமுயற்சியால் புற்றுநோய்க்குத் தீர்வு காண முடியும். அதனால் சுய பரிசோதனை செய்வோம், மார்பகங்களைப் பாதுகாப்போம்.